Thursday, May 16, 2019

கன்னிமாரா - சென்னை அரசு அருங்காட்சியகம்

 
 
நன்றி சொல்வனம்.காம் (மே 2019 இதழ்)

சென்னையில் வாசிக்கத்தொடங்கி 10 ஆண்டுகளுக்குமேலாகியும் மாநகரின் முக்கிய அடையாளமான கன்னிமாரா நூலகத்தை இன்னும் பார்க்காதது ஒரு மனக்குறையாக இருந்தது. என்னை ஒரு வாசிப்பாளன் என சமீபமாக தற்பெருமை பேசத்துவங்கிவிட்டதால் நாட்டின் பழம்பெரும் நூலகத்தை பார்த்து வைப்பதென்பது கொஞ்சம் அவசியமாக்கப்பட்டது. ஒரு வார ஓய்வுநாளில் " அம்மா குடிநீர்" ஒரு பாட்டிலுடன் ஏழும்பூர் புறப்பட்டேன். ஒட்டுமொத்தமாக அந்த பகுதியிலுள்ள 6 வளாகங்களை சுற்றிப்பார்க்க 15 ரூபாய் என்றார்கள். கன்னிமாரா நூலகம் தவிர, தொல்லியல் அருங்காட்சியகம் , சிறுவர் அருங்காட்சியகம், உயிரியில் அருங்காட்சியகங்களின்  தொகுப்பு இவ்வளாகம்.  பத்தாண்டுகளுக்கு முன்புவரை தமிழக பள்ளி கல்லாரி மாணவர்களின் சென்னை கல்விசுற்றுலா பட்டியலில் கட்டாயம் இவ்வருங்காட்சியகத்திற்கு இடமுண்டு தற்போது எப்படியென்று தெரியவில்லை, அதனை தீம்பார்க்குகள் ஒருவேளை இடம்பெயர்த்திருக்கலாம்  90களின் மாணவர்கள் மெட்ராஸ் செத்தகாலேஜ் என்று சொல்வது  இவ்வளாகத்தைதான்.
 

 
முதலில் சென்றது நூலக அரங்கிற்குத்தான் 4 தளங்கள், ஒவ்வொரு புத்தக வகைப்பாட்டியலுக்கும் ஒவ்வொருபகுதி, ஆனால் இவை புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள்,  கன்னிமாரா நூலகம் சம்பந்தமாக பத்திரிக்கைபுகைப்படங்களின் முன்பு பார்த்த பழைமையான  கட்டிடஅமைப்பு  கண்ணில்படவில்லை. அங்குள்ள ஊழியரிடம் இதுபற்றிகேட்க ,  "முதல் தளத்தில் நாளிதழ் பிரிவு போய் அந்த அரங்கின் கடைசியில் கதவுஒன்னு சாத்திருக்கும் அதுவழி போங்க…" என்றார், அது திகிலான ஒரு சுரங்கப்பாதை போல் நீண்டு அந்த கட்டிடத்தின் பின்னாலுள்ள பழம்பெரும் 1896 ல் திறக்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தில் கொண்டு நிறுத்தியது, வாசலை அடைத்தாற்போல் மேசையிட்டு சில ஊழியர்கள் அமர்ந்திருந்தனர், " உள்ளே பார்க்கலாமா?" என்றதும் "இல்ல சார் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதியில்லை.." என்றார்கள். நான் ஒரு கணம் தயங்கி, எப்படியாவது சமாளித்து பேசி உள்ளேபோய் ஒருஎட்டு பார்த்துவிடவேண்டுமென மனம் கணக்கிடும்போதே என் கண்களில் ஆர்வத்தை கண்டுகொண்ட ஒரு ஊழியர், "இந்த ரெஜிஸ்ட்ல ஒரு கையெழுத்து போட்டுட்டு ஒரு 10 நிமிஷம் பாத்துட்டு வந்துருங்க…" என்றார்.
1890 இல் அப்போதைய பிரிட்டிஷ் அரசின்  சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்ட  இந்நூலகம் 130 ஆண்டு பழமை உள்ளேங்கும் பிரதிபலித்தது, ரசனையான நூலக வடிவமைப்பு, இரண்டு தளங்களில் புத்தக அலமாரிகள் அமைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்து ஒரு சிறு மர படிகள்வழி மேலேறி நூல்கள் எடுக்கலாம் ஆனால் தற்போது கட்டிடமும் மர வெளிப்பாடுகளும் பலமிழந்து விட்டபடியால் உபயோகிக்க அனுமதியில்லை. சுவர்களில் பகலில் விளக்கு எதுவும் தேவையில்லாதபடிக்கு பெல்ஜியதிலிருந்து வரவழைக்கப்பட்ட  வேலைப்பாடு நிறைந்த கண்ணாடி ஜன்னல்கள் இக்கட்டிடத்தான் சிறப்பு.
 

 
பெரும்பாலான அலமாரிகளில் பழைய ஆங்கில நூலகளே பிரதான சேமிப்பாக இருக்கிறது. உள்பகுதியெங்கும் நூற்றாண்டுக்கான தூசியும் அமைதியும் புத்தகங்களின் மேல் உறைந்து கிடக்கிறது. வாயிர் கண்கணிப்பு ஊழியரின் கண்ணில் படாத ஒருஇடத்தில் நின்று ஒன்றிரண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், கேட்டால் அனுமதிக்க மாட்டார்கள் என் கணித்து, அதேபோல் வெளிஏறும்போது ஒரு பேச்சை போட்டு பார்த்தேன் அனுமதி இல்லை என்றார்கள். முன்னரே எடுத்தது நல்லதாக போய்விட்டது.
உள்ளே யாருமில்லை என நினைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு அலமாரி பகுதியில் மூவர் அமர்ந்து சில புத்தகங்களை தூசி பிரித்து தனியாக எடுத்துக்கொண்டிருந்தனர், என்னை கண்டதும் எந்த டிபார்ட்மென்ட் சார் ? என்றார் ஒருவர் " பப்ளிக் விசிட்டர் சார் .." என்றேன். அவர்கள் அண்ணா நூற்றாண்டுநூலக ஊழியர்கள் என்றும் பழைய புத்தகங்களை மின்னூலாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இங்கிருக்கும் புத்தங்களை தேர்வு செய்து எடுத்துப்போக வந்தவர்களென
சிறுஉரையாடலில் தெரிந்துதது.
 
இந்நூலகத்தில் 1553-ல் அச்சிடப்பட்ட  மிகப்பழமையான நூலொன்று  ஒருகண்ணாடி  பெட்டகத்தில் காட்சிக்காக பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளது. 1781 -ல் தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம்  தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது அங்கு அச்சான "ஞான முறைமைகளின் விளக்கம்"  என்றநூலும் காட்டிச்சிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கிப்போயிருந்த அந்நூலின் பக்கங்களை காலம் கரைத்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணத்தின் முக்கிய வரலாற்று சின்னமொன்று தூசுமிகுந்த தன் இறுதிமூச்சை நிதானமாக வெளியேற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.
 


 
கன்னிமாராவிற்கு அடுத்த கட்டிடம் தொல்லியல், சிற்பங்கள், மற்றும் நாணயவியல் காட்சி அரங்கம். இந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளவையனைத்தும் ஐம்பொன் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட 7 முதல் 15 நூற்றாண்டு வரை தமிழத்தில் பல பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படசிலைகள், கண்ணாடிப்பெட்டகங்களில் சிறப்பாக காட்சிப்படுத்தி வைத்துள்ளனர், பெரும்பாலும் சிவன், பெருமாளின் அவதாரங்களாகவும் அம்மனின் அவதாரங்களாகவும் பெயரிடப்பட்டுள்ளன, இறுதியாக ஒருஇடத்தில் திருஞானசம்பந்தர் என்று பெயரிடப்பட்டு சில ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன அதுவரை எனக்கிருந்த சந்தேகம் இங்கு வலுவானது 
திருஞானசம்பந்தர் மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பாலான சிலைகள் மெலிந்த தேகம் ஒற்றை உடை பிச்சை பாத்திரம் தலையில் சுருள் முடி வடிவம் கொண்டவையாக இருக்கிறது, இந்திய துணைக்கண்டண்டத்தின் இதுவரையிலான தொல்லியல் அகழ்வு முடிவுகளெல்லாம் நமக்கு ஒன்றை சொல்லியிருக்கின்றன சமணமும் பௌத்தமும் தான் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுக்கட்டிடம், உருவம் வரைதல், புடைப்பு சிற்பம், சிலை ஆக்குதலில் தற்போதைய இந்துமத உருவவழிபட்டு, சிலையாக்க  கலாச்சாரங்களுக்கு முன்னோடி. பௌத்தர் மற்றும் சமணர்  தலைகளில் முடிகள் சுருள் சுருளாக சித்தரிப்பது அவரகள் ஞானமடைந்த "உஷ்நிஸா" (விழிப்புற்ற நிலையின் உடலியல் வெளிப்பாடு) நிலையை குறிப்பதாக பௌத்தம் சொல்கிறது, அந்தவகையில் சிலபல சிலைகள் தவறான யூகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா? வாளகம் முழுவதும் என் பின்னால் வந்துகொண்டிருந்த காவல்காரர் கண்களுக்குத்தப்பி நானெடுத்த சைவ,வைணவ அடையாளமற்ற திருஞானசம்பந்தர் கீழே.
இந்த வளாகத்திலுள்ள முக்கியப்பகுதி மையக்கட்டிடமான அரசு அருங்காட்சியகம்தான் கன்னிமாரா கட்டிடத்திற்க்கும் முந்தயது மற்றோரு அரங்கில் அகழ்வாரய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பங்கள் தொகுப்பு, முக்கியமாக நடுகற்கள் அவற்றின் செய்தி மற்றும் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் குறிப்போடு வைக்கப்பட்டுள்ளது, இவ்வரங்கில் கற்சிற்பங்கள் பெரும்பாலும் பௌத்த சமண சமயத்தை சார்ந்தவை, இங்குள்ள சோழ பாண்டிய பேரரசுகளின் சில இஞ்ச் முதல் சிலஅடிவரையிலான செப்பு பட்டயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவைகள் இவைகள் எளிதில் வேறெங்கும் காண முடியாதது.   இந்த கட்டிடத்தின் பின் பகுதியில்தான் படிம உயிரியல் காட்சியகம் இருக்கிறது, சின்னஞ்சிறு உயிரின்  பதப்படுத்தப்பட்ட படிமத்திலிருந்து யானை மற்றும் திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மாணவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய அரங்கு இது.


 
மானுடவியல்காட்சியகம் தனியான ஒரு கட்டிடத்தில் இருக்கிறது, சற்றே இருளடைந்த இந்த காட்சியகத்தில் நான் ஒருவன்மட்டும் நுழைந்திருந்தேன் அதன் வாசலில் 60 வயதை நெருங்கும் ஒரு காவலாளி தனது சிறிய போனில் " தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ..." பாடல் மெலிதாக ஒலிக்கவிட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்து கண்மூடிப்படுத்திருந்தார், என் காலடி ஓசை கேட்டு கண்திறந்து பார்த்துவிட்டு மீண்டும் மூடிக்கொண்டார். அந்த அரங்கை நான் சுற்றி பார்த்து திரும்பி வாசல் வரும்வரை இன்னொரு பார்வையாளர் அங்கு வரவேயில்லை, ஒருவேளை அன்றைக்கு நான் ஒருவன்மட்டுமே பார்வையாளனாக இருந்திருக்கலாம். " தாயின் மடியில் தலை.." பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் அவர் போனில் ஒலித்துக்கொண்டிருந்தது. உலகில் பெரும் சலிப்பும், சோர்வும் தரக்கூடிய வேலை இந்த அருங்காட்சியக காவலாளி பணியாகத்தான் இருக்கும்போல. பண்டைய அரசுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இந்திய தொல்குடி சமூகத்தைப்பற்றிய முக்கியமான ஆவணங்களும் கருவிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, திப்புசுல்தான் பயன்படுத்திய கையடக்க பீரங்கி உட்பட.. ( வாசலில் திப்பு பயன்படுத்திய பெரிய பீரங்கி ஒன்று புதர்களுக்கு மத்தியில் இருந்தது) ஆயுதங்கள் பிரிவில் தென்னிந்தியபேரரசு ஆயுதங்கள் தவிர பிரிட்டிஷ்/மேற்கத்திய போர்ப்பயன்பாட்டு  ஆயுதங்களும் பார்க்ககிடைத்தன, 18ம் நூற்றாண்டில் பிரிட்டிசாருக்கு தென்னகத்தில் பெரும் சவாலாக இருந்தது காவல் மற்றும் களவுகுடிகள் பயன்படுத்திய வளரி (வளைதடி) என்ற ஆயுதம், (மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் நாயகனை வீழ்த்த வேல.ராமமூர்த்தி பயன்படுத்திடுவது இவ்வளரியைதான் ) ஆயுதபரவல் தடைச்சட்டத்தை தெற்க்கில் கடுமையாக பிரிட்டிஷ் அரசு அமல்படுத்த காரணமான வளரியை ஒருமுறை நேரில்காண ஆசைப்பட்டு தேடினேன்  அதற்க்கான எந்த தடயமும் அங்கில்லை.
   
அந்த அரங்கிலிருந்த்து வெளியேறுமிடத்தில் 15 அடி உயரத்தில் மரத்திலான வினோதமான "  மெரியாப் பலித்தூண் "  எனப்பெயரிட்ட ஒன்றை வைத்திருந்தார்கள் அதனருகில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இப்படத்தின் கீழே.
 
  • தாம் மேற்கொண்ட மஞ்சள் வேளாண்மையில் கூடுதலான மகசூலைப்பெற ஒரிசாக் கொந்தர் பழங்குடியினர் தம்புனித தெய்வத்திற்கு மனித உயிர்ப்பலியினை மேற்கொண்டனர்.
  • இரத்தம் சொரியும் படையலை அளிக்காமல் மஞ்சள் அடர்சிவப்புநிறம் அடையாது என இப்பழங்குடியினர் நம்பினர். 
  • யானை தும்பிக்கை போன்ற பலித்தூணின் கிடைமட்ட பகுதியில் பலியிடப்படுவோர் இறுகக் கட்டப்பட்டனர்.
  • இப்பலித்தூணின் செங்குத்துப் பகுதியின் மீது கிடைமட்ட பகுதி வேகமாக சுற்றப்படும், ஏற்கனவே இலுப்பைப்பூ சாராயத்தால் போதை ஏற்றப்பட்ட பலியிடப்படுவோர் இச்சுழலியக்கத்தால்  மயக்கமடைந்து கத்தவியலாமல் செயலிழந்து கிடப்பார்கள்.
  • பலியிடப்படுவோர் கத்தினால் ( வலி தாங்காமல்)  அப்பலியை புவி தெய்வம் ஏற்காது என நம்பப்பட்டது.
  • கொந்தர் பழங்குடியினரிடம் மனிதப்பலி தடைசெய்யப்பட்ட(1852) பின் காணக்கிடைக்கும் ஓரே பலிதூண் இங்கிருப்பதுதான்.
யா. பிலால் ராஜா