Sunday, August 23, 2020

"கழுதைப்பாதை" - நூல் அறிமுகம்




80களின் கடைசி, எங்கள் குடும்பம் புதுவீடுகட்டி போடிநாயக்கனூர் நந்தவனம் தெருவில் குடியேறும்போது பார்த்திருக்கிறேன், "தனம்" தியேட்டரை ஒட்டி, மாதத்தில் பெரும்பாலான நாட்கள் காலியான ஒரு மைதானம் சிலநாட்கள் மட்டும் கழுதைமந்தையாக நிறைந்திருக்கும். பள்ளி முடிந்துவரும்போது அங்கிருக்கும் சிறுவர்களோடு நானும் அந்த கழுதை கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். பெரிய வட்டகைகளில் கரைத்து வைத்த எதையோ குடித்துவிட்டு, எங்கும் ஓடிவிடாமல் கயிறு கட்டிவிடப்பட்ட கால்களில் அங்குமிங்கும் நொடியபடி உலவிக்கொண்டிருக்கும், அடையாளமாக காது அறுக்கப்பட்டும், சூட்டுக்கோல் இழுவைகளால் ரணபுண்ணாகிப்போன நீர் வடியும் உடம்புடனும், ஐந்தாவது கால் முளைத்து விட்டதா? என ஐயம் கொள்ளுமளவுக்கு விரைத்து நீளும் ஆண்குறியும் தினசரி வேடிக்கை காட்சிகள் எங்களுக்கு. பொறுமையா? சோம்பலா? மனிதன் அறிந்துகொள்ள முடியாத பேரமைதி கொண்டவை கழுதைகள். அவைகளை பார்க்கப்பார்க்க, எங்கே அந்த நிறைந்தசோம்பல் என்னையும் பீடித்துக்கொள்ளுமே? என்று சற்று பயந்திருக்கிறேன். பின்னாளில் அவைகள் மேற்குத்தொடர்ச்சி மலை தோட்டங்களில் விளையும் காபி, ஏலம், மிளகு போன்ற மலை விளைபொருட்களை எந்த வாகனபாதையும் உருவாகாத இடத்திலிருந்து ஊருக்குள் இறக்குவதற்கு வைத்திருந்திருக்கிறார்கள் என தெரிந்துகொண்டேன், 90' களின் துவக்கத்தில் அந்த கழுத்தைமந்தைகளும் காணாமல் போனது. 

 தற்போதைய போடிநாயக்கனூர் சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் "போடிபட்டி" யாக இருந்தபோது இதுபோல் கழுதைமந்தைகளை உருவாக்கி பராமரித்து மலைக்காட்டிற்கும் தரைக்காட்டிற்குமிடையே (போடி -குரங்கணி -போடிமெட்டு- டாப் ஸ்டேஷன்(மூணாறு)) அலைந்து வாழ்ந்த குடும்பங்கள்,கூலிகள், முதலாளிகள், இவர்களுக்கிடையே வணிகவாடையற்று காட்டையே கடவுளாகவும் வாழ்வாகவும் கொண்டுவாழ்ந்த முதுவா பழங்குடிகளின் சடங்குகள், குலதெய்வதொல்கதைகளைத்தான் எஸ். செந்தில்குமாரின் தன் "கழுதைப்பாதை" படைப்பின்வழி தரையிறக்கியிருக்கிறார். ஆதியில் உருவான தலைச்சுமைகூலிகளின் ஒராள்(ஒற்றையடி) மலைப்பாதையையும், வாழ்வாதாரத்தையும் தூர்த்து உருவானவை கழுதைப்பதைகள், இதற்க்கென உருவான பலசமுக குடியேற்றங்கள் அதன் பின்னணியிலான வன்மங்கள், தூரோகங்கள் என மொத்தத்தில் அந்த மேற்குத்தொடர்ச்சிமலை வழியே மனிதன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு கதையுண்டு என்பதை மூவண்ணா,சுப்பண்ணா , ராக்கப்பன், கங்கம்மா, முத்துச்சாமி நாயக்கர், நாகவள்ளி, வெள்ளையம்மா, செளடையன்/ராசப்பன் /ராமசாமி செட்டியார் பாத்திரங்கள் வழி தனித்த எழுத்து நடையுடன் இந்நாவலில் பதிந்திருக்கிறார். இக்கதைக்காக நிறைய விவசாய/ சுமை கூலிகள், மலைவாழ் பழங்குடிகளுடன் பலகாலம் சுற்றியலைந்து கதைகளை சேகரித்து சுமந்துவந்திருக்கும் செந்தில் குமாரின் களப்பணி அபாரமானது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் ராஜ்முகமது ராவுத்தர் 100 மாடுகளில் உப்பு வணிகத்தை தமிழ்நாட்டிலிருந்து சாகச வணிகப்பயணமாக இம்மலைவழியாக கேரளாவிற்கு நிகழ்த்தி காட்டிய அத்தியாயங்களை படிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் குரங்கணியிலிருந்து இக்கதைக்களத்தின் பாதையையொட்டி ட்ரெக்கிங் சென்றபோது மலைவனத்தில் பார்த்த நூற்றாண்டை தொடும் வயதில் இஸ்லாமிய அடையாளங்களுடன் பாழடைந்த 10 பேர் அமரக்கூடிய கட்டடம் ஒன்றை பார்த்தது நினைவுக்கு வந்தது. நாவலின் துவக்க அத்தியாயங்கள் கதை நிலவியலையும் காலத்தையும் வாசகருக்கு கடத்த சற்று தாமதித்தாலும் அதன்பின் அக்குறை அகன்று கதை குதிரைப்பாய்ச்சலாக படிப்பவர்களை மலையேற்றிவிடும். இந்த நிலவியலை நேரடியாக அறியாத நகர்ப்புற வாசகர்களும் "மேற்குத்தொடர்ச்சி மலை" "பிதாமகன்" மலைக்காட்டு காட்சிகள் நினைவிருப்பின் இக்"கழுதைப்பாதை"யில் இணைவது எளிது.

 கடந்த அரை நூற்றாண்டுகளில் வாகனமும் மலையின் சாலைகளும் கழுதை/குதிரை/மாடு போன்ற ஜீவாதிகளின் சுமைதூக்கும் வாழ்வை முடிவுக்கு கொண்டுவந்து விட்டது, இருப்பினும் அது ஒரு மனிதனோடு பேசாத ஆனால் ஒன்றையொன்று சார்ந்த இரு இனங்களுக்குக்கிடையேயான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எந்திரங்களோடு பணிபுரிந்து எந்திரமாகவே வாழத்துவங்கிவிட்ட நமக்கு இதுபோல இன்னும் நிறைய "கழுதைப்பாதை" பயணங்களை திரும்பி பார்க்க தேவை இருக்கிறது.

 -பிலால் ராஜா