Sunday, November 25, 2018

நிழல்வெளிக்கதைகள் - வாசிப்பு

 

சமீபத்தில் படித்த "நிழல்வெளிக்கதைகள்" பற்றி அதன் ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு சிறு குறிப்பு எழுதியிருந்தேன், அதற்கான பின்னூட்டத்தை தன் வலைதளத்தில் இன்று பகிர்ந்திருந்தார்.  அதில் பயம் என்றால் என்ன? எப்போது ஒரு பேய்க்கதை இலக்கிய மதிப்பு பெறுகிறது? என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.படிச்சுப்பாருங்க ….

https://www.jeyamohan.in/114194?fbclid=IwAR3I8NfhlK699WN5tPXPCtl6tGRov18U_zJbOIbClWvsMwX7nDg9fcEiizw#.W_p75eRf1oR

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தங்களின் காடு நாவல் திரைப்படமாக்கப்படும் முயரச்சியில் இருப்பதாக படித்தேன்.இதுவரை ரப்பர், அறம், யானைடாக்டர், நூறுநாற்காலிகள், பனிமனிதன், இந்துஞான மரபில் ஆறுதரிசனகள், ஏழாம் உலகம், முடித்திருந்தாலும் ,” காடு ” புகவில்லை. படித்துவிடவேண்டுமென முடிவெடுத்தபோது லெண்டிங் லைப்ரரியில்”வெளிய போயிருக்கு இன்னும் வரலை…” என்றார்கள், ” வரவும் சொல்லுங்கள்..” சொல்லிவிட்டு அங்கிருந்த தொகுப்பில்  நீண்ட நாட்களாக படிக்க நினைத்திருந்த “நிழல்வெளிக்கதைகள்” எடுத்து வந்து ஒரே அமர்வில் முடித்தேன், மிகவும் பிடித்திருந்தது. காரணம் சமீபத்தில் அழுத்தமான  Mystery Flavour வகை கதைகளை படிக்க கிடைக்கவில்லை , சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பேய்க்கதைகள் கூட இன்று யாரும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து கடவுள் நம்பிக்கை இழக்கத்துவங்கும்போதே ஆவி/பேய்/அமானுஷ்ய நபிக்கைகளையும் அதே விகிதத்தில் இழந்தேன். ஆனால் இவ்வகைகதைகளை கேட்பதிலோ படிப்பதிலோ எனக்கு துளியும் ஆர்வம் குறையாது (தற்போது அவ்விடத்தை நிரப்புவன special effect சினிமாக்கள் மட்டுமே).

சிறுவயதில் தலையில்லா முண்டம் இரவில் ஊருக்குள் நடமாடுதென்று வேப்பிலை காப்பை வீட்டு வீட்டிற்கு வாசலில் கட்டிவைப்பதை மிரட்சியோடு பார்த்திருக்கிறேன். பேய் கதை அல்லது அது பற்றிய  உரையாடல்களில்  உண்டாகும் பயம் அலாதியானது .ஒரு பயத்திற்கு ஆட்படப் போகிறோம் என்ற உணர்வே போதையானது .அதில் ஆட்பட்டு பயபீதியில் சிக்குவதற்கும், பின் மீண்டெழுவதற்கும் நம் மனமே பொறுப்பு.

தாத்தா பாட்டிகளின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா….”வோடு சில பேய்கதைகளும் ஒட்டிக்கொள்ளும், இன்றெல்லாம் யாரும் பேய்க்கதை சொல்வதுமில்லை கேட்பதுமில்லை, இன்றய நகரமயமாதலில் ஊருக்கு வெளியே பாழடைந்த பங்களா என்று ஒன்றுமில்லை, அனைத்தும் சிப்காட் தொழில் நகராகிவிட்டது, கதைகளில் நுழைய வழியில்லாதவாறு ஆவிகள் அவற்றின்  மறைவிடங்களிலிருந்து துரத்தப்பட்டுவிட்டன.பேய்களின் பிறப்பிடமான சுடுகாடுகள், இன்று  24/7 மின்-தகன நிலையமாய்  ஒரு சிறு தொழிற்கூடமென  மாறி, ஆவிகளை கருப்புகையாக கூண்டின் வழி வெளித்தள்ளுகிறது.

இந்த நிழல்வெளிக்கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், “தம்பி” முழுவதும் பிரிவாளுமை பற்றிய உளவியல் மருத்துவம் பேசிவிட்டு இறுதிவரியில் கதையின் பரிணாமம் அப்படியே மாறிவிடுகிறது. அதேபோல் “யட்சி” , “பாதைகள்”  “அறைகள்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித உளவியல்-மர்மக்கதைகள். .இன்னும் இதுபோல படைப்புகள் தமிழின் தேர்ந்த கதைசொல்லிகளால் உருவாக்கப்படவேண்டும், ஒருவேளை இன்னும் சில தலைமுறைக்கு பின் பேய்/ஆவிகளையும் எழுதின்வழிதான் யாரும் அறிந்து பயங்கொள்ளமுடியுமோ என்னவோ?

“நிழல்வெளிக்கதைகள்” சொன்னதற்கு மிகுந்த நன்றிகள்

அன்புடன்,
யா. பிலால் ராஜா
ghost
அன்புள்ள பிலால் ராஜா

ஏன் பயப்படுகிறோம், ஏன் அப்படிப் பயப்படுவது பிடித்திருக்கிறது என யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும், திகில்கதைகளின் இடம் இலக்கியத்தில் ஒருபோதும் மறையாது.

நான் ஒரு பேய்க்கதையைப் படித்துக்கொண்டிருக்கையில் இரண்டு உளநிலைகள் பின்னிப்பிணைந்து செல்கின்றன. ஒன்று தருக்கம் சார்ந்த புழங்கும் உள்ளம். இன்னொன்று ஆழுள்ளம். நாம் கற்றவை, எண்ணுபவை, நம் அன்றாட வாழ்க்கைசார்ந்த புரிதல்கள் அனைத்தையும் கொண்டு அக்கதையை விளக்கிக்கொள்ள முயல்கிறோம். அந்த விளக்கத்துக்கு இணையாகவே நம் ஆழுள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஓர் அடியொழுக்காக. நம் தர்க்கத்தின் விரிசல்களை உடைத்துக்கொண்டு ஒரு புள்ளியில் ஆழுளம் வெளிப்பட்டுவிடுகிறது. அதுதான் நம் அச்சம்

புதுமைப்பித்தன் இதை வேடிக்கையாக ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். நம்பிக்கை வேறு பயம் வேறு. இவ்வாறு நம் ஆழுளம் வெளிப்படுவது நம்மை நாமே பார்த்துக்கொள்வது. இலக்கியம் என்பது ஆழுளம் நோக்கிய ஓர் ஊடுருவல். பேய்க்கதைகள் அதை வெற்றிகரமாகவே செய்கின்றன. இக்காரணத்தாலேயே அவை இலக்கிய மதிப்பு கொள்கின்றன

பேய்க்கதைகளின் இயங்குதளமும் நாம் நினைப்பதைவிட ஆழமானது. அவை தூய கவிதையைப்போல படிமங்கள் வழியாகவே தங்கள் ஊடுருவலை நிகழ்த்துகின்றன. ஏனென்றால் படிமங்களாலானது ஆழுளம்.பேய்க்கதைகளின் கனவியல்பு அப்படி உருவாவதுதான். பேய்க்கதைகள் அந்தப் படிமங்கள் ரகசியமாக தங்கள் ஊடுருவலை நிகழ்த்த விட்டு மேல்மனதை தங்கள் கட்டமைப்பாலும், புறச்சூழல் விவரிப்பாலும், கதைமாந்தரின் செயல்களாலும் மயக்கி நிறுத்திவிடுகின்றன. கதையை நம் தர்க்கம் வாசித்துக்கொண்டிருக்கையில் படிமங்களுடன் ஆழம் உரையாடிக்கொண்டிருக்கிறது

நாம் ஏன் அஞ்சுகிறோம்? நம் ஆழுளம் சிக்கிக் கிடக்கும் பல முடிச்சுகளை பேய்க்கதைகள் சென்று தொடுகின்றன. வரலாற்றின் முடிவிலாத, பொருளிலாத ஆழம். வன்முறைவிழைவு ,பாலுணர்ச்சியின் கட்டுக்கடங்காத தன்மை அவற்றின் விளைவான குற்றவுணர்ச்சி என மானுடனை ஆட்டுவிக்கும் அடிப்படை உணர்ச்சிகளாலானவை பேய்க்கதைகள். ஆகவே அவை கால- இடப் பெறுமானம் அற்றவை. சென்றகாலகட்டத்தின் சமூகக்கதைகள்,தத்துவக்கதைகள் எல்லாம் இன்று அர்த்தமிழந்துவிட்டன. சென்றகால பேய்க்கதைகள் இன்றும் அப்படியே காலமில்லாது நின்றிருக்கின்றன.

பேய்க்கதைகள் இருவகை. ஆசிரியன் வாசகனிடம் கதைவிளையாட்டு ஆடும்கதைகள் ஒருவகை. உதாரணம் சுஜாதாவின் கொலையுதிர்காலம் போன்றவை. அவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை. வாசகனின் ஆழுளத்தில் உறங்கும் அடிப்படை உணர்ச்சிகளைத் தொட்டு அவனை அச்சம்கொள்ளச்செய்யும் கதைகள், அவன் தன் ஆழத்தை தானே காணும் அனுபவத்தை அளிக்கும் கதைகள் இரண்டாம்வகை, உதாரணம் புதுமைப்பித்தனின் செவ்வாய்தோஷம்.

இரண்டாம் வகைக் கதைகள் என்றுமிருக்கும். நேற்று தங்கள் கதைக்கட்டுமானத்தை அவை மதத்தில் இருந்தும், நாட்டார்மரபில் இருந்தும் எடுத்துக்கொண்டன. இன்று அவை அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. ஆனால் படிமங்களின் இயல்புகளும் அவை உருவாக்கும் அடிப்படையான உணர்ச்சிகளும் ஒன்றே

ஜெ

Friday, June 8, 2018

Nooran Sisters





ஹிந்தியில் ரஹ்மானிடம் ஆகச்சிறந்த இசை வாங்கியது சுபாஷ் கய், Ashutosh Gowariker-க்கு (லகான்,ஸ்வதேஷ் ,ஜோதா அக்பர்) பின் "ராக் ஸ்டார்" புகழ் இம்தியாஸ் அலிதான்.  Highway படம் வெளியீட்டுக்கு முன் ரஹ்மான் நேரடியாக நடித்த " pathaka kudi " என்ற முன்பாடல் வெளிவந்தது, பஞ்சாபி, ராஜஸ்தானி fock, ராக் சூபி எல்லாம் கலந்த அட்டகாசமான Fusion அது.

ஆனால் இது Highway ஆல்பத்திற்கான promo-song தான், படத்தின் பாடல் யார் பாடியிருப்பார்கள்? முழுத்தொகுப்பு வந்ததும் ஆர்வமுடன்  முதலில் கேட்டது  "Pathaka  Kudi" தான், ஜோதி நூரன், சுல்தானா நூரன் ( Nooran Sisters ) என்ற இரட்டையர்கள்  அவ்வளவு எளிதில் நமக்கு கேட்க கிடைக்காத அட்டகாசமான காத்திரக்குரலில் பாடியிருந்தார்கள். பஞ்சாப்பின் ஜலந்தரை பூர்வீகமாக "உஸ்தாத் குல்ஷன் மீர்"  என்ற சூபி /கவ்வாலி இசை கலைஞரின் மகள்கள்தான்  நூரன் சகோதரிகள்,  இசைக்குடும்ப பின்னணி என்பதால்  சிறுவயதிலிருந்தே இசையிலும், பாடலிலுமே நாளும்பொழுதும்    ஊறிக்கிடந்திருக்கிறார்கள் . தந்தையிடமே இசை பயின்று வடநாட்டு கவ்வாலி-நாட்டுப்புற  இசை மேடைகளை அதிரவிட்டுக்கொண்டிருக்கும்போது முதல் சினிமா வாய்ப்பாக அமைந்தது  "Pathaka  Kudi", இந்த இடத்தில் உங்களுக்கு வேறு வழியே இல்லை பாடலை கேட்டேயாகவேண்டும்.
 

 இவர்களின் எண்ணற்ற மேடைப்பாடல்கள் இணையத்தில் காணக்கிடைத்தாலும், இக்கட்டுரையின் காரணப்பாடலாக "டாக்கா" வில் நடந்த மேடை நிகழ்ச்சியொன்றில் காணொளி கீழே தந்திருக்கிறன் கட்டாயம் கேளுங்கள், இசைநிகழ்த்தும்போது பாடலுக்கேற்ப உடல்மொழியும், குரல்தெறிப்புக்கு ஏற்ற  கை கொட்டலும் வேறு மேடை பாடகர்களிடம் காணமுடியாது. பாடல் உச்சம் நெருங்க... நெருங்க நிலம்பிளக்கும் குரல்கொண்ட இசை ராட்சசிகளாகவே மாறிப்போய்விடுகிறார்கள்.  



கமலி SONG 

Mirchi  Award 

யா. பிலால் ராஜா 

Saturday, May 12, 2018

 
 
பெயரற்ற நிறம் 
 


சொர்கத்தின் பிரதிபிம்ப நதிக்கரைநகரம் அது
மாலையினைக் கொண்டாட விடுதிவாயிலெங்கும்
விதவித மதுக்குடுவைகளும் பண்டங்களும்
விண், மலை, நதி, நிலம் ஒருகோட்டுச்சித்திரமென என்கண்ணில்பட
வாகாய் ஓரிடம் ஆசனமிட்டமர்ந்தேன்
ஒரு பெயரற்ற நிறமொன்று
விண்ணில் தோன்றியதொரு புள்ளியாய்
கணந்தோறும்பெருகிப்பரவி விண் நிறைத்தது அந்நிறம்
பின் மலை, நதி, நிலம் பரவி
மதுக்குடுவைகளிலும் வழிந்தோட
அதிலொரு குடுவையின் சிலமிடறினை
நான் குடித்த அக்கணமே
மாறத்துவங்கியிருந்தேன்
அப்பெயரற்ற நிறமாய்

யா. பிலால் ராஜா
(படம் - சோபன் பாபு)

Saturday, March 31, 2018

தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !


தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !

நன்றி வினவு.காம்
( http://www.vinavu.com/2018/03/27/ji-is-not-just-a-hindi-word-it-has-bitter-story/ )
இந்தப்பதிவு தற்போது பரவலான விளிப்புச்சொல்லான "ஜீ" பற்றிய புள்ளிவிபரமும் துள்ளியவிவரணைகளும் கொண்டதில்லைதான் ,ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால் தர்க்கரீதியான இந்த உண்மைகளை நிராகரிக்க முடியாது. அது 90களின் தொடக்கம் பள்ளி முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தபோது நான் பள்ளிப்பையுடன் பஜாரில் முக்கிய சந்திப்பிலுள்ள   எங்கள் சற்றே பெரிய பெட்டி(புத்தக)க்கடை கடைக்கு வந்து சிலமணிநேரம் வேலை செய்து வீடு செல்வது கட்டாயம். அதிலும் விடுமுறையில் பகலிரவு  வியாபாரம்தான், பதின் தொடக்கத்திலேயே பள்ளி, வேலை என்ற இருவாழ்வி முறை.  வியாபார இடைவெளியிலெல்லாம் கண்ணில்படுவது,வாசிப்பதும் பத்திரிக்கைகள்/தினசரி/ வால்போஸ்டர் தான்  இன்னும் சொல்லப்போனால் அது சினிமா /பொதுக்கூட்ட / அரசியல் போஸ்டர்கள் மத்தியில் உண்டு உறங்கும் வாழ்வு. ஒவ்வொரு நாளும் அன்றிரவு அப்பகுதியில் சுவரொட்டப்படவேண்டிய போஸ்டர்களை எங்கள் கடையில்  கொடுத்து வைப்பார்கள். அரசியல் போஸ்டர் லே-அவுட் வண்ணங்கள் அடிப்படையில் எளிதாக மூன்று பெரும் பிரிவில் வந்துவிடும்.
1)கருப்பு சிவப்பு மிகுவது திமுக-அதிமுக 2)மூவர்ணம் மிகுவது காங்கிரஸ் 3)சிவப்பு கம்யூனிஸ்ட் இம்மூன்று பெரும்பிரிவுகள்தான் தமிழகத்தின் அன்றைய அரசியல் அன்றாடங்கள், அன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசியல் பரப்புரைகளை மக்களைச்சேர பத்திரிக்கை, சுவரொட்டி, பொதுக்கூட்டங்கள்தான் வழி தொலைக்காட்சி தெருவுக்கு ஒன்றாக அப்போதுதான் வர துவங்கியிருந்தது இணையம் என்ற சொல்லே புழக்கத்தில் வரவில்லை. அதிலும் அப்போஸ்டர்களில் பெயர்களில் முன் பின் விளிப்பு வார்த்தைகளாக திரு/உயர்திரு/அவர்கள் இருக்கும் கம்யூனிஸ்ட் போஸ்டர்களில் "தோழர் "  அடைமொழி தவிர்த்து பார்க்க முடியாது. 
அந்த சமயத்தில்தான் இந்தியா அரசியலின் முக்கிய எதிர்மறை நிகழ்வாக பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தேறியது, அதன்பின்தான் நான்காவதாக காவி நிற போஸ்டர்கள் நகரில் (நாடெங்கும் அதன் பின்தான் என்பதை தனியாக சொல்ல தேவையில்லை) பரவலாக தென்பட ஆரம்பித்தது  அப்போஸ்ட்டர்களின் பிரதான வார்த்தை அத்வானிஜீ. பிஜேபி" ஜீ" என்ற அடைமொழி பிரதானப்படுத்துவதை காட்டிலும் அதேகாலகட்டத்தில் தமிழகமெங்கும் கிளை பரப்பிக்கொண்டிருந்த பிஜேபி யின் துணை அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்த "ஜீ" யை தனது போஸ்டர்களில் பிரதானப்படுத்திக்கொண்டிருந்தது. அதிலும் இந்து முன்னணி போஸ்டர்களின் மைய வார்த்தையே "இராமகோபாலன்ஜீ "தான்.
மத அடிப்படைவாத இயக்கங்கள் உறுப்பினர் சேர்க்கையும் ஆங்காங்கே இயக்க கூட்டங்களும் பெருகத்தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட நிற துண்டை அணிந்து கொள்வது, திலகமிட்டுக்கொள்வது, "ஜீ" சேர்த்து சக உறுப்பினரை விளிப்பது என தனி அடையாளப்படுத்துதல்  அங்கிருந்துதான் தமிழகத்திற்க்குள் பரவத்துவங்கியது

இந்த "ஜீ" மனதில் ஆழப்பதியும் ஒரு சம்பவம் எனக்கு நடந்தேறியது, அது 95 ஆல்லது 96 ஆகா இருக்கலாம் உத்தமபாளையத்தில் மர்மமான முறையில் இந்துமுன்னணி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார், தேனி மாவட்ட பகுதிகளில் பரபரப்பு பதற்றம் நிலவியது. ஒரு கொலையின் நோக்கம் சொந்த /கொடுக்கல்வாங்கல் /தொழில் போட்டியா என உண்மை வெளிவரும்முன்னே சில அமைப்புகள் வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து ஆதாயம் அடைய துடித்த  துவக்கக்காலம் அது.  அன்றைய தினமே அதனை கண்டித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மோசமாக திட்டி போஸ்டர்களை நகரெங்கும் இந்துமுன்னணி + பிஜேபி ஒட்டிக்கொண்டிருந்தது இங்கு அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைகள்தான் அந்த போஸ்டர்களின் பிரதான வாசகங்கள் ( பாளையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்த ******** தீவிரவாத நாய்களை கைது செய் - இவன் - இந்து முன்னணி , தலைவர் இராமகோபாலன்ஜீ " அன்று இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்தபின் நான் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன், போஸ்டர் கும்பல் மூடிய கடைகளில் கதவுக்கு ஒன்றாக ஒட்டிக்கொண்டுவந்து எங்கள் கடை வந்ததும் "பாய் இன்னும் கடை அடைக்கலயா...? சரி 4 சர்பத் போடு", என்று சொல்லிவிட்டு போஸ்டர்களில் பசை தடவ தொடங்கினர் (சர்பத்துக்கு பணம் தந்திருக்க மாட்டார்கள் என்பது நான் இங்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை ) அவர்கள் ஏற்கனவே பஜாரில் வெவ்வேறு கடை ஊழியர்களாக எனக்கு அறிமுகமானவர்கள்தான் ஆனால் இன்று அவர்கள் சிரிப்பில் ஒரு நக்கல் இருந்தது, வியாபார மும்மரத்தில் நானும் சர்பது கொடுத்துவிட்டு மீதி வேலைகளை முடித்து கடை சாத்த வெளிஇறங்கி ஒருகணம் அதிர்ந்தேன். மற்ற இடங்களில் கதவுக்கு ஒன்றாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் எங்கள் கடையில் மட்டும் ஸ்டால்களிலும் சுற்று சுவர்களிலும் முழுவது ஒட்டி மூடியிருந்தார்கள் அதுவும் அநாகரிக வார்த்தைகள் கொண்ட போஸ்டர், அந்த பஜாரில் எங்கிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியுமளவுக்கு. அனுமதி பெறாமல் ஸ்டாலில் ஒட்டியது தவறு என்பதை கூட விட்டுவிடலாம், ஆனால் இது காழ்ப்புணர்வுடன் கூடிய அநியாயமாகப்பட்டது,  விடிந்தால் ஊரே "பாய் கடைய எப்படி போஸ்டர்ல கவர் பண்ணிருக்காங்க பாத்தியா..?" என்று எள்ளி நகைக்க துவங்கிவிடுவார்கள். தேவையே இல்லாமல் கடை பெயர்,குளிபானவிளம்பர ஸ்டாலில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழிக்க தொடங்கினேன், சிறிது நேரத்தில் திரும்பி வந்த போஸ்டர் கும்பல் கூச்சலுடன் வந்து என்னை சுற்றி வளைத்து நெஞ்சு சட்டையை பிடித்து ஸ்டாலோடு இறுத்தி நிறுத்தி "ஏன்டா துலுக்கா ...... " எனத் துவங்கி வன்மத்துடன் திட்டி தீர்த்ததை இந்கு எழுதிட முடியாது.
 " பிரச்னை முடியுறவற எங்க போஸ்ட்ட தொட்ட பஜார்ல கடை வச்சுக்குறமாட்டா பாய்  விடியிறதுக்குள்ள கடைய காலி பண்ணிடுவாம் ... " என்று மிரட்டி நகர்ந்தனர், அப்போது அந்த பகுதியில் பணியிலிருந்த பாரா போலீஸும் இந்த நிகழ்வை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அதே போலீஸ்தான் சிலமாதங்களுக்கு முன் சில கம்யூனிச அமைப்புகளின் அரசை நேரடியாக எதிர்த்த வாசகங்கள் கொண்ட (விவசாயிகள் விடுதலை முன்னணி /புதிய ஜனநாயகம் ) போஸ்டர்களை நான் கடையில் வைத்து இரவில் சுவரொட்டுபவர்களுக்கு வழங்குவதை பார்த்து, " பாய் இனிமே இவங்களோட சவகாசம் வச்சா உன்னையும் ஒரு கவனிக்க வேண்டியிருக்கும் ...." என மிரட்டினார்கள் ஆனால் அவர்களே அன்று சமூக வெறுப்புணர்வு போஸ்டர் கும்பலின் அராஜகத்தை வேடிக்கை பார்த்தபடியிருந்தனர்.  அன்றிரவு அவமானமும் கோபமும் இயலாமையும் எனனை பீடித்திருக்க, அந்த நாற்சந்தியில்  நான் கிழித்தெறிந்த போஸ்டர்களில்  "ஜீ" மட்டும்  காவி நிறத்தில் பளிச்சென்று என் கடையின் சுவற்றில் பிடிவாதமாய் ஒட்டியிருப்பதை வெகுநேரம் பார்த்தபடி நின்றிருந்தேன் .
ஆனால் தமிழ் பொதுச்சமூகம் "ஜீ" யை பரவலாக பயன்படுத்துவதில்  மேலேசொன்ன எந்த அரசியல் / அடிப்படைவாத கலாச்சாரப்பிரச்சார நோக்கமும்  இல்லைதான். போஸ்டர்களைக் கடந்து செவிவழி பழகி இன்று ஒரு பொதுச்சொல்லாக மாற்றப்பட்டு விட்டது, பேச்சு வழக்கில் மரியாதை பிரச்சனை இல்லாமல் ஒருவரை விளிக்க இந்த ஒற்றை வார்த்தை எளிதாக இருப்பதும் ஒரு காரணம். "அண்ணா", "தோழா", "நண்பா" வில் இருக்கும் இணக்கம் நிச்சயம் இந்த "ஜீ" யில் இருக்காது.

இதனை பற்றி சமீபத்தில் WHATSAPP குழுவில் ஒரு நண்பனிடம் உரையாடும்போது  "இது காந்தி"ஜி" நேரு"ஜி" காலத்திலேயே இருந்துச்சே என்றார், இருந்தது, ஆனால் அது திராவிட மொழி கலாச்சாரத்தில் கலப்பதற்கான எந்த செயல் முனைப்பும் இல்லை, வலுக்கட்டாயமாக தமிழர்கள் பெயருடன் தொங்கிக்கொண்டிருக்கவில்லை வடநாட்டு தலைவர்கள் பெயருடன் நின்றுகொண்டது, இங்கு வந்து தொழில் செய்யும் வடநாட்டவருடனான பேச்சு தொர்புக்கு மட்டும் நமக்கு உதவியது  " வா முத்துச்சாமிஜீ இன்னைக்கு களையெடுக்க போவோம்" " மாயாக்கஜீ இன்னைக்கு நல்லமநாயக்கர்ஜீ தோட்டத்துல அறுவடை இருக்கம் ஜீ " என்ற சொல்லாடல் நம் தந்தை தலைமுறையில் இல்லையே. ஆனால் இன்று பொதுவெளியில் புதிதாக ஒருவரிடம் அறிமுகமோ பேச்சுதொடங்களோ  எந்த தடங்களுமின்றி "ஜீ"யில் தொடங்கப்படுகிறது.

இன்னொரு நபர் "ஹாய்" "சார் " "மேடம் " "குட் மார்னிங்" னு இங்கிலிஷ் கலந்து பேசுறத நிப்பாட்டிட்டு வாங்க அப்புறம் "ஜீ " மாதிரி வடமொழி கலப்ப பத்தி பேசலாம்" என்றார். இதுவும் சரி எனினும் பல பத்தாண்டுகளாக ஆங்கிலம் நம் பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகிவிட்டிருக்கிறது, இன்று சொல்லவே தேவையில்லை தமிழை முடிந்தவரை தவிர்த்து ஆங்கிலம் மட்டுமே படிப்பு மொழியாக இந்நிலமெங்கும் பரவியிருக்கிறது,  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில கலப்பு மக்களிடம் எதார்த்த புழக்கமாகியிருக்கிறது, ஆனால் வடமொழி இன்றுவரை இந்நிலத்தின் பொதுக்கல்வியில் இணையவில்லை அவ்வகையிலும் "ஜீ " க்கான சப்பைக்கட்டு புறந்தள்ளக்கூடியதுதான்.  

இன்று அனைத்து அரசியல்/ பொருளாதார/ வரலாற்று செய்திகளும்   இணையம்சார்  சமூகத்தலங்களில் அரைகுறையாக,போலியாக போட்டோஷாப் நுனிப்புல்லாக பரப்பப்படுகிறது. இன்றைய இணையதலைமுறைக்கு  சமூகஅரசியல்  முகநூல் whatsapp வயதிலிருந்தான் தொடங்குகிறது. சமூக வலைதள வழியாக மட்டும் நாட்டு நடப்புகளை சமீபமாக பார்க்க துவங்கிய  நண்பர் ஒருவர் சொன்னார் " இப்போல்லாம் எதுக்கெடுத்தாலும் பிஜேபிய காரணம் சொல்றது வழக்கமாகிடுச்சு," ஜீ" க்கும் பிஜேபிதான் காரணமா? " என்றார், அவர்களை 20 ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்து சென்று உணர்த்தமுடியாதெனினும், இன்றும்கூட நகர சுவருகளில் அதற்க்கான சாட்சிகள்சு வரொட்டிகளாக ஒட்டப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன  ஒரேயொரு உதாரணம் கீழே.


யா. பிலால் ராஜா 

Saturday, January 6, 2018

அதிரப்பள்ளி (Athirappilly Falls)

அதிரப்பள்ளி 


 
நானும் நண்பன் வாஞ்சிநாதனும்  ஊரில் ஒன்று கூடிவிட்டால்  கிடைக்கின்ற நேரவாய்ப்பில் போடி -மூணாறு மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசங்களை பைக் எடுத்துக்கொண்டு சுற்றுவது வழக்கம். சென்ற ஆண்டுதான்  போடி -பூப்பாறை -ராஜக்காடு -இடுக்கி -கம்பம் என ஒருநாளில் 200+ km சுற்றி வந்தோம். அதேபோல் இந்த செப்டம்பர் இறுதியில் மீண்டும் ஒரு பயணம் திட்டமிட்டோம், திட்டமென்பது எங்கு செல்வது என்பதல்ல எப்படி செல்வது என்பதுதான், அதாவது இரண்டு நாட்களுக்குள் போடியிலிருந்து செல்லும் வழியும் வந்தடையும் வழியும் வெவேறாக இருக்க வேண்டுமென்பது மட்டும்தான். பயணிக்க வேண்டிய ஊர் எதுவென எந்த உறுதியுமில்லை ஆனால் பயணம் முழுவதும் ஜிமிக்கி  கம்மல் தேசத்தில்தான். பைக்கை கிளப்பி முதலில் தேக்கடி செல்வதெனவும், அதன்பின் அங்கிருந்து "ஓவியா" தேசத்தில் ஊடறுத்து பயணிப்பதென பாளையத்தில் சாப்பிட்ட ஒரு பாய்மெஸ் பொங்கலில் அடித்து சத்தியம் செய்துகொண்டோம்.


கூடலூர் தாண்டியதும் சிறிது தூரத்தில் எதிர்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் எங்களின் முதல் நிறுத்தம் கர்னல் பென்னி குயிக்ன் நினைவு மண்டபம். மனதிற்குள் அவருக்கு மிகப்பெரிய மரியாதை செய்து கொண்டேன் இங்கு சொன்னது சம்பிரதாயமான வாக்கியமல்ல, முல்லை பெரியாறு அணை உண்டாக்கி, நீர்தேக்கி, திருப்பி விட்டதால்தான் தேனி- மதுரை மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த விவசாய பூமியாக  மாறியது. நேரடி பெரும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல மறைமுகமாக சிறு /குறு தொழில்வர்கத்திற்கும்  வாழ்வாதாரமாக இந்த பூமியை மாற்றி, இந்த மண்ணின் இனக்குழுக்கள் வேறெங்கும் இடம் பெயராமல் இங்கு வேர்விட நீர்விட்டவர் கர்னல்.
அங்கிருந்து சிறிது நேரத்தில் தேக்கடி சென்றடைந்தோம். எனக்கு நீர்ப்பயண  உயிர்பயம் அதிகமென்பதால் படகு சவாரி மட்டும் தவிர்த்தோம். முல்லை பெரியாற்றில் பின்புல நீர்நிலை  (Back water) தான் தேக்கடி சுற்றுலாத்தலம். பின் அங்கிருந்தது வாகமன் என்ற சுற்றுலா தளம் செல்ல முடிவெடுத்து பைக் முடுக்கி, வழியில் ஒரு உணவகத்தில் Beef fry , மட்டையரிசி சாப்பாடு முடித்தோம், எப்பொழுது கேரள எல்லை தொட்டாலும் நான் மாட்டிறைச்சி  தவறவிடுவதில்லை, காரணம் அந்த சுவைக்கு காரணமான செய்நேர்த்தி, தமிழ்நாட்டு உணவகங்களில் அத்தகைய பக்குவத்தில் Beef உண்ணக்கிடைப்பதில்லை காரணம் நம்பகுதியின் ஆட்டிறைச்சிக்கான இடமதிப்பை கேரளத்தில் மாட்டிறைச்சி     எடுத்துக்கொள்கிறது ஆகவே Beef  சமையல் மலையாளிகளால் அக்கறையுடன் கையாளப்படுகிறது,

அங்கிருந்து வாகமன் என்ற சுற்றுலா தளம் சென்றோம், புல்வெளிக்குன்றுகளும், இயற்கை நோக்குதளங்களும்  (view point) நிரம்பிய ஒரு  கனவு நிலம் வாகமன்,  நாங்கள் சென்றநேரம் பனிப்புகையும் (Mist ) எதிர்பாரா சாரல் மழையும் மாறிமாறி போட்டு தாக்க அங்கிருக்கும் ஒருக்கடையில் கட்டஞ்சாயா +கப்பைக்கிழங்கு அடித்துக்கொண்டு இந்த பயணத்தின் உச்சமாக அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பார்த்துவிடுவதென முடிவெடுதோம்.


"இருநாட்களுக்குள் அவ்வளவு தூரமா? நிக்கிற இடதுலருந்து கேரளாவின் மறுமுனைக்கு போகணுமே? கு**டி பழுது விடாதா?"
மனக்குரல் என நினைத்து கொஞ்சம் சத்தமா பேசியிருப்பேன் போல "அதெல்லாம் யோசிக்காத முடிவு பண்ணிட்டேன் சாயாகடை சேட்டாகிட்ட ரூட் கேட்டுடேன் ...ஏறு வண்டீல" என்றான் வாஞ்சி. சந்திரமுகி வீட்டுக்குள்ள மாட்டுன வடிவேலு நிலமையாகிடுச்சு எனக்கு , ஆனால் வாஞ்சியை நம்பி எமலோகம் கூட போகலாம் மீட்டு  கட்டி தோளில் தூக்கிப்போட்டு வீடு சேர்த்து விடும் பாகுபலி. அதுமட்டுமல்ல ஒரு பயணத்தில் முக்கியமானது என நான் நினைப்பது உடன் பயணிப்பவருடனான எண்ண ஒத்ததிர்வுதான், எல்லாப்பயணங்களிலும் எங்களிருவருக்கான அலைவரிசை ஒன்றியிருப்பது கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். ஆனால் பயணத்தை தவிர மற்ற ரசனை அனைத்திலும் எதிர்தான். குடித்துக்கொண்டிருந்த கட்டஞ்சாயா குறையக்குறைய, இதற்கு பின்னான பயணம் பற்றிய உற்சாகமும் ஊக்கமும் மனதில் நிறைய துவங்கியது, புன்னகைமன்னன் படத்தில் கமல் ரேகா தற்கொலைகாட்சிதான் தென்னிந்தியாவை "இது எந்தஇடம் ? "
என கேட்க வைத்தது, அதிரப்பள்ளி என அறிந்து கொண்டதென நினைக்கிறன். அதன் பின் பல படங்களில் பாடல் காட்சிகளுக்கு இந்நீர்த்துறையே பின்புலம், மணிரத்னம் இவ்வருவியின் ஆகப்பெரும் ரசிகராய் இருக்கக்கூடும்.
 

கேரளாப்பயணங்களில் என்னக்கு மிகவும் பிடித்தது மலைச்சரிவு சாலைகளில் புறங்களில் வழிந்தோடும் சிறு சிறு அருவிகள்தான்.
மலை வழியெங்கும் சாலையோர அருவிச்சாரல் எங்கள் மீது தெறிக்க மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து மறுபுறம் இறங்கி தொடுபுழா நோக்கி விரைந்தோம். ஒரு பேக்கரியில் இளைப்பாறி , அடுத்து அதிரப்பள்ளி பக்கத்துக்கு பெருநகரான சாலக்குடியில் இரவு தங்குவதென முடிவு செய்தோம், அங்கமாலி நகரை கடக்கையில் சென்றவாரம் பார்த்த "அங்கமாலி டைரிஸ்" படக்காட்சி நினைவுக்குவந்தது.வழியில் பார்த்த இன்னொரு முக்கிய விஷயம் ஆறு பல ஊர்களில் ஊடறுத்து சென்றாலும் அவைகளை மக்கள் பாழ்படுத்தவில்லை ஆறு ஆறாகவே இருந்தது.அன்றிரவு ஏழரை மணிக்கு சாலக்குடியில் ஒரு ரூம் போட்டு, எட்டு மணிக்கு சாலையில் இறங்கி உணவகம் தேடி நடந்தால் பெரும்பாலான கடைகளை மூடத்தொடங்கியிருந்தார்கள், நம்மூரை போலல்ல 9 மணிக்குள் அன்றாடமென்பது முடிவுக்கு வந்துவிடுகிறது சேட்டன்களுக்கு.
கேரளா கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட நியாயம் என்னவென என்னளவில் யோசித்தேன், பிரபஞ்ச படைப்பில் வற்றிச்சலிக்காத எப்போதும் பெருக்கெடுக்கும் அழகு, பசும்இயற்கைக்கும், பெண்ணிற்கும்தான் உண்டு, இந்திய துணைக்கண்டத்தில் இவையிரண்டையும் தனக்குள் குவித்து வைத்துள்ளது இம்மலையகம்.

அதிகாலை எழுந்து கட்டஞ்சாயா அடித்துவிட்டு, போனில் டவுன்லோடி வைத்திருந்த ஜிமிக்கி கம்மலை ஒருமுறை பார்த்து வெறியேற்றி கொண்டு கிளம்பினோம் அதிரப்பள்ளி நோக்கி, வழியெங்கும் முன்னெப்போது பார்த்ததைவிட அதிக பசுமை , அழகிய வீடுகள், மிக அழகிய பெண்கள், இந்த மலையகத்தின் அழகினையும் செழுமையினையும் எந்த ஒரு கட்டுரை வழியும் எழுதி பிரத்தியாருக்கு கடத்திவிட முடியாது . பயணப்படுதலே இயற்க்கை உணர்தலின் ஒற்றை வழி. வழியில் ஒரு சிறு கடையில் இட்லி இடியாப்பம் கடலைக்கறி உண்டோம், அங்கு சுவற்றில் முருகன் ராஜா கோலத்தின் படமும் பிற தெய்வங்களில் படங்களில் மத்தியில் மாட்டியிருந்தது அங்கு மட்டுமல்ல இன்னும் சில கடைகளில் முருகன் படம் மாட்டியிருந்ததை கவனித்தோம், முருகன் முழுமையாக தமிழ் மொழிக்கும் இம்மண்ணுக்கும் காப்புரிமை பெற்றவராயிற்றே மலையாள குடிகளிடம் முருகன் எங்கனம் வந்தந்தார், அடுத்து உழக்கு புட்டு வேண்டுமா என கேட்க வந்த கடைக்கார சேட்டவிடம் சந்தேகம் கேட்டோம்,
"ஓ அதுவா மலையாளிகளும் முருகனை கும்பிடும் , பழனி போற வழக்கமும் உண்டு நெறயபேர்ட்ட ... அதுவும் இந்த ராஜா அலங்கார தரிசனத்த எங்களுக்கு இஷ்ட தெய்வம், கேரளா இவ்வளவு வளமா இருக்க காரணம் பழனி முருகன் பார்வை திசை இந்த இஸ்தலம் நோக்கி இருக்குறது தான்னு ஒரு நம்பிக்கை" என்றார், சேட்டனுக்கு நன்றி பரஞ்சு , முடுக்கிய எங்கள் வண்டி அடுத்து நின்றது அதிரப்பள்ளிதான், ஒரு மைல் முன்னே அருவியின் ஓசை கேட்டது கிளர்ச்சியாயிருந்தது 



இந்திய அருவிகளில் நயாகரா இதுதான், அதன் பிரமாண்டம் வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்டது, கவிஞர் வாலி வரிகளை கடன் வாங்கி சொல்வதானால் இது நீர் வீழ்ச்சியல்ல நீர் எழுச்சி, பெரும் பெரும் நீர்க்கோளங்கள் இடைவிடாது பூமியில் விழுந்து தெறித்து ஓடுவது போலிருந்தது. அருவியை யாரும் நெருங்கி செல்ல அனுமதி இல்லை , கொடுத்தாலும் போகமுடியாது என்பதுதான் உண்மை, விழும் நீர்ப்பாறையின் பேராற்றலை மனித உடல் தாங்க முடியாது. 

50 மீட்டர் தள்ளி நின்று ரசிக்கும் போதே பாறைமீது விழுந்து தெறிக்கும் நீரித்துளிகள் பெருமழையாய் நம்மை நனைக்கும்,நானும் நண்பனும் ஆட்கள் வராத ஒரு பாறை ஒன்றை பார்த்து அமர்ந்தோம்ம் எங்கள் முன் பெருங் கடலொன்று பேரிரைச்சலோடு விழும் இயற்கையின் முன் ஒன்றுமற்ற ஒன்றாக அமர்ந்திருந்தோம்.அங்கிருந்த பாறைமீது படர்ந்திருந்த பாசி போல அந்நீர்த்துறை மீது ஒட்டிக்கொண்ட மனதை பிரித்து திரும்ப கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. அங்கிருந்து திரும்பும் வழியில் இன்னும் இரு சிறு குளிக்க ஏதுவான அருவிகளுண்டு என ஒருவர் சொன்னார், நண்பனோ,
 " இல்லடா  இந்த பிரமாண்டம் முழுசா எனக்குள்ள நிறைஞ்சுருக்கு   வேறொரு நீர்க்காட்சி இப்பக்கு  வேணாம், கொஞ்சகாலத்துக்கு இப்பேரருவி எனக்குள்ள விழுந்துட்டிருக்கணும் ..." முணுமுணுத்தான்,
எனக்கும் அது சரியெனபட்டது.


அங்கிருந்து கிளம்பி அடிமாலி செல்ல குறுக்கு வழி பாதைகளையும் கடக்கவேண்டிய ஊர்களையும் கேட்டு குறித்துக்கொண்டு  ரப்பர் தோட்டங்களின் வழியே பயணித்தோம்.வழியில் இறங்கி ஒரு தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் சேகரிக்கும் முறை தெரிந்துகொண்டு, அடிமாலியில் மட்டையரிசி கஞ்சியுடன் Beef fry  எடுத்துக்கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலையை மீண்டுமொருமுறை தண்டிக்குதித்து, ராஜக்காடு வழி போடி வந்தடைந்து, கணக்கிட்டத்தில் 460 K.M  தூரத்தை 35 மணி நேரத்தில் பயணித்திருந்தோம் .

யா. பிலால் ராஜா 
  ( படங்கள் - வாஞ்சிநாதன் )