Tuesday, April 19, 2011

செயற்கைத்தேன்


This article publised in Leading tamil literary e-magazine "Uyirosai" (uyirmmai publications))
25-04-2011
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=4252

   இந்த பதிவு நிச்சயம் சர்பத் என்ற குளிர்பானத்தின் தயாரிப்பு முறை பற்றியதல்ல வந்தேறி குளிர்பானமான் coke, pepsi  குழுமத்தால் வாழ்விழந்த ஒரு சிறுதொழிலும்,  நம் சமூகத்தின்  எளிய  மக்களின்  குளிர்பான குறியீடுகளில் ஒன்றான சர்பத்திற்கும் எனக்குமிடைபட்ட  ஒரு உறவைப்பற்றியது.  சமீபத்தில்  எனது  சொந்த ஊர் சென்றநான்  எங்களது  குளிர்பானக்கடையில் அமர்ந்து எனது  தந்தையுடன்  பேசிக்கொண்டிருந்தேன் அப்போது காலடியில் இரண்டு சர்பத் பாட்டில்கள் பரிதாபமாக என்னை  பார்ப்பதுபோலிருந்தது, எங்களது பேச்சின் இடைவெளிகளையெல்லாம் சர்பத்துடனான என் நினைவுகள் வந்து
நிரப்பிக்கொண்டிருந்தது.

     சர்பத்தை நான் குளிர்பான கலாச்சார குறியீடு என்று சொல்வது இந்த கட்டுரையின் கருப்பொருள் என்பதால் அல்ல,  நன்னாரி  என்ற தாவரம் நம் நாட்டின் இயற்கை  மூலிகைகளில் ஒன்று,  அதன் வேருக்கு உடலை குளிர்ச்சியாகும்ஆற்றல் உள்ளதென்று சித்த, ஆயுள்வேத மருத்துவங்களில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் (அயுள்வேததில் நன்னாரி " சாரிப"  என்றழைக்கப்படும், அதிலிருந்து  உருவானதுதான் "சர்பத்"  என்ற வார்த்தை )

சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

(பதறவேண்டாம்  பள்ளி பருவத்திலிருந்து " கட்டுரை எழுதினா 'எடுத்துகாட்டு' இருந்தாத்தான் நெறைய மார்க் கெடைக்கும்....." ன்னு  வாத்தியார் சொன்னது மனசுல பதிஞ்சதால மேற்கண்ட பத்திய தவிர்கமுடியல ) நன்னாரியின்  வேரை நீரில்  ஊறவைத்து  வடிகட்டி குடிப்பது உடல் உஷ்ணம் தணிக்க நம்முன்னோர் கையாண்டமுறை, ஆனால் வேர் ஊறிய நீரை குடிப்பது சுவைக்கது
என்பதால் சர்க்கரைபாகுடன் கலந்து குடித்தனர் , அதுதான் "நன்னாரி சர்பத்" ஆனால் காலப்போக்கில்  நன்னாரி வேருக்கு  பதில்  " எஸ்சென்ஸ்" பயன்படுத்த  துவங்கியதால் நன்னாரி வேரின் பயன் மறைக்கப்பட்டு இனிப்பு குளிர்பானமாக மாறியது, இன்றைய தினம் சர்பத் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் யாரிடமாவது நன்னாரி வேரை பார்த்திருக்கிறிர்களா? என்று கேட்டு பாருங்கள், நமது உணவு பழக்கத்தில் chemistry எந்தாளவுக்கு
workout ஆகியிருக்கிறதென்று தெரியும்.  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளிப்படிப்பும், கடை  வியாபரமும்   இருசக்கரவாகனத்தின்  இரு  சக்கரங்களைப்போல் எனக்கு  தவிர்கமுடியாததாய்  இருந்தது,  (அப்போது coke pepsi இந்தியாவில்  உற்றேடுகாத காலம். 1993 -க்கு பின் தான் coke ,pepsi இந்தியாவில் புது பொலிவுடன் நுழைந்தது) , எல்லா குளிர்பான கடைகளில்
இருப்பது போலவும்  20-க்கும் குறைவில்லாத சர்பத் பாட்டில்கள் எங்கள் சர்பத்  ஸ்டாலின் முன்வரிசையில்  படைவீரர்களைபோல்  கம்பிரமாக அணிவகுத்திருக்கும்,   ஸ்டாலின் பக்கவாட்டு கிராடில் அடுகப்பட்டிருக்கும் Torino , Bavanto , praja போன்ற உள்ளூர் குளிர்பனங்கள்தான் அன்றைய பணக்கார பானங்கள், நடுத்தர ஏழைமக்களின் தேர்வு பெரும்பாலும்  சர்பத்தகத்தானிருகும். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 8 -10 பாட்டில்கள் விற்கும் கோடையில் 20 -ஐ தொட்டுவிடும்,ஒரு   பாட்டிலுக்கு 14 - 16 கிளாஸ் சர்பத் எடுக்கலாம், அனால் என்  வியாபாரதிறமையால்  (திருட்டுத்தனத்தை  இப்படியும் சொல்லலாம்)  20 ஐ தொட்டுவிடுவேன்.

      தரமான சுவையான சர்பத் தயாரிப்பது கூட ஒருகலைதான், எனக்கு 14 வயதிலேயே அக்கலை என் கைவந்துவிட்டது, 10 அவுன்ஸ் க்ளாசில் 4 -ல் ஒருபாகம் நன்னாரி சர்பத் இட்டு , ஒரு முழு எலுமிச்சை சாறுவிட்டு , உள்ளங்கையில் அடங்கும் பனிக்கட்டி துண்டு ஒன்றை முழுதாகவும் இல்லாமல், பொடி துகள்களாகவும் ஆக்காமல் அரைகுறையாக உடைத்து அதிலிட்டு பின் மீதி இடத்தை நீரினால் நிரப்பி   இருமுறை ஆற்றி.....மன்னிக்கவும், சுவையை எழுத்தில் எழுதி படிப்பவருக்கு உணரவைக்க எந்த மொழியிலும் வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன், வாய்பிருந்தால் நான் சொன்னபடி ஒரு சர்பத்  குடித்துவிட்டு  வந்து மீண்டும் தொடருங்கள். அதிலும்  நீருக்கு  பதில்  இளநிர், நுங்கு, சோடா  வஸ்துகளை  சேர்த்து அருந்திப்பாருங்கள் நிச்சயம் சுவை பித்தேறியிருப்பீர்கள்

      எங்களது வியாபாரகடையை விடுத்தது வெளியோ நான் செய்த முதல் வியாபாரமும் சர்பத்தைகொண்டுதான், 7 -ம் வகுப்புமுதல்  மேல்நிலை   இருதிஆண்டுவரை  ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதிநாட்களிலும் (Farwell)  Tea party நடக்கும், அன்று பெரிய பாத்திரத்தில் சர்பத் கலந்து வைத்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கிளாஸ் குடிக்க தருவார்கள், (ஆனால் class leader  மட்டும்2 கிளாஸ் குடிப்பதை பார்த்தல் எரிச்சலாக வரும்) அப்படி சர்பத் தயாரிக்க மூலப்பொருட்களை supply செய்வதுடன் production manager - ஆகாவும் செயல்படுவேன், (முதல் இரண்டு ஆண்டுகள்தான் supply
செய்யும் சர்பத் பொருட்களுக்கு சரியான பணம் வாங்கினேன், அடுத்தடுத்த வகுப்பு ஆண்டுகளில் கமிசன் அடிக்க துவங்கினேன்) 

      புத்தருக்கு போதிமரம் போல் எனக்கு எனது வியாபாரகடைதான்  என்னை  சுற்றிய என் உலகம் பார்க்க உதவியது,  குடிகாரர்களின் ரோட்டோர  சண்டை,  கோஷ்டி   மோதல், கட்டைபஞ்சாயத்து  கலவரம்  இவைகளை  நீங்கள்  தினசரிகளில்தான் படித்திருப்பீர்கள், சாறு பிழியும் கட்டைகளுகிடைய சிக்கிய எலுமிச்சை போல்  எங்களின் நாட்கள்   இந்த கலவரங்களுகிடையேதான்  தினமும் நசுங்கிக்கொண்டிருக்கும், சினிமாவில் பார்ப்பது போல நிஜக்கலவரத்தில் அரிவாள், கத்தி, வாள் போன்றவற்றை எளிதில் பார்க்க முடியாது, கலவரக்காரர்களின் கையில் முதலில் சிக்குவது சாலையோர கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சர்பத், சோடா பாட்டில்கள்தான், கைக்கு சிக்குவதை எடுத்து உடைத்தும், எதிரிகளின் மேல் எரிந்தும் (பெரும்பாலும் ரோட்டில்தான் விழுந்து உடையும்) தாங்கள் "சண்டியர்" என்பதை காட்டிக்கொள்வார்கள்.அந்த சமயத்தில் எங்களை போன்ற வியாபாரிகள் மீதமிருக்கும் பாட்டில்களைத்தான் காப்பாற்ற முடியுமே தவிர அவர்கள் எதிர்க்க முடியாது,  கலவரம்  ஓய்ந்த பின் கடை முன் உடைந்துகிடக்கும் பாட்டில்சில்லுகளை சுத்தம் செய்யும்போது கலவரத்தை வேடிக்கை பார்த்தவர்கள்
என்னை பரிதாபமாக பார்க்கும்போது மனம் உணரும்  அவமானம்  சட்டை மீது பட்ட வாழைக்கறைபோல்  இன்றும் கூட மனதிலிருந்து மறையவில்லை. காலையில் ஆர்வத்துடனும், ஆசையாகவும் துடைத்து எடுத்துவைத்த சர்பத் பாட்டில்கள் மாலையில் உடைந்து சிதறிகிடபதை பார்த்தாலும், மறுநாள்
அதே ஆர்வத்துடன்   வியாபாரம் ஆரம்பிப்போம்.

      எங்கள் பகுதியில்  நடக்கும்  அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு சர்பத் மற்றும் குளிர்பான விநியோகம் நாங்கள்தான். ஆனாலும் அன்றைய
தினத்தின் முடிவு பாலா இயக்கும் படங்களின் முடிவைப்போல சோகமாகத்தானிருக்கும், காரணம்  3-ல்  ஒரு பங்கு பணம்தான் எங்களுக்கு வந்து சேரும்.  அதிலும்  ரவுடிகள்  குடிக்கும்  சர்பதிற்கு கூட பணம்  வாங்கிவிடலாம் ஆனால் போலீசிடம் வாங்கமுடியாது. ( இப்படியெல்லாம்   அன்று இழந்த பணத்தை இன்று வசூல் செய்தால் கூட  இணையத்தில் இப்படி ஓசியில் எழுதாமல் Discovery -channel தரத்தில் ஒரு ஆவணப்படம் (documentry )எடுக்கலாம் என மனம் வி(கு)ரும்புகிறது )

     ஒரு பொருள் மக்களிடம் செல்வாக்கு இழப்பதற்கு  காரணம்  போட்டி தயாரிப்புகள் மட்டுமல்ல அது நுகர்வோருக்கு தரம் மற்றும் சேவையில்
அதிருப்தி கொடுப்பது கூட காரணம்தான்,  பொதுவாக  எல்லா  கடைகாரர்களைபோல எனக்கும்  சர்பத் தயாரிக்கும்  குடிநிரின் சுகாதாரம் பற்றி  அதிக அக்கறைகிடையாது, சிலசமயம் முந்தைய சர்பத் தயாரிக்க
பிழிந்த எலுமிச்சையின் தோலை மீண்டும் நீரில் ஊறவைத்து வாடிக்கையாளர் பார்க்காத நேரத்தில் மீண்டும் அடுத்த சர்பதிற்கு பிழிந்துவிடுவேன், எச்சில் கிளாஸ் சுத்தம் பற்றி எழுதவே வெட்கமாக இருக்கிறது. (அப்போது நான்செய்த முற்பகல் வினைதான்  சென்னை  கடைகளில் சர்பத் அருந்தும்போது  பிற்பகல் வினையாக அனுபவித்தேன்.)
இந்த சமயத்தில்தான் coke , pepsi இனங்கள் ஊருக்குள் வந்திறங்கியது, அதுவரை இந்தியவின் Branded குளிர்பனக்கலான Sakthi Groups-ன் 'Gold spot ','Limka ', 'Thums up ' ஆகியவற்றை coca cola குழுமம் வாங்கி(விழுங்கி ) தங்களது தயாரிப்புகளை பரப்பிக்கொண்டிருந்தனர், எல்லா வியாபரிகளைப்போல் நானும் coke,pepsi  தயாரிப்புகளை கடையில் நிரப்பதுவங்கினேன், உண்மையில் மக்களும் சுகாதாரமற்ற உள்ளூர் குளிர்பான தயாரிப்புகளைவிட
 coke , pepsi களின் தயாரிப்புகளில்தான் முகத்தை கழுவிக்கொண்டிருகின்றனர்.   இன்று   ஓரம்கட்டப்பட்ட  சர்பத், சோடாக்களின்  நிலையை  பார்க்கும்போது   பிரிதிஷ்காரர்களிடம் வாழ்விழந்த பாளையக்காரர்கள், குறுநிலமன்னர்களின்  கதைதான் நினைவுக்கு வருகிறது .

யா. பிலால் ராஜா