Friday, August 30, 2013

மகன்

மகன்

என் ஆன்மாவின் பிரதிபிம்பம் 
என் உருகிய உயிரின் உறைநிலை உரு 
ஒரு அடர் வெண்மேகத்துண்டு
ஒரு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்  கவிதை
எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஆகச்சிறுவடிவம்
மழலைச்சொல் மொழியும் ஒரு மவுனம்
தவழத்தெரிந்த ஒரு புன்னகை
அழுகைபுரியும் ஒரு மகிழ்ச்சி
உடைதரித்த ஒரு உள்ளங்கைக்கனவு
சுவாசிக்கும் ஒரு கிரகம்
கண்காணக்கூடிய ஒரு வரம்
உறங்குகிறது மகனாய்
என் தோளில்

யா. பிலால் ராஜா

Sunday, March 10, 2013

சூரியமோகம்


நீண்ட அடைமழை தீர்ந்த பின்
இக்காலை வாசலில் கண்டேன்
ஒரு முழு ஒளி உமிழும் சூரியனை ...
கண்மூடி சம்மணமிட்டு அங்கேயே அமர்ந்தேன்
புற்றுமீதமர்ந்தவன் மீதான எறும்பாக
என்மீது ஊறிப்பரவிற்று வெயில்
பெரும் வெம்மைத் தாகம் தீர்க்க
ஒவ்வொரு துளி ஒளியையும்
உடல் பருகி தீர்க்கப்பார்த்தது
எனக்கு முன்னெப்போதும் பிடிக்காதவை இச்சூரியன்
அதன் வெம்மைமீது தீராத வெறுப்பெனக்கு
அது எப்போதும்
என் வியர்வை சுரப்பணையின் மதகுடைக்கும்
என் முளைக்குள் வியர்வைபெருக்கி முகுளம் நனைக்கும்
என் ரௌத்திரத்தின் திரி கொளுத்தும்
என் காமக் 'கரு'க்களை அனலேரிக்கும்
அதனால் அதன் வெம்மைமீது தீராத வெறுப்பெனக்கு
அனால் இன்று அப்படியல்ல
இவ்வேப்பம் உறைந்திருந்த உதிரத்தை உருக்கி
உயிர்த்தட்டுக்களை நகர்த்திடம்பெயர்த்தன
இச்சூரியமோகம்
இன்றொருநாள் மட்டுமென
நான் எண்ணும் வேளையில்
என் உடல்செல்லின்
ஒவ்வொரு உட்கருவும்
ஒவ்வொரு சூரியனாகமாறி
தகிக்கத்துவங்கின

யா. பிலால் ராஜா

பைத்தியப்  புன்னகை
 
வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தேன்
எப்போதும் பார்க்கும் சாலையோர பைத்தியம்
எப்போதுமில்லாத புன்னகை செய்தான் என்னைப்பார்த்து 
அதுவரை
நான் ஒரு பைத்தியத்தின் புன்னகையை எதிர்கொள்ள  
பயிற்சியோ  ஒத்திகையோ  செய்திருக்கவில்லை
அந்த புன்னகை என்மீது மோதிவிடாதபடி
லாவகமாக விலகி நடந்தேன்
அவன் மீண்டும் அடர்ந்த பைத்தியமாகிக்கொண்டிருந்தான்
 
யா. பிலால் ராஜா