Saturday, January 6, 2018

அதிரப்பள்ளி (Athirappilly Falls)

அதிரப்பள்ளி 


 
நானும் நண்பன் வாஞ்சிநாதனும்  ஊரில் ஒன்று கூடிவிட்டால்  கிடைக்கின்ற நேரவாய்ப்பில் போடி -மூணாறு மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசங்களை பைக் எடுத்துக்கொண்டு சுற்றுவது வழக்கம். சென்ற ஆண்டுதான்  போடி -பூப்பாறை -ராஜக்காடு -இடுக்கி -கம்பம் என ஒருநாளில் 200+ km சுற்றி வந்தோம். அதேபோல் இந்த செப்டம்பர் இறுதியில் மீண்டும் ஒரு பயணம் திட்டமிட்டோம், திட்டமென்பது எங்கு செல்வது என்பதல்ல எப்படி செல்வது என்பதுதான், அதாவது இரண்டு நாட்களுக்குள் போடியிலிருந்து செல்லும் வழியும் வந்தடையும் வழியும் வெவேறாக இருக்க வேண்டுமென்பது மட்டும்தான். பயணிக்க வேண்டிய ஊர் எதுவென எந்த உறுதியுமில்லை ஆனால் பயணம் முழுவதும் ஜிமிக்கி  கம்மல் தேசத்தில்தான். பைக்கை கிளப்பி முதலில் தேக்கடி செல்வதெனவும், அதன்பின் அங்கிருந்து "ஓவியா" தேசத்தில் ஊடறுத்து பயணிப்பதென பாளையத்தில் சாப்பிட்ட ஒரு பாய்மெஸ் பொங்கலில் அடித்து சத்தியம் செய்துகொண்டோம்.


கூடலூர் தாண்டியதும் சிறிது தூரத்தில் எதிர்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் எங்களின் முதல் நிறுத்தம் கர்னல் பென்னி குயிக்ன் நினைவு மண்டபம். மனதிற்குள் அவருக்கு மிகப்பெரிய மரியாதை செய்து கொண்டேன் இங்கு சொன்னது சம்பிரதாயமான வாக்கியமல்ல, முல்லை பெரியாறு அணை உண்டாக்கி, நீர்தேக்கி, திருப்பி விட்டதால்தான் தேனி- மதுரை மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த விவசாய பூமியாக  மாறியது. நேரடி பெரும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல மறைமுகமாக சிறு /குறு தொழில்வர்கத்திற்கும்  வாழ்வாதாரமாக இந்த பூமியை மாற்றி, இந்த மண்ணின் இனக்குழுக்கள் வேறெங்கும் இடம் பெயராமல் இங்கு வேர்விட நீர்விட்டவர் கர்னல்.
அங்கிருந்து சிறிது நேரத்தில் தேக்கடி சென்றடைந்தோம். எனக்கு நீர்ப்பயண  உயிர்பயம் அதிகமென்பதால் படகு சவாரி மட்டும் தவிர்த்தோம். முல்லை பெரியாற்றில் பின்புல நீர்நிலை  (Back water) தான் தேக்கடி சுற்றுலாத்தலம். பின் அங்கிருந்தது வாகமன் என்ற சுற்றுலா தளம் செல்ல முடிவெடுத்து பைக் முடுக்கி, வழியில் ஒரு உணவகத்தில் Beef fry , மட்டையரிசி சாப்பாடு முடித்தோம், எப்பொழுது கேரள எல்லை தொட்டாலும் நான் மாட்டிறைச்சி  தவறவிடுவதில்லை, காரணம் அந்த சுவைக்கு காரணமான செய்நேர்த்தி, தமிழ்நாட்டு உணவகங்களில் அத்தகைய பக்குவத்தில் Beef உண்ணக்கிடைப்பதில்லை காரணம் நம்பகுதியின் ஆட்டிறைச்சிக்கான இடமதிப்பை கேரளத்தில் மாட்டிறைச்சி     எடுத்துக்கொள்கிறது ஆகவே Beef  சமையல் மலையாளிகளால் அக்கறையுடன் கையாளப்படுகிறது,

அங்கிருந்து வாகமன் என்ற சுற்றுலா தளம் சென்றோம், புல்வெளிக்குன்றுகளும், இயற்கை நோக்குதளங்களும்  (view point) நிரம்பிய ஒரு  கனவு நிலம் வாகமன்,  நாங்கள் சென்றநேரம் பனிப்புகையும் (Mist ) எதிர்பாரா சாரல் மழையும் மாறிமாறி போட்டு தாக்க அங்கிருக்கும் ஒருக்கடையில் கட்டஞ்சாயா +கப்பைக்கிழங்கு அடித்துக்கொண்டு இந்த பயணத்தின் உச்சமாக அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பார்த்துவிடுவதென முடிவெடுதோம்.


"இருநாட்களுக்குள் அவ்வளவு தூரமா? நிக்கிற இடதுலருந்து கேரளாவின் மறுமுனைக்கு போகணுமே? கு**டி பழுது விடாதா?"
மனக்குரல் என நினைத்து கொஞ்சம் சத்தமா பேசியிருப்பேன் போல "அதெல்லாம் யோசிக்காத முடிவு பண்ணிட்டேன் சாயாகடை சேட்டாகிட்ட ரூட் கேட்டுடேன் ...ஏறு வண்டீல" என்றான் வாஞ்சி. சந்திரமுகி வீட்டுக்குள்ள மாட்டுன வடிவேலு நிலமையாகிடுச்சு எனக்கு , ஆனால் வாஞ்சியை நம்பி எமலோகம் கூட போகலாம் மீட்டு  கட்டி தோளில் தூக்கிப்போட்டு வீடு சேர்த்து விடும் பாகுபலி. அதுமட்டுமல்ல ஒரு பயணத்தில் முக்கியமானது என நான் நினைப்பது உடன் பயணிப்பவருடனான எண்ண ஒத்ததிர்வுதான், எல்லாப்பயணங்களிலும் எங்களிருவருக்கான அலைவரிசை ஒன்றியிருப்பது கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். ஆனால் பயணத்தை தவிர மற்ற ரசனை அனைத்திலும் எதிர்தான். குடித்துக்கொண்டிருந்த கட்டஞ்சாயா குறையக்குறைய, இதற்கு பின்னான பயணம் பற்றிய உற்சாகமும் ஊக்கமும் மனதில் நிறைய துவங்கியது, புன்னகைமன்னன் படத்தில் கமல் ரேகா தற்கொலைகாட்சிதான் தென்னிந்தியாவை "இது எந்தஇடம் ? "
என கேட்க வைத்தது, அதிரப்பள்ளி என அறிந்து கொண்டதென நினைக்கிறன். அதன் பின் பல படங்களில் பாடல் காட்சிகளுக்கு இந்நீர்த்துறையே பின்புலம், மணிரத்னம் இவ்வருவியின் ஆகப்பெரும் ரசிகராய் இருக்கக்கூடும்.
 

கேரளாப்பயணங்களில் என்னக்கு மிகவும் பிடித்தது மலைச்சரிவு சாலைகளில் புறங்களில் வழிந்தோடும் சிறு சிறு அருவிகள்தான்.
மலை வழியெங்கும் சாலையோர அருவிச்சாரல் எங்கள் மீது தெறிக்க மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து மறுபுறம் இறங்கி தொடுபுழா நோக்கி விரைந்தோம். ஒரு பேக்கரியில் இளைப்பாறி , அடுத்து அதிரப்பள்ளி பக்கத்துக்கு பெருநகரான சாலக்குடியில் இரவு தங்குவதென முடிவு செய்தோம், அங்கமாலி நகரை கடக்கையில் சென்றவாரம் பார்த்த "அங்கமாலி டைரிஸ்" படக்காட்சி நினைவுக்குவந்தது.வழியில் பார்த்த இன்னொரு முக்கிய விஷயம் ஆறு பல ஊர்களில் ஊடறுத்து சென்றாலும் அவைகளை மக்கள் பாழ்படுத்தவில்லை ஆறு ஆறாகவே இருந்தது.அன்றிரவு ஏழரை மணிக்கு சாலக்குடியில் ஒரு ரூம் போட்டு, எட்டு மணிக்கு சாலையில் இறங்கி உணவகம் தேடி நடந்தால் பெரும்பாலான கடைகளை மூடத்தொடங்கியிருந்தார்கள், நம்மூரை போலல்ல 9 மணிக்குள் அன்றாடமென்பது முடிவுக்கு வந்துவிடுகிறது சேட்டன்களுக்கு.
கேரளா கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட நியாயம் என்னவென என்னளவில் யோசித்தேன், பிரபஞ்ச படைப்பில் வற்றிச்சலிக்காத எப்போதும் பெருக்கெடுக்கும் அழகு, பசும்இயற்கைக்கும், பெண்ணிற்கும்தான் உண்டு, இந்திய துணைக்கண்டத்தில் இவையிரண்டையும் தனக்குள் குவித்து வைத்துள்ளது இம்மலையகம்.

அதிகாலை எழுந்து கட்டஞ்சாயா அடித்துவிட்டு, போனில் டவுன்லோடி வைத்திருந்த ஜிமிக்கி கம்மலை ஒருமுறை பார்த்து வெறியேற்றி கொண்டு கிளம்பினோம் அதிரப்பள்ளி நோக்கி, வழியெங்கும் முன்னெப்போது பார்த்ததைவிட அதிக பசுமை , அழகிய வீடுகள், மிக அழகிய பெண்கள், இந்த மலையகத்தின் அழகினையும் செழுமையினையும் எந்த ஒரு கட்டுரை வழியும் எழுதி பிரத்தியாருக்கு கடத்திவிட முடியாது . பயணப்படுதலே இயற்க்கை உணர்தலின் ஒற்றை வழி. வழியில் ஒரு சிறு கடையில் இட்லி இடியாப்பம் கடலைக்கறி உண்டோம், அங்கு சுவற்றில் முருகன் ராஜா கோலத்தின் படமும் பிற தெய்வங்களில் படங்களில் மத்தியில் மாட்டியிருந்தது அங்கு மட்டுமல்ல இன்னும் சில கடைகளில் முருகன் படம் மாட்டியிருந்ததை கவனித்தோம், முருகன் முழுமையாக தமிழ் மொழிக்கும் இம்மண்ணுக்கும் காப்புரிமை பெற்றவராயிற்றே மலையாள குடிகளிடம் முருகன் எங்கனம் வந்தந்தார், அடுத்து உழக்கு புட்டு வேண்டுமா என கேட்க வந்த கடைக்கார சேட்டவிடம் சந்தேகம் கேட்டோம்,
"ஓ அதுவா மலையாளிகளும் முருகனை கும்பிடும் , பழனி போற வழக்கமும் உண்டு நெறயபேர்ட்ட ... அதுவும் இந்த ராஜா அலங்கார தரிசனத்த எங்களுக்கு இஷ்ட தெய்வம், கேரளா இவ்வளவு வளமா இருக்க காரணம் பழனி முருகன் பார்வை திசை இந்த இஸ்தலம் நோக்கி இருக்குறது தான்னு ஒரு நம்பிக்கை" என்றார், சேட்டனுக்கு நன்றி பரஞ்சு , முடுக்கிய எங்கள் வண்டி அடுத்து நின்றது அதிரப்பள்ளிதான், ஒரு மைல் முன்னே அருவியின் ஓசை கேட்டது கிளர்ச்சியாயிருந்தது 



இந்திய அருவிகளில் நயாகரா இதுதான், அதன் பிரமாண்டம் வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்டது, கவிஞர் வாலி வரிகளை கடன் வாங்கி சொல்வதானால் இது நீர் வீழ்ச்சியல்ல நீர் எழுச்சி, பெரும் பெரும் நீர்க்கோளங்கள் இடைவிடாது பூமியில் விழுந்து தெறித்து ஓடுவது போலிருந்தது. அருவியை யாரும் நெருங்கி செல்ல அனுமதி இல்லை , கொடுத்தாலும் போகமுடியாது என்பதுதான் உண்மை, விழும் நீர்ப்பாறையின் பேராற்றலை மனித உடல் தாங்க முடியாது. 

50 மீட்டர் தள்ளி நின்று ரசிக்கும் போதே பாறைமீது விழுந்து தெறிக்கும் நீரித்துளிகள் பெருமழையாய் நம்மை நனைக்கும்,நானும் நண்பனும் ஆட்கள் வராத ஒரு பாறை ஒன்றை பார்த்து அமர்ந்தோம்ம் எங்கள் முன் பெருங் கடலொன்று பேரிரைச்சலோடு விழும் இயற்கையின் முன் ஒன்றுமற்ற ஒன்றாக அமர்ந்திருந்தோம்.அங்கிருந்த பாறைமீது படர்ந்திருந்த பாசி போல அந்நீர்த்துறை மீது ஒட்டிக்கொண்ட மனதை பிரித்து திரும்ப கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. அங்கிருந்து திரும்பும் வழியில் இன்னும் இரு சிறு குளிக்க ஏதுவான அருவிகளுண்டு என ஒருவர் சொன்னார், நண்பனோ,
 " இல்லடா  இந்த பிரமாண்டம் முழுசா எனக்குள்ள நிறைஞ்சுருக்கு   வேறொரு நீர்க்காட்சி இப்பக்கு  வேணாம், கொஞ்சகாலத்துக்கு இப்பேரருவி எனக்குள்ள விழுந்துட்டிருக்கணும் ..." முணுமுணுத்தான்,
எனக்கும் அது சரியெனபட்டது.


அங்கிருந்து கிளம்பி அடிமாலி செல்ல குறுக்கு வழி பாதைகளையும் கடக்கவேண்டிய ஊர்களையும் கேட்டு குறித்துக்கொண்டு  ரப்பர் தோட்டங்களின் வழியே பயணித்தோம்.வழியில் இறங்கி ஒரு தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் சேகரிக்கும் முறை தெரிந்துகொண்டு, அடிமாலியில் மட்டையரிசி கஞ்சியுடன் Beef fry  எடுத்துக்கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலையை மீண்டுமொருமுறை தண்டிக்குதித்து, ராஜக்காடு வழி போடி வந்தடைந்து, கணக்கிட்டத்தில் 460 K.M  தூரத்தை 35 மணி நேரத்தில் பயணித்திருந்தோம் .

யா. பிலால் ராஜா 
  ( படங்கள் - வாஞ்சிநாதன் )