Tuesday, October 12, 2010

ஊரில் இல்லாத நாட்களில்






என்னால் மட்டும் வீடு திறக்கப்படுகிறது 

உலராத என் ஆடைகளின் ஈரத்தை
அறையின் வெக்கை தின்று கொண்டிருக்கிறது

நேரமும் சோப்பும் மெதுவாகத்தான் கரைகின்றன

கேட்கப்படுவதற்கு என்னைத்தவிர அவளும் இல்லாததால்
அறைக்குள் குழப்பத்துடன் அலைந்து கொண்டிருக்கிறது
பிரியத்துடன் நாங்கள் கேட்கும் பாடலொன்று

 அவ்வப்போது கடிகாரம் மின்விசிறி போலவும்
மின்விசிறி  கடிகாரம்     போலவும் சுற்ற கனாக்கண்டேன்

 கழுவாத தேநீர்  கோப்பைகள் என்னைப்பார்த்து
எப்போதும் தங்களுக்குள் எதோ பேசிக்கொள்கின்றன

நாட்கள் நாட்காட்டிகளில் நிரம்பிவழிகிறது
குப்பைக்கூடை இன்றும் கூட  நிரம்பவில்லை
 
அவள் வரைந்து வைத்த சித்திரத்தாளில்
 சிலந்திவலை பிண்ணிக் கொண்டிருக்கிறது - கலைக்கவில்லை

சமையல் சமைப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறது

 மெழுகுவர்த்திகள் கொளுத்தாமலே உருகி வழிந்தன 
மழையும் மனைவியும் ஊரில் இல்லாத நாட்களில் ......  

பிலால் ராஜா

தண்ணீர் முகம்

 


“அண்ணாந்து பார்த்து தண்ணீர் குடித்தேன்
வானம் முழுவதும் உன் முகம்”
*****************************


“உனக்கும் சேர்த்துதான் பயண சீட்டு
நான்மட்டும் பேருந்தில் “
******************************


“சண்டையிட்டாலும் சந்தோஷம்
உன்னிடம் மட்டும்”

by,
Y. Bhilalraja

சிதறும் சந்தேகங்கள்

 


"கடிகாரம், காலம் பற்றி அறியுமா?

எந்த நீராவது வேரின் முகவரி தேடி இருக்குமா?
நிறைவேராத பிரார்த்தனைகள் எங்கு சென்றிருக்கும்?
முதல் மனிதனின் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்?
மரங்களை போல் மலைகளுக்கும் வேர் உண்டா?
சாமிக்கு உடைத்தாலும் சமையலுக்கு உடைத்தாலும் ஏன்
ஒரே நாளில் தேங்காய் அழுகிவிடுகிறது?
சூரியனுக்கு நிழல் உண்டா?
தான்  வளர்த்த மரத்தை எந்த வேர்களாவது
வெளிவந்து பார்த்தது உண்டா?
நிறங்கள் ஏதும் அற்ற நிறம்தான் கருப்பா?
குனிந்தபோது சட்டையிலிருந்து சிதறிய சில்லரையாய்
எதிர்பாராமல் ஓடுகிறது என் சந்தேகங்களும்…”


பிலால் ராஜா