Friday, January 28, 2011

மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்

திருமணத்திற்குப்பின்  ஹோட்டல்களில் உணவு உண்பதை சுத்தமாக நிறுத்திவிட்டேன்.  வீட்டை விட்டு வெளிவந்து 7 ஆண்டுகளாக ஹோட்டல், சாலைஒரக்கடை, டிபன் செனட்டர், மெஸ் என்று அனைத்து வகை உணவகங்களிலும்  உண்டு களித்திருக்கிறேன். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும், பசி போயிருக்கிறதோ இல்லையோ, கோபம் வந்திருக்கும்.   சில கடைகளில் unlimite meals என்று போட்டிருக்கும் , ஆனால் இரண்டு   முறைக்குமேல் சாதம் வைக்கமாட்டார்கள், காலையில் டீ மட்டும் குடித்து மதியம்   இந்த   unlimite meals - ல் அன்றைய பட்ஜெட்-ஐ சரிகட்டலாம் என்ற திட்டத்தில்  இடி(யாப்பம்)  இறங்கி இருக்கும் . சில கடைகளில் கைலி கட்டிய  சர்வர்கள் வலது கையால் அவனது ********  சொறிந்துகொண்டே  " சார் சூடா என்ன சாப்பிடுரிங்க" என்பார்கள்  நக்கலாக, சில கடைகளில் ரசத்தை தவிர வேறு எதை மறுமுறை  கேட்டாலும் முறைப்பார்கள்.
(இப்படி எண்ணற்ற உணவகதுயர்களை  நான் சந்தித்தாலும்    இப்பதிவு அதை பற்றியல்ல )    இதுபோன்ற சம்பவங்களால் உணவகங்களுக்கு செல்லாமலிருந்த நான், சென்ற வாரம் என் வீட்டின் அருகிலிருந்த ஒரு கடையில் இரவு சாப்பிட நேரிட்டது,  அங்கு  "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" என்ற பெயர் பலகை, பயணசீட்டு இல்லாமல் என் நினைவை என் ஊரை நோக்கி பயணப்படவைத்தது.

                தமிழகத்தில் எல்லா  ஊர்களிலும்,ஒரு பேருந்துநிலையம் இருந்தால் அதை சுற்றிய பகுதியில் ஒரு முனியாண்டி விலாஸ் இருப்பதாய் நிச்சயம் நம்பலாம், அந்த அளவு தமிழகத்தில் அசைவ உணவகங்களின் பட்டியலில் முனியாண்டி விலாஸ்-க்கு முக்கிய இடமுண்டு.  எனது ஊரிலும் (போடிநாயக்கனூர் )   "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" என் பெரியாப்பாவால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எங்கள் குடும்பம் பற்றியும் அந்த கடை பற்றியும் யாரிடமாவது அறிமுகம்  செய்யும்போது, ஒருமுறைக்கு இருமுறை ஆச்சரியத்துடன் கேட்டு   உறுதிப்படுத்திக்கொள்வார்கள், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தினர் எப்படி  முனியாண்டி விலாஸ் என்று பெயரிட்ட கடை நடத்துகிறார்கள்? என்று. இந்தியவிலே இஸ்லாமியரால் நடத்தப்படும் முனியாண்டி விலாஸ் இது ஒன்றாகத்தான் இருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன் போடிநாயக்கனுரில் ஒரு நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடை அவரால் நடத்தமுடியாததால் எனது பெரியாப்பாவாலும் இன்னொரு உறவினராலும் எடுத்து நடத்தப்பட்டது,  பெயர் மாற்றாமல் எனது பெரியாப்பாவால் இன்றும் நடத்தப்படுகிறது. இன்று தமிழகத்தில் நாம் காணும் அனைத்து உணவாக குழுமங்களின் (காரைக்குடி, செட்டிநாடு, அஞ்சப்பர், .......)  வெற்றிகரமான முன்னோடி "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்"   ஹோட்டல்கள்தான்.  முனியாண்டி விலாஸ் உணவகங்களின் களமூலம் மதுரை மாவட்டம், திருமங்கலம் என்ற ஊரிலிருந்து  14  கி.மீட்டர் தொலைவில் உள்ள   வடக்கம்பட்டி என்ற கிராமத்திலிருந்து  உருவானது.  நாயுடு மற்றும் ரெட்டியார் சமுகம் அதிகம் வாழும் இப்பகுதியில் சுமார்75 ஆண்டுகளுக்கு முன் பருவமழை தவறியதால் கடும் பஞ்சம் நிலவியது. தொழில் வியாபாரத்திலும் அப்பகுதி மக்கள்  தோற்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வூரில் கோவில்கொண்டிருந்த, காவல்   தெய்வமாக கருதப்பட்ட  முனியாண்டி சுவாமி, சுப்பா நாயுடு என்பவரின் கனவில் தோன்றி ஏழைகளுக்கு பயனாகும் வகையில் உணவகம் நடத்துமாறு கூறினாராம்,
அதனால் 1934 -ல் "ஸ்ரீ முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் முதல் கடை ஆரம்பிக்கப்பட்டது, அதன் பின் அவ்வூர் மக்கள் தமிழகத்தில் பல  ஊர்களில்  அதே பெயரில் உணவகங்களை தொடங்கினர்,தொடங்கும் முன் வடக்கம்பட்டி    முனியாண்டி சுவாமி கோவில் சங்கத்தில் பெயர்  பதிவு செய்துவிட்டு,  பூஜைகளிட்டு   முனியாண்டி சுவாமி அனுமதி கேட்டபின்தான் இன்றும்  கடைஆரம்பிகின்ற்னர். ஒவ்வொரு  ஆண்டும் ஜனவரி 3-ம்  வாரம்  சங்கத்தின்  உறுப்பினர்களிடம் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருடாந்திர திருவிழா நடைபெறும் அப்போது அனைத்து   முனியாண்டி  விலாஸ் உணவகங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள், பின்னாளில் நாயுடு மற்றும் ரெட்டியார் சமுகங்களுக்கிடையேயான  வழிபாட்டுமுறை கருத்து வேறுபாட்டால் அச்சம்பட்டி, புதுப்பட்டி என்ற இரு இடங்களில் முனியாண்டி சுவாமி   கோவில்  மற்றும்  சங்கம்  எற்படுத்தப்பட்டது, தற்போது நாம் காணும் அனைத்து
"மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" உணவகங்களும் இந்த 3 கோவில்  சங்கத்தில் பதிவு செய்யப்பட்டவையாகத்தானிருக்கும். தமிழக அசைவஉணவகங்களின் உண்பண்டப்பட்டியலை (Menu) வாடிக்கையாளர்களுக்கு நிறைவாக  முதலில் வடிவமைத்தது  முனியாண்டிவிலாஸ் உணவகங்கள்தான்.
அளவு சாப்பாட்டுடன் பொரியல்,அவியல், சாம்பார், வற்றல்குழம்பு, ரசம், மோர்   இணைந்திருக்கும், பிரியாணி, குஸ்கா, குடல்குழம்பு, அயிரைமீன் குழம்பு, மூளை வறுவல், மட்டன்சுக்கா, கோழி குழம்பு போன்ற விதவிதமான  அசைவத்தை  அனைத்துதரப்பு மக்களையும் அரை நூற்றாண்டு காலமாக  அசைபோட வைத்தது இந்த உணவக குழுமம். ஆனால் சமீப காலங்களில் வெவ்வேறு உணவக குழுமங்கள் தரத்திலும், சேவையிலும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டன, மேலும் கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக பரவிய Fastfood கலாச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த 75 ஆண்டுகால தமிழக அசைவ உணவக கலாச்சாரம் பின் தங்கிவிட்டது. ஆனாலும்  இன்றும்கூட சாமானியர்கள் இரட்டைஇலக்க பணத்தில் சாப்பிட தைரியமாக    நுழையும் கடையாகத்தானிருக்கிறது  "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" உணவகங்கள்.     

3 comments:

  1. Muniyandi vilasku ippudi oru history irukka!?? Nice and informative!

    Super bhai!!

    Yepdi bhai.. ippaellam rate paravaaillaya ?

    ReplyDelete
  2. மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரிலேயே சில உணவகங்கள் போலியாக செயல்படுவதாக கேள்விப்படுகிறேன். உண்மையான முனியாண்டி விலாஸ் கடைகளை அடையாளம் கண்டுகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்று சொல்லுங்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு வழிகள் இருக்கிறது "மதுரை ஸ்ரீ ஒரிஜினல்" என்பது முனியாண்டி விலாஸ் க்கு முன் சேர்த்திருப்பர். அடுத்து முனியாண்டி கோவிலில் முறையாக பதிவு செய்த சான்றிதழ் சட்டகமிட்டு கடையில் வைத்திருப்பர். 

      Delete