Monday, July 18, 2011

துளை செல்லும் காற்று.....

This article publised in Leading tamil literary e-magazine "Uyirosai" (uyirmmai publications)18-07-2011 issue


(அறிமுகம் - குழலிசை கலைஞர் நவீன்குமார்)

சென்னையில்பெரும்பாலும் வார விடுமுறை  நாட்களில்   பொழுதுபோக்க   பிடித்த இடம் கடற்கரைதான் (அதிக செலவும் ஆகாது), அதிலும் எனக்கு  கடலை பார்ப்பதை காட்டிலும் அங்கு வரும் மனிதர்களும் சிறு வியாபார கும்பலும்தான் பார்பதற்கும் சுவராஸ்யமாக தோன்றும். சுண்டல், டீ, பலூன், மக்காசோளம்...., இந்த வியாபாரிகளை காட்டிலும் புல்லாங்குழல்
விற்பவர்கள்தான் எனக்கு வசீகரமாக தெரிவார்கள், காரணம் கடற்கரையில் எந்த பொருளையும் எந்த  கலைத்திறமையும் இல்லாமல் விற்று சம்பாதிக்கலாம், அனால் புல்லாங்குழல் விற்பவன் அதை வாசிக்க தெரிந்தால்தான் அந்த இடத்தை கவர முடியும். இதுவரை
 வாசிக்காதவர்கள் கூட 10 ரூபாய்க்கு வங்கி வாசிக்க ஆசைபடுவார்கள்.
          இந்த உலகில் மனிதன் கை சேர்ந்த  முதல் காற்றிசைக்கருவி
புல்லாங்குழலாகத்தானிருக்கும், கற்பனை செய்துபாருங்கள் வேட்டையாடுவதும்,  இனக்குழுக்களோடு இடம் பெயர்ந்தும் வாழ்ந்து கொண்டிருந்த கற்கால மனிதனுக்கு  காட்டில்   துளையுண்ட மூங்கிலுக்குள்  சென்ற காற்று எழுப்பிய ஓசை  கவர்ந்திருக்கும், மூங்கிலை  சரியான அளவில் துண்டித்து  தேவையான அளவில் துளைகளிட்டு இசைக்கத்துவங்கியிருப்பான்.  இன்று மனிதன் இசைக்கும் அனைத்து காற்றிசைக்கருவிகளின்  மூலம்  புல்லாங்குழலாகத்தானிருக்கும். இசைக்கருவிகளில் புல்லாங்குழலை மட்டும் மனிதன் சொந்தம்கொண்டாட முடியாது , அது இயற்கையின் உண்மையான இசைக்கருவி.மனித  உயிரோடு நெருக்கமானது குழலிசை,  நம் உயிர்தொடும்  சுவாசகாற்றை மறு நொடிக்குள் இசையாக  மாற்றிவிடுகின்றன   இசைக்குழல்கள்.நானும் பல இசைக்கருவிகளுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன்  மனிதக்குரலை  இடம்பெயர்த்து, குரலுக்கான இடத்தை நிரப்பும் இசைக்கருவி புல்லங்குழல்மட்டும்தான். எத்தனையோ நவீன இசைக்கருவிகள் வந்தாலும் இந்த நுற்றாண்டு வரை இசைகுழுக்களில் குழலிசையின் இடம் தவிர்க்கமுடியாதது.

            நானும் புல்லாங்குழலும்  முதலில் சந்தித்துக்கொண்டது என்னுடைய 8-ம் வகுப்பு பள்ளிநாட்களில்(90 களின் தொடக்கம் ) , என்னுடன் படித்த சரவணன் என்ற மாணவன்  சிறிய  புல்லாங்குழலை பள்ளிப்பையில் மறைத்துவைத்து பள்ளிக்கும், டியுசனுக்கும் எடுத்து வந்து   ஆசிரியர் இல்லாத நேரங்களில் வாசிப்பன்,வாசிப்பான் என்று சொன்னது விளையாட்டாக அல்ல  உண்மையாகவே அற்புதமாக  வாசிப்பான்,  அவன்  வாசிப்பதை  அதிசயமாகவும் , ஆர்வமாகவும் பார்துகொண்டிருபேன். நான் பார்ப்பதை பார்த்து குழலின் வாய் வைக்கும் துளைபகுதியில்  எச்சில் துடைத்து என்னிடம் தருவான், நானும் ஆர்வமாக முயற்சித்து பார்ப்பேன்  ஒரு சுரம் கூட  என்னால்  வாசிக்க முடியாது  (இன்று வரை முடியவில்லை எனபது வேறு விஷயம்). 
 இருகைகளிலும் லாவகமாக குழல்   பற்றி விரல்களை சுரங்களின் துளைகளில் வைத்து இதலை குவித்து துளையில் ஊதும் காற்று இசையாதல் எனபது ஆச்சரியமான  ஒன்று. "துளை செல்லும் காற்று மெலிசையாதல் அதிசயம்......" என்ற வைரமுத்துவின் வரிகள் வெறும் கவிதைப்பொய்யோ, மெட்டுக்கு வார்க்கப்பட்ட வார்த்தைகளோ அல்ல, உண்மையை பற்றிய உண்மை. சரவணன் ஒரு பிறவி கலைஞன் யாரிடமும் கற்றுக்கொளாமல் தானாகவே ஆர்வமுடன் கிபோர்ட், தபேலா வாசித்து பழகி கொண்டிருந்தான், என் ஆர்வத்தை பார்த்து அவன் வாசிக்கும் போது என்னையும் அருகில் வைத்துக்கொள்வான், புல்லாங்குழலில் 80 - களில் வெளிவந்த இளையராஜாவின் அதிஅற்புதமான மெலிசைகளை வாசிப்பான், உண்மையில் 80 - களுக்கு பின் வெளிவந்த சினிமா பாடல்களில்தான் இளையராஜாவால் குழலிசை அதிகமாக பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன், காதல், சோகம், கிராமிய பின்னணி கொண்ட பாடல்களில் மெலிசை சந்தங்களை குழலிசை கொண்டு மயக்கியிருப்பார். என் நண்பன் எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட புல்லாங்குழல்களை வைத்திருப்பான் அளவில் வித்தியாசம் கொண்ட அவைகள் 7 முதல் 9 துளைகள் கொண்டதாக இருக்கும், எல்லா இன முங்கிளிலும் குழல் செய்ய முடியாது,(சில வகை மூங்கில்கள் நடுவில் துளைகள் இல்லாமல் இருக்கும்) தகுந்த அளவிலான உள்ளீடற்ற முங்கிலை தேடி சூடான இரும்பு கம்பி கொண்டு அவனே துளையிட்டுக்கொள்வான், இவ்வாறு இனிமையாக சினிமாப்பாடல்களிலும், நண்பன் மூலமாகவும் குழலிசை கேட்டுகொண்டிருந்த சமயத்தில் (1992 - ல்) புதுமையான குழலிசையை செவி  சந்தித்தது, ரகுமான் இசையில் ரோஜா படப்பாடல்களை எங்கள் வியாபார கடை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஒளிபரபிக்கொண்டிருந்தனர், அதில்  "சின்ன சின்ன ஆசை.." பாடலை துவக்கி வைக்கும் குழலிசை,அதுவரை  நான் கேட்டஅனைத்து சினிமாப்பாடல்களின் குழலிசையிலிருந்து புதிதாய் இருந்தது, மீண்டும் கேட்கும்போது முதல் 25 நொடிகளை கவனித்துப்பாருங்கள்.  அந்த  குழலிசையின் நுட்பமும் புதுமையும்,  கூர்ந்த ஒலிபதிவு தரமும் குழலிசை மீதான என் ரசனையை முழுவதும் மாற்றிப்போட்டது. அதன் பின் ரகுமானின் புதிய முகம் , ஜென்டில்மேன் , திருடா திருடா, ஜீன்ஸ், கிழக்கு சீமையிலே, மே மாதம், பம்பாய், காதல் தேசம், இந்தியன், முதல்வன், Rangela, Taal ........... என அனைத்து  படங்களின் புதுமையான இசைஅமைப்பு,பாடல்களில் குழலிசை பயன்படுத்திய விதம், அவரின் பாடல்களை  தொடர்ந்து கேட்கும் ஆர்வத்தை  உப்பு  நீரில் தீர்க்க  முடியாத  தாகத்தைப்போல்நாளுக்குநாள் அதிகரித்தது. ரஹுமானால் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறைக்கான முதல் இசையை, உலகின் முதல் இசை கருவியான புல்லாங்குழல் மூலம் கண்ணில் காண முடியாத மந்திர  அதிவலைகளாக  காற்றில் துவக்கி வைத்தது நவீன்குமாரின்  புல்லாங்குழல். இந்த கட்டுரைக்கு காரணமான புல்லாங்குழலிசை  ரகுமானின்  ஒவ்வொரு இசை தொகுப்பிலும், பாடல்களிலும் காற்றின் புதிய அடுக்கில் பயணித்தது, அதுவரை புல்லாங்குழல் மெல்லிய(காதல்/சோகம்) ராகங்களை மட்டும்  பாடும், என்ற  இசைபிம்பம்  காற்றில் கரைந்து, ரகுமானின் "மாத்தியோசி" formul composing -ல்  தாளங்களையும் இசைக்கும் கருவியாகவும் குழலிசை மாறிப்போனது. மெல்லிய காதல்,காமம், சோகம், துள்ளலிசை, வன்மம், என எல்லா உணர்வுகளும்  குழலிசையாக  அதிரடித்தது. பின்னாளில் ரகுமானின் இசை நிகழ்சிகள், பத்திரிகை செய்திகள் வாயிலாக அவரின் அனைத்து  படங்களுக்கும் புல்லாங்குழல் இசை கொடுத்தது  "நவீன் குமார் " என்ற இசை கலைஞர் என்று தெரிந்து கொண்டேன்.

கடந்த 20 ஆண்டுகளாக ரகுமானின் இசையை பின்தொடர்ந்த்தில் ஆச்சரியமான ஒன்று இந்த நவீன்குமார் என்ற புல்லாங்குழலிசைகலைஞர், காரணம் ரகுமானிடம் தொடர்ந்து பணிபுரியும் இசைக்கலைஞர்கள் மிக அபூர்வம், காரணம் ஒவ்வொரு இசை கலைஞர்கள், பாடகர்கள் , தொழில்நுட்பகலைஞர்களின்  திறமையை  கணித்து  ஒவொரு  படத்திலும்  அவர்களின்  சிறந்த பங்களிப்பை பெற்றுவிடுவார், பின் அடுத்த இசை தொகுப்பிற்கு புதிய திறமைகளை தேட துவங்கிவிடுவார், அதிஅபாரமான  கலைஞர்கள் மட்டும் தான் அவருடன் இன்று வரை பயணப்படுகின்ற்னர், அவர்களில் மறைந்த H. ஸ்ரீதர்(sound /dts  mix), சிவமணி (Drums), ரஞ்சித் பரோட் (organaisar), ஸ்ரீநிவாஸ் (singer / track singer), ஹரிஹரன் (singer) வரிசையில் நவீன்குமரும் ஒருவர்.  காரணம், ரோஜாவில் தொடங்கி இன்றுவரை  புதிது புதிதாக பரிசோதனைகள், இசை சந்தங்கள், ஓசைகளை உருவாக்குவதில் ரகுமானுடன் ஒரே அலைவரிசையில் பயணிப்பவர் நவீன்குமார், 1984 முதல் தொழில் முறை இசைகலைஞரான நவீன்குமார் புல்லாங்குழலின் இசையிலும் அதன் வடிவத்திலும் பல மாறுதல்களை கொண்டுவந்தார். ரகுமானிடம் மட்டுமல்லாது இந்தியாவின் பல முன்னணி இசை அமைப்பாளர்களிடமும் பணிபுரிந்துள்ளார். பம்பாய் படத்தின் Theam Music தான் அவரை அனைத்து இசை மேடைகளிலும் இந்திய அளவில் அடையாளம் காண/கேட்க வைத்தது. அவரின் குழலிசை பற்றிய வார்த்தை அறிமுகத்தை காட்டிலும் பின்வரும் வலை பக்கத்தை சொடுக்கி அதில் ஒலிக்கும் அவரின் குழலிசையை  ஒரு10 நிமிடம் அவசியம் கேட்டுபாருங்கள் http://www.flutenaveen.com/ .
புல்லாங்குழல் மட்டுமல்ல "பாசூரி" (புல்லாங்குழல் இனம்தான் ஆனால் இதழ்  ஊதும் துளை  பக்கவாட்டில்  இல்லாமல் முனையில்  இருக்கும்)போன்ற குழலிசை கருவிகளையும்மேடை நிகழ்சிகளில் வாசித்து  அதிரடித்தார். வட இந்தியாவில்  கூட  சினிமா  தவிர்த்த பல அபாரமான,  "ஹரி  பிரசாத் சொவ்ரஷ்ய" போன்ற புலங்குழல் இசை கலைஞர்களும் அவர்களின் இசை தொகுப்பும் ரசிக்க கிடைக்கும் (ரகுமானின் ஜன கன மண ... அல்பத்தில்  முதல் வரியை குழலிசை மூலம் துவக்கிவைப்பவர்)


தமிழ்நாட்டில் இதுபோன்ற இசை தொகுப்பிற்கும், ரசனைக்கும் இன்றுவரை வாய்ப்பில்லை, அனால் நவீன்குமார் மூலம் தரமான, புதுமையான குழலிசை தேவைகள்  ஓரளவு  தீர்க்கப்படுகின்றன. ரகுமான்- நவீன்குமார் கூட்டணி புல்லாங்குழல் வடிவத்தை கூட மாற்றி (அவரின் மேடை நிகழ்ச்சிகளில் புதிய வடிவ கருவிகளை கையாள்வதை காணலாம் ) ஓசை பரிசோதனை செய்தனர். Haris ஜெயராஜ் -ன்  முதல் படமான "மின்னலே" -வின் 'வசீகர ....'  பாடலில்  புல்லாங்குழல் வசீகரமும்  நவீனின் குழல்தான். சினிமா இசை தவிர நவீன்குமாரின்  "Cafe fluid " என்ற ஆல்பமும்  sony  நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
Drums சிவமணியின் "மகாலீலா" என்ற இசை அல்பத்தின் குழலிசை பகுதியை  நிரப்பியது  நவீனின் இசை. உலகின் அனைத்து வகையான குழலிசை கருவிகளின்  சேகரிப்பும் நவீன்குமரிடம் உண்டு.(நவீன்குமார் பற்றிய NDTV-யின் சிறுதொகுப்பு link).
நவீனின் குழலிசை ஆளுமையை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள வேண்டுமென்றால்  
கடந்த  20ஆண்டு ரஹ்மான்  பாடல்களின்  மீள் கேட்பின்போது குழலிசை  பகுதியை மட்டும் தனியே ரசித்து பாருங்கள் என்னை போல  உங்களுக்குள்ளும்  ஊடுருவியிருக்கும் நவீ(ன)னின் குழலிசை.


யா. பிலால் ராஜா