Wednesday, September 14, 2016

முதல் நாள் (சின்னஞ் சிறுகதை)

முதல் நாள்



 
முந்தய நாள் 
 
"அவனுக்கு நாளைக்குதான் ஸ்கூல் பஸ்ட் டே ,நெனப்பு இருக்குல? காலைல வேகமா வந்துருங்க எட்டர மணிக்கு ஸ்கூல்  ரிஸப்சன்ல இருக்கனுமாம் எந்த  section - னு   அங்க சொல்லுவாங்க" .
"ம்ம்... எழரைக்கே வந்துருவேன் குட்டையன ரெடி பண்ணி வை " (எங்கள் பரம்பரையில் எல்லோரும் குட்டைதான் இவன் மட்டும் எங்கிட்டு வளரப் போறான் என்ற முன் அனுமானம்தான்.) சொல்லி விட்டு இரவு பணிக்கு செல்ல தயாராக துவங்கினேன்.


முன்பொரு நாள் 
 
சென்ற மாதத்திலொருநாள்  பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் மகனுடன் விளையடிக் கொண்டிருந்தேன் , ஓடி ஆடி களைத்து அமர்கையில் நான் வானம் காட்டி
"அங்க பாத்தியா பெருசா வானத்துல ஒரு லைட்  அதுக்கு பேரு நிலா ......"
"இல்லப்பா அது பேரு மூன் ......." மழலை உச்சரிப்பிலும் தன் உறுதி (self confident) தூக்கலாக இருந்தது.
மனைவியை பார்த்தேன் பெருமிதமாக சிரித்துக்கொண்டே "பக்கத்துல கிரேஸ் மெட்ரிக்குலேஷன்ல  கேட்டுட்டு வந்துட்டேன் இன்னும் ஒருவாரத்துல அட்மிஷன் ஆரம்பிச்சுருமாம் அமௌண்ட் ரெடி பண்ணிக்குங்க... "
குறிப்பிட நாளில் அவளாகவே சென்று நன்கொடையிளிருந்து பள்ளிக்கட்டணம் வரை பேரம் பேசி LKG யில் ஒரு இடமும் பெற்று வந்துவிட்டாள்.

முதல் நாள்
 
இரவு பணி முடித்தது இன்று விரைந்து வீடு சேர்ந்தேன் குட்டையன் குளித்து முடித்து சுமாரான நிறம் கொண்டதொரு அப்பள்ளியின் சீருடை அணிந்து "அப்பா நான் ஸ்கூலுக்கு போகப்போறேன்........ஸ்கூலுக்கு போகப்போறேன்...." 31/2 வயதுக்கே உரிய பிள்ளை மொழியில் சொல்லிக்கொண்டிருந்தான். சில மாதங்களுக்கு முன்னெல்லாம் தெருவில் பள்ளி செல்லும் சிறுவர்களை காட்டி "நீயும் கொஞ்ச நாள்ல இப்படி ஸ்கூல் போகணும்"னு சொல்லும்போது நம்மை எங்கோ அனுப்பி போகிறார்கள் என பீதியடைந்து தெருவில் சீருடையுடன் பிள்ளைகள் போனாலே  " நான் ஸ்கூல் போமாட்டேன்.. போ ...."என பிதற்ற தொடங்கினான். என்னடா இது வம்பா போச்சு என்று,
 "ஸ்கூல் போனாதான் வெளையாட நெறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க, மிஸ் புது கேம் சொல்லித்தருவாங்க , ஊஞ்சல் சறுக்கு எலாம் இருக்கும்.." என சொல்லிச் சொல்லி வகுப்பறை என்ற குருஞ்சிறையை அடிக்கடி நாங்கள்  செல்லும் பூங்காவாக அவனுக்கு  நிழலாட வைத்தேன். "சாப்பிட பிரயாணி கூட தருவாங்க .....". என்றெலாம் சொன்னபின்தான் இன்று சிரித்துக்கொண்டே தயாராகி நிற்கிறான்.14 மாத குழந்தையிலேயே 1 கிண்ணத்து பிரியாணி தின்று செரித்தவன் என்பது உபரி தகவல் . எனக்கு தெரியும் உண்மையான சவால் நாளையிளிருந்துதான், பள்ளி செல்ல முரண்டு பிடிக்கப்போகும் அவனுக்கும் , தரதரவென இழுத்துச் செல்லப்போகும் எனக்கும்.

தயாராகி வாசலில் புது ஷூ அணியும்போதுதான் கவனித்தேன் சில நிமிடங்களுக்கு முன்வரையிலான உற்சாகமும் சிரிப்பும் வடிந்து நம்மை எங்கு விட்டு வர போகிறார்களோ என்ற  ஒரு பீதி கலந்த சோகம் அவன் முகத்தில் பரவியது. ஒவ்வொரு நாளும் பொழுதும் எங்களுடனே கழித்தவன் இன்று முதல் பல மணி நேரங்கள் எங்களின் பார்வையை விட்டு விலகி விடுவான், நினைக்கையில் இதுவரை இல்லாத அடர் பாரமொன்று என்  மனமேற துவங்கியது. இவன் பிறந்தத்திலிருந்து மகனென்ற பொது பாசம் கடந்து என் இன்னொரு பிரதியாக , ஆன்மாவின் மற்றோரு பிம்பமாக உணர்ந்திருந்தேன். என் மனம் அவனில் புகுந்து அவனின் ஒவ்வொரு அசைவின் வழி பசி, தாகம், வலி, சிரிப்பை உணரத்துவங்கியிருந்தது.

இதுவரை என்னை  சுற்றி சூழ் கொண்டிருந்த அவனுலகம் இன்றுமுதல் சூலுடைத்து வேறொரு திசையில் முதல் அடி வைக்கப்போகிறது. எனக்கும் அவனுக்குமான கூட்டுப்புழு தருணத்தை காலம் இனி மறுபடியும் அனுமதிக்காது என்று நினைக்கும்போது மனமெங்கும் எழுதிக்காட்ட முடியாதவொரு வலி பரவியது.  அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை நானும் என் மனைவியும் அழைத்துக்கொண்டு , ஒரு கனத்த மௌனம் நிழலாக பின்தொடர  பள்ளி சென்றடைந்தோம்   அவனுக்கான  வகுப்பின் முன் நின்றிருந்த ஒரு இளம் ஆசிரியையிடம் கைமாறினான். முன்னரே அவ்வகுப்பறையில் பல சிறார்கள்  சிரிப்பு, அழுகை, சோகம், மிரட்சி என ஆளுக்கொரு உணர்வுடன் அமர்ந்திருந்தனர்.  ஆசிரியை அவனை கைப்பற்றி ஒரு இருக்கை நோக்கி அழைத்து செல்கையில் அவன் திரும்பி என்னை பார்த்து 
" அப்பா நீயும் ........."
சொல்வது முழுமையாக என்னை வந்தடைவதற்குள் என் மனைவி என் கை பற்றி வேகமாக அவ்விடம் அகற்றி,
 "இனி நம்மள அங்க பாத்த உள்ள உட்கார மாட்டான் அழுது ஊர கூடிருவான் ..............." என்றாள்.
அவன் சொல்ல வந்தது என்னவாக இருக்கும் ? அவன் நிச்சயம் என்னையும் வகுப்பில் அவனுடன் அமரத்தான்  அழைத்திருப்பான். அவனுடனே சேர்ந்து வாழ்வை மீண்டும் வாழும் வரம் கிடைக்காத? கடவுளை நம்பாத எனக்கு யார் வரம் தரப்போகிறார்கள் ? கண்ணீர்த்திரையால் சாலை மங்கலாக தெரிந்தது, வீடு நோக்கி செல்லாமல் ஏதேதோ சாலைகளில் இலக்கில்லாமல் இருசக்கர வாகனம் செல்ல துவங்கியது பின்னாலிருந்த என் மனைவி அன்று மட்டும் எங்கு போகிறோம் என கேட்கவில்லை  .
 
 
யா. பிலால் ராஜா 











Tuesday, January 19, 2016

கைதட்டல்

   
முடிவு செய்திருப்பினும்  சற்று திகைப்பாய் இருந்தது
கைதட்டலை எப்படி கவிதையாய் எழுதுவதென்று....
கைதட்டலை பற்றி கவி எழுத குறைந்தபட்சம் 
ஒரேயொரு  கைதட்டலாவது என்னுடனிருக்கவேண்டும்
அதன் இருப்பிடம்  யாருக்குத்தெரியுமென்று தெரியவில்லை
இப்பெருநகரத்தில் அதன் முகவரி உங்களுக்குத் தெரியுமா?
கைதட்டல் கணங்களை எப்படி சேமிப்பது?
கைதட்டலை புரிந்துகொள்வது புதிராயிருந்தது
ஒருவேளை.....
நம்  கைகளில் மாயவிரலைப்போல முளைத்திருக்கலாம்
காணமுடியாத கைரேகைகளிலொன்றாக மாறியிருக்கலாம் 
வரவேற்ப்பறை சுவர்களில் சட்டமிட்டு மாட்டப்படிருக்கலாம் 
சபைகளில்  இருக்கையினடியிலும் ஒளிந்துகொண்டிருக்கலாம் 
மீள்நினைவுக்கு வராத ஒரு கனவாக கலைந்திருக்கலாம்
மேகம்போல் விண்ணில் எங்கோ சேகாரமாகிக்கொண்டிருக்கலாம்
 
எதிர்வரும்  விடுமுறை  நாள் ஒன்றில்
இந்த கவிதைக்கான கைதட்டலை
நகருக்குள் தேடிக்கண்டடைய திட்டமிட்டுக்கொண்டே
கண்ணயர்கையில்  
 
தட்..தட்...
தட்..தட்...
 
கதவு தட்டப்படும் ஓசை
திறந்து பார்த்தேன்
இருளைத்தவிர யாருமில்லை
 
தட்..தட்...
தட்..தட்... 
 
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை
மீண்டும் திறந்து பார்த்தேன்
மீண்டும் இருளைத்தவிர யாருமில்லை
 
ஒருவேளை
கதவைத்தட்டியது   இந்த கவிதைக்காக
நான்  தேடுமொரு கைதட்டலாக இருக்குமோ?


யா. பிலால் ராஜா

 

Monday, May 25, 2015

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு




அணை வந்தடையும்
வெள்ளம் போல்
எங்கோ பெருவெளியிலிருந்து
பெருக்கெடுத்து வரும் முத்தங்கள்
வேக வேகமாக
என்னில் நிரம்பின

அபாய மட்டம் தாண்டி
முழுக்கொள்ளளவை எட்டி
என்னில் தளும்பித்தெறித்தன
முத்தங்கள்......

கடலினும் பெரிய
இந்த முத்ததேக்கம்
அழுத்தம்தாளாது
என்னுடல் செல்களின்
நுண் இடைவெளியில்
பீறிட்டு கசியத்துவங்கியது

என்றாவதொருநாள்
இவ்வழுத்தம்
என்னை முழுமையாக
உடைத்துவிடக்ககூடுமென்பதால்
முத்தங்களை வெளியேற்றும்
ரகசிய மதகினை
என் புலனெங்கும் தேடினேன்

மதகினை கண்டடையமுடியா களைப்பில்
கண்ணயர்ந்தபோது
கனவில் வந்த
குருட்டு சர்ப்பம் வழி காட்ட
கண்டடைந்தேன் அம்மதகினை

முத்தத்தின் அழுத்தங்கள்
அம்மதகின் வழி வெளியேற்றும் போதுதான்
உணரத்துவங்கினேன்
புதிய முத்தப் பெருவெள்ளமொன்று
முன்னைவிட அடர்வேகமாக
என்னில் நிரம்புவதை  

யா. பிலால் ராஜா  

Thursday, December 25, 2014

கிடாச் சண்டை

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 
 
 
 
 
        காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது " வர்ரீங்களா கூடல்நகர் தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்" என்றார் என் மாமா ஆர்வமாக கிளமபிக்கொண்டே, அவர் ஆர்வத்தில் என்க்கு வியப்பேதுமில்லை, வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா , சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில்
கட்டிவிட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசகரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்பட்ட ஒருகிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு "ஆடுகளம்" படத்தின் பல காட்சிகள் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. இன்றுதான் வளர்ப்பு பிராணிகளின் சண்டை நிகழ்வை முதல்முறை பார்க்கசெல்கிறேன். அனால் வழியெங்கும் இப்படியொரு நிகழ்வுக்கான தடயம் ஏதுமில்லை.
"என்ன மாமா வழியில் ஒரு போஸ்டர் flex எதயும் காணோ",
"இல்லங்க, இது சட்டபடி நடத்த அனுமதியில்ல, போலீஸ் முறைப்படி இதுக்கு அனுமதிக்காது அதுனால விளம்பரம் இல்லாம நடக்கும் "
"அதுஎப்படி மாமா இவ்வளவு பேரு கூடுறது இந்த ஏரியா போலீஸ்க்கு தெரியாம இருக்காதே"
"தெரியு ஆனா முன்னாடியே இதநடத்துரவிங்க,ஏரியாவோட பெரிய தலைக்கட்டு எல்லா சேந்து போலீஸ்-அ பேசல்-அ கவனிச்சுருவாங்ய
இது முடியிறவரைக்கும் யாரும் அந்தப்பக்கம் வர மாட்டாங்க"
சிறிது காலத்திற்கு முன்னாளில் "கம்மாய்"ஆக இருந்திருக்கலாம் என நினைக்கவைக்க்கூடிய ஒரு தாழ்வான பொட்டல் பகுதிக்கு
வந்து சேர்ந்தோம், அந்த அதிகாலையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறு சிறு கும்பலாக அங்காங்கே கூடி நின்றுகொண்டிருந்தார்கள். வண்டியை
ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கி செல்லும் போதுதான் கவனித்தேன் ஒவ்வொரு சிறு கும்பலுக்குல்லும் தடித்த கொம்புடனும், அலங்காரத் தோரணையுடனும் கடாக்கள் நின்றுகொண்டிருந்தன. shar ஆடோக்களிலும், குட்டியானைகளிலும் (TATA ASA ) விதவிதமான ஆடுக்கிடாக்கள்
வந்திரங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிடா வந்திறங்கியதும் அதைச்சுற்றி ஒரு கூட்டம் உடனே கூடிவிடும்.
"நம்ம ஓச்சு கெடாக்கு எதுத்து நின்ன 10 அடிக்கு தாங்கதப்பா இது"
"கலரா இருக்கணுங்கதுக்காக எதுக்கப்பா இம்புட்டு பெயிண்ட்ட மேல ஊத்தி வச்சுருக்கீக?"
"என்னடா கொம்பவெ காணோ, எதக் கொண்டிடா முட்டும்"
இதுபோன்ற சொல்லாடல்கள் அந்த வறண்ட கம்மாயெங்கும் நிரம்பத்தொடங்கின.

 
அதுவரை கசாப்பு கடைகளிலும், கிராமத்து ஆட்டுக்கிடையிலும் பார்த்த  மிகச்சாதுவான ஆட்டுஇனம் அன்று பகட்டாக அங்கு கூடியிருந்தது. கசாப்பு கடைக்காரர் கழுத்தில் கத்திவைத்து அறுக்கும்போதுகூட எதிர்ப்பு காட்ட தெரியாத இவைகள், இங்கு முரட்டு கொம்புடனும் ஒருவித திமிர் கலந்த  வலுவுடலும் கொண்டு நாம் அருகில் செல்வதற்கு ஒருவித அச்சத்தை உருவாக்கி வைத்திருந்தது. முக்கியமாக அதன் பெரிய சுருண்டு வளைந்திருந்த கொம்பின் முனைகளில் துளைகளிட்டு அதிலிலும் கயிறு கட்டி, பாதுகாப்பாக யாரவது ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளாட்டு வகையறாக்கள் இந்த சண்டை இனத்தில் சேராது, செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. கூடியிருந்த ஒவ்வொரு ஆட்டின் விதவிதமான முரட்டு கொம்புகள்தான் என் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. உண்மையில் இவைகளுக்கும் மற்ற ஆடுகளைப்போல சராசரி அளவுள்ள கொம்புகள்தானிருக்கும், சண்டைக்காக வளர்க்க முடிவு செய்துவிட்டால் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள், பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் இப்படி மூன்றுமுறை உடைத்தபின் வருவதுதான் சண்டை கிடாக்களில் நாம் பார்க்கும் முரட்டுக்கொம்பு. உசிலம்பட்டி வட்டாரம் இப்படி முரட்டுக்கொம்பு கிடாக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றபகுதி. அங்கிருந்த அனைத்து சண்டை ஆடுகளும் தன்னுடல் ரோமத்திலும் கொம்பிலும் விதவிதமான வண்ணங்களை பூசியிருந்தான. சில ஆட்டின் கொம்பில் அப்பகுதியின் ஜாதி,அரசியல் கட்சியின் கொடிநிறத்தை குறிக்கும் வண்ண நாடக்கள் சுற்றப்பட்டிருந்தன. பெரும்பாலானவற்றின் நெற்றியில் வட்ட மற்றும் நெடிய திலகமிருந்தது. நாமமிட்ட ஆடெதுவும் கண்ணுக்குபடவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆடுகளில் இரண்டு மட்டும் பச்சை வர்ண கொம்பை கொண்டிருந்தன. சாதாரண ஆடுகளுக்கான உணவு இவைகளுக்கு போதாது, உளுந்ததூசு அரைத்த புண்ணாக்கு கடலை புகட்டவேண்டும். தினமும் நடைப்பயிற்சியும், ஏரி, கம்மாய்களில் நீச்சல் பயிற்சியும் இவைகளுக்கு அவசியம் அப்போதுதான் கொழுப்பற்ற உடலும், நிலைத்தன்மையும் (stamina) இவைகள் பெறமுடியும்.
 



 கையிலுள்ள கேமராவால் சில ஆடுகளை புகைப்படம் எடுதுக்கொண்டிருக்கும்போதே, சிலரின் "இங்க கொஞ்சம் பெரிய வாட்டமா போடுங்கப்பா" என்ற உரத்த உத்தரவால் கூட்டம் ஓரிடத்தில் வட்ட வடிவில் கூடியது, போட்டியை நடத்தும் நடுவர்குழுவில் இருவர் களத்தில் நின்றுகொண்டு வளர்ப்பாளர்கள் கொண்டுவந்து ஒப்படைக்கும் ஆடுகளில் இரண்டிரண்டாக மோதவிடதுவங்கினார்கள். சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல "மடார்" "மடார் " என்ற ஓசை தெறிக்க மோதிக்கொண்டன.  அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன, சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரதுவங்கியது , சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது ஆனால் 50 முட்டல்கள் தான் ஒருபோட்டிக்கு அனுமதி அதனையும் தாண்டி அவைகள் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று துரமாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள், அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிட தோற்றதாக அறிவிக்கப்படும். " இத கைக்கிடா விடுரதுனு சொல்லுவாங்க" என்றார் ஒருவர். சில கிடாக்கள் முர்க்க மோதலில் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிய வெளியேறிக்கொண்டிருந்தது. இது மனிதர்கள் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டையை ஒத்திருந்தது. மனிதன் திட்டமிட்டு மோதிகொள்கிறான். இவைகள் விருப்பமின்றி இனமோதலை நடத்திக்கொள்வதாக தோன்றியது. சுமார் ஒன்னரை மணி நேரத்திற்குள் அனைத்து கடாக்களும் மோதவிடப்பட்டு போட்டி முடிவடைந்தது. சண்டையில் வென்ற கடா உரிமையாளர்கள் வெற்றிக்கூச்சலுடன் பரிசு பணத்துடன் கிளம்ப துவங்கினார்கள், ஒரு தோற்ற கிடாக்காரர் "மாப்ள நாளைக்கு நம்மவீட்ல கறிக்கஞ்சி, அவசியம் வந்துருயா..." என்று தன் ஆடின மீதான விரக்தியை யாரிடமோ வெளிக்காட்டிக்கொண்டு கிளம்பினார், ஆனால் தோற்றாலும் வென்றாலும் அவைகள் நிச்சயம் தாளமுடியாத வலியுடனும் சோர்வுடனும்தான்  அந்த மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கும்.
 
https://www.youtube.com/watch?v=ICAyIS8z_NU&t=16s
யா. பிலால் ராஜா 

Friday, September 26, 2014

Thaikkudam Bridge (Music Band)



           நம்முடைய இசைகேட்பு கொண்டாட்டம் பெரும்பாலும் இந்திய திரைஇசை தொகுப்பை சார்ந்திருப்பதில் தவறோன்றுமில்லைதான், இந்தியாவில் வெகுஜன இசைக்கான பொதுத்தளம் சினிமாதான். இந்தியாவை  பொறுத்தவரை   திரைப்படம் சாராத  இசைத்தொகுப்போ,  இசைக்குழுக்களோ (Music Band ) திரைஇசைக்கு நிகரான இடத்தை பிரபலத்திலும்,வணிகவெளியிலும் எட்டிப்பிடிக்க முடியவில்லை.  அப்படி  ஏதோ ஒரு  இசைகுழு  வெடித்துக்கிளம்பி  வெளிவந்தாலும்  மிக சொற்பகாலத்திற்குள் காணாமல் போய்விடுவார்கள், அல்லது  அந்தக்குழு  கலைந்து  போய்விடுகிறது. வடஇந்தியாவிலாவது சினிமா இசைஅமைப்பாளர்களுக்கு இணையாக  தளார் மொஹந்தி , அபாச்சி இந்தியன், பாபா சேகல் 90களில் புகழ்பெற்றார்கள், தெற்கே  அந்த அளவிற்கு  எந்த ஒரு
ஆளுமையோ  இசைகுழுக்களோ  நிலைபெறவில்லை.சமீபகாலமாக  நான் கேட்கும் பாடல்களும் இசைத்தொகுப்பும்  எந்தவித புதுமையும்,   மனஎழுச்சியையும் எனக்குள் கடத்தவில்லை ("கடல்" தொகுப்பு தவிர்த்து), இசை கேட்பில்ஒரு வறண்ட வானிலை  நிலவும் சமயத்தில்தான்  தற்செயலாக இணையத்தில் Thaikudam bridge என்ற  Rock Band ன் "Fish Rock" பாடலை கேட்டேன், மலையாள  பாடலென்றாலும்  அட்டகாசமாக வடிவமைத்திருந்தார்கள்   அக்குழுவின் இன்னும்  சில  பாடல்களை தேடிக்கேட்டேன், அற்புதமான Music Band அக Thaikkudam Bridge  உருவெடுத்துள்ளனர், அதிலும்  கேரளாவில் இப்படி  ஒரு Rock band  உருவெடுத்து  மேடை நிகழ்வுகளை நடத்தி வருவது பிரமிப்பானது. பொதுவாக Rock  இசை வடிவம் முற்றிலும் மேற்கத்தியபாணி என்பதால் இது இந்திய இசைவடிவ நுகர்வோரை திருப்தி செய்யாது இவர்களை போல் Rock  இசையை அடிப்படையாக கொண்ட
 பல குழுக்கள் இங்கிருந்தாலும், இவர்கள்  Rock -ஐ தேர்ந்த கலப்பிசை (fusion ) வடிவில் அமைப்பதுதான் இந்த வெற்றிக்கு காரணம். Thaikkudam Bridge எனபது கொச்சினில் இந்த குழுவினர் தங்கியிருந்த இடத்தின் பெயரென்பதால் அதனையே இந்த Band ன் பெயராக வைத்திருக்கிறார்கள். 
 




அவர்கள் இணையத்தில் பதிவேற்றியுள்ள  இசைபதிவுகள் ஒளி  ஒலி தரத்தில் மிக துள்ளியாமாக இருப்பதால்  இவைகளை  தரமான ஸ்பீக்கர் வழியேதான் நிச்சயம்  கேட்கவேண்டும். sub-woofer speeker system is the best to hear. Thaikkudam Bridge-ன் சில பாடல்களை எளிய அறிமுகத்துடன் இங்கே.



 Fish Rock
இந்த குழு பழைய மலையாள திரைப்படபாடல்களைதான் பெரும்பாலும் ரீமிக்ஸ் செய்து பாடிக்கொண்டிருந்தார்கள், பின் அவர்களாகவே மெட்டமைத்து சில பாடல்களை தொலைகாட்சி மற்றும் மேடைகளில் நிகழ்த்தினார்கள்.  "Fish Rock" என்ற இந்த பாடல்தான் அவர்களுக்கு புகழை துவக்கிவைத்து.  வயலின் இசையுடன் பாடலும் பாடுகின்ற கோவிந்த் மேனன் தான் இந்த Thaikkudam Bridge  குழுவின் பிரதான தலைவர் மற்றும் மெட்டமைப்பபாளர், Vian Fernandaz என்ற Bass Guitarrist   இந்த பாடலில் இன்னொரு நாயகன். கிட்டாரை இவரின் விரல் மட்டுமல்ல, தோள் கடந்து புரளும் கூந்தலும்  வந்து வாசித்துவிட்டு போகும்போல, வாசிக்கும்  பொழுது அப்படி ஒரு உற்சாக துள்ளல் இவரிடம். பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உற்சாகத்தீ பார்ப்பவர் அனைவரின்மீதும் பற்றியெரியும். இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் தவறவிடக்கூடாத  பாடல் இதுவென்பேன்.
youtube link for better video

Appozum
இது பழைய மலையாள பாடலின் (Kadamba) நவீன வடிவம் இதன் பிரதான பாடகர் பிதாம்பரன், இவர் கோவிந்த் மேனனின் தந்தை இந்த இசைக்குழு உருவாக்கத்திற்கு முக்கிய ஊக்கம் இவருடையதுதான், இவைகளெல்லாம் மலையாள மொழியில் பாடப்பட்டாலும், இவர்களின் Music Present style  கேட்பவரை நிச்சயம் Replay-க்க  வைக்கும் .


 youtube link for better video

Haq Allah
சூபி/குவாலி வகை பாடலை இப்படி ஒரு நவீன வடிவில் கேட்டதே இல்லை, குவாலி இசையில் ஹார்மோனியத்தை தவிர்க்கவே முடியாது, நவீன சூபி இசை பாடலில் உச்சம் தொட்ட ரஹ்மான் கூட அவரின் பாடலில் ஹர்மோனியா இசையை பொதித்தே வைத்திருப்பார். ஆனால் இதில் Hollow Guitar, வயலினை மட்டும் பிரதானமாக கொண்டு மெட்டமைக்கப்பட்டிருகிறது, கிருஷ்ணன் , நிலா மாதவ் இருவரும் பாடியிருக்கிறார்கள், அதிலும் கிருஷ்ணன் படிய பல்லவியை படியெடுத்து தொடரும்  நிலா மாதவ் குரல் அனைத்து scal -ஐயும் அனாசயமாக கடக்கிறது. இடையில் 2.04 - 2.50 கணத்தில்  இசையை நீங்கள்   மறுமுறை கேட்டே ஆகவேண்டும்.


youtube link for better video

Nostalgia
ஒரு சிறு நீரோடையை பின் தொடர்ந்து செல்கிறீர்கள் சில கணத்திற்க்குப்பின் எதிர்பாராமல் நீர் பெருக்கெடுத்து ஒரு அருவியாய் உருவெடுத்தால் எப்படிஇருக்கும், அத்தகையது இப்பாடல். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ மலையாள மொழி உச்சரிப்பே ஒரு இசை லயம் கொண்டதுதான். மெல்லிய மலையாள மெட்டுடன் துவங்கி Guitar, Violen, Drums, Keyboard -ல் இசை தீயாய் பற்றியெரிந்த பின்தான் அணைகிறது. முதல் பல்லவி துவக்கிவைக்கும் பாடகர் சித்தார்த் மேனன், கிருஷ்ணன் மேனனின் சகோதரர் மற்றும் சென்னையில் ரஹ்மானின்
KM Music conservatory இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்.
youtube link for better video

Ilayaraja,Rahman Medley
இந்த இரு பாடல்களும் திரு. இளையராஜா, ரஹ்மானின் மெல்லிசைகளை அற்புதமாக ரீமேக் செய்திருக்கிறார்கள். பொதுவாக  சொல்வதற்காக  ரீமேக் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். இவைகள் "cover song" என்று தான் தற்போது அழைக்கப்படுகிறது.
(வாய்ப்பிருந்தால் இணையத்தில் உலவும் சில அற்புதமான "cover songs" பற்றி   தனியாக ஒரு கட்டுரை பதிவிடுவேன்)  
வேகம்
சில மலையாள திரைப்படங்களுக்கும் பாடல் செய்துள்ளார்கள், வேகம் என்ற மலையாள படத்தின் " Theme song"

Friday, August 30, 2013

மகன்

மகன்

என் ஆன்மாவின் பிரதிபிம்பம் 
என் உருகிய உயிரின் உறைநிலை உரு 
ஒரு அடர் வெண்மேகத்துண்டு
ஒரு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்  கவிதை
எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஆகச்சிறுவடிவம்
மழலைச்சொல் மொழியும் ஒரு மவுனம்
தவழத்தெரிந்த ஒரு புன்னகை
அழுகைபுரியும் ஒரு மகிழ்ச்சி
உடைதரித்த ஒரு உள்ளங்கைக்கனவு
சுவாசிக்கும் ஒரு கிரகம்
கண்காணக்கூடிய ஒரு வரம்
உறங்குகிறது மகனாய்
என் தோளில்

யா. பிலால் ராஜா

Sunday, March 10, 2013

சூரியமோகம்


நீண்ட அடைமழை தீர்ந்த பின்
இக்காலை வாசலில் கண்டேன்
ஒரு முழு ஒளி உமிழும் சூரியனை ...
கண்மூடி சம்மணமிட்டு அங்கேயே அமர்ந்தேன்
புற்றுமீதமர்ந்தவன் மீதான எறும்பாக
என்மீது ஊறிப்பரவிற்று வெயில்
பெரும் வெம்மைத் தாகம் தீர்க்க
ஒவ்வொரு துளி ஒளியையும்
உடல் பருகி தீர்க்கப்பார்த்தது
எனக்கு முன்னெப்போதும் பிடிக்காதவை இச்சூரியன்
அதன் வெம்மைமீது தீராத வெறுப்பெனக்கு
அது எப்போதும்
என் வியர்வை சுரப்பணையின் மதகுடைக்கும்
என் முளைக்குள் வியர்வைபெருக்கி முகுளம் நனைக்கும்
என் ரௌத்திரத்தின் திரி கொளுத்தும்
என் காமக் 'கரு'க்களை அனலேரிக்கும்
அதனால் அதன் வெம்மைமீது தீராத வெறுப்பெனக்கு
அனால் இன்று அப்படியல்ல
இவ்வேப்பம் உறைந்திருந்த உதிரத்தை உருக்கி
உயிர்த்தட்டுக்களை நகர்த்திடம்பெயர்த்தன
இச்சூரியமோகம்
இன்றொருநாள் மட்டுமென
நான் எண்ணும் வேளையில்
என் உடல்செல்லின்
ஒவ்வொரு உட்கருவும்
ஒவ்வொரு சூரியனாகமாறி
தகிக்கத்துவங்கின

யா. பிலால் ராஜா

பைத்தியப்  புன்னகை
 
வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தேன்
எப்போதும் பார்க்கும் சாலையோர பைத்தியம்
எப்போதுமில்லாத புன்னகை செய்தான் என்னைப்பார்த்து 
அதுவரை
நான் ஒரு பைத்தியத்தின் புன்னகையை எதிர்கொள்ள  
பயிற்சியோ  ஒத்திகையோ  செய்திருக்கவில்லை
அந்த புன்னகை என்மீது மோதிவிடாதபடி
லாவகமாக விலகி நடந்தேன்
அவன் மீண்டும் அடர்ந்த பைத்தியமாகிக்கொண்டிருந்தான்
 
யா. பிலால் ராஜா