நீண்ட நாட்களாக தொடர்வாசிப்பிலு
ம் , முடிக்கப்படாமலுமிருந்த ஓரான்பாமுகின் "என் பெயர் சிவப்பு"-ஐ இன்றுடன் படித்து முடிக்கவேண்டுமென்ற முடிவுடன் சென்னையின் பெரும் பரப்பிளமைந்த கிண்டி சிறுவர் பூங்காவிற்கு சென்ற ஞாயிறன்று சென்றேன். சென்னையின் பெரும்பாலான பூங்காக்கள் மிகச்சிறியவை, மாலை வேளைகளில் உள்ளே சென்றால் ரங்கநாதன் தெருவை நினைவுபடுத்தும் கூட்டமிருக்கும், புதிய மரமொன்று முளைத்து வளர வாய்ப்பில்லதபடி கான்கிரிட் நடைதளம், சற்று ஒதுக்குபுறத்தில் மரநிழல் அமர்விடமிருந்தால் காதலர்களின் ஆக்கிரமிப்பு. இந்நகரில் நான்காணும் அனைத்து பூங்காக்களின் நிலையும் இதுதான். இதுபோன்ற நடைபயிற்சிக்கூட்டம், காதலர் ஆக்கிரமிப்புகளை உள்வாங்கியபின்னும் அமர்வதற்கு இடம் கொண்ட பூங்காக்கள்தான் பெரியபரப்பிலான பூங்காக்கள் என்ற மனஅளவியல் எனக்கிருக்கிறது. அத்தகைய பரந்தஅமர்விடமும், ஆண்டுமுழுவதும் பசுமை நிழலும் கொண்டிருக்கிறது கிண்டி சிறுவர்பூங்கா. வனத்துறையின் கட்டுப்பாட்டிலமைந்த வனவிலங்குகளின் காட்சிக்கூண்டும் அங்கிருக்கிறது. நுழைவாயிலிளிருந்து சில மீட்டர் தூரத்தில் தெரிந்த ஒரு பெரிய பறவைக்கூண்டினருகில் ஒரு நிழலிடம் பார்த்து அமர்ந்தேன், அதனை பறவைக்கூண்டு என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அது ஒரு பெரிய பறவைக்கூடாரம். நடுவில் ஒரு நீர்தேக்ககுட்டை அதனை சுற்றி சிறிதளவு இடம், சில பல கிளைகளுடன் கூடிய ஒரு மரம் இவை அனைத்தும் மிகப்பெரிய வலைகொண்டு சூழப்பட்டு எந்த ஒரு சிறுபறவையும் தப்பிவிடாதபடி சிறைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் நம் நிலப்பகுதிகளில் பார்த்திராத அளவில் சிறிதும், பெரிதுமான வெளிநாட்டுப்பறவையினங்கள்தான் அதிகமிருந்தன. அவைகள் உயரம், நிறம், அலகமைப்பு, வடிவம் மற்றும் பாதஅமைப்புகளில் ஒன்றையொன்று வேறுபடுத்திக்கொண்டிருந்தன. அவைகளின் உயிரியல் பெயர்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கில்லை. பள்ளிப்படிப்பில் இதுபோல் தாவர, விலங்கியல் பெயர்களை நினைவில் வைக்கமுடியாமல் நிறைய தோற்றிருந்ததால் இன்றுவரை புதிய உயிரியல் பெயர்களை நினைவுகொள்வது ஒவ்வமையயிருக்கிறது. சிறிது நேரம் அவைகளையே கவனித்துக்கொண்டிருந்தேன், சில பறவைகள் கூண்டிற்குள் சிறிது பறப்பதும், சிலஅடிகள் நடப்பதுமாயிருந்தன. பெரும்பாலானவை ஒரே இடத்தில் நின்றுகொண்டும், அமர்ந்தயிடத்தில் அப்படியே சலனமற்று உறைந்தும் போயிருந்தன. அந்த கூண்டிற்கு வெளிப்புறம் தரையிலும் மரக்கிளையிலும் சில காக்கைகள் நின்றுகொண்டு சிறைபட்ட பறவைகளை பார்த்துக்கொண்டிருந்தன. அந்த காக்கைகளின் மனம் ஒருவேளை தன்னைக்காட்டிலும் அழகுமிக்க இனங்களை ரசித்துக்கொண்டிருக்கலாம் அல்லது யெளவனமிக்க அப்பறவைகளின் மீது புணரிச்சை கொண்டிருக்கலாம். மனிதர்களைப்போலல்லாமல் பறவைகளின் கண்கள் காமத்தை ஒருபோதும் காட்டிக்கொடுப்பதில்லை. நீர்க்குட்டையின் அருகிலிருந்த சில பறவைகள் கண்களில் நான் பார்த்த அமைதி "பிரபஞ்சத்தின் பேரமைதி" என்ற சொல்லுக்கு உவமை போலிருந்தது. உண்மையில் அப்பறவைகளின் கண்களில் நான்கண்டது, இயல்பான அதன் வாழ்வை இழந்துவிட்ட சோகமாயிருக்கலாம். நாடுவிட்டுநாடு பறக்கும் திறனிருந்தும் சில அடி தூரத்திற்கு மேல் பறக்கமுடியாதது அதன் மனதில் பெரும் துயரத்தை உருவாக்கியிருக்கலாம். மனிதர்களைப்போல் தற்கொலை எண்ணமற்ற, மற்றும் வழிமுறையும் தெரியாத காரணத்தினால்தான் இவைகள் கூண்டிற்கு அடைபட்டும் உயிரோடிருக்கின்றன என நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்திற்குப்பின் பூங்கா பணியாளர் ஒருவர் அக்கூண்டினுள் நுழைந்து கொண்டுவந்திருந்த ஒரு கூடையிலிருந்து இறந்து போயிருந்த மீன்களையள்ளி நீர்க்குட்டையினில் வீசியெறிந்தார், பறவைகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக்கொண்டு செத்த மீன்களை விழுங்கத்தொடங்கின. பறவையினங்களின் வாழ்வியல் சுவாரஸ்யமே உணவுக்கான வேட்டையாடுதலில்தான் அடங்கியிருக்கிறது. நீரில் போக்கு காட்டி மறையும் உயிர்மீன்களை ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொருவிதமாக வேட்டையாடும் திறமைதான் இயற்கை அதற்கு அளித்திருக்கும் உயிர்த்திறன். ஆனால் அவைகள் இங்கு செத்து அழுகிய மீன்களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. மதங்கள் மனிதனுக்கு கற்பனையாக போதித்த நரகத்தை, பறவைகளுக்கு நாம் உண்மையாக உருவாக்கி வைத்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன் கடைவீதியில் என் நண்பருடன் செய்த விவாதம் ஒன்று அப்பொழுது என் நினைவிற்கு வந்தது, அவர் கடைகளில் விற்கப்படும் ஒரு சில பறவையினங்களை கூண்டுடன் வாங்கி வீட்டில் வளர்க ஆசைப்பட்டார். நான் அவரிடம் "வனங்களில் திரியும் பறவைகளை சிறிய கூண்டினுள் அடைத்து வைப்பது மிக மோசமான பொழுதுபோக்கு"என்றேன், அதற்கு அவர் "நீங்கள் உண்பதற்கு, உழுவதற்கு, சுமப்பதற்கு, காவலுக்கு ஆடு,கோழி ,மாடு, குதிரை, நாயினங்களை அடைத்து வைக்கிறீர்களே அவைகளை காட்டிற்கு அனுப்பவேண்டியதுதானே" என்றார். அதற்கு நான் "நீங்கள் சொன்ன வளர்ப்பினங்கள் எல்லாம் பல நுற்றாண்டுகளாக மனிதனை சார்ந்து வாழ பழக்கப்பட்டுவிட்டன. அவைகள் ஒருபோதும் மனிதனை விட்டு விலகி காட்டிற்குள் தப்ப முயற்சிக்கவில்லை. அவைகளை வீட்டிலிருந்து விரட்டினாலும் மீண்டும் உங்களை தேடி வந்துவிடும். ஆனால் பறவையினங்கள் ஒருபோதும் மனிதஅருகாமையை விரும்புவதில்லை, வனங்களை மட்டும் சார்ந்து வசிக்க விரும்புபவை என்றேன்" ஆனாலும் அவர் சிரித்துக்கொண்டே பறவை விற்கும் கடைகளை வீதியில் தேடிக்கொண்டே நடந்து வந்தார். பலமான சிரிப்புசத்தத்துடன் என்னை கடந்த காதல் ஜோடியால் நினைவு கலைந்து, என் கூண்டு திரும்பத்துவங்கினேன், "என் பெயர் சிவப்பு"-ஐ முடிக்காமலே...
யா. பிலால் ராஜா
No comments:
Post a Comment