Thursday, September 24, 2020

பிறன்மனை விழைந்தோன்


 (ராவணன் திரைப்பாடல்வழி ரகசியகாதலின் ரசனைக்குறிப்புகள்)


மனிதஇனம் காடோடித்தனமான மந்தை வாழ்வை விட்டு குடும்ப/குல  வாழ்க்கைக்கு நிலைக்கும்போது தனியுடைமையின் அடிப்படை அலகுகளில் ஒன்றான ஒருஆணுக்கு ஒரு பெண் என்ற குடும்ப அமைப்பு உருவாகிறது,  அந்த இணைஒப்பந்தத்திற்கு பிறழ்ந்த ஆணுக்கோ  பெண்ணுக்கோ பிறத்தியாரோடு உண்டாகும் காதல்- காமம் சார்ந்த உறவென்பது குற்றவுணர்வும் துரோகப்பண்பும் கொண்டதாகிவிடுகிறது. மனிதஇனத்தில் இதற்கென நடந்த பலிகள், போர்கள், குழுச்சண்டைகளால் நிலஎல்லைகளும்,  உலகவரைபடமும்கூட பலமுறைமாறியிருக்கிறது.

"பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே" 

 பாம்பா? வாழ்வை பற்றியேறக்கிடைத்த விழுதா? என பாகுபாடுதெரியாபிறன்மனை விழைதலைப்பற்றி எழுதுவதென்பது கத்தியினை கொண்டு எழுதுவது போல, எழுதும்போதே ஏட்டை கிழித்துவிடுமளவுக்கு அபாயமுள்ளது. ஒழுக்கம்/கற்பு/ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துவாதத்தின் எதிர்பண்பான  கூடாக்காதல்கள் எந்த கோட்பாட்டையும்தாண்டி, பெருந்தேக்குவனத்தையும் பொசுக்கி தீர்க்கும் தீக்குச்சி . படமெடுத்தாடும் நாகத்தை முத்தமிடுவதற்கு ஒப்பென உணர்த்தப்படும் இக்காதலின் வகையினை காவியத்தன்மையுடனும் உண்மையுணர்வுடனும் அணுகப்பட்ட படைப்பு தமிழ் சினிமாதிரையில்  கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை. ஆனால் இப்பேராண்மைக்கு எதிர்பண்பாக உடலையும் மனதையும் எதிரெதிரே நிறுத்திவைக்கும் கூடாக்காதலைபற்றி தமிழ்சினிமாவில் எழுதப்பட்ட அனைத்து படைப்புகளையும் துலாபாரத்தின் இடதில வைத்தால் வலம் இழுத்திறக்கும் கனம்கொண்டது "ராவணன்" படத்திற்க்காக எழுதப்பட்ட  4 தாள்களில் அடங்கிவிடும் காட்டுச்சிறுக்கி , உசுரோபோகுதே பாடல்கள்.

"ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி"

அக்கினி பழமென்று தெரிந்தும் சுவைக்க துணிவிக்கும் தூண்டல் எது? இருள்பாதையின் முடிவை அடையப்போவதில்லை எனத்தெரிந்தும் இருவரையும் கள்ளமாக கைகோர்த்து இறங்கிநடக்கத் துரத்தும் கெட்டவிதி அதுவா?  ஆதம்-ஏவா சுவைத்தெறிந்த கனியின் மிச்சத்தை பெரும்பசியின்பால்தின்ற மூன்றாவது ஒருவன் வழிவந்த அதிரகசிய காதல்பசியா? வெடித்துளையற்ற எரிமலையை மனதில் சுமந்திருக்கும் ஒருவன் காலம் துளைத்த ஊற்றுக்கண் வழி நிகழ்த்தும் பேரன்பின் வெடிப்பு அது. மன இருட்குகையிலிருந்து மாறன் எய்தும் அவ்விஷஅன்(ம்)புக்கு காலமே முறிமருந்து  

"தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு! "

"ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு "

மன பாசாங்கை கழற்றியெறிந்து பார்த்தால் யாரோ ஒருவளின் ஏர் கிழிச்ச தடத்துவழி நீர்கிழிச்சு போவது போல் நம்மனமும் போயிருக்கும். பாறாங்கல்லை சுமந்து வழிமறந்து ஒரு நத்தைக்குட்டியாக நகர்ந்திருக்கும். எங்கோ ஓரிடத்திலாவது வண்டு தொடாமுகம் ஒன்றை கண்டு ஒரு வானதாரத்தின் பெருமூச்சை நாம் வாங்கியிருப்போம் இல்லையா?அவளை முன்னிறுத்தி நம்மை பின்நடத்தும் கெட்டவிதிஅது, உயிர் நட்பிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத உறவிது. 

"ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல"

சாராயம் செய்யும் நேர்த்தியுடன் மனஇடுக்கின் ரகசியக்கசிவுகளை வடித்தெடுத்து உணர்வெழுத்தாக  சில பல்லவி சரணங்களில் வார்க்கப்பட்டிருக்கிறது இப்போதைக்காதல். பிறன்மனை விழைதலென்ற  விஷபோதையை வார்த்தை சிக்கன வடிவில் எழுதித்தாண்டுவதென்பது இனிவரும் கவிஞர்களுக்கு பெரும் சவால். இனி எழுதப்படப்போகும் மறையுணர்வு பாடல்களுக்கான "உறை" பொருள். ஆதியிலிருந்து மனித இனத்தை பீடித்த பெரும்போதை  கடவுள்  நம்பிக்கையெனில் சந்தேகமேயில்லாமல் அதனை இடதுகாலால் இடறித்தள்ளி முன்னகர்ந்து வரும் மூத்த அதிபெரும்போதை "பிறன்மனை காதல்".  கவனம் (கள்ள)காதலர்களே இந்த பிறழ்வகை காதலிலிருந்துகூட மீண்டுவிடலாம் ஆனால் இவ்விரு இசைபுதைகுழிக்கு காதுகளை சிக்கக்கொடுத்து வெளிவருதல் சுலபமல்ல. ஈக்கிமின்னலடிக்க, ஈரக்குலைதுடிக்க,இடிஇறக்கி, மழைகொடுத்து  பின்மாயமாகிவிடும்  இசைவனத்திற்கு வழிகாட்டி இழுத்துவந்த ரஹ்மான்-மணிரத்னத்திற்கு நன்றிக்கும் மேலான வார்த்தையொன்றை வைரமுத்துதான் கண்டறிந்து தரமுடியும். .ஒளி விழும் காதலின் எத்தனையோ அடுக்குகளை அரைநூற்றாண்டாக கொண்டாடிவிட்டு, இருளார்ந்த காதலையும்  சொற்களில்  வேல்செய்து வேட்டையாடித்தீர்த்த  "பிறமனைகாதல் கள்ளர்" கவிப்பேரரசு வைரமுத்து

துணைக்குறிப்பு:-
செவிவழி மனசுக்குள் "காட்டுச்சிறுக்கி"யை அழைத்துவந்த சங்கர்மகாதேவன் -அனுராதா ஸ்ரீராமுக்கு என் காதுகேட்கும் கடைசி நாள்வரை நன்றிகள்.

காட்டுச்சிறுக்கி  ( ஒப்பாரி வடிவம் )

பிலால் ராஜா