Thursday, December 25, 2014

கிடாச் சண்டை

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 
 
 
 
 
        காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது " வர்ரீங்களா கூடல்நகர் தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்" என்றார் என் மாமா ஆர்வமாக கிளமபிக்கொண்டே, அவர் ஆர்வத்தில் என்க்கு வியப்பேதுமில்லை, வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா , சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில்
கட்டிவிட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசகரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்பட்ட ஒருகிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு "ஆடுகளம்" படத்தின் பல காட்சிகள் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. இன்றுதான் வளர்ப்பு பிராணிகளின் சண்டை நிகழ்வை முதல்முறை பார்க்கசெல்கிறேன். அனால் வழியெங்கும் இப்படியொரு நிகழ்வுக்கான தடயம் ஏதுமில்லை.
"என்ன மாமா வழியில் ஒரு போஸ்டர் flex எதயும் காணோ",
"இல்லங்க, இது சட்டபடி நடத்த அனுமதியில்ல, போலீஸ் முறைப்படி இதுக்கு அனுமதிக்காது அதுனால விளம்பரம் இல்லாம நடக்கும் "
"அதுஎப்படி மாமா இவ்வளவு பேரு கூடுறது இந்த ஏரியா போலீஸ்க்கு தெரியாம இருக்காதே"
"தெரியு ஆனா முன்னாடியே இதநடத்துரவிங்க,ஏரியாவோட பெரிய தலைக்கட்டு எல்லா சேந்து போலீஸ்-அ பேசல்-அ கவனிச்சுருவாங்ய
இது முடியிறவரைக்கும் யாரும் அந்தப்பக்கம் வர மாட்டாங்க"
சிறிது காலத்திற்கு முன்னாளில் "கம்மாய்"ஆக இருந்திருக்கலாம் என நினைக்கவைக்க்கூடிய ஒரு தாழ்வான பொட்டல் பகுதிக்கு
வந்து சேர்ந்தோம், அந்த அதிகாலையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறு சிறு கும்பலாக அங்காங்கே கூடி நின்றுகொண்டிருந்தார்கள். வண்டியை
ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கி செல்லும் போதுதான் கவனித்தேன் ஒவ்வொரு சிறு கும்பலுக்குல்லும் தடித்த கொம்புடனும், அலங்காரத் தோரணையுடனும் கடாக்கள் நின்றுகொண்டிருந்தன. shar ஆடோக்களிலும், குட்டியானைகளிலும் (TATA ASA ) விதவிதமான ஆடுக்கிடாக்கள்
வந்திரங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிடா வந்திறங்கியதும் அதைச்சுற்றி ஒரு கூட்டம் உடனே கூடிவிடும்.
"நம்ம ஓச்சு கெடாக்கு எதுத்து நின்ன 10 அடிக்கு தாங்கதப்பா இது"
"கலரா இருக்கணுங்கதுக்காக எதுக்கப்பா இம்புட்டு பெயிண்ட்ட மேல ஊத்தி வச்சுருக்கீக?"
"என்னடா கொம்பவெ காணோ, எதக் கொண்டிடா முட்டும்"
இதுபோன்ற சொல்லாடல்கள் அந்த வறண்ட கம்மாயெங்கும் நிரம்பத்தொடங்கின.

 
அதுவரை கசாப்பு கடைகளிலும், கிராமத்து ஆட்டுக்கிடையிலும் பார்த்த  மிகச்சாதுவான ஆட்டுஇனம் அன்று பகட்டாக அங்கு கூடியிருந்தது. கசாப்பு கடைக்காரர் கழுத்தில் கத்திவைத்து அறுக்கும்போதுகூட எதிர்ப்பு காட்ட தெரியாத இவைகள், இங்கு முரட்டு கொம்புடனும் ஒருவித திமிர் கலந்த  வலுவுடலும் கொண்டு நாம் அருகில் செல்வதற்கு ஒருவித அச்சத்தை உருவாக்கி வைத்திருந்தது. முக்கியமாக அதன் பெரிய சுருண்டு வளைந்திருந்த கொம்பின் முனைகளில் துளைகளிட்டு அதிலிலும் கயிறு கட்டி, பாதுகாப்பாக யாரவது ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளாட்டு வகையறாக்கள் இந்த சண்டை இனத்தில் சேராது, செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. கூடியிருந்த ஒவ்வொரு ஆட்டின் விதவிதமான முரட்டு கொம்புகள்தான் என் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. உண்மையில் இவைகளுக்கும் மற்ற ஆடுகளைப்போல சராசரி அளவுள்ள கொம்புகள்தானிருக்கும், சண்டைக்காக வளர்க்க முடிவு செய்துவிட்டால் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள், பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் இப்படி மூன்றுமுறை உடைத்தபின் வருவதுதான் சண்டை கிடாக்களில் நாம் பார்க்கும் முரட்டுக்கொம்பு. உசிலம்பட்டி வட்டாரம் இப்படி முரட்டுக்கொம்பு கிடாக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றபகுதி. அங்கிருந்த அனைத்து சண்டை ஆடுகளும் தன்னுடல் ரோமத்திலும் கொம்பிலும் விதவிதமான வண்ணங்களை பூசியிருந்தான. சில ஆட்டின் கொம்பில் அப்பகுதியின் ஜாதி,அரசியல் கட்சியின் கொடிநிறத்தை குறிக்கும் வண்ண நாடக்கள் சுற்றப்பட்டிருந்தன. பெரும்பாலானவற்றின் நெற்றியில் வட்ட மற்றும் நெடிய திலகமிருந்தது. நாமமிட்ட ஆடெதுவும் கண்ணுக்குபடவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆடுகளில் இரண்டு மட்டும் பச்சை வர்ண கொம்பை கொண்டிருந்தன. சாதாரண ஆடுகளுக்கான உணவு இவைகளுக்கு போதாது, உளுந்ததூசு அரைத்த புண்ணாக்கு கடலை புகட்டவேண்டும். தினமும் நடைப்பயிற்சியும், ஏரி, கம்மாய்களில் நீச்சல் பயிற்சியும் இவைகளுக்கு அவசியம் அப்போதுதான் கொழுப்பற்ற உடலும், நிலைத்தன்மையும் (stamina) இவைகள் பெறமுடியும்.
 



 கையிலுள்ள கேமராவால் சில ஆடுகளை புகைப்படம் எடுதுக்கொண்டிருக்கும்போதே, சிலரின் "இங்க கொஞ்சம் பெரிய வாட்டமா போடுங்கப்பா" என்ற உரத்த உத்தரவால் கூட்டம் ஓரிடத்தில் வட்ட வடிவில் கூடியது, போட்டியை நடத்தும் நடுவர்குழுவில் இருவர் களத்தில் நின்றுகொண்டு வளர்ப்பாளர்கள் கொண்டுவந்து ஒப்படைக்கும் ஆடுகளில் இரண்டிரண்டாக மோதவிடதுவங்கினார்கள். சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல "மடார்" "மடார் " என்ற ஓசை தெறிக்க மோதிக்கொண்டன.  அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன, சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரதுவங்கியது , சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது ஆனால் 50 முட்டல்கள் தான் ஒருபோட்டிக்கு அனுமதி அதனையும் தாண்டி அவைகள் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று துரமாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள், அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிட தோற்றதாக அறிவிக்கப்படும். " இத கைக்கிடா விடுரதுனு சொல்லுவாங்க" என்றார் ஒருவர். சில கிடாக்கள் முர்க்க மோதலில் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிய வெளியேறிக்கொண்டிருந்தது. இது மனிதர்கள் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டையை ஒத்திருந்தது. மனிதன் திட்டமிட்டு மோதிகொள்கிறான். இவைகள் விருப்பமின்றி இனமோதலை நடத்திக்கொள்வதாக தோன்றியது. சுமார் ஒன்னரை மணி நேரத்திற்குள் அனைத்து கடாக்களும் மோதவிடப்பட்டு போட்டி முடிவடைந்தது. சண்டையில் வென்ற கடா உரிமையாளர்கள் வெற்றிக்கூச்சலுடன் பரிசு பணத்துடன் கிளம்ப துவங்கினார்கள், ஒரு தோற்ற கிடாக்காரர் "மாப்ள நாளைக்கு நம்மவீட்ல கறிக்கஞ்சி, அவசியம் வந்துருயா..." என்று தன் ஆடின மீதான விரக்தியை யாரிடமோ வெளிக்காட்டிக்கொண்டு கிளம்பினார், ஆனால் தோற்றாலும் வென்றாலும் அவைகள் நிச்சயம் தாளமுடியாத வலியுடனும் சோர்வுடனும்தான்  அந்த மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கும்.
 
https://www.youtube.com/watch?v=ICAyIS8z_NU&t=16s
யா. பிலால் ராஜா 

Friday, September 26, 2014

Thaikkudam Bridge (Music Band)



           நம்முடைய இசைகேட்பு கொண்டாட்டம் பெரும்பாலும் இந்திய திரைஇசை தொகுப்பை சார்ந்திருப்பதில் தவறோன்றுமில்லைதான், இந்தியாவில் வெகுஜன இசைக்கான பொதுத்தளம் சினிமாதான். இந்தியாவை  பொறுத்தவரை   திரைப்படம் சாராத  இசைத்தொகுப்போ,  இசைக்குழுக்களோ (Music Band ) திரைஇசைக்கு நிகரான இடத்தை பிரபலத்திலும்,வணிகவெளியிலும் எட்டிப்பிடிக்க முடியவில்லை.  அப்படி  ஏதோ ஒரு  இசைகுழு  வெடித்துக்கிளம்பி  வெளிவந்தாலும்  மிக சொற்பகாலத்திற்குள் காணாமல் போய்விடுவார்கள், அல்லது  அந்தக்குழு  கலைந்து  போய்விடுகிறது. வடஇந்தியாவிலாவது சினிமா இசைஅமைப்பாளர்களுக்கு இணையாக  தளார் மொஹந்தி , அபாச்சி இந்தியன், பாபா சேகல் 90களில் புகழ்பெற்றார்கள், தெற்கே  அந்த அளவிற்கு  எந்த ஒரு
ஆளுமையோ  இசைகுழுக்களோ  நிலைபெறவில்லை.சமீபகாலமாக  நான் கேட்கும் பாடல்களும் இசைத்தொகுப்பும்  எந்தவித புதுமையும்,   மனஎழுச்சியையும் எனக்குள் கடத்தவில்லை ("கடல்" தொகுப்பு தவிர்த்து), இசை கேட்பில்ஒரு வறண்ட வானிலை  நிலவும் சமயத்தில்தான்  தற்செயலாக இணையத்தில் Thaikudam bridge என்ற  Rock Band ன் "Fish Rock" பாடலை கேட்டேன், மலையாள  பாடலென்றாலும்  அட்டகாசமாக வடிவமைத்திருந்தார்கள்   அக்குழுவின் இன்னும்  சில  பாடல்களை தேடிக்கேட்டேன், அற்புதமான Music Band அக Thaikkudam Bridge  உருவெடுத்துள்ளனர், அதிலும்  கேரளாவில் இப்படி  ஒரு Rock band  உருவெடுத்து  மேடை நிகழ்வுகளை நடத்தி வருவது பிரமிப்பானது. பொதுவாக Rock  இசை வடிவம் முற்றிலும் மேற்கத்தியபாணி என்பதால் இது இந்திய இசைவடிவ நுகர்வோரை திருப்தி செய்யாது இவர்களை போல் Rock  இசையை அடிப்படையாக கொண்ட
 பல குழுக்கள் இங்கிருந்தாலும், இவர்கள்  Rock -ஐ தேர்ந்த கலப்பிசை (fusion ) வடிவில் அமைப்பதுதான் இந்த வெற்றிக்கு காரணம். Thaikkudam Bridge எனபது கொச்சினில் இந்த குழுவினர் தங்கியிருந்த இடத்தின் பெயரென்பதால் அதனையே இந்த Band ன் பெயராக வைத்திருக்கிறார்கள். 
 




அவர்கள் இணையத்தில் பதிவேற்றியுள்ள  இசைபதிவுகள் ஒளி  ஒலி தரத்தில் மிக துள்ளியாமாக இருப்பதால்  இவைகளை  தரமான ஸ்பீக்கர் வழியேதான் நிச்சயம்  கேட்கவேண்டும். sub-woofer speeker system is the best to hear. Thaikkudam Bridge-ன் சில பாடல்களை எளிய அறிமுகத்துடன் இங்கே.



 Fish Rock
இந்த குழு பழைய மலையாள திரைப்படபாடல்களைதான் பெரும்பாலும் ரீமிக்ஸ் செய்து பாடிக்கொண்டிருந்தார்கள், பின் அவர்களாகவே மெட்டமைத்து சில பாடல்களை தொலைகாட்சி மற்றும் மேடைகளில் நிகழ்த்தினார்கள்.  "Fish Rock" என்ற இந்த பாடல்தான் அவர்களுக்கு புகழை துவக்கிவைத்து.  வயலின் இசையுடன் பாடலும் பாடுகின்ற கோவிந்த் மேனன் தான் இந்த Thaikkudam Bridge  குழுவின் பிரதான தலைவர் மற்றும் மெட்டமைப்பபாளர், Vian Fernandaz என்ற Bass Guitarrist   இந்த பாடலில் இன்னொரு நாயகன். கிட்டாரை இவரின் விரல் மட்டுமல்ல, தோள் கடந்து புரளும் கூந்தலும்  வந்து வாசித்துவிட்டு போகும்போல, வாசிக்கும்  பொழுது அப்படி ஒரு உற்சாக துள்ளல் இவரிடம். பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உற்சாகத்தீ பார்ப்பவர் அனைவரின்மீதும் பற்றியெரியும். இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் தவறவிடக்கூடாத  பாடல் இதுவென்பேன்.
youtube link for better video

Appozum
இது பழைய மலையாள பாடலின் (Kadamba) நவீன வடிவம் இதன் பிரதான பாடகர் பிதாம்பரன், இவர் கோவிந்த் மேனனின் தந்தை இந்த இசைக்குழு உருவாக்கத்திற்கு முக்கிய ஊக்கம் இவருடையதுதான், இவைகளெல்லாம் மலையாள மொழியில் பாடப்பட்டாலும், இவர்களின் Music Present style  கேட்பவரை நிச்சயம் Replay-க்க  வைக்கும் .


 youtube link for better video

Haq Allah
சூபி/குவாலி வகை பாடலை இப்படி ஒரு நவீன வடிவில் கேட்டதே இல்லை, குவாலி இசையில் ஹார்மோனியத்தை தவிர்க்கவே முடியாது, நவீன சூபி இசை பாடலில் உச்சம் தொட்ட ரஹ்மான் கூட அவரின் பாடலில் ஹர்மோனியா இசையை பொதித்தே வைத்திருப்பார். ஆனால் இதில் Hollow Guitar, வயலினை மட்டும் பிரதானமாக கொண்டு மெட்டமைக்கப்பட்டிருகிறது, கிருஷ்ணன் , நிலா மாதவ் இருவரும் பாடியிருக்கிறார்கள், அதிலும் கிருஷ்ணன் படிய பல்லவியை படியெடுத்து தொடரும்  நிலா மாதவ் குரல் அனைத்து scal -ஐயும் அனாசயமாக கடக்கிறது. இடையில் 2.04 - 2.50 கணத்தில்  இசையை நீங்கள்   மறுமுறை கேட்டே ஆகவேண்டும்.


youtube link for better video

Nostalgia
ஒரு சிறு நீரோடையை பின் தொடர்ந்து செல்கிறீர்கள் சில கணத்திற்க்குப்பின் எதிர்பாராமல் நீர் பெருக்கெடுத்து ஒரு அருவியாய் உருவெடுத்தால் எப்படிஇருக்கும், அத்தகையது இப்பாடல். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ மலையாள மொழி உச்சரிப்பே ஒரு இசை லயம் கொண்டதுதான். மெல்லிய மலையாள மெட்டுடன் துவங்கி Guitar, Violen, Drums, Keyboard -ல் இசை தீயாய் பற்றியெரிந்த பின்தான் அணைகிறது. முதல் பல்லவி துவக்கிவைக்கும் பாடகர் சித்தார்த் மேனன், கிருஷ்ணன் மேனனின் சகோதரர் மற்றும் சென்னையில் ரஹ்மானின்
KM Music conservatory இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்.
youtube link for better video

Ilayaraja,Rahman Medley
இந்த இரு பாடல்களும் திரு. இளையராஜா, ரஹ்மானின் மெல்லிசைகளை அற்புதமாக ரீமேக் செய்திருக்கிறார்கள். பொதுவாக  சொல்வதற்காக  ரீமேக் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். இவைகள் "cover song" என்று தான் தற்போது அழைக்கப்படுகிறது.
(வாய்ப்பிருந்தால் இணையத்தில் உலவும் சில அற்புதமான "cover songs" பற்றி   தனியாக ஒரு கட்டுரை பதிவிடுவேன்)  
வேகம்
சில மலையாள திரைப்படங்களுக்கும் பாடல் செய்துள்ளார்கள், வேகம் என்ற மலையாள படத்தின் " Theme song"

Friday, August 30, 2013

மகன்

மகன்

என் ஆன்மாவின் பிரதிபிம்பம் 
என் உருகிய உயிரின் உறைநிலை உரு 
ஒரு அடர் வெண்மேகத்துண்டு
ஒரு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்  கவிதை
எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஆகச்சிறுவடிவம்
மழலைச்சொல் மொழியும் ஒரு மவுனம்
தவழத்தெரிந்த ஒரு புன்னகை
அழுகைபுரியும் ஒரு மகிழ்ச்சி
உடைதரித்த ஒரு உள்ளங்கைக்கனவு
சுவாசிக்கும் ஒரு கிரகம்
கண்காணக்கூடிய ஒரு வரம்
உறங்குகிறது மகனாய்
என் தோளில்

யா. பிலால் ராஜா

Sunday, March 10, 2013

சூரியமோகம்


நீண்ட அடைமழை தீர்ந்த பின்
இக்காலை வாசலில் கண்டேன்
ஒரு முழு ஒளி உமிழும் சூரியனை ...
கண்மூடி சம்மணமிட்டு அங்கேயே அமர்ந்தேன்
புற்றுமீதமர்ந்தவன் மீதான எறும்பாக
என்மீது ஊறிப்பரவிற்று வெயில்
பெரும் வெம்மைத் தாகம் தீர்க்க
ஒவ்வொரு துளி ஒளியையும்
உடல் பருகி தீர்க்கப்பார்த்தது
எனக்கு முன்னெப்போதும் பிடிக்காதவை இச்சூரியன்
அதன் வெம்மைமீது தீராத வெறுப்பெனக்கு
அது எப்போதும்
என் வியர்வை சுரப்பணையின் மதகுடைக்கும்
என் முளைக்குள் வியர்வைபெருக்கி முகுளம் நனைக்கும்
என் ரௌத்திரத்தின் திரி கொளுத்தும்
என் காமக் 'கரு'க்களை அனலேரிக்கும்
அதனால் அதன் வெம்மைமீது தீராத வெறுப்பெனக்கு
அனால் இன்று அப்படியல்ல
இவ்வேப்பம் உறைந்திருந்த உதிரத்தை உருக்கி
உயிர்த்தட்டுக்களை நகர்த்திடம்பெயர்த்தன
இச்சூரியமோகம்
இன்றொருநாள் மட்டுமென
நான் எண்ணும் வேளையில்
என் உடல்செல்லின்
ஒவ்வொரு உட்கருவும்
ஒவ்வொரு சூரியனாகமாறி
தகிக்கத்துவங்கின

யா. பிலால் ராஜா

பைத்தியப்  புன்னகை
 
வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தேன்
எப்போதும் பார்க்கும் சாலையோர பைத்தியம்
எப்போதுமில்லாத புன்னகை செய்தான் என்னைப்பார்த்து 
அதுவரை
நான் ஒரு பைத்தியத்தின் புன்னகையை எதிர்கொள்ள  
பயிற்சியோ  ஒத்திகையோ  செய்திருக்கவில்லை
அந்த புன்னகை என்மீது மோதிவிடாதபடி
லாவகமாக விலகி நடந்தேன்
அவன் மீண்டும் அடர்ந்த பைத்தியமாகிக்கொண்டிருந்தான்
 
யா. பிலால் ராஜா

Saturday, July 14, 2012

பறவைக்கூண்டு


நன்றி உயிரோசை- http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=5772




             நீண்ட நாட்களாக தொடர்வாசிப்பிலும் , முடிக்கப்படாமலுமிருந்த ஓரான்பாமுகின் "என் பெயர் சிவப்பு"-ஐ இன்றுடன்  படித்து முடிக்கவேண்டுமென்ற முடிவுடன் சென்னையின்  பெரும்  பரப்பிளமைந்த கிண்டி சிறுவர் பூங்காவிற்கு சென்ற ஞாயிறன்று சென்றேன். சென்னையின் பெரும்பாலான பூங்காக்கள் மிகச்சிறியவை, மாலை  வேளைகளில் உள்ளே சென்றால்  ரங்கநாதன் தெருவை  நினைவுபடுத்தும் கூட்டமிருக்கும்,  புதிய மரமொன்று முளைத்து  வளர வாய்ப்பில்லதபடி கான்கிரிட் நடைதளம், சற்று ஒதுக்குபுறத்தில் மரநிழல் அமர்விடமிருந்தால் காதலர்களின் ஆக்கிரமிப்பு. இந்நகரில்  நான்காணும் அனைத்து  பூங்காக்களின் நிலையும் இதுதான். இதுபோன்ற  நடைபயிற்சிக்கூட்டம், காதலர்  ஆக்கிரமிப்புகளை உள்வாங்கியபின்னும் அமர்வதற்கு இடம் கொண்ட பூங்காக்கள்தான் பெரியபரப்பிலான பூங்காக்கள் என்ற மனஅளவியல்  எனக்கிருக்கிறது. அத்தகைய பரந்தஅமர்விடமும், ஆண்டுமுழுவதும் பசுமை நிழலும் கொண்டிருக்கிறது கிண்டி சிறுவர்பூங்கா. வனத்துறையின் கட்டுப்பாட்டிலமைந்த வனவிலங்குகளின் காட்சிக்கூண்டும் அங்கிருக்கிறது. நுழைவாயிலிளிருந்து சில மீட்டர் தூரத்தில் தெரிந்த ஒரு பெரிய பறவைக்கூண்டினருகில் ஒரு நிழலிடம் பார்த்து அமர்ந்தேன், அதனை பறவைக்கூண்டு என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அது ஒரு பெரிய பறவைக்கூடாரம். நடுவில் ஒரு நீர்தேக்ககுட்டை அதனை சுற்றி சிறிதளவு இடம், சில பல கிளைகளுடன் கூடிய ஒரு மரம் இவை அனைத்தும் மிகப்பெரிய வலைகொண்டு சூழப்பட்டு எந்த ஒரு சிறுபறவையும் தப்பிவிடாதபடி சிறைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும்  நம்  நிலப்பகுதிகளில் பார்த்திராத அளவில் சிறிதும், பெரிதுமான வெளிநாட்டுப்பறவையினங்கள்தான் அதிகமிருந்தன. அவைகள் உயரம், நிறம், அலகமைப்பு, வடிவம் மற்றும் பாதஅமைப்புகளில் ஒன்றையொன்று  வேறுபடுத்திக்கொண்டிருந்தன. அவைகளின் உயிரியல் பெயர்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கில்லை. பள்ளிப்படிப்பில் இதுபோல் தாவர, விலங்கியல் பெயர்களை நினைவில் வைக்கமுடியாமல் நிறைய தோற்றிருந்ததால் இன்றுவரை புதிய உயிரியல் பெயர்களை நினைவுகொள்வது ஒவ்வமையயிருக்கிறது. சிறிது நேரம் அவைகளையே  கவனித்துக்கொண்டிருந்தேன், சில பறவைகள் கூண்டிற்குள் சிறிது  பறப்பதும், சிலஅடிகள் நடப்பதுமாயிருந்தன. பெரும்பாலானவை  ஒரே இடத்தில்  நின்றுகொண்டும், அமர்ந்தயிடத்தில் அப்படியே சலனமற்று உறைந்தும் போயிருந்தன. அந்த  கூண்டிற்கு வெளிப்புறம் தரையிலும் மரக்கிளையிலும் சில காக்கைகள் நின்றுகொண்டு சிறைபட்ட பறவைகளை பார்த்துக்கொண்டிருந்தன. அந்த காக்கைகளின் மனம் ஒருவேளை தன்னைக்காட்டிலும் அழகுமிக்க இனங்களை ரசித்துக்கொண்டிருக்கலாம் அல்லது யெளவனமிக்க அப்பறவைகளின் மீது புணரிச்சை கொண்டிருக்கலாம். மனிதர்களைப்போலல்லாமல் பறவைகளின் கண்கள்  காமத்தை ஒருபோதும் காட்டிக்கொடுப்பதில்லை.  நீர்க்குட்டையின்  அருகிலிருந்த சில பறவைகள் கண்களில்  நான் பார்த்த  அமைதி  "பிரபஞ்சத்தின் பேரமைதி" என்ற  சொல்லுக்கு  உவமை போலிருந்தது. உண்மையில் அப்பறவைகளின் கண்களில் நான்கண்டது, இயல்பான அதன் வாழ்வை இழந்துவிட்ட சோகமாயிருக்கலாம். நாடுவிட்டுநாடு பறக்கும் திறனிருந்தும் சில அடி தூரத்திற்கு மேல் பறக்கமுடியாதது அதன் மனதில் பெரும் துயரத்தை உருவாக்கியிருக்கலாம். மனிதர்களைப்போல்  தற்கொலை எண்ணமற்ற, மற்றும் வழிமுறையும் தெரியாத காரணத்தினால்தான் இவைகள் கூண்டிற்கு அடைபட்டும் உயிரோடிருக்கின்றன என நினைத்துக்கொண்டேன்.



             சிறிது  நேரத்திற்குப்பின் பூங்கா பணியாளர் ஒருவர் அக்கூண்டினுள்  நுழைந்து கொண்டுவந்திருந்த ஒரு கூடையிலிருந்து இறந்து போயிருந்த மீன்களையள்ளி நீர்க்குட்டையினில் வீசியெறிந்தார், பறவைகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக்கொண்டு செத்த மீன்களை விழுங்கத்தொடங்கின. பறவையினங்களின் வாழ்வியல் சுவாரஸ்யமே உணவுக்கான வேட்டையாடுதலில்தான் அடங்கியிருக்கிறது. நீரில் போக்கு காட்டி மறையும் உயிர்மீன்களை ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொருவிதமாக வேட்டையாடும்   திறமைதான் இயற்கை அதற்கு அளித்திருக்கும் உயிர்த்திறன். ஆனால் அவைகள் இங்கு செத்து அழுகிய மீன்களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. மதங்கள்  மனிதனுக்கு கற்பனையாக போதித்த நரகத்தை, பறவைகளுக்கு நாம் உண்மையாக  உருவாக்கி வைத்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்  கடைவீதியில் என்  நண்பருடன் செய்த விவாதம் ஒன்று அப்பொழுது என் நினைவிற்கு வந்தது, அவர் கடைகளில் விற்கப்படும்  ஒரு சில பறவையினங்களை கூண்டுடன் வாங்கி வீட்டில் வளர்க ஆசைப்பட்டார். நான் அவரிடம் "வனங்களில் திரியும் பறவைகளை சிறிய கூண்டினுள் அடைத்து வைப்பது மிக மோசமான பொழுதுபோக்கு"என்றேன், அதற்கு அவர் "நீங்கள் உண்பதற்கு, உழுவதற்கு, சுமப்பதற்கு, காவலுக்கு ஆடு,கோழி ,மாடு, குதிரை, நாயினங்களை அடைத்து வைக்கிறீர்களே அவைகளை காட்டிற்கு அனுப்பவேண்டியதுதானே" என்றார். அதற்கு நான் "நீங்கள் சொன்ன வளர்ப்பினங்கள் எல்லாம் பல நுற்றாண்டுகளாக மனிதனை சார்ந்து வாழ பழக்கப்பட்டுவிட்டன. அவைகள்  ஒருபோதும் மனிதனை விட்டு விலகி காட்டிற்குள் தப்ப முயற்சிக்கவில்லை. அவைகளை வீட்டிலிருந்து விரட்டினாலும் மீண்டும் உங்களை தேடி வந்துவிடும். ஆனால் பறவையினங்கள்  ஒருபோதும்  மனிதஅருகாமையை  விரும்புவதில்லை, வனங்களை  மட்டும் சார்ந்து வசிக்க விரும்புபவை என்றேன்" ஆனாலும் அவர் சிரித்துக்கொண்டே பறவை விற்கும் கடைகளை வீதியில் தேடிக்கொண்டே நடந்து வந்தார்.  பலமான சிரிப்புசத்தத்துடன் என்னை  கடந்த  காதல்  ஜோடியால்  நினைவு கலைந்து, என்  கூண்டு திரும்பத்துவங்கினேன்,  "என் பெயர் சிவப்பு"-ஐ முடிக்காமலே...

யா. பிலால் ராஜா


Tuesday, March 6, 2012

எதிர்இசைப்பாடகன் - பாடகர் கைலாஷ் க்ஹெர்


This Article published in "Uyirosai" e-magazine- 05-03-2012 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5346


                பசி, காதல், காமம்  போல இசையும் உணரத்தான்முடியும், ஒருவர் மற்றவர்க்கு உணர்த்த முடியாது என நினைகிறேன். ஆனால் அறிமுகம் செய்ய   முடியும். நான் ரசித்த ஓர் வடஇந்திய  இசை ஆளுமை பற்றிய அறிமுகம்தான் இந்த கட்டுரை.

பள்ளி வயதிலிருந்து சினிமாசார்ந்த ஒரு இசைதொகுப்பு வெளிவந்தால் அது A R ரஹ்மானின் இசை தொகுப்பு என்றால் உடனே எப்படியாவது வாங்கியோ, மியூசிக்கல்ஸ்   வைத்திருப்பவர்களிடம் நட்புகொண்டோ கேட்டுவிடுவது வழக்கம், ஒவ்வொரு தொகுப்பிலும் புதிய பாடகர்கள், திறமையான இசைக்கலைஞர்கள், புதுமையான தாள/ ஒலிப்பதிவு   அறிமுகம் நிச்சயம் இருக்கும். என் பள்ளிப்பருவத்திலிருந்து அவர் இசையின்மொழி எனக்கு பரிட்சயம் என்பதால் கடந்த 15 + ஆண்டுகளில்  என் கொண்டாட்ட தருணங்களில்  அவரின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு.
பெங்களூரில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் சில உடைகளை தவிர்த்து வறுமையும், வெறுமையும் எப்போதும் உடனிருந்தது, அப்போது  ரஹ்மான் இசையில் லகான் பட இயக்குனர் அஷுடோஷ் கோவரிகர்-ன் இயக்கத்தில்  swadesh என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆகிருந்தது, அப்போது நானிருந்த சுழலில் பாடல் கேட்ப்பதற்கோ, டிவி பார்ப்பதற்கோ வாய்ப்பில்லை,  அதனால் ஒரு நல்ல தியேட்டரில்  படம்/பாடல்  பார்க்கலாமென்று  பெங்களூர் PVR -இல் சென்று பார்தேன். அந்த  சமயத்தில் டிக்கெட் விலையான 120 ரூபாய்க்கு  என் பட்ஜெட்டில்  பணம்  ஒதுக்கியது  ஒரு  குட்டி  சாகசக்கதைக்கு ஒப்பானது. எதிர்பார்ப்புடன் சென்ற 
எனக்கு, படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் படக்கதையில் எந்த  ஈர்ப்புமில்லை,
ஆனால் பாடல்கள் ரசிக்ககூடியதாக இருந்தது, படம் முடிந்த பின்,  இந்த இசைத்தொகுப்பில் சற்று புதுமையாக  நான் உணர்ந்தது, படத்தில் முதல் பாடலில் (Yun Hi Chala Chala... ) ஷாருக் தன் சொந்த  ஊருக்கு செல்லும் வழியில் ஒரு வழிப்போக்கனை தன் வாகனத்தில் அழைத்துச்செல்லுவார். அப்போது ஷாருக் உதித்நாராயண் குரலிலும், வழிபோக்கன் ஒரு வித்தியாசமான குரலிலும் பாடக்கேட்டேன்.                                                                  



             பொதுவாக நாம், இந்திய திரைப்பட இசைச்சுழலில்   கேட்கும்  குரல்கள்  வழவழபாக, பிசிறற்ற,ரொமாண்டிக் குரலாகதான் இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மறையான இசை / குரல்  சினிமாவில்  கேட்பது  மிக அரிது,அப்படிப்பட்ட ஆளுமைகள் இந்திய நாட்டுப்புற இசைவெளிகளில் 
கணக்கற்று பரவியிருந்தாலும் வணிக திரைப்பட இசைக்களங்களில் 
அவர்களை  சிறப்பாகப்பயன்படுத்துவது மிகக்குறைவுதான். இந்த பாடலின் குரல் அப்படிப்பட்ட தனித்தன்மை கொண்ட குரலாக   எனக்குப்பட்டது,   சில மாதத்திற்குபின் நண்பர்களுடன் பெங்களூர்- இந்திரா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் அமீர்கானின்  "Mangal pandey "(இசை : ரஹ்மான்)திரைப்படம் பார்க்கசென்றேன்.(இந்த காலகட்டத்தில்  வாரத்தில்  இரண்டு  திரைப்படம் பார்க்குமளவிற்கு வசதி வந்துவிட்டிருந்தது.) படம் முடிந்து
வெளி வந்த பின்னும் "மங்கள.... மங்கள..." என்ற பாடல் மீண்டும் மீண்டும் எனக்குள் கேட்டு கொண்டே இருந்தது, காரணம் swadesh பாடலில் கேட்ட அதே  வித்தியாசமான குரலின் ஈர்ப்பு. இந்த படத்தின் முன்று சுழலில்  இப்பாடல் வருகிறது. மொழி எல்லைகளைக்கடந்து பாடல் கேட்கவும்  பழகியிருந்ததால் பீகார், ஒரிசா, பெங்கால் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் வசித்த சமயங்களில் விடுமுறை நாட்களில்  தொழிலாளர்கள் அனைவரும் டோல் இசைத்துக்கொண்டு வட பிராந்திய  நாட்டுப்புற பாடல்கள்பாடுவதை கேட்டு ரசித்திருக்கிறேன். என்  அறையில்  என்னுடன் தங்கியிருந்த  மராத்தி ஒருவர் மராத்திய நாட்டு புறபாடல்களை பாடுவதில் ஆர்வம் உள்ளவர், அவரிடம் "மங்கள.... மங்கள..."  பாடலின் பாடகரை பற்றி கேட்டபோது, அவர் பெயர் “கைலாஷ் க்ஹெர்” என்றும் வடஇந்திய நாட்டுப்புற, சுபி இசை பாடல்களை பாடுவதில் புகழ் பெற்றவரென்றும் எனக்கும் அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார். "வடஇந்திய நாட்டுப்புற இசைவடிவம்" என்று நாம் பொதுவாக சொல்லிவிட்டாலும், என் கேட்பனுபவதில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஒரிசா முக்கிய மாநிலங்களின் நிலவியல் அடிப்படையில் நாட்டுப்புறபாடல்களில் நிறைய  வேறுபாடுண்டு  கைலாஷ் க்ஹெர் -ன் குரல் இவை அனைத்திற்கும் பொருந்தக்கூடியாது
என நினைக்கிறேன். இந்தக்கட்டுரையை பகிரத்தூண்டிய  மங்கள... மங்கள...  பாடலை   கீழ்   கொடுத்துள்ள   கண்ணோளியில் கேட்டுப்பாருங்கள். 
(http://www.youtube.com/watch?v=3-a_gabfEXA)



என்னை பொறுத்தவரை இந்தக்கட்டுரையில் நான் குறிப்பிடும் பாடல்களை கண்ணொளியில் காண்பதைக்காட்டிலும்  அந்தந்த இசைத்தொகுப்பினை முழுவதும் பதிவிறக்கம் செய்து கேட்பது கைலாஷ் க்ஹெர்-ன் குரலாளுமையை முழுவதும் உள்வாங்க உதவலாம்.
பின்நாளில்  இணையத்துடன் இணக்கமாக இருந்த காலங்களில் அவரால் பாடப்பட்ட பல பாடல்களை கேட்டேன். 1973 - ல் மீரட்டில் பிறந்த இவர் வியாபார தோல்வி கண்டபின் இசை ஆர்வமுள்ள நண்பர்களுடன்  இசைத்துறைக்கு வந்தவர், 2002 ல் Andaaz என்ற படத்தில் முதல் பாடல் பாடினாலும், Waisa Bhi  Hota Hai என்ற படத்தில் சூபி இசை சாயல் கொண்ட  Allah ke Bande என்ற பாடல் மூலம்தான்  இவர் குரல் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். (http://www.youtube.com/watch?v=9Ered22Xy4E&feature=related )

 இக்கட்டுரையில் கொடுத்திருக்கும் பாடல்களை அலுவலக அவசரத்திலோ, மொழியை முதன்மைபடுத்தியோ, வழக்கமான டூயட் பாடல் அளவுகோலுடனோ ஒப்பிடாமல் கேட்டுபாருங்கள். இவரின் பாடல்களில் அடிப்படை சூபி இசை வடிவமே பெரும்பான்மையாக காணப்படுவதால், இந்தியாவின் முக்கிய சூபி இசை பாடகராக கைலாஷ் முன்னிலைப்படுத்தப்படுகிறார். திரைப்படங்களில்
 பாடிக்கொண்டிருந்தாலும் தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து 
இசைத்தொகுப்புகளை கொண்டுவருவதுதான் இவரது ஆர்வமாக இருக்கிறது.
 2006 -ல் வெளிவந்த 'kailasa' என்ற தொகுப்பிலுள்ள 'Teri Deewani ' என்ற பாடல் எப்போதும் என்  விருப்பத்திற்குரியது. கைலாஸ்-ன் பாடல்களில் குரல் மற்றும் மெட்டமைப்பிற்கு பின் முக்கிய  இடம் பிடிப்பது நரம்பிசை கருவியான   'கிடார்' தான்.
  
(http://www.youtube.com/watch?v=B6CqANW49J0&feature=related)
 'டெல்லி-6 ' படத்தில் 'Arziyan ' என்ற அதிஅற்புதமான சூபி  இசைப்பாடலில்  kailash kher  குரலும் கலந்திருக்கும். தமிழில்  G.V. பிரகாஷ் குமார்  இசையில் 'வெயில்' படத்தில் 'வெயிலோடு விளையாடி......'-யதில் இவர் குரலும் ஒன்று. இவரின் இசைத்தொகுப்பின்  பாடல்வரிகளை  பெரும்பாலும் இவரே  புனைகிறார். சென்ற மாதம்' Rangeela 
என்ற தனது புதிய இசைதொகுதியை வெளியிட்டிருக்கிறார். இந்தகட்டுரையின் நோக்கம் அடுத்து வரும் முற்றுப்புள்ளியுடன் நீங்கள் 
படித்து  முடித்து விடுவதல்ல, கைலாஷ் கஹெர்-ன் இசையை நீங்கள்   இக்கட்டுரையின்    கண்ணொளி தவிர்த்து  மேலும் தேடிக்கேட்பதுதான்.

யா. பிலால் ராஜா