Saturday, March 23, 2019

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம் ( வாசிப்பு )
 
 
நவீன தமிழ் சினிமா படைப்பாளிகள் தீவிர இலக்கியத்தை பற்றி பொதுவெளியில் பேசக்கேட்பது அபூர்வம் , 2012-ல் இயக்குனர் வெற்றிமாறன்  "ஓநாய் குலச்சின்னம்" என்ற மொழிபெயர்ப்பு நூலை சுயமாக பதிப்பித்து வெளியிடும் செய்தி படித்ததும் ஓரளவு அவதானித்துவிட்டேன் இது நிச்சயம் ஓர் அரியபடைப்பாக .இருக்குமென்று, புலம் பதிப்பகத்தின் மீள்வெளியீடான  இந்நூலை தற்போதுதான் வாசிக்க வாய்த்தது. கட்டாயம் வாசிக்க வேண்டிய தமிழ் மொழிபெயர்ப்பு வரிசையில் இந்நூல் முக்கியமானது. ஜியாங்  ரோங் தொழில்முறை இலக்கியவாதியோ படைப்பாளியோ இல்லை. 50 ஆண்டுகளுக்கு (1967) முன் சீனாவின் வடப்புற பெருநிலமான மங்கோலியாவிற்கு சீன அதிகார/கலாச்சார மாற்றத்தின் காரணமாக அப்பிராந்தியத்தின் மங்கோலிய நாடோடி மேய்ச்சல்  இனக்குழுவுடன் பணியாற்ற அனுப்பப்படுகிறார் அந்த வாழ்வை ஒரு புனைவாக படைத்து 2003 வெளியிடுகிறார், பின் அது இதுவரை சீனாவின் அதிகம் விற்பனையான மாவோவின் " சிவப்பு புத்தகம் " திற்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது.  பரந்துபட்ட மங்கோலியாவின் மேய்ச்சல் நிலதொன்மம், உயிர்ச்சங்கிலி  அம்மண்ணின் பூர்வீக இனக்குழுக்களால் எவ்வாறு புரிந்துணர்ந்து பாதுகாக்கப்பட்டது, பின் பேராதிக்கஅரசால் நிறுவப்படும்  பொறுப்பற்ற அதிகாரவர்க்கமனிதர்களால்  அந்நிலத்தின்  உயிர்சங்கிலி எவ்வாறு அறுத்தெறியப்பட்டு பாழ்நிலமாக மாற்றப்படுகிறது என்பதை "ஓநாய்கள் அழித்தொழிப்பு" சம்பவங்கள் வழியாக எழுதிச்செல்கிறார்.  மங்கோலியாவில் ஓநாய் அழிப்பு போல் உலகெங்கும் ஒவ்வொரு திணையிலும் ஒவ்வொரு வகையில் மனிதனின் வரைமுறையற்ற நுகர்விற்காக உயிர்சங்கிலி சிதைக்கப்பட்டு வருகிறது, அதற்கான உலகத்தர இலக்கிய ஆவணம் இந்த "ஓநாய் குலச்சின்னம்"

ஓநாய்களின் வாழ்வை காணொளியா இன்று பார்த்துவிடலாம் அல்லது அறிவியல் தகவலாக எதிலும் படித்து விடலாம் ஆனால் அவ்வினத்தின் ஆன்மாவோடு உறவாடி உணர்ந்து எழுதப்பட்டது ஜியாங்-கின் எழுத்துக்கள். இதுபோல் மனிதனுக்கும் நண்பனாகவும், விரோதியாகவும் உயிர் சங்கிலியில் தொடர்ந்து ஓடிவரும் ஓர்விலங்கினத்தை பற்றி  படைக்கப்படும் ஒன்று வாசிக்க வாய்ப்பது அரிது. தமிழில் வாசிக்கும்போதே  தெரிகிறதுவிடுகிறது மூலஎழுத்தின் ஆன்மா ஒரு பக்கத்தில்கூட பிறழ்ந்திருக்க வாய்ப்பில்லை, சி,மோகனின் இம்மொழிபெயர்ப்பு பணி தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வரிசைக்கு ஆகச்சிறந்தகொடை.

உலகின் ஏனைய பெரும் மிருகங்களை பழக்கப்படுத்திய மனிதனால் ஓநாய் இனத்தை ஏன் அடிமைப்படுத்த  முடியவில்லை ?
மங்கோலியாவிலிருந்து புறப்பட சிறு நாடோடி முரட்டு கூட்டங்கள் ஆசிய ஐரோப்பிய கண்டங்களை வென்று ஜெயித்ததற்கு காரணம்  ஓநாய்களிடமிருந்து கற்ற தாக்குதல் உத்தியா? "விடுதலை அல்லது மரணம்", "சரணடைதலுக்கு முன் சாவு "  சித்தாந்தங்களை மனிதனுக்கு கற்றுக்கொடுத்தது ஓநாய் இனங்களா? வேட்டை விலங்குகளில் ஓநாய்களின் ஊளை ஒலி மட்டும் எவ்வாறு தனித்துவம் மிக்கது? மேய்ச்சல் விலங்குகளை வேட்டையாடி, தசைகிழித்து அதனுயிர் அவ்வுடல் நீங்கவதற்குள் தின்றுவிழுங்கும் ஓநாய்களுக்கு சுவையரும்புகள் இருப்பது நாவிலா? வயிற்றிலா? இப்படி எண்ணற்ற வினாக்களில் மட்டுமல்ல விடைகளின் வழியாகவும் சிந்திக்க கற்றுக்கொடுக்கிறது "ஓநாய் குலச்சின்னம்"
2015-ல் இந்நாவலை தழுவி " Wolf Totem" என்ற சீனமொழிப்படம் வெளியானது .
 
நாவலிலிருந்து …..
இங்கு, புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர்வாழ்வதற்கு பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன. ஓநாய்களும், மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சியுண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை. உன்னைப் பொறுத்தவரை மான்கள்மீது இரக்கம் காட்டவேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை அப்படித்தானே? மான்களுக்கு தாகம் ஏற்படும்போது அவை தண்ணீர் குடிக்க நதிக்கு விரைகின்றன. குளிரெடுத்தால் மலையில் ஒரு இதமான இடத்துக்கு ஓடிக்குளிர்காய்கின்றன. ஆனால் புல்? புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாகச் சிதையக்கூடிய பரிதாபமான உயிர். அதன் வேர்கள் ஆழமற்றவை. அதன் மண் மிக லேசானது. அது நிலப்பிரதேசத்தில்தான் வாழ்கிறது என்றாலும் அதனால் ஓடமுடியாது. எவரும் அதன்மீது ஏறி மிதிக்கலாம்; உண்ணலாம்; மெல்லலாம்; கசக்கலாம். குதிரை அதன் பெரும்பரப்பில் மூத்திரம் அடிக்கலாம். அது மணலிலோ,பாறைப் பிளவுகளிலோ முளைத்தால் இன்னும் குறைந்த நாட்களே உயிர் வாழும். அவை பூப்பதில்லை என்பதால் அவற்றால் தம் விதைகளைப் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புல்லை விட வேறெதுவும் எங்களுடைய இரக்கத்துக்கு உரியதல்ல….. 
 
யா. பிலால் ராஜா