Sunday, November 25, 2018

நிழல்வெளிக்கதைகள் - வாசிப்பு

 

சமீபத்தில் படித்த "நிழல்வெளிக்கதைகள்" பற்றி அதன் ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு சிறு குறிப்பு எழுதியிருந்தேன், அதற்கான பின்னூட்டத்தை தன் வலைதளத்தில் இன்று பகிர்ந்திருந்தார்.  அதில் பயம் என்றால் என்ன? எப்போது ஒரு பேய்க்கதை இலக்கிய மதிப்பு பெறுகிறது? என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.படிச்சுப்பாருங்க ….

https://www.jeyamohan.in/114194?fbclid=IwAR3I8NfhlK699WN5tPXPCtl6tGRov18U_zJbOIbClWvsMwX7nDg9fcEiizw#.W_p75eRf1oR

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தங்களின் காடு நாவல் திரைப்படமாக்கப்படும் முயரச்சியில் இருப்பதாக படித்தேன்.இதுவரை ரப்பர், அறம், யானைடாக்டர், நூறுநாற்காலிகள், பனிமனிதன், இந்துஞான மரபில் ஆறுதரிசனகள், ஏழாம் உலகம், முடித்திருந்தாலும் ,” காடு ” புகவில்லை. படித்துவிடவேண்டுமென முடிவெடுத்தபோது லெண்டிங் லைப்ரரியில்”வெளிய போயிருக்கு இன்னும் வரலை…” என்றார்கள், ” வரவும் சொல்லுங்கள்..” சொல்லிவிட்டு அங்கிருந்த தொகுப்பில்  நீண்ட நாட்களாக படிக்க நினைத்திருந்த “நிழல்வெளிக்கதைகள்” எடுத்து வந்து ஒரே அமர்வில் முடித்தேன், மிகவும் பிடித்திருந்தது. காரணம் சமீபத்தில் அழுத்தமான  Mystery Flavour வகை கதைகளை படிக்க கிடைக்கவில்லை , சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பேய்க்கதைகள் கூட இன்று யாரும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து கடவுள் நம்பிக்கை இழக்கத்துவங்கும்போதே ஆவி/பேய்/அமானுஷ்ய நபிக்கைகளையும் அதே விகிதத்தில் இழந்தேன். ஆனால் இவ்வகைகதைகளை கேட்பதிலோ படிப்பதிலோ எனக்கு துளியும் ஆர்வம் குறையாது (தற்போது அவ்விடத்தை நிரப்புவன special effect சினிமாக்கள் மட்டுமே).

சிறுவயதில் தலையில்லா முண்டம் இரவில் ஊருக்குள் நடமாடுதென்று வேப்பிலை காப்பை வீட்டு வீட்டிற்கு வாசலில் கட்டிவைப்பதை மிரட்சியோடு பார்த்திருக்கிறேன். பேய் கதை அல்லது அது பற்றிய  உரையாடல்களில்  உண்டாகும் பயம் அலாதியானது .ஒரு பயத்திற்கு ஆட்படப் போகிறோம் என்ற உணர்வே போதையானது .அதில் ஆட்பட்டு பயபீதியில் சிக்குவதற்கும், பின் மீண்டெழுவதற்கும் நம் மனமே பொறுப்பு.

தாத்தா பாட்டிகளின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா….”வோடு சில பேய்கதைகளும் ஒட்டிக்கொள்ளும், இன்றெல்லாம் யாரும் பேய்க்கதை சொல்வதுமில்லை கேட்பதுமில்லை, இன்றய நகரமயமாதலில் ஊருக்கு வெளியே பாழடைந்த பங்களா என்று ஒன்றுமில்லை, அனைத்தும் சிப்காட் தொழில் நகராகிவிட்டது, கதைகளில் நுழைய வழியில்லாதவாறு ஆவிகள் அவற்றின்  மறைவிடங்களிலிருந்து துரத்தப்பட்டுவிட்டன.பேய்களின் பிறப்பிடமான சுடுகாடுகள், இன்று  24/7 மின்-தகன நிலையமாய்  ஒரு சிறு தொழிற்கூடமென  மாறி, ஆவிகளை கருப்புகையாக கூண்டின் வழி வெளித்தள்ளுகிறது.

இந்த நிழல்வெளிக்கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், “தம்பி” முழுவதும் பிரிவாளுமை பற்றிய உளவியல் மருத்துவம் பேசிவிட்டு இறுதிவரியில் கதையின் பரிணாமம் அப்படியே மாறிவிடுகிறது. அதேபோல் “யட்சி” , “பாதைகள்”  “அறைகள்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித உளவியல்-மர்மக்கதைகள். .இன்னும் இதுபோல படைப்புகள் தமிழின் தேர்ந்த கதைசொல்லிகளால் உருவாக்கப்படவேண்டும், ஒருவேளை இன்னும் சில தலைமுறைக்கு பின் பேய்/ஆவிகளையும் எழுதின்வழிதான் யாரும் அறிந்து பயங்கொள்ளமுடியுமோ என்னவோ?

“நிழல்வெளிக்கதைகள்” சொன்னதற்கு மிகுந்த நன்றிகள்

அன்புடன்,
யா. பிலால் ராஜா
ghost
அன்புள்ள பிலால் ராஜா

ஏன் பயப்படுகிறோம், ஏன் அப்படிப் பயப்படுவது பிடித்திருக்கிறது என யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும், திகில்கதைகளின் இடம் இலக்கியத்தில் ஒருபோதும் மறையாது.

நான் ஒரு பேய்க்கதையைப் படித்துக்கொண்டிருக்கையில் இரண்டு உளநிலைகள் பின்னிப்பிணைந்து செல்கின்றன. ஒன்று தருக்கம் சார்ந்த புழங்கும் உள்ளம். இன்னொன்று ஆழுள்ளம். நாம் கற்றவை, எண்ணுபவை, நம் அன்றாட வாழ்க்கைசார்ந்த புரிதல்கள் அனைத்தையும் கொண்டு அக்கதையை விளக்கிக்கொள்ள முயல்கிறோம். அந்த விளக்கத்துக்கு இணையாகவே நம் ஆழுள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஓர் அடியொழுக்காக. நம் தர்க்கத்தின் விரிசல்களை உடைத்துக்கொண்டு ஒரு புள்ளியில் ஆழுளம் வெளிப்பட்டுவிடுகிறது. அதுதான் நம் அச்சம்

புதுமைப்பித்தன் இதை வேடிக்கையாக ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். நம்பிக்கை வேறு பயம் வேறு. இவ்வாறு நம் ஆழுளம் வெளிப்படுவது நம்மை நாமே பார்த்துக்கொள்வது. இலக்கியம் என்பது ஆழுளம் நோக்கிய ஓர் ஊடுருவல். பேய்க்கதைகள் அதை வெற்றிகரமாகவே செய்கின்றன. இக்காரணத்தாலேயே அவை இலக்கிய மதிப்பு கொள்கின்றன

பேய்க்கதைகளின் இயங்குதளமும் நாம் நினைப்பதைவிட ஆழமானது. அவை தூய கவிதையைப்போல படிமங்கள் வழியாகவே தங்கள் ஊடுருவலை நிகழ்த்துகின்றன. ஏனென்றால் படிமங்களாலானது ஆழுளம்.பேய்க்கதைகளின் கனவியல்பு அப்படி உருவாவதுதான். பேய்க்கதைகள் அந்தப் படிமங்கள் ரகசியமாக தங்கள் ஊடுருவலை நிகழ்த்த விட்டு மேல்மனதை தங்கள் கட்டமைப்பாலும், புறச்சூழல் விவரிப்பாலும், கதைமாந்தரின் செயல்களாலும் மயக்கி நிறுத்திவிடுகின்றன. கதையை நம் தர்க்கம் வாசித்துக்கொண்டிருக்கையில் படிமங்களுடன் ஆழம் உரையாடிக்கொண்டிருக்கிறது

நாம் ஏன் அஞ்சுகிறோம்? நம் ஆழுளம் சிக்கிக் கிடக்கும் பல முடிச்சுகளை பேய்க்கதைகள் சென்று தொடுகின்றன. வரலாற்றின் முடிவிலாத, பொருளிலாத ஆழம். வன்முறைவிழைவு ,பாலுணர்ச்சியின் கட்டுக்கடங்காத தன்மை அவற்றின் விளைவான குற்றவுணர்ச்சி என மானுடனை ஆட்டுவிக்கும் அடிப்படை உணர்ச்சிகளாலானவை பேய்க்கதைகள். ஆகவே அவை கால- இடப் பெறுமானம் அற்றவை. சென்றகாலகட்டத்தின் சமூகக்கதைகள்,தத்துவக்கதைகள் எல்லாம் இன்று அர்த்தமிழந்துவிட்டன. சென்றகால பேய்க்கதைகள் இன்றும் அப்படியே காலமில்லாது நின்றிருக்கின்றன.

பேய்க்கதைகள் இருவகை. ஆசிரியன் வாசகனிடம் கதைவிளையாட்டு ஆடும்கதைகள் ஒருவகை. உதாரணம் சுஜாதாவின் கொலையுதிர்காலம் போன்றவை. அவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை. வாசகனின் ஆழுளத்தில் உறங்கும் அடிப்படை உணர்ச்சிகளைத் தொட்டு அவனை அச்சம்கொள்ளச்செய்யும் கதைகள், அவன் தன் ஆழத்தை தானே காணும் அனுபவத்தை அளிக்கும் கதைகள் இரண்டாம்வகை, உதாரணம் புதுமைப்பித்தனின் செவ்வாய்தோஷம்.

இரண்டாம் வகைக் கதைகள் என்றுமிருக்கும். நேற்று தங்கள் கதைக்கட்டுமானத்தை அவை மதத்தில் இருந்தும், நாட்டார்மரபில் இருந்தும் எடுத்துக்கொண்டன. இன்று அவை அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. ஆனால் படிமங்களின் இயல்புகளும் அவை உருவாக்கும் அடிப்படையான உணர்ச்சிகளும் ஒன்றே

ஜெ

Friday, June 8, 2018

Nooran Sisters





ஹிந்தியில் ரஹ்மானிடம் ஆகச்சிறந்த இசை வாங்கியது சுபாஷ் கய், Ashutosh Gowariker-க்கு (லகான்,ஸ்வதேஷ் ,ஜோதா அக்பர்) பின் "ராக் ஸ்டார்" புகழ் இம்தியாஸ் அலிதான்.  Highway படம் வெளியீட்டுக்கு முன் ரஹ்மான் நேரடியாக நடித்த " pathaka kudi " என்ற முன்பாடல் வெளிவந்தது, பஞ்சாபி, ராஜஸ்தானி fock, ராக் சூபி எல்லாம் கலந்த அட்டகாசமான Fusion அது.

ஆனால் இது Highway ஆல்பத்திற்கான promo-song தான், படத்தின் பாடல் யார் பாடியிருப்பார்கள்? முழுத்தொகுப்பு வந்ததும் ஆர்வமுடன்  முதலில் கேட்டது  "Pathaka  Kudi" தான், ஜோதி நூரன், சுல்தானா நூரன் ( Nooran Sisters ) என்ற இரட்டையர்கள்  அவ்வளவு எளிதில் நமக்கு கேட்க கிடைக்காத அட்டகாசமான காத்திரக்குரலில் பாடியிருந்தார்கள். பஞ்சாப்பின் ஜலந்தரை பூர்வீகமாக "உஸ்தாத் குல்ஷன் மீர்"  என்ற சூபி /கவ்வாலி இசை கலைஞரின் மகள்கள்தான்  நூரன் சகோதரிகள்,  இசைக்குடும்ப பின்னணி என்பதால்  சிறுவயதிலிருந்தே இசையிலும், பாடலிலுமே நாளும்பொழுதும்    ஊறிக்கிடந்திருக்கிறார்கள் . தந்தையிடமே இசை பயின்று வடநாட்டு கவ்வாலி-நாட்டுப்புற  இசை மேடைகளை அதிரவிட்டுக்கொண்டிருக்கும்போது முதல் சினிமா வாய்ப்பாக அமைந்தது  "Pathaka  Kudi", இந்த இடத்தில் உங்களுக்கு வேறு வழியே இல்லை பாடலை கேட்டேயாகவேண்டும்.
 

 இவர்களின் எண்ணற்ற மேடைப்பாடல்கள் இணையத்தில் காணக்கிடைத்தாலும், இக்கட்டுரையின் காரணப்பாடலாக "டாக்கா" வில் நடந்த மேடை நிகழ்ச்சியொன்றில் காணொளி கீழே தந்திருக்கிறன் கட்டாயம் கேளுங்கள், இசைநிகழ்த்தும்போது பாடலுக்கேற்ப உடல்மொழியும், குரல்தெறிப்புக்கு ஏற்ற  கை கொட்டலும் வேறு மேடை பாடகர்களிடம் காணமுடியாது. பாடல் உச்சம் நெருங்க... நெருங்க நிலம்பிளக்கும் குரல்கொண்ட இசை ராட்சசிகளாகவே மாறிப்போய்விடுகிறார்கள்.  



கமலி SONG 

Mirchi  Award 

யா. பிலால் ராஜா 

Saturday, May 12, 2018

 
 
பெயரற்ற நிறம் 
 


சொர்கத்தின் பிரதிபிம்ப நதிக்கரைநகரம் அது
மாலையினைக் கொண்டாட விடுதிவாயிலெங்கும்
விதவித மதுக்குடுவைகளும் பண்டங்களும்
விண், மலை, நதி, நிலம் ஒருகோட்டுச்சித்திரமென என்கண்ணில்பட
வாகாய் ஓரிடம் ஆசனமிட்டமர்ந்தேன்
ஒரு பெயரற்ற நிறமொன்று
விண்ணில் தோன்றியதொரு புள்ளியாய்
கணந்தோறும்பெருகிப்பரவி விண் நிறைத்தது அந்நிறம்
பின் மலை, நதி, நிலம் பரவி
மதுக்குடுவைகளிலும் வழிந்தோட
அதிலொரு குடுவையின் சிலமிடறினை
நான் குடித்த அக்கணமே
மாறத்துவங்கியிருந்தேன்
அப்பெயரற்ற நிறமாய்

யா. பிலால் ராஜா
(படம் - சோபன் பாபு)

Saturday, March 31, 2018

தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !


தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !

நன்றி வினவு.காம்
( http://www.vinavu.com/2018/03/27/ji-is-not-just-a-hindi-word-it-has-bitter-story/ )
இந்தப்பதிவு தற்போது பரவலான விளிப்புச்சொல்லான "ஜீ" பற்றிய புள்ளிவிபரமும் துள்ளியவிவரணைகளும் கொண்டதில்லைதான் ,ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால் தர்க்கரீதியான இந்த உண்மைகளை நிராகரிக்க முடியாது. அது 90களின் தொடக்கம் பள்ளி முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தபோது நான் பள்ளிப்பையுடன் பஜாரில் முக்கிய சந்திப்பிலுள்ள   எங்கள் சற்றே பெரிய பெட்டி(புத்தக)க்கடை கடைக்கு வந்து சிலமணிநேரம் வேலை செய்து வீடு செல்வது கட்டாயம். அதிலும் விடுமுறையில் பகலிரவு  வியாபாரம்தான், பதின் தொடக்கத்திலேயே பள்ளி, வேலை என்ற இருவாழ்வி முறை.  வியாபார இடைவெளியிலெல்லாம் கண்ணில்படுவது,வாசிப்பதும் பத்திரிக்கைகள்/தினசரி/ வால்போஸ்டர் தான்  இன்னும் சொல்லப்போனால் அது சினிமா /பொதுக்கூட்ட / அரசியல் போஸ்டர்கள் மத்தியில் உண்டு உறங்கும் வாழ்வு. ஒவ்வொரு நாளும் அன்றிரவு அப்பகுதியில் சுவரொட்டப்படவேண்டிய போஸ்டர்களை எங்கள் கடையில்  கொடுத்து வைப்பார்கள். அரசியல் போஸ்டர் லே-அவுட் வண்ணங்கள் அடிப்படையில் எளிதாக மூன்று பெரும் பிரிவில் வந்துவிடும்.
1)கருப்பு சிவப்பு மிகுவது திமுக-அதிமுக 2)மூவர்ணம் மிகுவது காங்கிரஸ் 3)சிவப்பு கம்யூனிஸ்ட் இம்மூன்று பெரும்பிரிவுகள்தான் தமிழகத்தின் அன்றைய அரசியல் அன்றாடங்கள், அன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசியல் பரப்புரைகளை மக்களைச்சேர பத்திரிக்கை, சுவரொட்டி, பொதுக்கூட்டங்கள்தான் வழி தொலைக்காட்சி தெருவுக்கு ஒன்றாக அப்போதுதான் வர துவங்கியிருந்தது இணையம் என்ற சொல்லே புழக்கத்தில் வரவில்லை. அதிலும் அப்போஸ்டர்களில் பெயர்களில் முன் பின் விளிப்பு வார்த்தைகளாக திரு/உயர்திரு/அவர்கள் இருக்கும் கம்யூனிஸ்ட் போஸ்டர்களில் "தோழர் "  அடைமொழி தவிர்த்து பார்க்க முடியாது. 
அந்த சமயத்தில்தான் இந்தியா அரசியலின் முக்கிய எதிர்மறை நிகழ்வாக பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தேறியது, அதன்பின்தான் நான்காவதாக காவி நிற போஸ்டர்கள் நகரில் (நாடெங்கும் அதன் பின்தான் என்பதை தனியாக சொல்ல தேவையில்லை) பரவலாக தென்பட ஆரம்பித்தது  அப்போஸ்ட்டர்களின் பிரதான வார்த்தை அத்வானிஜீ. பிஜேபி" ஜீ" என்ற அடைமொழி பிரதானப்படுத்துவதை காட்டிலும் அதேகாலகட்டத்தில் தமிழகமெங்கும் கிளை பரப்பிக்கொண்டிருந்த பிஜேபி யின் துணை அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்த "ஜீ" யை தனது போஸ்டர்களில் பிரதானப்படுத்திக்கொண்டிருந்தது. அதிலும் இந்து முன்னணி போஸ்டர்களின் மைய வார்த்தையே "இராமகோபாலன்ஜீ "தான்.
மத அடிப்படைவாத இயக்கங்கள் உறுப்பினர் சேர்க்கையும் ஆங்காங்கே இயக்க கூட்டங்களும் பெருகத்தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட நிற துண்டை அணிந்து கொள்வது, திலகமிட்டுக்கொள்வது, "ஜீ" சேர்த்து சக உறுப்பினரை விளிப்பது என தனி அடையாளப்படுத்துதல்  அங்கிருந்துதான் தமிழகத்திற்க்குள் பரவத்துவங்கியது

இந்த "ஜீ" மனதில் ஆழப்பதியும் ஒரு சம்பவம் எனக்கு நடந்தேறியது, அது 95 ஆல்லது 96 ஆகா இருக்கலாம் உத்தமபாளையத்தில் மர்மமான முறையில் இந்துமுன்னணி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார், தேனி மாவட்ட பகுதிகளில் பரபரப்பு பதற்றம் நிலவியது. ஒரு கொலையின் நோக்கம் சொந்த /கொடுக்கல்வாங்கல் /தொழில் போட்டியா என உண்மை வெளிவரும்முன்னே சில அமைப்புகள் வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து ஆதாயம் அடைய துடித்த  துவக்கக்காலம் அது.  அன்றைய தினமே அதனை கண்டித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மோசமாக திட்டி போஸ்டர்களை நகரெங்கும் இந்துமுன்னணி + பிஜேபி ஒட்டிக்கொண்டிருந்தது இங்கு அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைகள்தான் அந்த போஸ்டர்களின் பிரதான வாசகங்கள் ( பாளையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்த ******** தீவிரவாத நாய்களை கைது செய் - இவன் - இந்து முன்னணி , தலைவர் இராமகோபாலன்ஜீ " அன்று இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்தபின் நான் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன், போஸ்டர் கும்பல் மூடிய கடைகளில் கதவுக்கு ஒன்றாக ஒட்டிக்கொண்டுவந்து எங்கள் கடை வந்ததும் "பாய் இன்னும் கடை அடைக்கலயா...? சரி 4 சர்பத் போடு", என்று சொல்லிவிட்டு போஸ்டர்களில் பசை தடவ தொடங்கினர் (சர்பத்துக்கு பணம் தந்திருக்க மாட்டார்கள் என்பது நான் இங்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை ) அவர்கள் ஏற்கனவே பஜாரில் வெவ்வேறு கடை ஊழியர்களாக எனக்கு அறிமுகமானவர்கள்தான் ஆனால் இன்று அவர்கள் சிரிப்பில் ஒரு நக்கல் இருந்தது, வியாபார மும்மரத்தில் நானும் சர்பது கொடுத்துவிட்டு மீதி வேலைகளை முடித்து கடை சாத்த வெளிஇறங்கி ஒருகணம் அதிர்ந்தேன். மற்ற இடங்களில் கதவுக்கு ஒன்றாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் எங்கள் கடையில் மட்டும் ஸ்டால்களிலும் சுற்று சுவர்களிலும் முழுவது ஒட்டி மூடியிருந்தார்கள் அதுவும் அநாகரிக வார்த்தைகள் கொண்ட போஸ்டர், அந்த பஜாரில் எங்கிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியுமளவுக்கு. அனுமதி பெறாமல் ஸ்டாலில் ஒட்டியது தவறு என்பதை கூட விட்டுவிடலாம், ஆனால் இது காழ்ப்புணர்வுடன் கூடிய அநியாயமாகப்பட்டது,  விடிந்தால் ஊரே "பாய் கடைய எப்படி போஸ்டர்ல கவர் பண்ணிருக்காங்க பாத்தியா..?" என்று எள்ளி நகைக்க துவங்கிவிடுவார்கள். தேவையே இல்லாமல் கடை பெயர்,குளிபானவிளம்பர ஸ்டாலில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழிக்க தொடங்கினேன், சிறிது நேரத்தில் திரும்பி வந்த போஸ்டர் கும்பல் கூச்சலுடன் வந்து என்னை சுற்றி வளைத்து நெஞ்சு சட்டையை பிடித்து ஸ்டாலோடு இறுத்தி நிறுத்தி "ஏன்டா துலுக்கா ...... " எனத் துவங்கி வன்மத்துடன் திட்டி தீர்த்ததை இந்கு எழுதிட முடியாது.
 " பிரச்னை முடியுறவற எங்க போஸ்ட்ட தொட்ட பஜார்ல கடை வச்சுக்குறமாட்டா பாய்  விடியிறதுக்குள்ள கடைய காலி பண்ணிடுவாம் ... " என்று மிரட்டி நகர்ந்தனர், அப்போது அந்த பகுதியில் பணியிலிருந்த பாரா போலீஸும் இந்த நிகழ்வை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அதே போலீஸ்தான் சிலமாதங்களுக்கு முன் சில கம்யூனிச அமைப்புகளின் அரசை நேரடியாக எதிர்த்த வாசகங்கள் கொண்ட (விவசாயிகள் விடுதலை முன்னணி /புதிய ஜனநாயகம் ) போஸ்டர்களை நான் கடையில் வைத்து இரவில் சுவரொட்டுபவர்களுக்கு வழங்குவதை பார்த்து, " பாய் இனிமே இவங்களோட சவகாசம் வச்சா உன்னையும் ஒரு கவனிக்க வேண்டியிருக்கும் ...." என மிரட்டினார்கள் ஆனால் அவர்களே அன்று சமூக வெறுப்புணர்வு போஸ்டர் கும்பலின் அராஜகத்தை வேடிக்கை பார்த்தபடியிருந்தனர்.  அன்றிரவு அவமானமும் கோபமும் இயலாமையும் எனனை பீடித்திருக்க, அந்த நாற்சந்தியில்  நான் கிழித்தெறிந்த போஸ்டர்களில்  "ஜீ" மட்டும்  காவி நிறத்தில் பளிச்சென்று என் கடையின் சுவற்றில் பிடிவாதமாய் ஒட்டியிருப்பதை வெகுநேரம் பார்த்தபடி நின்றிருந்தேன் .
ஆனால் தமிழ் பொதுச்சமூகம் "ஜீ" யை பரவலாக பயன்படுத்துவதில்  மேலேசொன்ன எந்த அரசியல் / அடிப்படைவாத கலாச்சாரப்பிரச்சார நோக்கமும்  இல்லைதான். போஸ்டர்களைக் கடந்து செவிவழி பழகி இன்று ஒரு பொதுச்சொல்லாக மாற்றப்பட்டு விட்டது, பேச்சு வழக்கில் மரியாதை பிரச்சனை இல்லாமல் ஒருவரை விளிக்க இந்த ஒற்றை வார்த்தை எளிதாக இருப்பதும் ஒரு காரணம். "அண்ணா", "தோழா", "நண்பா" வில் இருக்கும் இணக்கம் நிச்சயம் இந்த "ஜீ" யில் இருக்காது.

இதனை பற்றி சமீபத்தில் WHATSAPP குழுவில் ஒரு நண்பனிடம் உரையாடும்போது  "இது காந்தி"ஜி" நேரு"ஜி" காலத்திலேயே இருந்துச்சே என்றார், இருந்தது, ஆனால் அது திராவிட மொழி கலாச்சாரத்தில் கலப்பதற்கான எந்த செயல் முனைப்பும் இல்லை, வலுக்கட்டாயமாக தமிழர்கள் பெயருடன் தொங்கிக்கொண்டிருக்கவில்லை வடநாட்டு தலைவர்கள் பெயருடன் நின்றுகொண்டது, இங்கு வந்து தொழில் செய்யும் வடநாட்டவருடனான பேச்சு தொர்புக்கு மட்டும் நமக்கு உதவியது  " வா முத்துச்சாமிஜீ இன்னைக்கு களையெடுக்க போவோம்" " மாயாக்கஜீ இன்னைக்கு நல்லமநாயக்கர்ஜீ தோட்டத்துல அறுவடை இருக்கம் ஜீ " என்ற சொல்லாடல் நம் தந்தை தலைமுறையில் இல்லையே. ஆனால் இன்று பொதுவெளியில் புதிதாக ஒருவரிடம் அறிமுகமோ பேச்சுதொடங்களோ  எந்த தடங்களுமின்றி "ஜீ"யில் தொடங்கப்படுகிறது.

இன்னொரு நபர் "ஹாய்" "சார் " "மேடம் " "குட் மார்னிங்" னு இங்கிலிஷ் கலந்து பேசுறத நிப்பாட்டிட்டு வாங்க அப்புறம் "ஜீ " மாதிரி வடமொழி கலப்ப பத்தி பேசலாம்" என்றார். இதுவும் சரி எனினும் பல பத்தாண்டுகளாக ஆங்கிலம் நம் பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகிவிட்டிருக்கிறது, இன்று சொல்லவே தேவையில்லை தமிழை முடிந்தவரை தவிர்த்து ஆங்கிலம் மட்டுமே படிப்பு மொழியாக இந்நிலமெங்கும் பரவியிருக்கிறது,  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில கலப்பு மக்களிடம் எதார்த்த புழக்கமாகியிருக்கிறது, ஆனால் வடமொழி இன்றுவரை இந்நிலத்தின் பொதுக்கல்வியில் இணையவில்லை அவ்வகையிலும் "ஜீ " க்கான சப்பைக்கட்டு புறந்தள்ளக்கூடியதுதான்.  

இன்று அனைத்து அரசியல்/ பொருளாதார/ வரலாற்று செய்திகளும்   இணையம்சார்  சமூகத்தலங்களில் அரைகுறையாக,போலியாக போட்டோஷாப் நுனிப்புல்லாக பரப்பப்படுகிறது. இன்றைய இணையதலைமுறைக்கு  சமூகஅரசியல்  முகநூல் whatsapp வயதிலிருந்தான் தொடங்குகிறது. சமூக வலைதள வழியாக மட்டும் நாட்டு நடப்புகளை சமீபமாக பார்க்க துவங்கிய  நண்பர் ஒருவர் சொன்னார் " இப்போல்லாம் எதுக்கெடுத்தாலும் பிஜேபிய காரணம் சொல்றது வழக்கமாகிடுச்சு," ஜீ" க்கும் பிஜேபிதான் காரணமா? " என்றார், அவர்களை 20 ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்து சென்று உணர்த்தமுடியாதெனினும், இன்றும்கூட நகர சுவருகளில் அதற்க்கான சாட்சிகள்சு வரொட்டிகளாக ஒட்டப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன  ஒரேயொரு உதாரணம் கீழே.


யா. பிலால் ராஜா 

Saturday, January 6, 2018

அதிரப்பள்ளி (Athirappilly Falls)

அதிரப்பள்ளி 


 
நானும் நண்பன் வாஞ்சிநாதனும்  ஊரில் ஒன்று கூடிவிட்டால்  கிடைக்கின்ற நேரவாய்ப்பில் போடி -மூணாறு மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசங்களை பைக் எடுத்துக்கொண்டு சுற்றுவது வழக்கம். சென்ற ஆண்டுதான்  போடி -பூப்பாறை -ராஜக்காடு -இடுக்கி -கம்பம் என ஒருநாளில் 200+ km சுற்றி வந்தோம். அதேபோல் இந்த செப்டம்பர் இறுதியில் மீண்டும் ஒரு பயணம் திட்டமிட்டோம், திட்டமென்பது எங்கு செல்வது என்பதல்ல எப்படி செல்வது என்பதுதான், அதாவது இரண்டு நாட்களுக்குள் போடியிலிருந்து செல்லும் வழியும் வந்தடையும் வழியும் வெவேறாக இருக்க வேண்டுமென்பது மட்டும்தான். பயணிக்க வேண்டிய ஊர் எதுவென எந்த உறுதியுமில்லை ஆனால் பயணம் முழுவதும் ஜிமிக்கி  கம்மல் தேசத்தில்தான். பைக்கை கிளப்பி முதலில் தேக்கடி செல்வதெனவும், அதன்பின் அங்கிருந்து "ஓவியா" தேசத்தில் ஊடறுத்து பயணிப்பதென பாளையத்தில் சாப்பிட்ட ஒரு பாய்மெஸ் பொங்கலில் அடித்து சத்தியம் செய்துகொண்டோம்.


கூடலூர் தாண்டியதும் சிறிது தூரத்தில் எதிர்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் எங்களின் முதல் நிறுத்தம் கர்னல் பென்னி குயிக்ன் நினைவு மண்டபம். மனதிற்குள் அவருக்கு மிகப்பெரிய மரியாதை செய்து கொண்டேன் இங்கு சொன்னது சம்பிரதாயமான வாக்கியமல்ல, முல்லை பெரியாறு அணை உண்டாக்கி, நீர்தேக்கி, திருப்பி விட்டதால்தான் தேனி- மதுரை மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த விவசாய பூமியாக  மாறியது. நேரடி பெரும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல மறைமுகமாக சிறு /குறு தொழில்வர்கத்திற்கும்  வாழ்வாதாரமாக இந்த பூமியை மாற்றி, இந்த மண்ணின் இனக்குழுக்கள் வேறெங்கும் இடம் பெயராமல் இங்கு வேர்விட நீர்விட்டவர் கர்னல்.
அங்கிருந்து சிறிது நேரத்தில் தேக்கடி சென்றடைந்தோம். எனக்கு நீர்ப்பயண  உயிர்பயம் அதிகமென்பதால் படகு சவாரி மட்டும் தவிர்த்தோம். முல்லை பெரியாற்றில் பின்புல நீர்நிலை  (Back water) தான் தேக்கடி சுற்றுலாத்தலம். பின் அங்கிருந்தது வாகமன் என்ற சுற்றுலா தளம் செல்ல முடிவெடுத்து பைக் முடுக்கி, வழியில் ஒரு உணவகத்தில் Beef fry , மட்டையரிசி சாப்பாடு முடித்தோம், எப்பொழுது கேரள எல்லை தொட்டாலும் நான் மாட்டிறைச்சி  தவறவிடுவதில்லை, காரணம் அந்த சுவைக்கு காரணமான செய்நேர்த்தி, தமிழ்நாட்டு உணவகங்களில் அத்தகைய பக்குவத்தில் Beef உண்ணக்கிடைப்பதில்லை காரணம் நம்பகுதியின் ஆட்டிறைச்சிக்கான இடமதிப்பை கேரளத்தில் மாட்டிறைச்சி     எடுத்துக்கொள்கிறது ஆகவே Beef  சமையல் மலையாளிகளால் அக்கறையுடன் கையாளப்படுகிறது,

அங்கிருந்து வாகமன் என்ற சுற்றுலா தளம் சென்றோம், புல்வெளிக்குன்றுகளும், இயற்கை நோக்குதளங்களும்  (view point) நிரம்பிய ஒரு  கனவு நிலம் வாகமன்,  நாங்கள் சென்றநேரம் பனிப்புகையும் (Mist ) எதிர்பாரா சாரல் மழையும் மாறிமாறி போட்டு தாக்க அங்கிருக்கும் ஒருக்கடையில் கட்டஞ்சாயா +கப்பைக்கிழங்கு அடித்துக்கொண்டு இந்த பயணத்தின் உச்சமாக அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பார்த்துவிடுவதென முடிவெடுதோம்.


"இருநாட்களுக்குள் அவ்வளவு தூரமா? நிக்கிற இடதுலருந்து கேரளாவின் மறுமுனைக்கு போகணுமே? கு**டி பழுது விடாதா?"
மனக்குரல் என நினைத்து கொஞ்சம் சத்தமா பேசியிருப்பேன் போல "அதெல்லாம் யோசிக்காத முடிவு பண்ணிட்டேன் சாயாகடை சேட்டாகிட்ட ரூட் கேட்டுடேன் ...ஏறு வண்டீல" என்றான் வாஞ்சி. சந்திரமுகி வீட்டுக்குள்ள மாட்டுன வடிவேலு நிலமையாகிடுச்சு எனக்கு , ஆனால் வாஞ்சியை நம்பி எமலோகம் கூட போகலாம் மீட்டு  கட்டி தோளில் தூக்கிப்போட்டு வீடு சேர்த்து விடும் பாகுபலி. அதுமட்டுமல்ல ஒரு பயணத்தில் முக்கியமானது என நான் நினைப்பது உடன் பயணிப்பவருடனான எண்ண ஒத்ததிர்வுதான், எல்லாப்பயணங்களிலும் எங்களிருவருக்கான அலைவரிசை ஒன்றியிருப்பது கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். ஆனால் பயணத்தை தவிர மற்ற ரசனை அனைத்திலும் எதிர்தான். குடித்துக்கொண்டிருந்த கட்டஞ்சாயா குறையக்குறைய, இதற்கு பின்னான பயணம் பற்றிய உற்சாகமும் ஊக்கமும் மனதில் நிறைய துவங்கியது, புன்னகைமன்னன் படத்தில் கமல் ரேகா தற்கொலைகாட்சிதான் தென்னிந்தியாவை "இது எந்தஇடம் ? "
என கேட்க வைத்தது, அதிரப்பள்ளி என அறிந்து கொண்டதென நினைக்கிறன். அதன் பின் பல படங்களில் பாடல் காட்சிகளுக்கு இந்நீர்த்துறையே பின்புலம், மணிரத்னம் இவ்வருவியின் ஆகப்பெரும் ரசிகராய் இருக்கக்கூடும்.
 

கேரளாப்பயணங்களில் என்னக்கு மிகவும் பிடித்தது மலைச்சரிவு சாலைகளில் புறங்களில் வழிந்தோடும் சிறு சிறு அருவிகள்தான்.
மலை வழியெங்கும் சாலையோர அருவிச்சாரல் எங்கள் மீது தெறிக்க மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து மறுபுறம் இறங்கி தொடுபுழா நோக்கி விரைந்தோம். ஒரு பேக்கரியில் இளைப்பாறி , அடுத்து அதிரப்பள்ளி பக்கத்துக்கு பெருநகரான சாலக்குடியில் இரவு தங்குவதென முடிவு செய்தோம், அங்கமாலி நகரை கடக்கையில் சென்றவாரம் பார்த்த "அங்கமாலி டைரிஸ்" படக்காட்சி நினைவுக்குவந்தது.வழியில் பார்த்த இன்னொரு முக்கிய விஷயம் ஆறு பல ஊர்களில் ஊடறுத்து சென்றாலும் அவைகளை மக்கள் பாழ்படுத்தவில்லை ஆறு ஆறாகவே இருந்தது.அன்றிரவு ஏழரை மணிக்கு சாலக்குடியில் ஒரு ரூம் போட்டு, எட்டு மணிக்கு சாலையில் இறங்கி உணவகம் தேடி நடந்தால் பெரும்பாலான கடைகளை மூடத்தொடங்கியிருந்தார்கள், நம்மூரை போலல்ல 9 மணிக்குள் அன்றாடமென்பது முடிவுக்கு வந்துவிடுகிறது சேட்டன்களுக்கு.
கேரளா கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட நியாயம் என்னவென என்னளவில் யோசித்தேன், பிரபஞ்ச படைப்பில் வற்றிச்சலிக்காத எப்போதும் பெருக்கெடுக்கும் அழகு, பசும்இயற்கைக்கும், பெண்ணிற்கும்தான் உண்டு, இந்திய துணைக்கண்டத்தில் இவையிரண்டையும் தனக்குள் குவித்து வைத்துள்ளது இம்மலையகம்.

அதிகாலை எழுந்து கட்டஞ்சாயா அடித்துவிட்டு, போனில் டவுன்லோடி வைத்திருந்த ஜிமிக்கி கம்மலை ஒருமுறை பார்த்து வெறியேற்றி கொண்டு கிளம்பினோம் அதிரப்பள்ளி நோக்கி, வழியெங்கும் முன்னெப்போது பார்த்ததைவிட அதிக பசுமை , அழகிய வீடுகள், மிக அழகிய பெண்கள், இந்த மலையகத்தின் அழகினையும் செழுமையினையும் எந்த ஒரு கட்டுரை வழியும் எழுதி பிரத்தியாருக்கு கடத்திவிட முடியாது . பயணப்படுதலே இயற்க்கை உணர்தலின் ஒற்றை வழி. வழியில் ஒரு சிறு கடையில் இட்லி இடியாப்பம் கடலைக்கறி உண்டோம், அங்கு சுவற்றில் முருகன் ராஜா கோலத்தின் படமும் பிற தெய்வங்களில் படங்களில் மத்தியில் மாட்டியிருந்தது அங்கு மட்டுமல்ல இன்னும் சில கடைகளில் முருகன் படம் மாட்டியிருந்ததை கவனித்தோம், முருகன் முழுமையாக தமிழ் மொழிக்கும் இம்மண்ணுக்கும் காப்புரிமை பெற்றவராயிற்றே மலையாள குடிகளிடம் முருகன் எங்கனம் வந்தந்தார், அடுத்து உழக்கு புட்டு வேண்டுமா என கேட்க வந்த கடைக்கார சேட்டவிடம் சந்தேகம் கேட்டோம்,
"ஓ அதுவா மலையாளிகளும் முருகனை கும்பிடும் , பழனி போற வழக்கமும் உண்டு நெறயபேர்ட்ட ... அதுவும் இந்த ராஜா அலங்கார தரிசனத்த எங்களுக்கு இஷ்ட தெய்வம், கேரளா இவ்வளவு வளமா இருக்க காரணம் பழனி முருகன் பார்வை திசை இந்த இஸ்தலம் நோக்கி இருக்குறது தான்னு ஒரு நம்பிக்கை" என்றார், சேட்டனுக்கு நன்றி பரஞ்சு , முடுக்கிய எங்கள் வண்டி அடுத்து நின்றது அதிரப்பள்ளிதான், ஒரு மைல் முன்னே அருவியின் ஓசை கேட்டது கிளர்ச்சியாயிருந்தது 



இந்திய அருவிகளில் நயாகரா இதுதான், அதன் பிரமாண்டம் வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்டது, கவிஞர் வாலி வரிகளை கடன் வாங்கி சொல்வதானால் இது நீர் வீழ்ச்சியல்ல நீர் எழுச்சி, பெரும் பெரும் நீர்க்கோளங்கள் இடைவிடாது பூமியில் விழுந்து தெறித்து ஓடுவது போலிருந்தது. அருவியை யாரும் நெருங்கி செல்ல அனுமதி இல்லை , கொடுத்தாலும் போகமுடியாது என்பதுதான் உண்மை, விழும் நீர்ப்பாறையின் பேராற்றலை மனித உடல் தாங்க முடியாது. 

50 மீட்டர் தள்ளி நின்று ரசிக்கும் போதே பாறைமீது விழுந்து தெறிக்கும் நீரித்துளிகள் பெருமழையாய் நம்மை நனைக்கும்,நானும் நண்பனும் ஆட்கள் வராத ஒரு பாறை ஒன்றை பார்த்து அமர்ந்தோம்ம் எங்கள் முன் பெருங் கடலொன்று பேரிரைச்சலோடு விழும் இயற்கையின் முன் ஒன்றுமற்ற ஒன்றாக அமர்ந்திருந்தோம்.அங்கிருந்த பாறைமீது படர்ந்திருந்த பாசி போல அந்நீர்த்துறை மீது ஒட்டிக்கொண்ட மனதை பிரித்து திரும்ப கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. அங்கிருந்து திரும்பும் வழியில் இன்னும் இரு சிறு குளிக்க ஏதுவான அருவிகளுண்டு என ஒருவர் சொன்னார், நண்பனோ,
 " இல்லடா  இந்த பிரமாண்டம் முழுசா எனக்குள்ள நிறைஞ்சுருக்கு   வேறொரு நீர்க்காட்சி இப்பக்கு  வேணாம், கொஞ்சகாலத்துக்கு இப்பேரருவி எனக்குள்ள விழுந்துட்டிருக்கணும் ..." முணுமுணுத்தான்,
எனக்கும் அது சரியெனபட்டது.


அங்கிருந்து கிளம்பி அடிமாலி செல்ல குறுக்கு வழி பாதைகளையும் கடக்கவேண்டிய ஊர்களையும் கேட்டு குறித்துக்கொண்டு  ரப்பர் தோட்டங்களின் வழியே பயணித்தோம்.வழியில் இறங்கி ஒரு தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் சேகரிக்கும் முறை தெரிந்துகொண்டு, அடிமாலியில் மட்டையரிசி கஞ்சியுடன் Beef fry  எடுத்துக்கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலையை மீண்டுமொருமுறை தண்டிக்குதித்து, ராஜக்காடு வழி போடி வந்தடைந்து, கணக்கிட்டத்தில் 460 K.M  தூரத்தை 35 மணி நேரத்தில் பயணித்திருந்தோம் .

யா. பிலால் ராஜா 
  ( படங்கள் - வாஞ்சிநாதன் )

Saturday, October 21, 2017

உமா - சிறுகதை


உமா 

தாம்பரம் தாண்டி குரோம்பேட்டை நெருங்கிக்கொண்டிருந்தது 21G, 
பிக்பாக்கெட்டுக்குக்கூட ஒருவன்  பாக்கெட்டில் கை நுழைக்க முடியாது,   நுழைத்தாலும் கை வெளியெடுக்க முடியாது காலை 
ட்டு  மணிக்கே அப்படியொரு நெரிகூட்டம் பேருந்தில்முன்னாலிருநத
பெண் சற்று எட்டி பின் வாசல்பக்கமிருந்த ஒரு பெண்ணை பார்த்து  "உமா எனக்கும் ஒண்ணு  சேத்து எடுத்துருடி ....", என்றாள்.
 "சரிடி ..." "ரெண்டு க்ரோம்பேட் குடுங்க..
உமா.... 
இந்தபெயர்என்னுள்பதிந்துசற்றேறக்குறைய 30 ஆண்டுகள் நெருங்கப்போகிறது, நன்றாக நினைவிருக்கிறது அந்த வருடம் 1988, வெற்றிகரமாக  ஐந்தாம் வகுப்பின் அட்மிசன் முடித்த கையோடு என்தந்தை வகுப்பாசிரியர்முத்துசாமிசாரிடம் டியூஷனுக்கு சொல்லி வைத்தார்.  ஒவ்வொரு   பாடத்திலும் 35 மார்க் எடுப்பதேசாதனையாக இருக்குமென்று என் பெற்றோர்முதலிரண்டுவகுப்புகளிலே  என்னை கணித்துவிட்டபடியால் 
 மூன்றாம் வகுப்பிலிருந்தே பள்ளி முடிந்தவுடன்  டியூஷனுக்கு  
துரத்திவிடப்பட்டேன்.  வகுப்பு தொடங்கியமூன்றாம் நாளே சைக்கிளில்
முன்னால் அமரவைத்து வகுப்பாசிரியர்  வீட்டுமுகவரியை கண்டுபிடித்து டியூஷன் சேர்த்துவிட்டுதிரும்பினார் என் அப்பாஆசிரியர் வீடும் எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருதான்.அந்த பள்ளியின் 5-C வகுப்பின் ஆசிரியரான முத்துச்சாமி சார் பற்றி ஒரு மனச்சித்திரம் 
கொள்வது இங்கு முக்கியம். குட்டையான ருவம் , நெற்றிமுழுவதும் விபூதி  பட்டை நடுவில் சிறிய குங்குமப்பொட்டுசிறு கரைகூட காணாத         வெள்ளை வேட்டிசட்டைஓரிடத்தில் தங்காத விறுவிறுநடையென   இப்போதும்நினைவில் முழுமயாகவலம்வருவார்.  வலது கையில் 
ஆறாம் விரலாய் பிறஆசிரியர்களுக்கு சாக்பீஸ் இருந்தால்,  இவருக்கு 
பிரம்புகண்டிப்புக்கு ஒரு உருவம் இருந்தா அதுவே இவருக்கு முன்னால் கைகட்டி உட்கார்ந்திருக்கும்அத்துனை கண்டிப்பானவர்.

பள்ளி துவங்கிய முதல் 10 நாள் புது சீருடை , சத்துணவுக்கு பெயர்  கொடுப்பது , மயக்கும் வாசனையுடன் புது நோட்டு புத்தகம் , வருகை பதிவேட்டில் பெயர்சேர்க்கும் வேலை என கொஞ்சம் ஜாலியாக 
வகுப்பு போய்க்கொண்டிருந்தது. ப்போதுதான் கவனித்தேன் சில 
பெற்றோர்கள்  தலைமை ஆசிரியர்அறைக்கு செல்வதும், பின் ஒருதுண்டு சீட்டுடன் வந்து  முத்துச்சாமி சாரிடம் அதனை அளித்த சிறிது வாதத்திற்குப்பின் தங்கள் பிள்ளைகளை  எங்கள்வகுப்பிலிருந்து
அழைத்துச்சென்று அருகிலிருக்கும் வேறொரு ஆசிரியரின் வகுப்பில் 
அமரவைப்பதுமாக சென்றுகொண்டிருந்தார்கள்,   எங்கள்வகுப்பில் 
மட்டும் உருப்படிகள் கொஞ்சம்கொஞ்சமாக  குறையத்தொடங்கியது.

வகுப்பில் இடவலமாக அமர்ந்திருந் அருணும், ஸ்ரீனிவாசனும்             இரண்டாம்நாளே எனக்கு நண்பர்களாயினர்அருண்  உருவததில்  சற்று
குண்டானவன் ,மற்ற பயல்கள் அடிக்கடி  இவனைகுண்டா.... தடியா..... 
சொத்துக்கு ரெடியா...." என எப்போதும் கிண்டல் செய்துகொண்டிருப்பார்கள்ஸ்ரீனிவாசன் என்னைப்போல அப்பிராணி ஆனாலும் வினயம்பிடித்தவன்தினமும் பென்சில்  டப்பா  முழுவதும்   மிட்டாய்களை கொண்டுவந்தாலும் யாருக்கும் தராமல்  தானே  தின்றுவிடுபவன்அவன்விதவிதமான இனிப்பு வில்லைகளை   சப்பி சாப்பிடுவதை பார்க்கையில் எனக்கும் அருணுக்கும்   எச்சில் ஊறும் கேட்டாலும் தரமாட்டான்.

அன்று அப்படித்தான் ஒரு மாணவனை, அவன் அப்பாவந்து சிறிது நேரம் முத்துச்சாமி  சாரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துவிட்டு  அவனைஅடுத்த  வகுப்பறையில் அமரவைத்து கெத்தாக நடையைகட்டினார்அன்று முத்துச்சாமி சார்சற்று  கோபமாக கரும்பலகை வந்து வருகை  41-  40 ஆக்கிவிட்டு பின் கோபமாக தலைமை ஆசிரியர் அறை                சென்றுவிட்டார்அப்போதுதான்  குண்டன் அருண் சொன்னான், "ராமசாமி சார் ரெம்ப கோபமானவராம்  பிரம்ப எடுத்தா டையுற   அளவுக்கு அடிப்பாராம்அதுனாலதான் நெறய பசங்களோட அப்பா வந்து அவுங்கள வேறவாத்தியார்ட்ட சேர்த்துவிடுறாங்க" , அவன்சொல்லும்போதே எனக்கு பயத்தில் ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வந்ததுஅதுகேட்டு மிட்டாயை சப்பிக்கொண்டிருந்த  ஸ்ரீனிவாசன் வாய்  சில நொடிகள்சைய மறந்தது, பின் கண்களில் பீதி தெறிக்க பின் அம்மிட்டாயினை மென்று விழுங்கினான். ஆண்டின் முதல் நாள் "வருகை =55" என்று ஆரம்பித்த கரும்பலகை குறிப்பு  முதல் பாடம் தொடங்கும் நாளில் வருகை = 43 என்றது.

எல்லா வகுப்பறையிலும் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் 
கொள்வது அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு வகுப்பசிரியரும் திண்டாடுவதுஎல்லாகாலத்திற்குமான பிரச்னைதான்.  முத்துச்சாமி சார்  வகுப்பில் இருக்கும்போது யாரும் பேசமாட்டார்கள் மீறினால்  நாங்கள் கேள்விப்பட்டது போலவேபிரம்பெடுத்து பின்புறம் இரண்டு கொடுப்பார்.        அதனால் அவர் சென்ற பிறகு நாங்கள் கொண்டாடி தீர்த்துவிடுவோம் , 
அக்கம்பக்கத்து  ஆசிரியர்கள் முத்துச்சாமி சார் வந்ததும் புகார் செய்து 
விடுவார்கள் அதற்கு முத்துச்சாமி  வாத்தியார் ஒரு தீர்வு கொண்டுவந்தார்ஒரு நாள் அனைவரையும் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்து  பதிவேட்டின் வரிசைப்படி அழைதது  ஒரு நிரல் பசங்களும் ஒரு நிரல்  பெண் பிள்ளைகளுமாக அமரவைத்தார்பொதுவாக பசங்களும் பெண்பிள்ளைகளும் பேசிக்கொள்ள  குற்றஉணர்வு கொள்வார்கள் என நம்பப்பட்ட  ஊர்ப்புற  பள்ளியின்  பண்பாட்டினடிப்படையில் இப்படிசெய்தால்வகுப்பறை  பேச்சுக்கள் குறையுமென்பது ஆசிரியர் கணக்கு.

எனக்கு இடதும் வலதுமாக இருந்த குண்டன் அருணும் , ஸ்ரீனிவாசனும் முதல் நிரலிலேயே எங்கோ இருபெண்களுக்கிடையில்அமர வைக்கப்பட்டர்இனிமேல் முன்போல் நாங்கள் பேசிக்கொள்ளமுடியாது என நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருந்தது. எனக்கு இடமாக வெங்கடேஸ்வரிஅமரவைக்கப்பட்டாள்அவளை 
குள்ளச்சி என்று பிற பிள்ளைகள் அழைத்ததற்கு நியாயமான குள்ள உருவம் , வலப்புறம் யார் அமர்வார்கள் எனபார்த்துக்கொண்டிருந்தேன் முத்துச்சாமி    சார், "உமா மகேஸ்வரி" என்றார், அவளை  அப்பொழுதுதான் முதல் முறையாக கவனித்தேன், இரட்டைசடை,நெற்றியில் சிறு பொட்டுவடிவன முகவெட்டு. ஒருவித சோகத்துடன் பையை தூக்கிக்கொண்டு வந்தமர்ந்தாள்நான் வாத்தியார் என்னை பார்க்கிறாரா  என பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன் அவள் என்னை சட்டை செய்யவில்லைவெங்கடேஸ்வரி திரும்பி உமாவைபார்த்து
"நல் வேலைடி பக்கத்துலதான்  இருக்க..." என்றாள்சிறிது நேரத்தில் சோகம் குறைந்து ஒருவித ஆறுதல் தெரிந்தது உமாவிடம்
நானும் ,அருணும்,ஸ்ரீனியும் ஒருவரை ஒருவர் எட்டி எட்டி சோகமாக பார்த்துக்கொண்டாலும்இரண்டுபிள்ளைகளுக்கு நடுவில் அமர்ந்திருப்பது   ஏனோ எனக்கு கொஞ்சம்பிடித்திருந்ததுஅதுவும் சாந்தசொரூபமான   உமாவை பார்ப்பது இன்னும் கூடுதலாக பிடித்திருந்தது.

அவர்களிருவரும் தோழிகளாக இருந்தது நல்லதுதான் இருவரும் திரும்பி பேசும்பொழுது  உமாவின்  கண்ணில் என்னுருவம் பதிய ஆரம்பித்தது. இது பெரியவிஷயம்தான் ஏனெனில் உமா எந்த ஒரு பையனிடமும் பேசுவது ...ஏன் பார்ப்பதுகூட கிடையாதுசிலசமயம் வெங்கடேஸ்வரிக்கும்  உமாவுக்கும் இடையில்நடக்கும் பென்சில்,ரப்பர்புத்தக பரிவரித்தனைக்கு பாலமாவேன்இருவரும் பேசும்போது சற்றே குனிந்து அமர்ந்து உதவுவதால் உமாவிற்கு என்மேல் சிறுகரிசனம் பிறந்திருந்ததுசில நாட்களில் அழிப்பான்பேனா என எதையாது உமா மறந்து வந்துவிட்டால்  வெங்கடேஸ்வரிக்கு பதில் என்னிடமே கேட்கதுவங்கினாள் , அவளுக்கு உதவிடுவதில் மட்டுமல்ல  எந்த பையனிடமும்  பேசாதவள் என்னிடம் பேசுகிறாலென்பதில் கூடுதல்  மகிழ்ச்சி.

ஒருநாள் முத்துச்சாமி சார் தமிழ் வகுப்பெடுக்க துவங்கும்போது "புஸ்தகத்துல எல்லோரும் 12ம் பக்கம் திறந்து வையுங்க.." என்றார் 
வகுப்பில் எல்லோரும் புத்தகத்தில் பக்கத்தை தேடிக்கொண்டிருக்க உமா 
புத்தகத்தை பையில்தேடிக்கொண்டிருந்தாள்புரிந்தது விட்டது  மறந்து  வந்துவிட்டாள்முத்துச்சாமி  சார் தண்டனை பட்டியலில் புத்தகமறதிக்கு   மூன்று   பிரம்படிகள் இதில் பால் பேதமில்லை, "யார் யாரெல்லாம் புஸ்தகத்தகொண்டுவரல எந்திரிங்க ....." சொல்லிக்கொண்டே சுவரோரம் சாய்த்திருங் பிரம்பை எடுக்க திரும்பினார், உமா இன்று மாட்டிக்கொள்ளப்போகும்பயத்தில் எந்த நொடியும் அழ   தயாராக  இருந்தாள்,  யேசிக்கவே இல்லை சடாரென என் 
புத்தகத்தை அவள் மடியில் போட்டுவிட்டு நான் எழுந்துகொண்டேன்அப்பொழுது தான் கவனித்தேன் என்னை தவிர யாரும் எழவில்லை,               கும்பலாக அடிவாங்கினால்தானே தண்டனையின் தாக்கம் குறைவாக  இருக்கும்...அன்று என் துரதிர்ஷ்டம், குண்டி  பழுத்துவிட்டது வலி தாளாமல் அழுகை வந்தது , ஆனால்  உமாவின் முன் அழுதால் வெட்கமாகிவிடுமென்பதால் அடக்கிக்கொண்டேன்.

வகுப்புமுடிந்ததும் உமா மெதுவாக "ஏன்டா இப்படி செஞ்ச .."  என்றாள்,  நான் ஒன்றும் பேசவில்லைஅப்போது அவள் கண்கள் என் மீதான 
அன்பால்நிறைந்திருந்ததுபின் வெங்கடேஸ்வரியிடம்  " அடியே இவனையும்  நம்ம கூட்டுக்கு சேத்துக்குறுவோம்.."  எனறாள்,  
இடைவேளையில்  உமா பென்சில்டப்பாவிலிருந்து நறுக்கிய மாங்காய்  துண்டுகளை எடுத்து உப்பு தடவி எனக்கும் வெங்கடேஸ்வரிக்கும் கொடுத்தாள்சிரித்துக்கொண்டே மூவரும் அதனைசுவைத்தோம்முழுநாளும் அந்த மாம்பிஞ்சின்சுவை நாவில்இருந்தது. அன்று பிரம்படியில் அடியில் உண்மையில் பழுத்ததுஎங்கள் நட்புதான்.



சில நாட்களிலேயே வகுப்பில் ஒரு பிள்ளையை பையன் ஒருவன்   தொடையில் கிள்ளி  வைத்துவிட (சாத்தியமா அது நானில்லை) அது பிரச்னைஆகி பையன்களும் பிள்ளைகளும் பழையபடி பிரித்து அமர்த்தப்பட்டனர்.  எனக்கு அது ஒரு பெருந்துயர், அமர்விடம் மாறினாலும் பார்த்தவுடன் கிடைக்கும் அவளின் புன்னகை
ஆறுதலாயிருந்ததுஇந்த சோகத்தை குண்டன் அருணனிடம் மட்டும்   ஏதோ  சொல்லத்தெரியாத  மொழியில் சொல்லுவேன்இடைவேளையின்போதுவாசலில் விற்கும் அவித்த கிழங்கையும்,  சீனி மிட்டாயும்  
வாங்கி என்னுடன் பகிரும் அருண் மட்டுமே அப்போதைக்கு எனக்கு   கொஞ்சம் ஆறுதல்.

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறாள் எனறு   உமாவின்  அப்பா அவளையும் ஒருநாள் முத்துசாமிசாரிடம் டியூஷன் சேர்த்துவிட்டார் . வகுப்பறையில் தவறவிட்ட எங்கள் அருகாமையை  டியூஷன் மீட்டுக்கொடுக்க கதைத்துக்கிடந்தோம் மகிழ்வாய் சிலகாலம். எங்களுக்குள் பென்சில் , அழிப்பான் , அடிக்கோல் , மாங்காய் துண்டு , 
தேன்மிட்டாய் , நிறைய புன்னகை ......என பரிவர்த்தனை அதிகரித்தது.

 பள்ளி சீருடை தவிர்த்து குட்டை பாவாடை சட்டை , கவுன் அணிந்து டியூஷன் வரும்போது உமா மிகவும் அழகாகி விடுவாள். எங்களுக்கு 
டியூஷன் எடுப்பதுமுத்துசாமிசாரின் இரண்டாவது மகளான மேல்நிலைபயிலும் காயத்திரிஅக்காதான்ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் பக்கத்துக்கு 
வீட்டுSolidarடிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க சென்றுவிட்டாள் எல்லோரையும் படிக்க சொல்லிவிட்டு பசங்க  அனைவரும் புத்தகத்தை மூடிவிட்டு கொட்டமடிக் துவங்கினர் , நான் மெதுவாக உமாவின் அருகில் சென்று
 "இந்த கலர் டிரஸ்நீ ரெம்ப அழகாருக்க.." 
"ம்ம் ....எங்க மாமா வாங்கி கொடுத்தது ...." 
சிரித்துக்கொண்டே செல்லும்போதுதான் கவனித்தேன் பல் வரிசையில் கிளிப் போன்றதொரு வஸ்துவை, 
"என்னப்பா அது..."
"அதுவா எம்பல்லு நீட்டாம வாய்க்கு வெளிய வருதுன்னு டாக்டர்ட போய் இந்த கிளிப் வாங்கி மாட்டிவிட்டாரு எங்கப்பா, இனிமே வாய்க்குள்ளயே வளருமாம்....." 
தானாக வளரும் பல்லை வாய்க்குள் வளைத்துவிடமுடியுமென்பது அன்று வியப்பாயிருந்தது. 
ஒருநாள் அவள் வீட்டில் கருப்பட்டி பணியாரம் செய்து டியூஷன் வரும்போது கொடுத்தனுப்பியிருந்தார்கள்அந்த        தூக்குவாளியை காயத்திரி அக்காவிடம் கொடுத்து " அம்மா  குடுத்து   விட்டாங்க எல்லோருக்கும்கொடுங்கக்கா ....." என்றாள். காயத்திரிஅக்கா அதனை திறப்பதற்குள் உள்அறையிலிருந்த 
பாய்ந்து வந்த முரளி (முத்துசாமி  சாரின் மூத்தமகன் +2 படிக்கும்         கிராதகன்அப்படியே தூக்குவாளியைபறித்து வாசல் வழி ஓடிவிட்டான்
காயத்திரிஅக்காள் விரட்டி சேன்று பின் வெறும்கையுடன் திரும்பினாள், ஆசைபணியாரத்தை பறிகொடுத்துவிட்டு சோகமானோம். ரோட்டில் சண்டைபோடுபவர்கள் ஏசும்  சில  கெட்டவார்த்தைகளால் மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டேன்உமாவும் நானும் வருத்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
டியூஷன் முடிந்துதெருவில் அனைவரும் மெதுவாக நடக்க துவங்கும்போது , உமா அருகில் வந்து
 "இப்போ என்கூட வீட்டுக்கு வரியா ? அம்மாச்சிட சொல்லி  உனக்குகொஞ்சம் பணியாரம் தர சொல்றேன்..." என்றாள். என் மகிழ்ச்சியைச் சொல்லவாவேண்டும்அது  பணியாரம் 
கிடைப்பதால் மட்டுமல்அத்தனைபேரையும் கடந்து 
எனக்கு அவள் அளித்திட்ட  அந்த கரிசனத்தால்சரி என்றதும்  எங்கள் தெருவிலிருந்து ஆறு தெரு தள்ளியிருந்த  அவள் வீட்டிற்குஅழைத்துச்சென்றாள், குள்ளச்சியும் உடன்வந்தாள் வாசலில் தயங்கிநின்றிருந்த எங்களிருவரையும் கரம்பிடித்து உள்அழைத்து  தாழ்வாரத்தில் அமர்த்தி அவள் அம்மா எடுத்து  வர சில  பணியாரம்  உண்ணக்கொடுத்தாள்பின் என் தம்பிக்கும் தங்கைக்கும் தலா இரண்டிரண்டுபணியாரங்களை  வாங்கி ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிட்டாக பறந்து வீடு வந்து சேர்ந்தேன்பல  நாட்களுக்கு அந்த நினைவுகள் அந் கருப்பட்டிபணியாரத்தை காட்டிலும் தித்திப்பாய் இருந்தது.



ஒருநாள்முத்துச்சாமி சார் "இந்த மாசம் டியூஷன்பீஸ் யார் இன்னும் கொடுக்கல ...." எனக்கேட்டுஅனைவரும் கொடுத்ததை உறுதிப்படுத்திவிட்டு 
"அடுத்தவாரம் முழுப்பரிட்சை ஆரம்பிக்குதுஇந்த வாரத்தோட  
டியூஷன் கடைசி,அடுத்து  வீட்டுலயே படிச்சுககுங்க ....." என்றார்.
பரீட்சை நாளைத்தவிர பிறநாளில் உமாவை பார்க்க முடியவில்லை
பரிட்சையும்  முடிந்ததுபின் ரெண்டு மூன்று நாட்களுக்கொருமுறை
அவள் வீடிருக்கும் தெருவழி செல்வேன்கதவுதிறந்திருக்கும். ஆனால் அவள் கண்ணில் படவில்லை.உள்ளே சென்று  கேட்கவும்  பெரும் தயக்கம் பயம்அவுங்க அம்மா எதுக்குன்னா என்ன சொல்றது? பதிலேதும் தெரியவில்லை.


எனது அப்பா,நான் லீவ்ல சும்மாயிருக்கக்கூடாது, ஏதாவது கைத்தொழில் 
ஆர்வம்  வரவேணுமென ரேடியோ டிவி மெக்கானிக் கடையில் எடுபிடியாக சேர்த்துவிட்டார்.கிழே தவறி விழும் நட்டு,ஸ்குரூ தேடியெடுக்க, 
டெலிவரி டிவி, ரேடியோ துடைத்து வைக்க,வேளாவேளைக்கு டீ வாங்கிவர பயன்பட்டேன்எப்போதும் முத்துச்சாமி சார் வீட்டை கடந்துதான் எங்கள் வீடிருக்கும் தெருவிற்கு  போவேன். ஒருநாள் நான் வீட்டை கடக்கும்போதுவாசலில் நின்றிருந்தவர்
"டேய் இங்கவாடா... பரீட்சை ரிசல்ட் நாளைக்கு காலைல ஸ்கூல்ல வாசல்ல ஒட்டிருவாங்க நம்ம வகுப்பு பசங்கள பாத்தா போய் பாக்க சொல்லு நான் HMரூம்ல லிஸ்ட் பாத்துட்டு வந்துட்டேன். நம்ம வகுப்புல எல்லோரும் பாஸ்..."
"சீனிஅருண்வெங்கடேஸ்வரி எல்லாம் பாஸயிட்டாங்களா சார் ...?,
பாஸ்தாண்ட ....."
 " உமா ....."
"எல்லோருமே பாஸ் தாண்டா எருமை ....."
என் சந்தோசத்திற்கு அளவில்லை,ஆனால் குண்டன்அருண் என்னைவிட மக்கு எப்படி பாஸ்  ஆனான்? இப்போது அது முக்கியமில்லை.
உமா வீட்டிற்கு செல்லவும்அவளை பார்த்து பேசவும் நல்லதொரு
வாய்ப்பு.உமாவும்  பரிட்சையில் பாஸாயிட்டா என்ற அதிகாரபூர்வ   செய்தியுடன்  கை கால்கள்  பரபரக்க அவள்வீடு நோக்கி என் 
ற்பனை பைக் - கிளப்பிக்கொண்டு "டுர்ர்ர் .......டுர்ர்ர் ......."   மூச்சிறைக்க ஓடியஓட்டம் அவள் வீட்டு வாசலில்தான் நின்றது. கதவில்தொங்கும் 
பூட்டை பார்த்துக்கொண்டு நான் நிற்பதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு  
திண்ணை பாட்டி "யாருபா நீ ..."  என்றாள் 
"பாட்டி இங்க உமாவ பாக்கணும் ...நானும் உமா வகுப்புதான்நாங்க   எல்லோருமே  பாஸயிட்டோம்,  அதை சார் எல்லார்ட்டயும் சொல்ல சொன்னாரு ...."
"அவுங்க அப்பாவுக்கு வேற ஊர்ல வேல மாறிடுச்சாம் போன வாரமே 
வீட்ட காலி பண்ணிட்டு போய்ட்டாங்க ....இனி வர மாட்டாங்க " என்றாள்
அதுவரையான உற்சாகம் மொத்தமும் வற்றிவிட்டது,அதன்பின் 
அவளை பார்க்க முடியாததை நினைத்து அதன்பின்  ப நாட்கள் 
கண்கலங்கியிருக்கிறேன்.

மேல்நிலை வகுப்பில் வந்து சேந்த" உமா"க்கள் 
கல்லூரியில் கண்ட "உமா"க்கள் 
வேலைதேடும் காலத்தில்  எதிர்பட்ட " உமா"க்கள் 
வேலையில் எதிரிலமர்ந்த "உமா"க்கள் 
தினசரிகளில், தொலைக்காட்சிகளில் பார்க்கும் 
போட்டிகளில் வென்ற..... 
போட்டித்தேர்வுகளில் வென்ற .....
சமையல் குறிப்பெழுதிய ....
கலெக்டர் ஆனா ....
விபத்தில் சிக்கிய .....
"உமா"க்கள் யாருமே அவளில்லைதான்
என்முதல் பிரியத்தைநட்பைஅன்புணர்வின்  உற்றுக்கண்ணை  திறந்து கொடுத்தவளை முப்பது ஆண்டுகளில் வாழ்வின் வழியெங்கும் 
மீண்டும் சந்திக்கமுடியவில்லை.

"குரோம்பேட்ட வெளியவா …" வை தொடர்ந்து நடத்துனரின் விசில்  என் நினைவு கலைக்க, ஜன்னலில் வழி  இந்நிறுத்ததில் இறங்கிநடக்கும் உமாவைபார்த்தேன்,சாயல்  ஒன்றவில்லைதான், இனிமேலும் அடையாளம்காண முடியாததெனினும், உமா எனும் பெயர் கொண்ட பெண்கள் என்னைக்கடக்கும் போதெல்லாம்  ஒரு கணம் அவளை தேடித்தோற்பதுவழக்கமாகிவிட்டதெனக்கு.  

யா. பிலால் ராஜா