Wednesday, September 14, 2016

முதல் நாள் (சின்னஞ் சிறுகதை)

முதல் நாள்



 
முந்தய நாள் 
 
"அவனுக்கு நாளைக்குதான் ஸ்கூல் பஸ்ட் டே ,நெனப்பு இருக்குல? காலைல வேகமா வந்துருங்க எட்டர மணிக்கு ஸ்கூல்  ரிஸப்சன்ல இருக்கனுமாம் எந்த  section - னு   அங்க சொல்லுவாங்க" .
"ம்ம்... எழரைக்கே வந்துருவேன் குட்டையன ரெடி பண்ணி வை " (எங்கள் பரம்பரையில் எல்லோரும் குட்டைதான் இவன் மட்டும் எங்கிட்டு வளரப் போறான் என்ற முன் அனுமானம்தான்.) சொல்லி விட்டு இரவு பணிக்கு செல்ல தயாராக துவங்கினேன்.


முன்பொரு நாள் 
 
சென்ற மாதத்திலொருநாள்  பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் மகனுடன் விளையடிக் கொண்டிருந்தேன் , ஓடி ஆடி களைத்து அமர்கையில் நான் வானம் காட்டி
"அங்க பாத்தியா பெருசா வானத்துல ஒரு லைட்  அதுக்கு பேரு நிலா ......"
"இல்லப்பா அது பேரு மூன் ......." மழலை உச்சரிப்பிலும் தன் உறுதி (self confident) தூக்கலாக இருந்தது.
மனைவியை பார்த்தேன் பெருமிதமாக சிரித்துக்கொண்டே "பக்கத்துல கிரேஸ் மெட்ரிக்குலேஷன்ல  கேட்டுட்டு வந்துட்டேன் இன்னும் ஒருவாரத்துல அட்மிஷன் ஆரம்பிச்சுருமாம் அமௌண்ட் ரெடி பண்ணிக்குங்க... "
குறிப்பிட நாளில் அவளாகவே சென்று நன்கொடையிளிருந்து பள்ளிக்கட்டணம் வரை பேரம் பேசி LKG யில் ஒரு இடமும் பெற்று வந்துவிட்டாள்.

முதல் நாள்
 
இரவு பணி முடித்தது இன்று விரைந்து வீடு சேர்ந்தேன் குட்டையன் குளித்து முடித்து சுமாரான நிறம் கொண்டதொரு அப்பள்ளியின் சீருடை அணிந்து "அப்பா நான் ஸ்கூலுக்கு போகப்போறேன்........ஸ்கூலுக்கு போகப்போறேன்...." 31/2 வயதுக்கே உரிய பிள்ளை மொழியில் சொல்லிக்கொண்டிருந்தான். சில மாதங்களுக்கு முன்னெல்லாம் தெருவில் பள்ளி செல்லும் சிறுவர்களை காட்டி "நீயும் கொஞ்ச நாள்ல இப்படி ஸ்கூல் போகணும்"னு சொல்லும்போது நம்மை எங்கோ அனுப்பி போகிறார்கள் என பீதியடைந்து தெருவில் சீருடையுடன் பிள்ளைகள் போனாலே  " நான் ஸ்கூல் போமாட்டேன்.. போ ...."என பிதற்ற தொடங்கினான். என்னடா இது வம்பா போச்சு என்று,
 "ஸ்கூல் போனாதான் வெளையாட நெறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க, மிஸ் புது கேம் சொல்லித்தருவாங்க , ஊஞ்சல் சறுக்கு எலாம் இருக்கும்.." என சொல்லிச் சொல்லி வகுப்பறை என்ற குருஞ்சிறையை அடிக்கடி நாங்கள்  செல்லும் பூங்காவாக அவனுக்கு  நிழலாட வைத்தேன். "சாப்பிட பிரயாணி கூட தருவாங்க .....". என்றெலாம் சொன்னபின்தான் இன்று சிரித்துக்கொண்டே தயாராகி நிற்கிறான்.14 மாத குழந்தையிலேயே 1 கிண்ணத்து பிரியாணி தின்று செரித்தவன் என்பது உபரி தகவல் . எனக்கு தெரியும் உண்மையான சவால் நாளையிளிருந்துதான், பள்ளி செல்ல முரண்டு பிடிக்கப்போகும் அவனுக்கும் , தரதரவென இழுத்துச் செல்லப்போகும் எனக்கும்.

தயாராகி வாசலில் புது ஷூ அணியும்போதுதான் கவனித்தேன் சில நிமிடங்களுக்கு முன்வரையிலான உற்சாகமும் சிரிப்பும் வடிந்து நம்மை எங்கு விட்டு வர போகிறார்களோ என்ற  ஒரு பீதி கலந்த சோகம் அவன் முகத்தில் பரவியது. ஒவ்வொரு நாளும் பொழுதும் எங்களுடனே கழித்தவன் இன்று முதல் பல மணி நேரங்கள் எங்களின் பார்வையை விட்டு விலகி விடுவான், நினைக்கையில் இதுவரை இல்லாத அடர் பாரமொன்று என்  மனமேற துவங்கியது. இவன் பிறந்தத்திலிருந்து மகனென்ற பொது பாசம் கடந்து என் இன்னொரு பிரதியாக , ஆன்மாவின் மற்றோரு பிம்பமாக உணர்ந்திருந்தேன். என் மனம் அவனில் புகுந்து அவனின் ஒவ்வொரு அசைவின் வழி பசி, தாகம், வலி, சிரிப்பை உணரத்துவங்கியிருந்தது.

இதுவரை என்னை  சுற்றி சூழ் கொண்டிருந்த அவனுலகம் இன்றுமுதல் சூலுடைத்து வேறொரு திசையில் முதல் அடி வைக்கப்போகிறது. எனக்கும் அவனுக்குமான கூட்டுப்புழு தருணத்தை காலம் இனி மறுபடியும் அனுமதிக்காது என்று நினைக்கும்போது மனமெங்கும் எழுதிக்காட்ட முடியாதவொரு வலி பரவியது.  அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை நானும் என் மனைவியும் அழைத்துக்கொண்டு , ஒரு கனத்த மௌனம் நிழலாக பின்தொடர  பள்ளி சென்றடைந்தோம்   அவனுக்கான  வகுப்பின் முன் நின்றிருந்த ஒரு இளம் ஆசிரியையிடம் கைமாறினான். முன்னரே அவ்வகுப்பறையில் பல சிறார்கள்  சிரிப்பு, அழுகை, சோகம், மிரட்சி என ஆளுக்கொரு உணர்வுடன் அமர்ந்திருந்தனர்.  ஆசிரியை அவனை கைப்பற்றி ஒரு இருக்கை நோக்கி அழைத்து செல்கையில் அவன் திரும்பி என்னை பார்த்து 
" அப்பா நீயும் ........."
சொல்வது முழுமையாக என்னை வந்தடைவதற்குள் என் மனைவி என் கை பற்றி வேகமாக அவ்விடம் அகற்றி,
 "இனி நம்மள அங்க பாத்த உள்ள உட்கார மாட்டான் அழுது ஊர கூடிருவான் ..............." என்றாள்.
அவன் சொல்ல வந்தது என்னவாக இருக்கும் ? அவன் நிச்சயம் என்னையும் வகுப்பில் அவனுடன் அமரத்தான்  அழைத்திருப்பான். அவனுடனே சேர்ந்து வாழ்வை மீண்டும் வாழும் வரம் கிடைக்காத? கடவுளை நம்பாத எனக்கு யார் வரம் தரப்போகிறார்கள் ? கண்ணீர்த்திரையால் சாலை மங்கலாக தெரிந்தது, வீடு நோக்கி செல்லாமல் ஏதேதோ சாலைகளில் இலக்கில்லாமல் இருசக்கர வாகனம் செல்ல துவங்கியது பின்னாலிருந்த என் மனைவி அன்று மட்டும் எங்கு போகிறோம் என கேட்கவில்லை  .
 
 
யா. பிலால் ராஜா