Thursday, December 25, 2014

கிடாச் சண்டை

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 
 
 
 
 
        காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது " வர்ரீங்களா கூடல்நகர் தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்" என்றார் என் மாமா ஆர்வமாக கிளமபிக்கொண்டே, அவர் ஆர்வத்தில் என்க்கு வியப்பேதுமில்லை, வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா , சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில்
கட்டிவிட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசகரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்பட்ட ஒருகிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு "ஆடுகளம்" படத்தின் பல காட்சிகள் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. இன்றுதான் வளர்ப்பு பிராணிகளின் சண்டை நிகழ்வை முதல்முறை பார்க்கசெல்கிறேன். அனால் வழியெங்கும் இப்படியொரு நிகழ்வுக்கான தடயம் ஏதுமில்லை.
"என்ன மாமா வழியில் ஒரு போஸ்டர் flex எதயும் காணோ",
"இல்லங்க, இது சட்டபடி நடத்த அனுமதியில்ல, போலீஸ் முறைப்படி இதுக்கு அனுமதிக்காது அதுனால விளம்பரம் இல்லாம நடக்கும் "
"அதுஎப்படி மாமா இவ்வளவு பேரு கூடுறது இந்த ஏரியா போலீஸ்க்கு தெரியாம இருக்காதே"
"தெரியு ஆனா முன்னாடியே இதநடத்துரவிங்க,ஏரியாவோட பெரிய தலைக்கட்டு எல்லா சேந்து போலீஸ்-அ பேசல்-அ கவனிச்சுருவாங்ய
இது முடியிறவரைக்கும் யாரும் அந்தப்பக்கம் வர மாட்டாங்க"
சிறிது காலத்திற்கு முன்னாளில் "கம்மாய்"ஆக இருந்திருக்கலாம் என நினைக்கவைக்க்கூடிய ஒரு தாழ்வான பொட்டல் பகுதிக்கு
வந்து சேர்ந்தோம், அந்த அதிகாலையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறு சிறு கும்பலாக அங்காங்கே கூடி நின்றுகொண்டிருந்தார்கள். வண்டியை
ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கி செல்லும் போதுதான் கவனித்தேன் ஒவ்வொரு சிறு கும்பலுக்குல்லும் தடித்த கொம்புடனும், அலங்காரத் தோரணையுடனும் கடாக்கள் நின்றுகொண்டிருந்தன. shar ஆடோக்களிலும், குட்டியானைகளிலும் (TATA ASA ) விதவிதமான ஆடுக்கிடாக்கள்
வந்திரங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிடா வந்திறங்கியதும் அதைச்சுற்றி ஒரு கூட்டம் உடனே கூடிவிடும்.
"நம்ம ஓச்சு கெடாக்கு எதுத்து நின்ன 10 அடிக்கு தாங்கதப்பா இது"
"கலரா இருக்கணுங்கதுக்காக எதுக்கப்பா இம்புட்டு பெயிண்ட்ட மேல ஊத்தி வச்சுருக்கீக?"
"என்னடா கொம்பவெ காணோ, எதக் கொண்டிடா முட்டும்"
இதுபோன்ற சொல்லாடல்கள் அந்த வறண்ட கம்மாயெங்கும் நிரம்பத்தொடங்கின.

 
அதுவரை கசாப்பு கடைகளிலும், கிராமத்து ஆட்டுக்கிடையிலும் பார்த்த  மிகச்சாதுவான ஆட்டுஇனம் அன்று பகட்டாக அங்கு கூடியிருந்தது. கசாப்பு கடைக்காரர் கழுத்தில் கத்திவைத்து அறுக்கும்போதுகூட எதிர்ப்பு காட்ட தெரியாத இவைகள், இங்கு முரட்டு கொம்புடனும் ஒருவித திமிர் கலந்த  வலுவுடலும் கொண்டு நாம் அருகில் செல்வதற்கு ஒருவித அச்சத்தை உருவாக்கி வைத்திருந்தது. முக்கியமாக அதன் பெரிய சுருண்டு வளைந்திருந்த கொம்பின் முனைகளில் துளைகளிட்டு அதிலிலும் கயிறு கட்டி, பாதுகாப்பாக யாரவது ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளாட்டு வகையறாக்கள் இந்த சண்டை இனத்தில் சேராது, செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. கூடியிருந்த ஒவ்வொரு ஆட்டின் விதவிதமான முரட்டு கொம்புகள்தான் என் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. உண்மையில் இவைகளுக்கும் மற்ற ஆடுகளைப்போல சராசரி அளவுள்ள கொம்புகள்தானிருக்கும், சண்டைக்காக வளர்க்க முடிவு செய்துவிட்டால் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள், பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் இப்படி மூன்றுமுறை உடைத்தபின் வருவதுதான் சண்டை கிடாக்களில் நாம் பார்க்கும் முரட்டுக்கொம்பு. உசிலம்பட்டி வட்டாரம் இப்படி முரட்டுக்கொம்பு கிடாக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றபகுதி. அங்கிருந்த அனைத்து சண்டை ஆடுகளும் தன்னுடல் ரோமத்திலும் கொம்பிலும் விதவிதமான வண்ணங்களை பூசியிருந்தான. சில ஆட்டின் கொம்பில் அப்பகுதியின் ஜாதி,அரசியல் கட்சியின் கொடிநிறத்தை குறிக்கும் வண்ண நாடக்கள் சுற்றப்பட்டிருந்தன. பெரும்பாலானவற்றின் நெற்றியில் வட்ட மற்றும் நெடிய திலகமிருந்தது. நாமமிட்ட ஆடெதுவும் கண்ணுக்குபடவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆடுகளில் இரண்டு மட்டும் பச்சை வர்ண கொம்பை கொண்டிருந்தன. சாதாரண ஆடுகளுக்கான உணவு இவைகளுக்கு போதாது, உளுந்ததூசு அரைத்த புண்ணாக்கு கடலை புகட்டவேண்டும். தினமும் நடைப்பயிற்சியும், ஏரி, கம்மாய்களில் நீச்சல் பயிற்சியும் இவைகளுக்கு அவசியம் அப்போதுதான் கொழுப்பற்ற உடலும், நிலைத்தன்மையும் (stamina) இவைகள் பெறமுடியும்.
 



 கையிலுள்ள கேமராவால் சில ஆடுகளை புகைப்படம் எடுதுக்கொண்டிருக்கும்போதே, சிலரின் "இங்க கொஞ்சம் பெரிய வாட்டமா போடுங்கப்பா" என்ற உரத்த உத்தரவால் கூட்டம் ஓரிடத்தில் வட்ட வடிவில் கூடியது, போட்டியை நடத்தும் நடுவர்குழுவில் இருவர் களத்தில் நின்றுகொண்டு வளர்ப்பாளர்கள் கொண்டுவந்து ஒப்படைக்கும் ஆடுகளில் இரண்டிரண்டாக மோதவிடதுவங்கினார்கள். சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல "மடார்" "மடார் " என்ற ஓசை தெறிக்க மோதிக்கொண்டன.  அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன, சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரதுவங்கியது , சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது ஆனால் 50 முட்டல்கள் தான் ஒருபோட்டிக்கு அனுமதி அதனையும் தாண்டி அவைகள் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று துரமாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள், அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிட தோற்றதாக அறிவிக்கப்படும். " இத கைக்கிடா விடுரதுனு சொல்லுவாங்க" என்றார் ஒருவர். சில கிடாக்கள் முர்க்க மோதலில் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிய வெளியேறிக்கொண்டிருந்தது. இது மனிதர்கள் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டையை ஒத்திருந்தது. மனிதன் திட்டமிட்டு மோதிகொள்கிறான். இவைகள் விருப்பமின்றி இனமோதலை நடத்திக்கொள்வதாக தோன்றியது. சுமார் ஒன்னரை மணி நேரத்திற்குள் அனைத்து கடாக்களும் மோதவிடப்பட்டு போட்டி முடிவடைந்தது. சண்டையில் வென்ற கடா உரிமையாளர்கள் வெற்றிக்கூச்சலுடன் பரிசு பணத்துடன் கிளம்ப துவங்கினார்கள், ஒரு தோற்ற கிடாக்காரர் "மாப்ள நாளைக்கு நம்மவீட்ல கறிக்கஞ்சி, அவசியம் வந்துருயா..." என்று தன் ஆடின மீதான விரக்தியை யாரிடமோ வெளிக்காட்டிக்கொண்டு கிளம்பினார், ஆனால் தோற்றாலும் வென்றாலும் அவைகள் நிச்சயம் தாளமுடியாத வலியுடனும் சோர்வுடனும்தான்  அந்த மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கும்.
 
https://www.youtube.com/watch?v=ICAyIS8z_NU&t=16s
யா. பிலால் ராஜா 

No comments:

Post a Comment