Monday, February 6, 2012

வெற்றிலைக்குறிப்புகள்

This Article published in "Uyirosai" e-magazine- 06-02-2012 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5252

 
"தேங்காய் எண்ணையில் ஒரு  வெற்றிலையும் கிராம்பும்,வெந்தயமும்  சேர்த்து 
சூடுபடுத்தி உடலில் தேய்த்து பின் ஊற வைத்து  குளித்தால்  சருமம் பளபளப்பாகும்"  ஒரு தினசரியின்  ஞாயிறு  இலவச  இணைப்பில்  இதனை   படித்ததும்  கடகடவென காரியத்தில் இறங்கினேன். இதுபோன்ற  செலவு  குறைந்த தேகபராமரிப்பு என்றால் ஆர்வமாக செய்வேன். தெருமுனைச்கடைக்கு சென்று 50 பைசாவிற்கு வெற்றிலை  கேட்டேன், கடைக்காரன் என்னை கொஞ்சம் "இறங்க" பார்த்தான் (நான் கொஞ்சம் குட்டை என்பதால் "ஏற இறங்க" பார்க்க அவசியப்படாது.) "தம்பி முன்ன பின்ன வெத்தல வந்குனதில்லையா? 3 வெத்தல ஒரு ரூபா " என்றார். இப்போதெல்லாம் கண்ணில்படுவதையெல்லாம் கட்டுரையாக்கிவிடுவதாலும், பள்ளிவயதில், என் தந்தையின் சிறுவியாபரகடையில் வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்த அனுபவத்தகுதி இருப்பதாலும், வெற்றிலை வாங்கிகொண்டு ஒரு முடிவுடன் வீடு வந்தேன். முடிவு?.... வேறன்ன, இனி நீங்கள் படிக்கப்போவதுதான். 


இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது  எனது அரைக்கால்சட்டை  வயதில்(90' களின் துவக்கம்)  என்தந்தையின் கடையில், வியாபாரத்தை வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்த  எனக்கு, அவர் கொடுத்த முதல் வேலை வெற்றிலைத்தட்டில் ஒழுங்கற்று கிடந்த வெற்றிலைகளை சீராக
அடுக்குவதுதான். அடுக்கிமுடித்தபின், "இதுக்கு நீ அடுக்காமலேயே இருந்திருக்கலாம்" என்றார்.  பின்னாளில்தான்  வெற்றிலைவியாபாரிகள் கைகளில் கொத்தாக வெற்றிலையை எடுத்துக்கொண்டு வட்டத்தட்டுகளில்  சீரன வரிசையில் அடுக்கும் அழகியலை கவனித்தேன். எனக்கு அந்த வியாபாரிகளின் விரலின் கட்டளைக்கு அவ்விலைகள் கட்டுபடுகின்றன என்றே நம்பத்தோன்றியது.  கடையில் நின்றுகொண்டிருக்கும்போது எனது கையும் வாயும் சும்மா இருக்காது, அடுக்கிவைக்கப்பட்டுள்ள வெற்றிலையின் காம்பை ஒவ்வொன்றாகக்கிள்ளி மென்றுகொண்டிருப்பேன், "வெத்தல காம்புலதான் 2 நாளுக்கு அது வாடாம இருக்கவேண்டிய நீர்சத்து இருக்கும், அத ஒடிச்ச சாயங்காலத்துக்குள்ள வாடிரும்பா" என ஆரம்பித்து தாவரவியல் வகுப்பெடுக்கத்துவங்கிவிடுவார்  என்தந்தை. அப்பொழுதெல்லாம் ஐம்பது பைசாவிற்கு 5 வெற்றிலையும் 5 பாக்கும் தருவோம் ( தலா 25 பைசா வீதம்). இப்பொழுதெல்லாம் பொருட்களைக்காட்டிலும் பணத்தின் மதிப்பு வேகமாக  குறைந்துவருவதால்   எந்த சிறுகடையிலும் சென்று "அண்ணே ஒரு ரூபாய்க்கு .........."  என  ஆரம்பிக்கும்போதே  ஏளனமாக பார்க்கிறார் கடைக்காரர்.







முன்பெல்லாம் வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுள்ள வயதாளிகள்   ஊர்ப்புறம்,  மற்றும் கிராமபுறங்களில் அதிகம் இருந்தார்கள். வெற்றிலை  வாடையும், அதனை இடிக்கும் கைஉரல் ஒலியும் வயதானவர்கள் வாழும் அடையாளமாக கிராமப்புற வீடுகளில் அப்பியிருக்கும். இப்பொழுதெல்லாம்  எழுபதுகளைக்கடந்த   வயதாளிகள்  அருகிவிட்டனர். அவர்களின்  அடையாளமான  வெற்றிலை வாசனையை காலம் தன் கைகளால் கரைக்கத்தொடங்கிவிட்டது. கல்யாணவீடு, கூட்டவிருந்துகளில் வெற்றிலை, பாக்கு  பழக்கமுள்ளவர்களுக்கு விருந்தென்பது உணவுண்டபின் வாழை இலையை மூடுவதுடன் முடிந்துவிடாது,  வெளிப்புறத்தில்  நரைகூடியவர்களேல்லாம்  நிழல்தேடி வட்டமாக அமர்ந்து வெற்றிலை மெல்லுவதில்தான் முடியும். அதுபோன்ற சமயங்களில் நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்து அந்த தாம்பூலம் தயாராவதை ரசிப்பேன்.

இருவிரலால் வெற்றிலையை எடுத்து
வெள்ளைவேட்டி மடியில் முன்பின் துடைத்து
நுனிக்காம்பு நுனிஇலை கிள்ளி
நடுவிரல் சுண்ணாம்பு அடியிலை தடவி 
பாக்கிட்டு மடித்து 
வாயிலிட்டு குதப்பி 
உமிழும்போது உற்றேடுக்கிறது  
விருந்தின் சுவை.

வேறொன்றுமில்லை, தேர்ந்தவர்களால் செய்யப்படும் தாம்பூலம் ஒரு
கவிதைக்கு ஒப்பானது என சொல்ல முயற்சித்தேன்.

சித்த, நாட்டுப்புற வைத்தியங்களில்  சிறப்பான  இடம் கொண்ட  வெற்றிலை, நம்சமூகத்தில் பாக்கு, புகையிலை போன்ற போதை/தீமை பயக்கும் பொருளுடன் சேர்த்துதான் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. (வெற்றிலை ஒரு சிறந்த  விஷ முறிவு,  ஜீரண/ இரைப்பை  சிக்கலுக்கு மருந்து  என்பது எல்லோருக்கும் தெரியும்). அதிலும் வழிபாட்டு/சம்பிரதாய/
ஜாதக/ஜோதிட தளங்களில் வெற்றிலை தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. எங்கள் கடைக்கு அருகில் ஒரு ஜோதிடர் ஒருவர் குடில் அமைத்திருப்பார். அங்கு ஜோதிடம் பார்க்க வருபர்களை முதலில் தட்சணையாக எங்கள் கடையில்தான்  வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி வாங்கிவரச்சொல்லுவார்,  மாலையில் அவரிடம் குவிந்துவிடும் வெற்றிலைகளை எங்களிடமே கொடுத்துவிட்டு பதிலாக வாரப்பத்திரிகை ஏதாவது வாங்கிக்கொள்வார். சில வருடங்களுக்கு முன்  எனது திருமண  அழைப்பிதழ்  கொடுக்க என் நெருங்கிய உறவினர் ஒருவரை தேடிச்சென்றேன், அழைப்பிதழை எடுத்து அவரிடம் கொடுக்கும்போது, "என்னயா மாப்பிள, தட்டுல வெத்தல பாக்கோட வச்சு அழைச்சாதானய்யா 
 மரியாத" என்றார் சிரித்துக்கொண்டே.  எனக்கும், என் அழைபிதழுக்குமான
அங்கீகாரம் அந்த கணம் சில வெற்றிலையிடம்தான் இருந்தது.



இந்த வெற்றிலை இனத்தின் விளைமூலம் மலேசிய என்று படித்திருக்கிறேன். தமிழகத்தில் கரூர், கும்பகோணம் பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படும்  இவை ஒரு  கொடியிலை தாவரம். தென்பகுதியில் சோழவந்தான், வடுகபட்டி, ஜெயமங்களம், போடி - மீனாட்சிபுரம் பகுதியில்  அதிகம் பயிரிடபடுகிறது. எங்கள் பகுதியான தேனி மாவட்டத்தைப்பொறுத்த  வரையில் பிள்ளைமார் சமூகத்தின்  ஒரு பிரிவினரான  'கொடிகால்'  பிள்ளைமார்கள்தான் வெற்றிலை விவசாயத்திலும், வியாபாரத்திலும்
 ஈடுபட்டு வருகின்றனர். வெற்றிலை இனத்தில் பலவகை இருந்தாலும்
கருப்பு வெற்றிலை,வெள்ளை வெற்றிலை அல்லது கற்பூர வெற்றிலை
இனம்தான் முக்கியநுகர்பொருள்.

வெற்றிலை வகைகளைக்காட்டிலும் அதனை வாங்க வரும் மனிதர்களின் வகைகள்தான் நினைவுகளில் திட்டுத்திட்டாய் சுவற்றின் மீதான வெற்றிலைக்கரைபோல   ஒட்டியிருகிறது.  அதிலும் வெற்றிலை
வாங்குபவர்களின் முகங்களை காட்டிலும் சிலரின் கைகள்தான் இன்னும்
நினைவிலிருக்கிறது. வழக்கமாக வெற்றிலை வாங்கும் ஒரு கிழவியின்
கையிலுள்ள நரம்புகள் வெற்றிலையின் மீதுள்ள நரம்புகளைக்காட்டிலும்
அடர்த்தியானதாகத்தோன்றும். பேருந்து நிலையத்தின் அருகிலிருப்பதால்
இரவிலும் எங்கள் கடை திறந்திருக்கும். அந்த நாட்களில் இரவில் பாலியல்
தொழிலாளிகள் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். வியாபாரம் செய்த
வகையில் சிலரிடம் அறிமுகமும் எனக்கிருந்தது (சத்தியமாக பேச்சளவில்  மட்டும்தான்).அவர்களில் ஒருத்திக்குமட்டும் ஒரு பழக்கமிருந்தது, அவளை அழைத்து செல்பவர்கள் பணத்துடன் வெற்றிலையும்,  பான்பராக்கும்  கட்டாயம்  கொடுக்கவேண்டும். சில சமயம் அவள் இந்த வெற்றிலைக்காக சிலரிடம் சண்டையிடுவாள். அந்த பெண் ஏன் வெற்றிலை மெல்லும் பழக்கத்தில் இவ்வளவு ஆர்வமாக இருந்தாள் என்று தெரியவில்லை.  சில கிராமத்துப்பெண்கள் வாயும் பற்களும் நிரந்தரமாக வெற்றிலைக்கறை
கண்டிருக்கும். பெண்களுக்கும் வெற்றிலைக்குமான தொடர்பை
யோசிக்கும்பொழுது, வெற்றிலைக்கு ஏன் 'அந்த' வாடை வந்தது என்று சொல்லப்படும் நாட்டுபுற வாய்மொழி கதை ஒன்று நினைவுக்குவருகிறது,
(திரு. கி. ரா. அவர்களின் "மறைவாய்ச்சொன்ன கதைகள்" தொகுப்பிலும் இக்கதை இருக்கிறது)  இக்கதையின்படி வெற்றிலை இந்திரலோகத்தில் மட்டும் கிடைக்கும் வஸ்து.  ஒருமுறை இந்திரனின் அழைப்பை ஏற்று அர்ஜுனன் தேவலோகம் செல்கிறான், அங்கு அவனைக்கண்ட ஊர்வசி அவனை அடைய துரத்துகிறாள். ஆனால் அர்ஜுனன் அவளை நிராகரித்துவிட்டு பூலோகம் திரும்புகிறான். அவனை எப்படியாவது அடைந்துவிடவேண்டுமென்ற எண்ணத்தில் அங்கிருந்து பூலோகம் வருகிறாள், வரும்போது அவள் பிரியமுடன் உண்ணும் வெற்றிலையை உடன்
எடுத்துவர எண்ணுகிறாள், ஆனால்  தேவலோக  பொருட்கள்  பூமிக்கு எடுத்துச்செல்ல அனுமதியில்லை என்பதால் சில வெற்றிலைகளை
தன் அந்தரங்க மறைவிடத்தில்(அடிமடியில்) ஒளித்து வைத்துகொண்டு Security Checking, Gatepass அனைத்தையும் கடந்து பூமி வருகிறாள், ஆனால் இங்கும் அவள் எண்ணம் ஈடேர ததால்  கோபத்துடன்  மீதி  வெற்றிலைகளை உருவியெடுத்து பூமியில் எறிந்துவிட்டு தேவலோகம் சென்றுவிடுகிறாள்,
பின் பூமியில் தளிர் விட்ட வெற்றிலையில் 'அந்த' வாடை இன்றுவரை மாறவில்லை என்பதுதான் அந்தக்கதை.

நான் பதின்வயதில் இருந்த சமயத்தில் அறுபதை கடந்த பலரை எனக்கு நட்பாக்கி வைத்திருந்தது வெற்றிலை. சில்லறை வியாபாரிக்கும்   வாங்குபவருக்கும் வெற்றிலை ஒரு  தனிப்பொருள் இல்லை, பாக்கும், புகையிலையும் உடன் சேர்ந்தது. பான்பராக் படையெடுக்காத 80'களின் இறுதி, 90'களின் தொடக்கத்தில்  கொட்டை பாக்கு, சுருள் பாக்கு(கொட்டை பாக்கின் உடைபட்ட வடிவம்),   தூளாக்கப்பட்டு இனிப்பு,சாயம் சேர்க்கப்பட்ட  ரோஜா/நிஜாம்/கிரேன் பாக்கு,
இவைகளை தவிர புகையிலை வகைகளும் சேர்க்கப்பட்டு உண்ணப்பட்டது.
ஆனால் பின்பு   பான்பராக , கணேஷ் / ஹான்ஸ் போன்ற
போதைக்கான வேதி கலந்தவைகளைக் கொண்டு வெற்றிலை பழக்கத்தை
குறைந்த செலவில் அல்கஹாளுக்கு இணையான் பழக்கமாக
மாற்றிக்கொண்டனர். இந்த தலைமுறையில் வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்படுத்துவது மிக அரிது. உணவுப்பொருள்  தவிர்த்து இதுபோன்ற பழக்கத்தை கடந்த இருபது ஆண்டுகளாக சிகரெட், மது , பான்பராக், பான்பீட  போன்றவை இடம்பெயர்த்துக்கொண்டிருக்கின்றன.


யா. பிலால் ராஜா