Monday, March 27, 2017

பாறைக்கறி


பாறைக்கறி

 
அசைவத்தில் எத்தனையோ வகை திண்டு தீத்துருக்கோம், நெறைய பேருக்கு தெரியாத வகையொன்னு இருந்துச்சு சில சனங்கள்ட்ட   அதுதா  பாறைக்கறி, வெக்காலி  அத என்னாண்டுஇங்க  பாத்துப்புடுவோம்....
 
சென்ற நூற்றாண்டுகளில் மதுரையை மையமாக கொண்ட நிலப்பகுதிகளில் களவுக்கு செல்வதை குலத்தொழிலாக கொண்டிருந்த ஒரு சமூகம் அடர்ந்த காட்டிற்குள் ஆங்காங்கே  சிறிதும் பெரிதுமான களவுக்குடி அமைத்து  வாழ்ந்தார்கள், அந்த பகுதிக்கு அருகேயுள்ள ஊர்களின் தனவந்தர்களின் வீடுகளை உளவு பார்த்து கன்னமிட்டு(வீட்டில் புகவேண்டிய பகுதியை முன்னரே வெளிசுவற்றில் அடையாளமிடடு ), சாதகமானதொரு நள்ளிரவில் ஊர்காவல் தாண்டி வீடுபுகுந்து கொள்ளையிட்டு திருப்புவார்கள். அப்படி வெற்றிகரமாக கொள்ளை இட்டு திரும்பும்போது வழியில்  ஏதேனும் வீட்டிற்கு வெளியிலோ,பட்டியிலோ இருக்கும் ஆடு ஒன்றிரெண்டை  தூக்கி விடுவார்கள். ஒருவேளை மையக்கொள்ளை தோல்வியில் முடிந்தாலும் வெறும் கையுடன் திரும்ப மனம் வராது ஆளுக்கு ஒரு ஆட்டை தூக்கிவிடுவார்கள்.  ஆடு சத்தமிடாமலிக்க அதன் கழுத்தை வளைத்து குரல்வளையை ஒதுக்கி தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஊரைவிட்டு வெளியேறுவார்கள். சிலசமயம் கொள்ளையிட்டு வெளியேற அதிகாலையாகிவிடும்  களவு குடிக்கு தூரம் அதிகமிருக்கும் பட்சத்தில் சென்று சேர நண்பகலாகிவிடும், ஒருவேளை ஊர் விழித்துக்கொண்டு இவர்களை துரத்தினாலும் அடர் வனத்தில் பதுங்கி மறு நாள்தான் வெளியேற வேண்டியிருக்கும் அதுபோன்ற சமயங்களில் காட்டு வழியில் நல்ல பெரும் கரும்பாறை கொண்ட பகுதியை கண்டதும், தூக்கி வந்த ஆட்டை கத்தியால்  அறுத்து, ரத்தம் குடித்து தொண்டை நனைத்து விட்டு பின் கறி கழித்தெடுத்து வெயிலில் கொதிப்பேறி தகிக்கும் பாறை மீது போட்டு விடுவார்கள், வனப்பகுதியில் உச்சி வெயிலில் பாறைகளின் வெம்மை எவ்வளவு கொடூரமாக தகிக்கும் என்பது அதுபோன்ற வனப்பகுதிக்கு சென்று வந்தால்தான் தெரியும். சில நிமிடங்களில் பாறையில் பரத்திவிட்ட கறியை சிறிது தள்ளி திருப்பி போட்டு எடுத்தால் நன்கு வெந்திருக்கும், வந்திருப்பவன் யாராவது மடியில் சிறிது உப்பு வைத்திருந்தால் பாறையில் வேகும்போது தடவி விடுவார்கள், பிறகென்ன உயிர்ப்பிடித்து ஓடிவந்தவர்களுக்கு தேவாமிர்தம் மாதிரி அந்த பாறைக்கறி, இதில் ஆட்டின் ஈரல் , இதயம் , விரைகள் பாறைமீது இட்டவுடன் விரைந்து வெந்துவிடும் அதெல்லாம் முன்பசிக்கு.
பாறைக்கறி இடுவது பற்றி வைரமுத்து "கருவாச்சி காவியத்தில்" கட்டையன் கதாபாத்திரம் ஓரிடத்தில் நிகழ்த்துவதாக சித்தரித்திருப்பார்.
கிடாரி படத்தில் மைய கதாபாத்திரங்களான சசியும், வேல. ராமமூர்த்தியும் வழக்கொன்றில் சிக்கி போலீஸிடம் அகப்படாமல் வனங்களில் சுற்றிக்கொண்டிருக்கும்பொழுது வரும் "வெட்டருவா வீச்சருவா ..." பாடலின் இடையில் ஆடு மேய்க்கும் கிழவனிடம் வழிப்பறி செய்த ஒரு ஆட்டை பாறைக்கறியிட்டு உண்பதாக காட்சியொன்று வரும்.
https://www.youtube.com/watch?v=ZAtqngQh-SY )

யா. பிலால் ராஜா