Tuesday, September 26, 2017

Atif Aslam

Atif Aslam 


மூன்றாண்டுகளுக்கு முன்பு ஓர்நாள், ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு 
"மாப்ள உங்களுக்கு ரெண்டாவது பையன் பொறந்துருக்கான் , ஊருக்கு கெளம்பி வாங்க ...."
"வரும்போது என்ன பேருனு யோசிச்சுட்டு வாங்க...." 
யோசிக்காமல் சொன்னேன்
"யோசிச்சாச்சு மாமா ....Atif Aslam ...."  

சில ஆண்டுகளுக்கு முன் தேடித்தேடி சூபி, குவாலி இசை வகைகளை கேட்டு பித்தேறி போயிருந்தேன், ரஹ்மானின் சூபித்தனமான இசையை உள்வாங்கியிருந்ததால் வந்த தொடர்வினை. ஒரு போதை அடிமையைப்போல் ஓய்வான பின்னிரவுகளில் தியானிப்பது  இவ்வகை இசையோடுதான். எண்ணற்ற பாடல்களை கேட்டுக்கடக்கும்போது ஒரு நாள்ஒரு பாடல் என்னை நிறுத்தியது, பாடகரின் குரல் வளம், வீச்சு அபாரமாயிருந்தது மீண்டும் கேட்டேன், பின் மீண்டும் மீண்டும் கேட்டேன், அப்பாடலை நான் கடந்து வெளியேற மிக நீண்டநாளானது.  MTV - coke studio  Serias ன் "Mai Ni Main" என்ற பாடல்தானது, பாடியது Atif Aslam -என்றிருந்தது அந்த coke studio பாகிஸ்தான் verson, பாகிஸ்தான் கலைஞர்களில் நுஸ்ரத் பதே அலிகான், ராஹத் பதே அலிகான், அட்னான் சமி, ஆபிதா பர்வீன் இந்த நால்வர்தான் எனக்கு தெரிந்த உச்சபுகழ் கண்ட இசை ஆளுமைகள், (இவர்களை தவிர ஓட்டு மொத்த பாகிஸ்தானியர்களும்  துப்பாக்கியுடன் தெரியும் தீவிரவாதிகள் என்ற ஐயத்திலிருந்தேன் தொடந்து "தின *** " பத்திரிக்கை படிப்பதன் விளைவு ) Atif Aslam -ன்  மேலும் பல பாடல்களை இணையத்தில் தேடி கேட்டேன்  "Woh Lamhe" – Zeher உட்பட பல அபாரமான  இந்தி பாடல்களை ஹிட் செய்திருக்கிறது  இவர் குரல்.  Wazirabad- பாகிஸ்தானின் பிறந்த இவர் அட்னான் சமி (ஆயுத எழுத்து புகழ்) போல் வாராவாரம் இந்தியா வந்து படத்திற்க்கோ இசை நிகழ்ச்சிக்கோ பாடிவிட்டு செல்லும்மளவு இசை(புகழ்)  கொண்டவராயிருந்தார். இவர் குரலில் ஏதோ ஒரு அமானுஷ்யம் நிச்சயம் அமர்ந்திருக்கிறது. தொடந்து இந்தி பாடல் கேட்பவர்களுக்கு Atif Aslam  நன்கு தெரிந்திருக்கலாம்.
 
எல்லை தாண்டிய இந்த இசைபயங்கரவாதிக்கு Indo - pak பரப்பு முழுவதும் பெரும் ரசிகர் உண்டெனினும், இவரின் தற்போதைய  சோகம் என்ன தெரியுமா?    "பிற்போக்கு போலி தேசியவாதிகள் " பாகிஸ்தானிலிருந்து எந்த இசை கலைஞர்களும் இந்தியா வந்து பாடவோ நிகழ்ச்சியில் பங்கெடுக்கவோ  கூடாதென கோஷமிட்டதில் மீண்டும் பாக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

"Mai Ni Main" - கேட்பு முறை

Youtube link -  https://www.youtube.com/watch?v=XTybbAri_3g

அந்த பாடல் வடிவமைப்பில் வழக்கமான பல்லவியில் துவங்கி சரணத்தில் முடியவடையும் என எதிர்பார்க்க முடியாது, Atif Aslam- ன் அபாரமான "ஆலாப்" ராகமிடும் திறனில் நம்பிக்கைகொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.  கீழ் சொன்னபடிதான் கேட்கவேண்டுமென்பதில்லை, ஒருவேளை இந்த இசையின் மாயாக்கதவினை திறக்க இது உதவலாம். (தேவைப்படுபவர்கள் மட்டும்  Bacardi (Limon) ஒரு மடங்கு மூன்று மடங்கு தண்ணீருடன்  நான்கு சொட்டு எலுமிச்சை சாற்றினை விட்டெடுத்துக்கொண்டு)நிச்சயம் முழு அமைதி கொண்ட ஒரு ஓய்வின் இரவில், கேட்பு புலன் தவிர அனைத்தையும் ஓய்வு நிலையிலிட்டு
நல்லதொரு ஒலிக்கருவி கொண்டு ஒரு பாடலுக்குரிய வழக்கமான வடிவம் மறந்து, முன்று முறை தொடந்து கேட்டாலே போதும், உங்களுக்குள்  அந்த பாடல் ஓடி அடங்க நிச்சயம் சில காலம் பிடிக்கும்.

 யா. பிலால் ராஜா
 
 

Thursday, June 1, 2017

ஒற்றைமரம்

ஒற்றைமரம் 
(கொலுக்குமலைப்பயணம்)

நன்றி -  solvanam.com  (http://solvanam.com/?p=49311 )


போடி நாயக்கனூரில் வாழ்பவர்களுக்கு ஒரு பெரும் காட்சிக்கொடை எங்கிருந்து பார்த்தாலும் ஊரின் அநேக திசையினை சூழ்ந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைசிகரங்கள், இந்த மலைசூழ் நகரில் பிறந்த எனக்கு பள்ளி பருவம் முடியும்வரை மலையடிவாரபகுதிகள் சில மைல் தூரத்தில் சென்றடையக்கூடியதாய் இருப்பினும், நான் செல்ல வாய்ப்பு அமையவில்லை. கல்லூரி சமயத்தில்தான் சில நண்பர்கள் சகவாசத்தில் அதன் மலை அடிவார கிராமமான குரங்கணி வரை செல்லும் வாய்ப்பு கிட்டியது , அங்கிருந்து எத்திசை பார்ப்பினும் கண்களால் பருகி தீர்க்க முடியாத பிரமாண்டமாக உருவெடுத்திருக்கும் மலைக்குன்றுகள், ஊருக்குள் இருந்த நாள் வரையில் ஒவ்வொரு நாளும் அக்குன்றுகளை சலிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன், பிழைப்புக்கு ஊர் மாறினாலும் எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நண்பரகள் உடன்  குரங்கணி , கொட்டக்குடி மலை கிராம வழியாக சிறிதும் பெரிதுமான குன்றுகளுக்கு சென்று உலவுவதும் , அங்கிருக்கும் நீர்ச்சுனைகளில் குளிப்பதும் வழக்கமானது.

ஒருநாள் டாப் ஸ்டேஷன் (முணாறுக்கும் தமிழ்நாடு எல்லைப்பகுதிக்கும் இடைப்பகுதி) வரை செல்ல திட்டமிட்ட மலையேற்ற பயணத்தில் நண்பர் ஒருவரை பாம்பு தீண்டியதால் பாதி வழியில் திரும்பினோம். சிறு பாம்பு என்றதால் அவருக்கு ஆபத்தில்லை. அந்த பயணத்தில் என் கவனமெல்லாம் அம்மலைக்குன்றுக்கு நேரெதிரே ஒரு பிரமாண்ட வசீகர சரிவுகளும் , சோலை , புல்வெளிகளும் கொண்ட சிகரத்தின் மீதிருந்து,  அப்பொழுது மட்டுமல்ல பல நாட்கள் அதன் பிரமாண்டம் என் கண்களுக்குள் நிலை கொண்ட ஒன்று. அதன் சிகர உச்சி மட்டும் எப்போதும் காண முடியாதபடி மேகக்கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது,
 "அதுதான்டா  கொலுக்குமலை டீ எஸ்டேட் ஒருநாள் ஏறிடுவோம்" என்றான் நண்பன்.



கொலுக்குமலையின் ஏற்றுமதி தரம் வாய்ந்த தேயிலை தயாரிக்கப்படுவது பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன், உலகிலியேயே கடல் மட்டத்திலிருந்து 7000+ அடி உயரத்தில் தேயிலை விளைவிக்கப்படும் ஒரே மலைச்சிகரம் இதுதான்.சாகச விரும்பியான என்நண்பன்தலைமையில் ஏதாவது ஒரு விடுமுறை நாளை மையப்படுத்தி மலையேறிவிட அப்பொழுதே முடிவிடுத்தோம்,சில வாரங்களுக்கு முன் அப்படியொரு சந்தர்ப்பம் அமைய ஒரு குழுவாக தயாரானோம்.

வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை  செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும்
ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன்  கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும்  கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடந்தது. இது போன்ற மலைப்பயணத்தில்தான் நம் உடலின் உண்மையான வலுநிலை நமக்கு தெரியும்.




இந்த கட்டுரையின் தலைப்பான ஒற்றைமரம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும், கொழுக்குமலை வழித்தடத்தை மூன்று பிரிவாக பிரிக்கலாம் 1)அடிவார மலைக்குன்று , 2)புல்வெளிக்குன்று 3)சோலைக்காடு, கொலுக்கு மலை சிகரத்தை எவ்வளவு தூரத்திலிருந்து, எந்த கோணத்திலிருந்து  பார்த்தாலும்  இரண்டாம்  நிலையான புல்வெளி குன்றின் முகட்டில் தனித்த பெரிய ஒற்றை மரமொன்று தெரியும், எந்த மரமுமற்ற அக்குன்றில் அவ்வொற்றை மரம் மட்டும் வீம்பும் பிடிவாதமுமாக ஏன் உயிர் பிடித்திருக்கிறதென  தெரியவில்லை. பயணம் துவங்கியதிலிருந்து அம்மரத்தை சென்றடைய ஒரு உத்வேகம் இருந்துகொண்டிருந்தது, நண்பகலில் அவ்வொற்றை மரத்தை சென்றடைந்தது அதன் நிழலில் விழுந்தேன், அம்மரத்தினடியில் உணவுண்டு சிறிது உறங்கி எழுந்ததும், மனம் எடையற்று, எதுவுமற்றுமிருந்தது. பின் மீண்டும் நண்பர்களுடன் வழக்கம்போல் சிரிப்பும் பேச்சுமாக மூன்றாம் நிலையான சோலைக்காடு நோக்கி மலையேற்றம் தொடந்து, வழியில் கரங்கள் கொம்பு , கிளைகளை பற்றி மேலேறுவது போல் என் மனம் அந்த மரத்தை பற்றித்தான் அடுத்த நிலைக்கு மேலேறியது.
"கொஞ்சம் வேகமா ஏறுங்கப்பா ..." முன்னாள் சென்ற ஒரு  நண்பன்.
"நண்பா இந்த மலைப்பயணம் உடம்பால மட்டுமில்ல மனசாலயும் கடக்கணும் ..." இது நான் 
"சொன்னது இலவு இவன் காதுல விழுந்துருச்சா?" என நினைத்திருப்பான்  போல, அதன்பின் உச்சி சென்றடையும் வரை  அவன் பிறரிடம்  பேசியது என் காதில் விழாமல் பார்த்துக்கொண்டான்.
"கொழுக்குமலை எப்படி இந்த பேர் வந்துருக்கும்? ...."
"முந்தி குளிக்கட்டிமலைனு இருந்துச்சாம் அப்புறம் "குலுக்கட்டிமலை"யாகி  இப்போ "கொழுக்குமலை" னு மாறிடுச்சு..." என்றான் ஒரு பொதுஅறிவு.

சமதள பயணத்திற்கும் , மலைவழி பயணத்திற்கும் பெரும் வித்தியாசம் ஒவ்வொரு நிலை கடக்கும்போதும் அது சிறு தூரமெனினும் மலைநிலம்  நமக்களிக்கும் காட்சியின் அழகியல் தரிசனங்கள் மாறிக்கொண்டே இருக்கும், ஒருவேளை இதுதான் குறிச்சி நிலத்தின் மேல் எனக்கிருக்கும் மோகமோ?? இருக்கலாம். வழியில் ஒரு முள்ளம்பன்றியின் உதிர்ந்த உடல்முள் ஒன்றை கண்டெடுத்தேன் , அதுவரையில் அதன் முள்ளென்பது உறுதியான ரோமம் என நினைத்திருந்தேன், தவறு உறுதியான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட குத்தூசிபோல மிரட்டியது. நான் ஊன்றிநடக்கும் கழியில் குத்திச்சொருகி இந்த பயணத்தின் நினைவு பொருளாக வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணிக்கொண்டேன், சிறிது தூரத்திற்குள் அம்முள்ளை தவறவிட்டேன், வனத்தின் பொருள் வனமே மீட்டுக்கொண்டுவிட்டது. தூரமும் ஏற்றமும் எங்களின் சேமிப்பு குடிநீரை மொத்தமும் காலிசெய்தது , கடைசி இரண்டு மணிநேரம் எழத்தாழ நீரின்றி நடந்தோம், இறுதியாக இருந்த சில மிடறு நீரையும் எனக்கு கொடுத்தார்கள் நண்பர்கள். இதுபோன்ற மலையேற்றபயணத்தில் தன் சுமையை தானே தூக்க சோம்பலுறுபவர்களையும், நிழல் கண்ட இடத்திலெல்லாம் அமர்ந்து மதுஅருந்திவிட்டு பிளாஸ்டிக் குப்பைகளை வீசியெறிந்து வருபவர்களை தவிர்த்து விடுவது நலம்.


ஒருவழியாக 9 மணிநேர பயணத்திற்கு பின் கொழுக்குமலை உச்சி சென்றடைந்தோம், கடைசி திருப்பத்தில் நின்று திருப்பி, நடந்து கடந்துயர்ந்த பாதைதூரத்தை முழுமையாக பார்க்கும்போது எனக்கு உண்டானது  ஒரு ராஜபோதை. இதுபோல மலைப்பயணத்தின் போதை எனக்கு எதிலும் கிடைப்பதில்லை. இப்பொழுதுமட்டுமல்ல எந்த மலைப்பயணத்திலும் இறுதி நிலையில் ஒருமுறை கடந்து வந்த பாதையை பார்த்து எனக்குள் பதிந்து கொள்வேன், பின்னொருநாளில் முதுமைமுதிர்வில் ஒரு குவளை தண்ணீருக்கு கூட எழுந்த நடக்க முடியாத தருணங்களில் என் கால்கள் நடந்து கடந்த இந்த தொலைவு நினைவில் வந்து, இறுதியான ஒரு மகிழ்ந்த கண்ணீர்துளியை எனக்களிக்கலாம். கொலுக்குமலையில்  உணவுடன் ஒருநாள் தங்குவதற்கான ஏற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தேயிலை எஸ்டேட் நிர்வாகமே செய்து தருகிறது, , எங்களுக்கான ஏற்பாடுகளை நண்பன் முன்னரே பேசி ஏற்பாடு செய்து விட்டிருந்தான். அங்கிருந்த முழு நாளிள் அனுபவங்களை இங்கு சொல்லப்போவதில்லை, சொர்கத்தின் தெறித்து விழுந்த துண்டு நிலம் அது. சென்றுணரத்தான்வேண்டும்.


யா. பிலால் ராஜா 
(படங்கள் : பாலகிருஷ்ணா குமார், தேனி )

Monday, March 27, 2017

பாறைக்கறி


பாறைக்கறி

 
அசைவத்தில் எத்தனையோ வகை திண்டு தீத்துருக்கோம், நெறைய பேருக்கு தெரியாத வகையொன்னு இருந்துச்சு சில சனங்கள்ட்ட   அதுதா  பாறைக்கறி, வெக்காலி  அத என்னாண்டுஇங்க  பாத்துப்புடுவோம்....
 
சென்ற நூற்றாண்டுகளில் மதுரையை மையமாக கொண்ட நிலப்பகுதிகளில் களவுக்கு செல்வதை குலத்தொழிலாக கொண்டிருந்த ஒரு சமூகம் அடர்ந்த காட்டிற்குள் ஆங்காங்கே  சிறிதும் பெரிதுமான களவுக்குடி அமைத்து  வாழ்ந்தார்கள், அந்த பகுதிக்கு அருகேயுள்ள ஊர்களின் தனவந்தர்களின் வீடுகளை உளவு பார்த்து கன்னமிட்டு(வீட்டில் புகவேண்டிய பகுதியை முன்னரே வெளிசுவற்றில் அடையாளமிடடு ), சாதகமானதொரு நள்ளிரவில் ஊர்காவல் தாண்டி வீடுபுகுந்து கொள்ளையிட்டு திருப்புவார்கள். அப்படி வெற்றிகரமாக கொள்ளை இட்டு திரும்பும்போது வழியில்  ஏதேனும் வீட்டிற்கு வெளியிலோ,பட்டியிலோ இருக்கும் ஆடு ஒன்றிரெண்டை  தூக்கி விடுவார்கள். ஒருவேளை மையக்கொள்ளை தோல்வியில் முடிந்தாலும் வெறும் கையுடன் திரும்ப மனம் வராது ஆளுக்கு ஒரு ஆட்டை தூக்கிவிடுவார்கள்.  ஆடு சத்தமிடாமலிக்க அதன் கழுத்தை வளைத்து குரல்வளையை ஒதுக்கி தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஊரைவிட்டு வெளியேறுவார்கள். சிலசமயம் கொள்ளையிட்டு வெளியேற அதிகாலையாகிவிடும்  களவு குடிக்கு தூரம் அதிகமிருக்கும் பட்சத்தில் சென்று சேர நண்பகலாகிவிடும், ஒருவேளை ஊர் விழித்துக்கொண்டு இவர்களை துரத்தினாலும் அடர் வனத்தில் பதுங்கி மறு நாள்தான் வெளியேற வேண்டியிருக்கும் அதுபோன்ற சமயங்களில் காட்டு வழியில் நல்ல பெரும் கரும்பாறை கொண்ட பகுதியை கண்டதும், தூக்கி வந்த ஆட்டை கத்தியால்  அறுத்து, ரத்தம் குடித்து தொண்டை நனைத்து விட்டு பின் கறி கழித்தெடுத்து வெயிலில் கொதிப்பேறி தகிக்கும் பாறை மீது போட்டு விடுவார்கள், வனப்பகுதியில் உச்சி வெயிலில் பாறைகளின் வெம்மை எவ்வளவு கொடூரமாக தகிக்கும் என்பது அதுபோன்ற வனப்பகுதிக்கு சென்று வந்தால்தான் தெரியும். சில நிமிடங்களில் பாறையில் பரத்திவிட்ட கறியை சிறிது தள்ளி திருப்பி போட்டு எடுத்தால் நன்கு வெந்திருக்கும், வந்திருப்பவன் யாராவது மடியில் சிறிது உப்பு வைத்திருந்தால் பாறையில் வேகும்போது தடவி விடுவார்கள், பிறகென்ன உயிர்ப்பிடித்து ஓடிவந்தவர்களுக்கு தேவாமிர்தம் மாதிரி அந்த பாறைக்கறி, இதில் ஆட்டின் ஈரல் , இதயம் , விரைகள் பாறைமீது இட்டவுடன் விரைந்து வெந்துவிடும் அதெல்லாம் முன்பசிக்கு.
பாறைக்கறி இடுவது பற்றி வைரமுத்து "கருவாச்சி காவியத்தில்" கட்டையன் கதாபாத்திரம் ஓரிடத்தில் நிகழ்த்துவதாக சித்தரித்திருப்பார்.
கிடாரி படத்தில் மைய கதாபாத்திரங்களான சசியும், வேல. ராமமூர்த்தியும் வழக்கொன்றில் சிக்கி போலீஸிடம் அகப்படாமல் வனங்களில் சுற்றிக்கொண்டிருக்கும்பொழுது வரும் "வெட்டருவா வீச்சருவா ..." பாடலின் இடையில் ஆடு மேய்க்கும் கிழவனிடம் வழிப்பறி செய்த ஒரு ஆட்டை பாறைக்கறியிட்டு உண்பதாக காட்சியொன்று வரும்.
https://www.youtube.com/watch?v=ZAtqngQh-SY )

யா. பிலால் ராஜா 

Wednesday, September 14, 2016

முதல் நாள் (சின்னஞ் சிறுகதை)

முதல் நாள்



 
முந்தய நாள் 
 
"அவனுக்கு நாளைக்குதான் ஸ்கூல் பஸ்ட் டே ,நெனப்பு இருக்குல? காலைல வேகமா வந்துருங்க எட்டர மணிக்கு ஸ்கூல்  ரிஸப்சன்ல இருக்கனுமாம் எந்த  section - னு   அங்க சொல்லுவாங்க" .
"ம்ம்... எழரைக்கே வந்துருவேன் குட்டையன ரெடி பண்ணி வை " (எங்கள் பரம்பரையில் எல்லோரும் குட்டைதான் இவன் மட்டும் எங்கிட்டு வளரப் போறான் என்ற முன் அனுமானம்தான்.) சொல்லி விட்டு இரவு பணிக்கு செல்ல தயாராக துவங்கினேன்.


முன்பொரு நாள் 
 
சென்ற மாதத்திலொருநாள்  பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் மகனுடன் விளையடிக் கொண்டிருந்தேன் , ஓடி ஆடி களைத்து அமர்கையில் நான் வானம் காட்டி
"அங்க பாத்தியா பெருசா வானத்துல ஒரு லைட்  அதுக்கு பேரு நிலா ......"
"இல்லப்பா அது பேரு மூன் ......." மழலை உச்சரிப்பிலும் தன் உறுதி (self confident) தூக்கலாக இருந்தது.
மனைவியை பார்த்தேன் பெருமிதமாக சிரித்துக்கொண்டே "பக்கத்துல கிரேஸ் மெட்ரிக்குலேஷன்ல  கேட்டுட்டு வந்துட்டேன் இன்னும் ஒருவாரத்துல அட்மிஷன் ஆரம்பிச்சுருமாம் அமௌண்ட் ரெடி பண்ணிக்குங்க... "
குறிப்பிட நாளில் அவளாகவே சென்று நன்கொடையிளிருந்து பள்ளிக்கட்டணம் வரை பேரம் பேசி LKG யில் ஒரு இடமும் பெற்று வந்துவிட்டாள்.

முதல் நாள்
 
இரவு பணி முடித்தது இன்று விரைந்து வீடு சேர்ந்தேன் குட்டையன் குளித்து முடித்து சுமாரான நிறம் கொண்டதொரு அப்பள்ளியின் சீருடை அணிந்து "அப்பா நான் ஸ்கூலுக்கு போகப்போறேன்........ஸ்கூலுக்கு போகப்போறேன்...." 31/2 வயதுக்கே உரிய பிள்ளை மொழியில் சொல்லிக்கொண்டிருந்தான். சில மாதங்களுக்கு முன்னெல்லாம் தெருவில் பள்ளி செல்லும் சிறுவர்களை காட்டி "நீயும் கொஞ்ச நாள்ல இப்படி ஸ்கூல் போகணும்"னு சொல்லும்போது நம்மை எங்கோ அனுப்பி போகிறார்கள் என பீதியடைந்து தெருவில் சீருடையுடன் பிள்ளைகள் போனாலே  " நான் ஸ்கூல் போமாட்டேன்.. போ ...."என பிதற்ற தொடங்கினான். என்னடா இது வம்பா போச்சு என்று,
 "ஸ்கூல் போனாதான் வெளையாட நெறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க, மிஸ் புது கேம் சொல்லித்தருவாங்க , ஊஞ்சல் சறுக்கு எலாம் இருக்கும்.." என சொல்லிச் சொல்லி வகுப்பறை என்ற குருஞ்சிறையை அடிக்கடி நாங்கள்  செல்லும் பூங்காவாக அவனுக்கு  நிழலாட வைத்தேன். "சாப்பிட பிரயாணி கூட தருவாங்க .....". என்றெலாம் சொன்னபின்தான் இன்று சிரித்துக்கொண்டே தயாராகி நிற்கிறான்.14 மாத குழந்தையிலேயே 1 கிண்ணத்து பிரியாணி தின்று செரித்தவன் என்பது உபரி தகவல் . எனக்கு தெரியும் உண்மையான சவால் நாளையிளிருந்துதான், பள்ளி செல்ல முரண்டு பிடிக்கப்போகும் அவனுக்கும் , தரதரவென இழுத்துச் செல்லப்போகும் எனக்கும்.

தயாராகி வாசலில் புது ஷூ அணியும்போதுதான் கவனித்தேன் சில நிமிடங்களுக்கு முன்வரையிலான உற்சாகமும் சிரிப்பும் வடிந்து நம்மை எங்கு விட்டு வர போகிறார்களோ என்ற  ஒரு பீதி கலந்த சோகம் அவன் முகத்தில் பரவியது. ஒவ்வொரு நாளும் பொழுதும் எங்களுடனே கழித்தவன் இன்று முதல் பல மணி நேரங்கள் எங்களின் பார்வையை விட்டு விலகி விடுவான், நினைக்கையில் இதுவரை இல்லாத அடர் பாரமொன்று என்  மனமேற துவங்கியது. இவன் பிறந்தத்திலிருந்து மகனென்ற பொது பாசம் கடந்து என் இன்னொரு பிரதியாக , ஆன்மாவின் மற்றோரு பிம்பமாக உணர்ந்திருந்தேன். என் மனம் அவனில் புகுந்து அவனின் ஒவ்வொரு அசைவின் வழி பசி, தாகம், வலி, சிரிப்பை உணரத்துவங்கியிருந்தது.

இதுவரை என்னை  சுற்றி சூழ் கொண்டிருந்த அவனுலகம் இன்றுமுதல் சூலுடைத்து வேறொரு திசையில் முதல் அடி வைக்கப்போகிறது. எனக்கும் அவனுக்குமான கூட்டுப்புழு தருணத்தை காலம் இனி மறுபடியும் அனுமதிக்காது என்று நினைக்கும்போது மனமெங்கும் எழுதிக்காட்ட முடியாதவொரு வலி பரவியது.  அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை நானும் என் மனைவியும் அழைத்துக்கொண்டு , ஒரு கனத்த மௌனம் நிழலாக பின்தொடர  பள்ளி சென்றடைந்தோம்   அவனுக்கான  வகுப்பின் முன் நின்றிருந்த ஒரு இளம் ஆசிரியையிடம் கைமாறினான். முன்னரே அவ்வகுப்பறையில் பல சிறார்கள்  சிரிப்பு, அழுகை, சோகம், மிரட்சி என ஆளுக்கொரு உணர்வுடன் அமர்ந்திருந்தனர்.  ஆசிரியை அவனை கைப்பற்றி ஒரு இருக்கை நோக்கி அழைத்து செல்கையில் அவன் திரும்பி என்னை பார்த்து 
" அப்பா நீயும் ........."
சொல்வது முழுமையாக என்னை வந்தடைவதற்குள் என் மனைவி என் கை பற்றி வேகமாக அவ்விடம் அகற்றி,
 "இனி நம்மள அங்க பாத்த உள்ள உட்கார மாட்டான் அழுது ஊர கூடிருவான் ..............." என்றாள்.
அவன் சொல்ல வந்தது என்னவாக இருக்கும் ? அவன் நிச்சயம் என்னையும் வகுப்பில் அவனுடன் அமரத்தான்  அழைத்திருப்பான். அவனுடனே சேர்ந்து வாழ்வை மீண்டும் வாழும் வரம் கிடைக்காத? கடவுளை நம்பாத எனக்கு யார் வரம் தரப்போகிறார்கள் ? கண்ணீர்த்திரையால் சாலை மங்கலாக தெரிந்தது, வீடு நோக்கி செல்லாமல் ஏதேதோ சாலைகளில் இலக்கில்லாமல் இருசக்கர வாகனம் செல்ல துவங்கியது பின்னாலிருந்த என் மனைவி அன்று மட்டும் எங்கு போகிறோம் என கேட்கவில்லை  .
 
 
யா. பிலால் ராஜா 











Tuesday, January 19, 2016

கைதட்டல்

   
முடிவு செய்திருப்பினும்  சற்று திகைப்பாய் இருந்தது
கைதட்டலை எப்படி கவிதையாய் எழுதுவதென்று....
கைதட்டலை பற்றி கவி எழுத குறைந்தபட்சம் 
ஒரேயொரு  கைதட்டலாவது என்னுடனிருக்கவேண்டும்
அதன் இருப்பிடம்  யாருக்குத்தெரியுமென்று தெரியவில்லை
இப்பெருநகரத்தில் அதன் முகவரி உங்களுக்குத் தெரியுமா?
கைதட்டல் கணங்களை எப்படி சேமிப்பது?
கைதட்டலை புரிந்துகொள்வது புதிராயிருந்தது
ஒருவேளை.....
நம்  கைகளில் மாயவிரலைப்போல முளைத்திருக்கலாம்
காணமுடியாத கைரேகைகளிலொன்றாக மாறியிருக்கலாம் 
வரவேற்ப்பறை சுவர்களில் சட்டமிட்டு மாட்டப்படிருக்கலாம் 
சபைகளில்  இருக்கையினடியிலும் ஒளிந்துகொண்டிருக்கலாம் 
மீள்நினைவுக்கு வராத ஒரு கனவாக கலைந்திருக்கலாம்
மேகம்போல் விண்ணில் எங்கோ சேகாரமாகிக்கொண்டிருக்கலாம்
 
எதிர்வரும்  விடுமுறை  நாள் ஒன்றில்
இந்த கவிதைக்கான கைதட்டலை
நகருக்குள் தேடிக்கண்டடைய திட்டமிட்டுக்கொண்டே
கண்ணயர்கையில்  
 
தட்..தட்...
தட்..தட்...
 
கதவு தட்டப்படும் ஓசை
திறந்து பார்த்தேன்
இருளைத்தவிர யாருமில்லை
 
தட்..தட்...
தட்..தட்... 
 
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை
மீண்டும் திறந்து பார்த்தேன்
மீண்டும் இருளைத்தவிர யாருமில்லை
 
ஒருவேளை
கதவைத்தட்டியது   இந்த கவிதைக்காக
நான்  தேடுமொரு கைதட்டலாக இருக்குமோ?


யா. பிலால் ராஜா

 

Monday, May 25, 2015

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு




அணை வந்தடையும்
வெள்ளம் போல்
எங்கோ பெருவெளியிலிருந்து
பெருக்கெடுத்து வரும் முத்தங்கள்
வேக வேகமாக
என்னில் நிரம்பின

அபாய மட்டம் தாண்டி
முழுக்கொள்ளளவை எட்டி
என்னில் தளும்பித்தெறித்தன
முத்தங்கள்......

கடலினும் பெரிய
இந்த முத்ததேக்கம்
அழுத்தம்தாளாது
என்னுடல் செல்களின்
நுண் இடைவெளியில்
பீறிட்டு கசியத்துவங்கியது

என்றாவதொருநாள்
இவ்வழுத்தம்
என்னை முழுமையாக
உடைத்துவிடக்ககூடுமென்பதால்
முத்தங்களை வெளியேற்றும்
ரகசிய மதகினை
என் புலனெங்கும் தேடினேன்

மதகினை கண்டடையமுடியா களைப்பில்
கண்ணயர்ந்தபோது
கனவில் வந்த
குருட்டு சர்ப்பம் வழி காட்ட
கண்டடைந்தேன் அம்மதகினை

முத்தத்தின் அழுத்தங்கள்
அம்மதகின் வழி வெளியேற்றும் போதுதான்
உணரத்துவங்கினேன்
புதிய முத்தப் பெருவெள்ளமொன்று
முன்னைவிட அடர்வேகமாக
என்னில் நிரம்புவதை  

யா. பிலால் ராஜா  

Thursday, December 25, 2014

கிடாச் சண்டை

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 
 
 
 
 
        காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது " வர்ரீங்களா கூடல்நகர் தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்" என்றார் என் மாமா ஆர்வமாக கிளமபிக்கொண்டே, அவர் ஆர்வத்தில் என்க்கு வியப்பேதுமில்லை, வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா , சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில்
கட்டிவிட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசகரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்பட்ட ஒருகிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு "ஆடுகளம்" படத்தின் பல காட்சிகள் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. இன்றுதான் வளர்ப்பு பிராணிகளின் சண்டை நிகழ்வை முதல்முறை பார்க்கசெல்கிறேன். அனால் வழியெங்கும் இப்படியொரு நிகழ்வுக்கான தடயம் ஏதுமில்லை.
"என்ன மாமா வழியில் ஒரு போஸ்டர் flex எதயும் காணோ",
"இல்லங்க, இது சட்டபடி நடத்த அனுமதியில்ல, போலீஸ் முறைப்படி இதுக்கு அனுமதிக்காது அதுனால விளம்பரம் இல்லாம நடக்கும் "
"அதுஎப்படி மாமா இவ்வளவு பேரு கூடுறது இந்த ஏரியா போலீஸ்க்கு தெரியாம இருக்காதே"
"தெரியு ஆனா முன்னாடியே இதநடத்துரவிங்க,ஏரியாவோட பெரிய தலைக்கட்டு எல்லா சேந்து போலீஸ்-அ பேசல்-அ கவனிச்சுருவாங்ய
இது முடியிறவரைக்கும் யாரும் அந்தப்பக்கம் வர மாட்டாங்க"
சிறிது காலத்திற்கு முன்னாளில் "கம்மாய்"ஆக இருந்திருக்கலாம் என நினைக்கவைக்க்கூடிய ஒரு தாழ்வான பொட்டல் பகுதிக்கு
வந்து சேர்ந்தோம், அந்த அதிகாலையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறு சிறு கும்பலாக அங்காங்கே கூடி நின்றுகொண்டிருந்தார்கள். வண்டியை
ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கி செல்லும் போதுதான் கவனித்தேன் ஒவ்வொரு சிறு கும்பலுக்குல்லும் தடித்த கொம்புடனும், அலங்காரத் தோரணையுடனும் கடாக்கள் நின்றுகொண்டிருந்தன. shar ஆடோக்களிலும், குட்டியானைகளிலும் (TATA ASA ) விதவிதமான ஆடுக்கிடாக்கள்
வந்திரங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிடா வந்திறங்கியதும் அதைச்சுற்றி ஒரு கூட்டம் உடனே கூடிவிடும்.
"நம்ம ஓச்சு கெடாக்கு எதுத்து நின்ன 10 அடிக்கு தாங்கதப்பா இது"
"கலரா இருக்கணுங்கதுக்காக எதுக்கப்பா இம்புட்டு பெயிண்ட்ட மேல ஊத்தி வச்சுருக்கீக?"
"என்னடா கொம்பவெ காணோ, எதக் கொண்டிடா முட்டும்"
இதுபோன்ற சொல்லாடல்கள் அந்த வறண்ட கம்மாயெங்கும் நிரம்பத்தொடங்கின.

 
அதுவரை கசாப்பு கடைகளிலும், கிராமத்து ஆட்டுக்கிடையிலும் பார்த்த  மிகச்சாதுவான ஆட்டுஇனம் அன்று பகட்டாக அங்கு கூடியிருந்தது. கசாப்பு கடைக்காரர் கழுத்தில் கத்திவைத்து அறுக்கும்போதுகூட எதிர்ப்பு காட்ட தெரியாத இவைகள், இங்கு முரட்டு கொம்புடனும் ஒருவித திமிர் கலந்த  வலுவுடலும் கொண்டு நாம் அருகில் செல்வதற்கு ஒருவித அச்சத்தை உருவாக்கி வைத்திருந்தது. முக்கியமாக அதன் பெரிய சுருண்டு வளைந்திருந்த கொம்பின் முனைகளில் துளைகளிட்டு அதிலிலும் கயிறு கட்டி, பாதுகாப்பாக யாரவது ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளாட்டு வகையறாக்கள் இந்த சண்டை இனத்தில் சேராது, செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. கூடியிருந்த ஒவ்வொரு ஆட்டின் விதவிதமான முரட்டு கொம்புகள்தான் என் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. உண்மையில் இவைகளுக்கும் மற்ற ஆடுகளைப்போல சராசரி அளவுள்ள கொம்புகள்தானிருக்கும், சண்டைக்காக வளர்க்க முடிவு செய்துவிட்டால் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள், பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் இப்படி மூன்றுமுறை உடைத்தபின் வருவதுதான் சண்டை கிடாக்களில் நாம் பார்க்கும் முரட்டுக்கொம்பு. உசிலம்பட்டி வட்டாரம் இப்படி முரட்டுக்கொம்பு கிடாக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றபகுதி. அங்கிருந்த அனைத்து சண்டை ஆடுகளும் தன்னுடல் ரோமத்திலும் கொம்பிலும் விதவிதமான வண்ணங்களை பூசியிருந்தான. சில ஆட்டின் கொம்பில் அப்பகுதியின் ஜாதி,அரசியல் கட்சியின் கொடிநிறத்தை குறிக்கும் வண்ண நாடக்கள் சுற்றப்பட்டிருந்தன. பெரும்பாலானவற்றின் நெற்றியில் வட்ட மற்றும் நெடிய திலகமிருந்தது. நாமமிட்ட ஆடெதுவும் கண்ணுக்குபடவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆடுகளில் இரண்டு மட்டும் பச்சை வர்ண கொம்பை கொண்டிருந்தன. சாதாரண ஆடுகளுக்கான உணவு இவைகளுக்கு போதாது, உளுந்ததூசு அரைத்த புண்ணாக்கு கடலை புகட்டவேண்டும். தினமும் நடைப்பயிற்சியும், ஏரி, கம்மாய்களில் நீச்சல் பயிற்சியும் இவைகளுக்கு அவசியம் அப்போதுதான் கொழுப்பற்ற உடலும், நிலைத்தன்மையும் (stamina) இவைகள் பெறமுடியும்.
 



 கையிலுள்ள கேமராவால் சில ஆடுகளை புகைப்படம் எடுதுக்கொண்டிருக்கும்போதே, சிலரின் "இங்க கொஞ்சம் பெரிய வாட்டமா போடுங்கப்பா" என்ற உரத்த உத்தரவால் கூட்டம் ஓரிடத்தில் வட்ட வடிவில் கூடியது, போட்டியை நடத்தும் நடுவர்குழுவில் இருவர் களத்தில் நின்றுகொண்டு வளர்ப்பாளர்கள் கொண்டுவந்து ஒப்படைக்கும் ஆடுகளில் இரண்டிரண்டாக மோதவிடதுவங்கினார்கள். சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல "மடார்" "மடார் " என்ற ஓசை தெறிக்க மோதிக்கொண்டன.  அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன, சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரதுவங்கியது , சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது ஆனால் 50 முட்டல்கள் தான் ஒருபோட்டிக்கு அனுமதி அதனையும் தாண்டி அவைகள் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று துரமாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள், அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிட தோற்றதாக அறிவிக்கப்படும். " இத கைக்கிடா விடுரதுனு சொல்லுவாங்க" என்றார் ஒருவர். சில கிடாக்கள் முர்க்க மோதலில் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிய வெளியேறிக்கொண்டிருந்தது. இது மனிதர்கள் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டையை ஒத்திருந்தது. மனிதன் திட்டமிட்டு மோதிகொள்கிறான். இவைகள் விருப்பமின்றி இனமோதலை நடத்திக்கொள்வதாக தோன்றியது. சுமார் ஒன்னரை மணி நேரத்திற்குள் அனைத்து கடாக்களும் மோதவிடப்பட்டு போட்டி முடிவடைந்தது. சண்டையில் வென்ற கடா உரிமையாளர்கள் வெற்றிக்கூச்சலுடன் பரிசு பணத்துடன் கிளம்ப துவங்கினார்கள், ஒரு தோற்ற கிடாக்காரர் "மாப்ள நாளைக்கு நம்மவீட்ல கறிக்கஞ்சி, அவசியம் வந்துருயா..." என்று தன் ஆடின மீதான விரக்தியை யாரிடமோ வெளிக்காட்டிக்கொண்டு கிளம்பினார், ஆனால் தோற்றாலும் வென்றாலும் அவைகள் நிச்சயம் தாளமுடியாத வலியுடனும் சோர்வுடனும்தான்  அந்த மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கும்.
 
https://www.youtube.com/watch?v=ICAyIS8z_NU&t=16s
யா. பிலால் ராஜா