சமீபத்தில் படித்த "நிழல்வெளிக்கதைகள்" பற்றி அதன் ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு சிறு குறிப்பு எழுதியிருந்தேன், அதற்கான பின்னூட்டத்தை தன் வலைதளத்தில் இன்று பகிர்ந்திருந்தார். அதில் பயம் என்றால் என்ன? எப்போது ஒரு பேய்க்கதை இலக்கிய மதிப்பு பெறுகிறது? என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.படிச்சுப்பா
https://www.jeyamohan.in/114194?fbclid=IwAR3I8NfhlK699WN5tPXPCtl6tGRov18U_zJbOIbClWvsMwX7nDg9fcEiizw#.W_p75eRf1oR
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தங்களின் காடு நாவல் திரைப்படமாக்கப்படும் முயரச்சியில் இருப்பதாக படித்தேன்.இதுவரை ரப்பர், அறம், யானைடாக்டர், நூறுநாற்காலிகள், பனிமனிதன், இந்துஞான மரபில் ஆறுதரிசனகள், ஏழாம் உலகம், முடித்திருந்தாலும் ,” காடு ” புகவில்லை. படித்துவிடவேண்டுமென முடிவெடுத்தபோது லெண்டிங் லைப்ரரியில்”வெளிய போயிருக்கு இன்னும் வரலை…” என்றார்கள், ” வரவும் சொல்லுங்கள்..” சொல்லிவிட்டு அங்கிருந்த தொகுப்பில் நீண்ட நாட்களாக படிக்க நினைத்திருந்த “நிழல்வெளிக்கதைகள்” எடுத்து வந்து ஒரே அமர்வில் முடித்தேன், மிகவும் பிடித்திருந்தது. காரணம் சமீபத்தில் அழுத்தமான Mystery Flavour வகை கதைகளை படிக்க கிடைக்கவில்லை , சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பேய்க்கதைகள் கூட இன்று யாரும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து கடவுள் நம்பிக்கை இழக்கத்துவங்கும்போதே ஆவி/பேய்/அமானுஷ்ய நபிக்கைகளையும் அதே விகிதத்தில் இழந்தேன். ஆனால் இவ்வகைகதைகளை கேட்பதிலோ படிப்பதிலோ எனக்கு துளியும் ஆர்வம் குறையாது (தற்போது அவ்விடத்தை நிரப்புவன special effect சினிமாக்கள் மட்டுமே).
சிறுவயதில் தலையில்லா முண்டம் இரவில் ஊருக்குள் நடமாடுதென்று வேப்பிலை காப்பை வீட்டு வீட்டிற்கு வாசலில் கட்டிவைப்பதை மிரட்சியோடு பார்த்திருக்கிறேன். பேய் கதை அல்லது அது பற்றிய உரையாடல்களில் உண்டாகும் பயம் அலாதியானது .ஒரு பயத்திற்கு ஆட்படப் போகிறோம் என்ற உணர்வே போதையானது .அதில் ஆட்பட்டு பயபீதியில் சிக்குவதற்கும், பின் மீண்டெழுவதற்கும் நம் மனமே பொறுப்பு.
தாத்தா பாட்டிகளின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா….”வோடு சில பேய்கதைகளும் ஒட்டிக்கொள்ளும், இன்றெல்லாம் யாரும் பேய்க்கதை சொல்வதுமில்லை கேட்பதுமில்லை, இன்றய நகரமயமாதலில் ஊருக்கு வெளியே பாழடைந்த பங்களா என்று ஒன்றுமில்லை, அனைத்தும் சிப்காட் தொழில் நகராகிவிட்டது, கதைகளில் நுழைய வழியில்லாதவாறு ஆவிகள் அவற்றின் மறைவிடங்களிலிருந்து துரத்தப்பட்டுவிட்டன.பேய்களின் பிறப்பிடமான சுடுகாடுகள், இன்று 24/7 மின்-தகன நிலையமாய் ஒரு சிறு தொழிற்கூடமென மாறி, ஆவிகளை கருப்புகையாக கூண்டின் வழி வெளித்தள்ளுகிறது.
இந்த நிழல்வெளிக்கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், “தம்பி” முழுவதும் பிரிவாளுமை பற்றிய உளவியல் மருத்துவம் பேசிவிட்டு இறுதிவரியில் கதையின் பரிணாமம் அப்படியே மாறிவிடுகிறது. அதேபோல் “யட்சி” , “பாதைகள்” “அறைகள்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித உளவியல்-மர்மக்கதைகள். .இன்னும் இதுபோல படைப்புகள் தமிழின் தேர்ந்த கதைசொல்லிகளால் உருவாக்கப்படவேண்டும், ஒருவேளை இன்னும் சில தலைமுறைக்கு பின் பேய்/ஆவிகளையும் எழுதின்வழிதான் யாரும் அறிந்து பயங்கொள்ளமுடியுமோ என்னவோ?
“நிழல்வெளிக்கதைகள்” சொன்னதற்கு மிகுந்த நன்றிகள்
அன்புடன்,
யா. பிலால் ராஜா
அன்புள்ள பிலால் ராஜா
ஏன் பயப்படுகிறோம், ஏன் அப்படிப் பயப்படுவது பிடித்திருக்கிறது என யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும், திகில்கதைகளின் இடம் இலக்கியத்தில் ஒருபோதும் மறையாது.
நான் ஒரு பேய்க்கதையைப் படித்துக்கொண்டிருக்கையில் இரண்டு உளநிலைகள் பின்னிப்பிணைந்து செல்கின்றன. ஒன்று தருக்கம் சார்ந்த புழங்கும் உள்ளம். இன்னொன்று ஆழுள்ளம். நாம் கற்றவை, எண்ணுபவை, நம் அன்றாட வாழ்க்கைசார்ந்த புரிதல்கள் அனைத்தையும் கொண்டு அக்கதையை விளக்கிக்கொள்ள முயல்கிறோம். அந்த விளக்கத்துக்கு இணையாகவே நம் ஆழுள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஓர் அடியொழுக்காக. நம் தர்க்கத்தின் விரிசல்களை உடைத்துக்கொண்டு ஒரு புள்ளியில் ஆழுளம் வெளிப்பட்டுவிடுகிறது. அதுதான் நம் அச்சம்
புதுமைப்பித்தன் இதை வேடிக்கையாக ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். நம்பிக்கை வேறு பயம் வேறு. இவ்வாறு நம் ஆழுளம் வெளிப்படுவது நம்மை நாமே பார்த்துக்கொள்வது. இலக்கியம் என்பது ஆழுளம் நோக்கிய ஓர் ஊடுருவல். பேய்க்கதைகள் அதை வெற்றிகரமாகவே செய்கின்றன. இக்காரணத்தாலேயே அவை இலக்கிய மதிப்பு கொள்கின்றன
பேய்க்கதைகளின் இயங்குதளமும் நாம் நினைப்பதைவிட ஆழமானது. அவை தூய கவிதையைப்போல படிமங்கள் வழியாகவே தங்கள் ஊடுருவலை நிகழ்த்துகின்றன. ஏனென்றால் படிமங்களாலானது ஆழுளம்.பேய்க்கதைகளின் கனவியல்பு அப்படி உருவாவதுதான். பேய்க்கதைகள் அந்தப் படிமங்கள் ரகசியமாக தங்கள் ஊடுருவலை நிகழ்த்த விட்டு மேல்மனதை தங்கள் கட்டமைப்பாலும், புறச்சூழல் விவரிப்பாலும், கதைமாந்தரின் செயல்களாலும் மயக்கி நிறுத்திவிடுகின்றன. கதையை நம் தர்க்கம் வாசித்துக்கொண்டிருக்கையில் படிமங்களுடன் ஆழம் உரையாடிக்கொண்டிருக்கிறது
நாம் ஏன் அஞ்சுகிறோம்? நம் ஆழுளம் சிக்கிக் கிடக்கும் பல முடிச்சுகளை பேய்க்கதைகள் சென்று தொடுகின்றன. வரலாற்றின் முடிவிலாத, பொருளிலாத ஆழம். வன்முறைவிழைவு ,பாலுணர்ச்சியின் கட்டுக்கடங்காத தன்மை அவற்றின் விளைவான குற்றவுணர்ச்சி என மானுடனை ஆட்டுவிக்கும் அடிப்படை உணர்ச்சிகளாலானவை பேய்க்கதைகள். ஆகவே அவை கால- இடப் பெறுமானம் அற்றவை. சென்றகாலகட்டத்தின் சமூகக்கதைகள்,தத்துவக்கதைகள் எல்லாம் இன்று அர்த்தமிழந்துவிட்டன. சென்றகால பேய்க்கதைகள் இன்றும் அப்படியே காலமில்லாது நின்றிருக்கின்றன.
பேய்க்கதைகள் இருவகை. ஆசிரியன் வாசகனிடம் கதைவிளையாட்டு ஆடும்கதைகள் ஒருவகை. உதாரணம் சுஜாதாவின் கொலையுதிர்காலம் போன்றவை. அவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை. வாசகனின் ஆழுளத்தில் உறங்கும் அடிப்படை உணர்ச்சிகளைத் தொட்டு அவனை அச்சம்கொள்ளச்செய்யும் கதைகள், அவன் தன் ஆழத்தை தானே காணும் அனுபவத்தை அளிக்கும் கதைகள் இரண்டாம்வகை, உதாரணம் புதுமைப்பித்தனின் செவ்வாய்தோஷம்.
இரண்டாம் வகைக் கதைகள் என்றுமிருக்கும். நேற்று தங்கள் கதைக்கட்டுமானத்தை அவை மதத்தில் இருந்தும், நாட்டார்மரபில் இருந்தும் எடுத்துக்கொண்டன. இன்று அவை அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. ஆனால் படிமங்களின் இயல்புகளும் அவை உருவாக்கும் அடிப்படையான உணர்ச்சிகளும் ஒன்றே
ஜெ
No comments:
Post a Comment