Monday, December 19, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 1)

This Article published in literary e-magazine "Uyirosai"(uyirmmai publications)19-12-2011 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5107

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்

   
தமிழகத்தில் சினிமா பாடல்கள் தவிர்த்த பிரபலமான  மாற்று இசை  என்று தேடினால் பக்தி பாடல்களை மட்டும்தான் பட்டியலிட முடியும் . அதிலும் கடந்த 30 வருடங்களில் T .M.S , மற்றும்  நாகூர் E .M . ஹனீபா இந்த இருவரின் பாடல்கள் இந்து, இஸ்லாமிய விழாக்களில் தவிர்க்க முடியாத  ஒலி நாடாக்களாக  இருக்கும். மத நம்பிக்கை கடந்து மட்டுமல்ல, மத நம்பிக்கையை துறந்தவர்கள் கூட இன்றுவரை ரசிக்கும் பாடல்கள் இவர்களுடையது. இந்த கட்டுரை எனக்கு கட்டயமானதற்கு காரணம், ஊரில் சிறுவயதில்  விழாக்களில் கேட்கத்துவங்கிய தமிழ்  இஸ்லாமிய பக்தி பாடல்கள் பின்பு இசையமைப்பாளர் ரஹ்மானின் சூஃபி இசை  பாடல்களின் செவிவழிப்பின்தொடரலாக என்னை ஒரு அபாரமான சுஃபி இசை வடிவத்தின் ரசிகனாக்கி இருக்கிறது. புத்தத்தில் ஜென் தத்துவங்களைபோல, போல இஸ்லாத்தில் சூஃபித்துவமும்  சுதந்திரமானது, இறைநிலை உணர்வுக்கு எந்த சம்பிரதாயங்களையும் கட்டாயப்படுதுவதிலை,  இயற்கை மீதான பார்வைக்கும், சுய சிந்தனைக்கும் ,
சம்பிரதாயங்களை கடந்தமனிதநேயத்திற்கும் முழு சுதந்திரம் கொடுப்பதுடன்,
இயற்கையையும், அன்பையும் இறை-வழியாக கொள்ளபடுவதால் அதில் வெளிப்படும் கலையும் அன்பும், பணிவுமாக மத வேறுபாடின்றி  அனைவரையும் ஆட்கொள்கிறது, மதிய கிழக்கு  ஆசிய நாடுகளை  பிறப்பிடமாக கொண்ட சூஃபி  இசைக்கான சிறிய  அறிமுகமாக இந்த கட்டுரையில்  ரஹ்மானின்  சில பாடல்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன். முன்னதாக சூஃபியிசம் பற்றி ஒரு சிறிய அறிமுகம், ஏழத்தாழ 10 -ம்  நுற்றாண்டில் வைத்திக இஸ்லாத்தின் சம்பிரதாய சடங்குகளை தவிர்த்து மெய்ஞான  தேடலாக  உருவானவர்கள்  சூஃபிகள்.  பொதுவாக இஸ்லாம் துறவு பற்றி போதிப்பதில்லை, ஆனால் அதிகப்படியான இறைக்காதலால்
துறவு நிலையில் வாழ்ந்த சூஃபி   மெய்ஞானிகளும் உண்டு.  அதேபோல்  இசை/ நடனம்/கவி புனைவை அடிப்படை இஸ்லாம் ஆதரிப்பதில்லை, இதற்கு காரணம் என்ன என்று சிலரிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் இது போன்ற கலைகள்/படைப்புகள் உண்மை  மற்றும்  வரலாற்றை அதிகப்படியான கற்பனைகள் கலந்து அதன் நோக்கை  திசைமாற்றி  விடுமென்பதால்  இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தில் இவைகளுக்கு  ஊக்கமளிப்பதில்லை என்றார்.  ஆனால் சூஃபியிசத்தில் கலைகளின் வாயிலாக இறைவன்/இயற்கையிடம் சரணடைதல் முக்கிய நிகழ்வாகிவிடுகிறது.  இன்னும் சொல்லபோனால் இது ஒரு வகை கூட்டு
வழிபாடு  போன்றது.  ( உண்மையில் சூஃபி , க்ஃவ்வாலி இசை பற்றி விரிவாக சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் இந்த கட்டுரை தொடரின் வடிவம் போதாது என்பதால், சிறிய அளவில், என்னால் ஆனவரை முயற்சிக்கிறேன்.)

பள்ளி செல்லும் வயதில், சில காலம் என் தந்தைக்கு உதவியாக அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து தினசரி பத்திரிக்கை விற்பனை தொடங்கும்போது, எதிர்புறம் திருமணமண்டப வாசலில் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் ரிலிருந்து TMS ன் பக்திபாடல்கள் ஒலிக்கும். விடிந்து கொண்டிருக்கும் அதிகாலை, கடைகளில்  வாசல்  தெளிப்பதால்  கிளம்பும்  மண்வாசனை, பால் வண்டிகாரர்களின் மணி சத்தம்( பாக்கெட் பால் கலாசாரம் பரவாத 90 ' களின் மத்தி), தினசரி நாளிதழ் கட்டை பிரிப்பதால் கிளம்பும் பேப்பர் வாசனை, ஒன்றிரண்டாக கூடும் ஆள் நடமாட்டம், வசந்த பவனில் வாங்கிய காபி வாசனை, இவைகளுடன் TMS ன் குரலும் சேரும்போது  கிடைக்கும்  புத்துணர்வு உழைப்பின் களைப்பை மறக்க செய்யும்.
இதே அலைவரிசைக்கு  என் மனதை  ஈர்ப்பது  எங்கள் பகுதியில் இஸ்லாமிய  விழாக்களில்  ஒளிபரப்பாகும்  நாகூர்  E M .  ஹனிபாவின்  பாடல்கள். எல்ல கலை படைப்புகளும்  கலைஞர்களும் கண்ணுக்குத்தெரியாத கால வட்டத்திற்கு உட்பட்டவைதான், சில மட்டும்தான் காலம் கடக்கும் கால்கள் கொண்டிருக்கும், தமிழ் பக்திபாடல் இசை சுழலில் T M S., மற்றும் நாகூர்  E . M . ஹனிபாவின் குரலுக்கு அத்தகைய கால்கள்
உள்ளதாக கருதலாம். தமிழகத்தில் இன்று வரை இஸ்லாமிய  விழாக்களில் ஹனிபாவின் பாடல்கள் தவிர்கமுடியாதது, காரணம் இவருக்கு பின் அந்த இடத்திற்கான தனித்துவ குரல்கொண்ட பாடகர்களும் பாடல்களும் கிடைக்கவில்லை.  இவர்களின் குரல் வள ஆளுமைதான் அபரமும் தனித்தன்மையும் கொண்டிருந்ததே தவிர பெரும்பாலான பாடல்களின்
மெட்டமைப்பும், இசையும், ஒலிபதிவு தரமும்   ஆர்கெஸ்ட்ரா  குழுக்களின் தரத்தில்தான் இருந்தன, இந்திய அளவில் சென்றிருக்க வேண்டிய இவர்களின்  குரல் ஆளுமை  தமிழகத்தின் 234 தொகுதிகளை
தாண்டவில்லை, அதுமட்டுமல்ல  நாகூர்  E .M   ஹனிபாவின் பாடல்கள் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமா பாடல் மெட்டுக்களின்இனத்தில் எளிதில்  சேர்வதுதானே தவிர முழுமையான  சூஃபி / க்ஃவ்வாலி  இசை வகையல்ல. (ஹனிபாவின் குரல் சினிமாவில் இளையராஜாவால் செம்பருத்தி , ராமன்அப்துல்லா ஆகிய இரு  படங்களில் பயன்படுத்தப்பட்டது.) இவைகளுக்கு பின் இஸ்லாமிய பக்தி பாடல்களின் வேறெந்த புது வடிவத்தையும், வகையினையும் கேட்காத நாட்கள் சென்றுகொண்டிருந்தன, சிறு வயதில்   படித்தலின் வாயிலாக சூஃபி, சூஃபிஇசை, போன்ற   வார்த்தைகளை பத்திரிகைகளில்  படித்திருக்கிறேன் ஆனால் அவைகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமோ , வாய்போ இல்லை. அதுவரை பாடல்களை  "கேட்டு " மட்டுமே பழகியிருந்த எனக்கு    ரஹ்மானின் இசை வருகைகு பின்  பாடல்களையும் இசையையும் கவனித்து
உள்வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. அப்போது ஒரு வார இதழில் "FIZA " என்ற இந்தி படத்தில் ஒரேஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் இசை என்றும், மற்ற பாடல்கள் அனுமாலிக் இசை என்றும் படித்ததும் ஆச்சர்யமாக இருந்தது காரணம்,  இந்திய சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளர் இசைத்த படத்தில் மற்றொருவர் இணைவது அபூர்வம்
அதிலும் அனுமாலிக், ரஹ்மானின் இசையை காப்பியடித்து தன பெயரை
போடுக்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அவர் மீது வழக்கு போடுவீர்களா?  என மீடியாக்கள் மைக்கை முன் நீட்டியபோது புன்னகையை மட்டும் பதிவு செய்தவர், இந்த படத்திற்கு  இசைய காரணம், அது ஒரு சுஃபி இசை வடிவத்திற்கான களம் என்பதாலும் ரஹ்மான்            அந்த இசை வடிவத்தில் ஆர்வம் கொண்டவரென்பதாலும் அப்பட இயக்குனரின் வேண்டுதலால் ஒப்புக்கொண்டதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். (ரஹ்மானின் இத்தகைய பெருந்தன்மையும், குணமும்தான் உலகின்
அனைத்து இசைவகைகளையும் உள்வாங்கவும் , அதிலிருந்து  புது பரிணாமத்துடன்
 தனக்கான நவீன இசையை உருவாக்கவும் காரணமாய் அமைகிறது.)
"FIZA " பாடல் கேட்க ஆர்வம் பற்றிக்கொண்டது, இப்போது இருப்பது போல் அந்த சமயத்தில் எங்கள பகுதில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், டவுன்லோட் சமாச்சாரங்கள் பரவவில்லை.  என் நண்பர் ஒருவரின்  மியூசிக்கல்ஸ்-ல் சொல்லி  வைத்து  ஒரு  காசெட்டில்  பதிந்து வாங்கினேன்   அதுவும் ஹிந்தி பாடல் என்றால் வெளிவந்து ஒருமாதம் கழித்துதான் கிடைக்கும், பின் என் நண்பன் ஒருவனின் வீட்டில் சோனி பிளேயர்ல் காசெட்-ஐ  ஒலிக்க விட்டேன்,  நேரமும்,  ஒலி நாடவும்  நகர,நகர  அதுவரை  இஸ்லாமிய பக்தி பாடல் என்றால்  வழக்கமாக  எதிர்பார்த்து  வைத்திருந்த    இசை பிம்பம் காற்றில் கரைந்து, புதுமையான தாளமும், குரலும் இசை கோர்ப்பும் ஒரு புது கேட்பனுபவத்தை தந்தது.
படத்தின் சூழல் ஜெயாபச்சன் தொலைந்து போன தன் மகன் ஹ்ரித்திக் ரோஷன்-ய் தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற ஹாஜி அலி தர்காவிற்கு வரும்போது இந்த பாடல் தொடங்கும்.  இந்த பாடல்  காதர் குலாம் முஸ்தபா , முர்த்சா குலாம் முஸ்தபா , ஸ்ரீநிவாஸ் மற்றும்   ரஹ்மானால் பாடப்பட்டது. இந்த  பாடலுக்கான சூழல் வழக்கமான இந்திய சினிமாவில்  சோகமான பாடல்
 களம் ஆனால் இந்த பாடல்  எந்த துயரத்தையும்  மாற்றக்கூடிய நம்பிக்கைகளை இசைக்கிறது. 15 ம் நுற்றாண்டில் வாழ்ந்த  "சய்யத் பீர் ஹாஜி அலி ஷாஹ் புக்ஹாரி"  சூபியால்(பெரும் வணிகராக வாழ்ந்தவர்)   மும்பையில்   உருவாக்கப்பட்ட  இந்த  வணக்கஸ்தலம்  கடற்கரையிலிருந்து  பல மீட்டர் தூரம் தனித்து கடலில் அமைந்திருக்கும்,  இவ்விடத்தை சென்றடைய சிறு நடைபாதை ஒன்று  மட்டும் உள்ளது. கீழ் காணும் கண்ணோளியில்/ இணைப்பில் இந்த பாடலை கேளுங்கள். (இந்த கட்டுரையில்  குறிப்பிடப்படும்  பாடல்களையும் நிச்சயம் ஓய்வான இரவு தனிமையில், ஹெட் போன் அல்லது மியூசிக்சிஸ்டம்  கொண்டு  மொழி,  மதம்  மீதான  நம் முன்முடிவுகளை  சற்று மறந்துவிட்டு  கேட்டுப்பாருங்கள்).



 பொதுவாக  சூபி வகை பாடல்களில் தபலா, ஹார்மோனியம், தாயிரா, டோல் போன்ற வாத்தியங்கள் தான் அதிகமாக பயன்படும், இந்த பாடலிலும் அவைகள் தான் ஆனால் அவைகளின் நுண்ணிய இசை கோர்வையும்,  புதுமையான மெட்டும்  பாடகரின் குரலும் சூபி  இசையின் நவீனத்துவ தலைமுறையை துவக்கிவைகிறது. இந்திய இசையில் தபலாவின் இசை முக்கியமானது, எண்ணற்ற இந்திய சினிமா பாடல்களில் தபலா  தாளங்களை கேடிருந்தாலும்   இந்த கட்டுரை தொடரில் குறிபிடப்படும்
ரஹ்மானின் 4 சூபி வகை பாடல்களின் தபலாவின் தாளங்களை  கவனித்து பாருங்கள், மிக நேர்த்தியாக, ஒவ்வொருஒலியும்
நுட்பப்புதுமையில் கட்டமைக்கப்பட்டிருகும். அடுத்து வரும் 4 ரஹ்மானின் சூஃபி இசை பாடல் வரிகளின்  ரசனையான தமிழ் மொழி பெயர்ப்பை ராஜேஷ் என்பவரின் http://www.karundhel.com/2011/10/blog-post_10.html  தளத்தில் படிக்கலாம்)

  இதுபோன்ற சூஃபித்துவ பாடலுக்கான சூழல் இந்திய சினிமாவில் அமைவது அபூர்வம், அதிலும்  அபாரமானது ரஹ்மான் தனக்கு கிடைத்த இது போன்ற சில வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதுதான்.  அதன் பின் ஆசிய முழுதும் பெரும் செல்வாக்கு பெற்றிருத்த நஸ்ரத் பதே அலிகான் , ஆபிதா பர்வின், கைலாஷ் கெர், JUNOON Band (இந்த  குழுவின்  சூஃபி  பாடல்கள்  ராக்  இசை வடிவில் இருக்கும்)  பாடல்களை அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன். 2008 ல் வெளிவந்த "ஜோதா அக்பர்" திரைப்படத்தின் பாடல்களை கேட்டபோது மீண்டும் ஒரு அற்புதம் "கரீப்நவாஸ்"  பாடல்.  இதற்கு  பின்  இன்னும்  இரண்டு சூஃபி இசை  பாடல்கள் ரஹ்மானால்  உருவாகப்பட்டாலும் இது தான் அவரின் படைப்பாற்றலின் உச்சம்.  எனக்கு கற்பிதம்  செய்யப்படும்  கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லைஎன்றாலும், என்னில்   எப்பொழுதெல்லாம்  துன்பமும், வெறுமையும், செருக்கும் , குரோதமும்,    வெறுப்பும் உணருகின்ரேனோ, இந்த பாடலை அந்த இரவில் கேட்டல் அனைத்தும்
 வடிந்து விட உணர்ந்திருகின்றேன். பாடல் பார்க்கும்முன் அதன் சூழலை பார்த்துவிடலாம்.  இந்தியாவின்  முக்கிய முஹலாய மன்னரான  அக்பர், சுபிதுவத்தின் மீது பற்றுகொண்டவர், தனது திருமணத்திற்கு முன் ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற  அஜ்மீர்  "ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி"  தர்காவிற்கு செல்கிறார், அங்கு ஓய்வான இரவு அமர்வில் இப்பாடல் பாடப்படுகிறது. ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி  என்ற சூபிஞானி   11-ம் நுற்றாண்டில் ஈரானில் பிறந்தவர் இஸ்லாத்தின் முக்கிய  மெய்ஞானியாக  கருதப்பட்ட இவர்தான்  இந்தியாவில் சூஃபியிசம்  உருவாக  காரணமானவராக அறியப்படுகிறார்.  சுபியிசதில்  முக்கிய  உட்பிரிவுகள்  தரிக்கா என்றலைக்கப்படுகிறது (தரிக்கா என்றால் "பாதை" என
பொருள்படுகிறது ) இவர் பிரபலபடுத்திய காதரிதாரிகா சுபியிசத்தில்
 இசையும் ஒரு வரைமுறைக்குட்பட்ட நடனமும் கூட்டு  வழிபாட்டின்  முக்கிய நிகழ்வு, இதற்கு  ஸாம என்ற பெயருமுண்டு,   வலது  கை  மேல்புறம்  நோக்கியும்,  இடது கை பூமி நோக்கியும் வைத்துகொண்டு, இடது  பாதத்தை  நிலத்தில்  பதித்து,   வலது   பாதத்தால்  கடிகாரஎதிர் சுற்றில்   சுழன்று ஆடும் இந்த நடனம் உடலையும் மனதையும்
ஒரு வித மோன நிலைக்கு அட்படுத்தக்கூடியது. புகழ்பெற்ற பெர்சிய சூஃபி கவிஞர் ஜலாலுதீன் ரூமி (1207 - 1273 ) இத்தகைய நடன நிலையில்
இறையுணர்வுக்கு ஆட்படுவதில் விருப்பம் கொண்டவராயிருந்தார். கீழ் காணும் "கரீப் நவாஸ்" பாடலின் இறுதியில் அந்த நடனத்தை பார்க்கலாம்.



கரீப் நவாஸ் - http://www.youtube.com/watch?v=nt93yH689Dg

தமிழகத்தில் இதன் வகை சேர்ந்த இசை கலாச்சரம் பற்றியும் இன்னும் சில பாடல்கள் பற்றியும் அடுத்த வாரம் பார்(கேட்)க்கலாம்.


.


3 comments:

  1. நல்ல பதிவு சார் , தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete
  2. இந்த வகை பாடல்களை எங்கே இருந்து டவுன்லோடு செய்ய முடியும் , லிங்க் அனுப்புங்களேன்

    ReplyDelete
  3. thanks for your comments,
    so many kind of sufi music we can see in youtube,below i give some links,
    http://www.youtube.com/watch?v=5MJrHPEu7jk
    http://www.youtube.com/watch?v=nt93yH689Dg
    http://www.youtube.com/watch?v=McYnZj-EvL4
    http://www.youtube.com/watch?v=XQtE6JQGjlI&feature=related
    http://www.youtube.com/watch?v=WXQvcoxgC5g
    http://www.youtube.com/watch?v=KblT9CBja9w
    http://www.youtube.com/watch?v=HXanwiIG9i8&feature=related
    http://www.youtube.com/watch?v=QkK84M6lg5E
    http://www.youtube.com/watch?v=QkK84M6lg5E
    இது எனக்கு தெரிந்த வகையில் சிறிய அறிமுகம் மட்டும்தான். இதன் கட்டுரையின் இரண்டம்பாகத்தில் மேலும் சில தகவல்கள் மற்றும் பாடல்களை குறிப்பிடுவேன் அவைகளை எனது வலைபக்கத்தில் 27 /12 /2011 -இல் படிக்கலாம்

    ReplyDelete