Tuesday, March 6, 2012

எதிர்இசைப்பாடகன் - பாடகர் கைலாஷ் க்ஹெர்


This Article published in "Uyirosai" e-magazine- 05-03-2012 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5346


                பசி, காதல்காமம்  போல இசையும் உணரத்தான்முடியும், ஒருவர் மற்றவர்க்கு உணர்த்த முடியாது என நினைகிறேன். ஆனால் அறிமுகம் செய்ய   முடியும். நான் ரசித்த ஓர் வடஇந்திய  இசை ஆளுமை பற்றிய அறிமுகம்தான் இந்த கட்டுரை.

பள்ளி வயதிலிருந்து சினிமாசார்ந்த ஒரு இசைதொகுப்பு வெளிவந்தால் அது A R ரஹ்மானின் இசை தொகுப்பு என்றால் உடனே எப்படியாவது வாங்கியோ, மியூசிக்கல்ஸ்   வைத்திருப்பவர்களிடம் நட்புகொண்டோ கேட்டுவிடுவது வழக்கம், ஒவ்வொரு தொகுப்பிலும் புதிய பாடகர்கள், திறமையான இசைக்கலைஞர்கள், புதுமையான தாளஒலிப்பதிவு   அறிமுகம் நிச்சயம் இருக்கும். என் பள்ளிப்பருவத்திலிருந்து அவர் இசையின்மொழி எனக்கு பரிட்சயம் என்பதால் கடந்த 15 + ஆண்டுகளில்  என் கொண்டாட்ட தருணங்களில்  அவரின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு.
பெங்களூரில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் சில உடைகளை தவிர்த்து வறுமையும், வெறுமையும் எப்போதும் உடனிருந்தது, அப்போது  ரஹ்மான் இசையில் லகான் பட இயக்குனர் அஷுடோஷ் கோவரிகர்-ன் இயக்கத்தில்  swadesh என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆகிருந்தது, அப்போது நானிருந்த சுழலில் பாடல் கேட்ப்பதற்கோ, டிவி பார்ப்பதற்கோ வாய்ப்பில்லை,  அதனால் ஒரு நல்ல தியேட்டரில்  படம்/பாடல்  பார்க்கலாமென்று  பெங்களூர் PVR -இல் சென்று பார்தேன். அந்த  சமயத்தில் டிக்கெட் விலையான 120 ரூபாய்க்கு  என் பட்ஜெட்டில்  பணம்  ஒதுக்கியது  ஒரு  குட்டி  சாகசக்கதைக்கு ஒப்பானது. எதிர்பார்ப்புடன் சென்ற 
எனக்கு, படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் படக்கதையில் எந்த  ஈர்ப்புமில்லை,
ஆனால் பாடல்கள் ரசிக்ககூடியதாக இருந்தது, படம் முடிந்த பின்,  இந்த இசைத்தொகுப்பில் சற்று புதுமையாக  நான் உணர்ந்தது, படத்தில் முதல் பாடலில் (Yun Hi Chala Chala... ) ஷாருக் தன் சொந்த  ஊருக்கு செல்லும் வழியில் ஒரு வழிப்போக்கனை தன் வாகனத்தில் அழைத்துச்செல்லுவார். அப்போது ஷாருக் உதித்நாராயண் குரலிலும், வழிபோக்கன் ஒரு வித்தியாசமான குரலிலும் பாடக்கேட்டேன்.                                                                  



             பொதுவாக நாம், இந்திய திரைப்பட இசைச்சுழலில்   கேட்கும்  குரல்கள்  வழவழபாக, பிசிறற்ற,ரொமாண்டிக் குரலாகதான் இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மறையான இசை / குரல்  சினிமாவில்  கேட்பது  மிக அரிது,அப்படிப்பட்ட ஆளுமைகள் இந்திய நாட்டுப்புற இசைவெளிகளில் 
கணக்கற்று பரவியிருந்தாலும் வணிக திரைப்பட இசைக்களங்களில் 
அவர்களை  சிறப்பாகப்பயன்படுத்துவது மிகக்குறைவுதான். இந்த பாடலின் குரல் அப்படிப்பட்ட தனித்தன்மை கொண்ட குரலாக   எனக்குப்பட்டது,   சில மாதத்திற்குபின் நண்பர்களுடன் பெங்களூர்- இந்திரா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் அமீர்கானின்  "Mangal pandey "(இசை : ரஹ்மான்)திரைப்படம் பார்க்கசென்றேன்.(இந்த காலகட்டத்தில்  வாரத்தில்  இரண்டு  திரைப்படம் பார்க்குமளவிற்கு வசதி வந்துவிட்டிருந்தது.) படம் முடிந்து
வெளி வந்த பின்னும் "மங்கள.... மங்கள..." என்ற பாடல் மீண்டும் மீண்டும் எனக்குள் கேட்டு கொண்டே இருந்தது, காரணம் swadesh பாடலில் கேட்ட அதே  வித்தியாசமான குரலின் ஈர்ப்பு. இந்த படத்தின் முன்று சுழலில்  இப்பாடல் வருகிறது. மொழி எல்லைகளைக்கடந்து பாடல் கேட்கவும்  பழகியிருந்ததால் பீகார், ஒரிசா, பெங்கால் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் வசித்த சமயங்களில் விடுமுறை நாட்களில்  தொழிலாளர்கள் அனைவரும் டோல் இசைத்துக்கொண்டு வட பிராந்திய  நாட்டுப்புற பாடல்கள்பாடுவதை கேட்டு ரசித்திருக்கிறேன். என்  அறையில்  என்னுடன் தங்கியிருந்த  மராத்தி ஒருவர் மராத்திய நாட்டு புறபாடல்களை பாடுவதில் ஆர்வம் உள்ளவர், அவரிடம் "மங்கள.... மங்கள..."  பாடலின் பாடகரை பற்றி கேட்டபோது, அவர் பெயர்கைலாஷ் க்ஹெர்என்றும் வடஇந்திய நாட்டுப்புற, சுபி இசை பாடல்களை பாடுவதில் புகழ் பெற்றவரென்றும் எனக்கும் அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார். "வடஇந்திய நாட்டுப்புற இசைவடிவம்" என்று நாம் பொதுவாக சொல்லிவிட்டாலும், என் கேட்பனுபவதில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஒரிசா முக்கிய மாநிலங்களின் நிலவியல் அடிப்படையில் நாட்டுப்புறபாடல்களில் நிறைய  வேறுபாடுண்டு  கைலாஷ் க்ஹெர் -ன் குரல் இவை அனைத்திற்கும் பொருந்தக்கூடியாது
என நினைக்கிறேன். இந்தக்கட்டுரையை பகிரத்தூண்டிய  மங்கள... மங்கள...  பாடலை   கீழ்   கொடுத்துள்ள   கண்ணோளியில் கேட்டுப்பாருங்கள். 
(http://www.youtube.com/watch?v=3-a_gabfEXA)



என்னை பொறுத்தவரை இந்தக்கட்டுரையில் நான் குறிப்பிடும் பாடல்களை கண்ணொளியில் காண்பதைக்காட்டிலும்  அந்தந்த இசைத்தொகுப்பினை முழுவதும் பதிவிறக்கம் செய்து கேட்பது கைலாஷ் க்ஹெர்-ன் குரலாளுமையை முழுவதும் உள்வாங்க உதவலாம்.
பின்நாளில்  இணையத்துடன் இணக்கமாக இருந்த காலங்களில் அவரால் பாடப்பட்ட பல பாடல்களை கேட்டேன். 1973 - ல் மீரட்டில் பிறந்த இவர் வியாபார தோல்வி கண்டபின் இசை ஆர்வமுள்ள நண்பர்களுடன்  இசைத்துறைக்கு வந்தவர், 2002 ல் Andaaz என்ற படத்தில் முதல் பாடல் பாடினாலும், Waisa Bhi  Hota Hai என்ற படத்தில் சூபி இசை சாயல் கொண்ட  Allah ke Bande என்ற பாடல் மூலம்தான்  இவர் குரல் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். (http://www.youtube.com/watch?v=9Ered22Xy4E&feature=related )

 இக்கட்டுரையில் கொடுத்திருக்கும் பாடல்களை அலுவலக அவசரத்திலோ, மொழியை முதன்மைபடுத்தியோ, வழக்கமான டூயட் பாடல் அளவுகோலுடனோ ஒப்பிடாமல் கேட்டுபாருங்கள். இவரின் பாடல்களில் அடிப்படை சூபி இசை வடிவமே பெரும்பான்மையாக காணப்படுவதால், இந்தியாவின் முக்கிய சூபி இசை பாடகராக கைலாஷ் முன்னிலைப்படுத்தப்படுகிறார். திரைப்படங்களில்
 பாடிக்கொண்டிருந்தாலும் தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து 
இசைத்தொகுப்புகளை கொண்டுவருவதுதான் இவரது ஆர்வமாக இருக்கிறது.
 2006 -ல் வெளிவந்த 'kailasa' என்ற தொகுப்பிலுள்ள 'Teri Deewani ' என்ற பாடல் எப்போதும் என்  விருப்பத்திற்குரியது. கைலாஸ்-ன் பாடல்களில் குரல் மற்றும் மெட்டமைப்பிற்கு பின் முக்கிய  இடம் பிடிப்பது நரம்பிசை கருவியான   'கிடார்' தான்.
  
(http://www.youtube.com/watch?v=B6CqANW49J0&feature=related)
 'டெல்லி-6 ' படத்தில் 'Arziyan ' என்ற அதிஅற்புதமான சூபி  இசைப்பாடலில்  kailash kher  குரலும் கலந்திருக்கும். தமிழில்  G.V. பிரகாஷ் குமார்  இசையில் 'வெயில்' படத்தில் 'வெயிலோடு விளையாடி......'-யதில் இவர் குரலும் ஒன்று. இவரின் இசைத்தொகுப்பின்  பாடல்வரிகளை  பெரும்பாலும் இவரே  புனைகிறார். சென்ற மாதம்' Rangeela 
என்ற தனது புதிய இசைதொகுதியை வெளியிட்டிருக்கிறார். இந்தகட்டுரையின் நோக்கம் அடுத்து வரும் முற்றுப்புள்ளியுடன் நீங்கள் 
படித்து  முடித்து விடுவதல்ல, கைலாஷ் கஹெர்-ன் இசையை நீங்கள்   இக்கட்டுரையின்    கண்ணொளி தவிர்த்து  மேலும் தேடிக்கேட்பதுதான்.

யா. பிலால் ராஜா
  


 

Monday, February 6, 2012

வெற்றிலைக்குறிப்புகள்

This Article published in "Uyirosai" e-magazine- 06-02-2012 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5252

 
"தேங்காய் எண்ணையில் ஒரு  வெற்றிலையும் கிராம்பும்,வெந்தயமும்  சேர்த்து 
சூடுபடுத்தி உடலில் தேய்த்து பின் ஊற வைத்து  குளித்தால்  சருமம் பளபளப்பாகும்"  ஒரு தினசரியின்  ஞாயிறு  இலவச  இணைப்பில்  இதனை   படித்ததும்  கடகடவென காரியத்தில் இறங்கினேன். இதுபோன்ற  செலவு  குறைந்த தேகபராமரிப்பு என்றால் ஆர்வமாக செய்வேன். தெருமுனைச்கடைக்கு சென்று 50 பைசாவிற்கு வெற்றிலை  கேட்டேன், கடைக்காரன் என்னை கொஞ்சம் "இறங்க" பார்த்தான் (நான் கொஞ்சம் குட்டை என்பதால் "ஏற இறங்க" பார்க்க அவசியப்படாது.) "தம்பி முன்ன பின்ன வெத்தல வந்குனதில்லையா? 3 வெத்தல ஒரு ரூபா " என்றார். இப்போதெல்லாம் கண்ணில்படுவதையெல்லாம் கட்டுரையாக்கிவிடுவதாலும், பள்ளிவயதில், என் தந்தையின் சிறுவியாபரகடையில் வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்த அனுபவத்தகுதி இருப்பதாலும், வெற்றிலை வாங்கிகொண்டு ஒரு முடிவுடன் வீடு வந்தேன். முடிவு?.... வேறன்ன, இனி நீங்கள் படிக்கப்போவதுதான். 


இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது  எனது அரைக்கால்சட்டை  வயதில்(90' களின் துவக்கம்)  என்தந்தையின் கடையில், வியாபாரத்தை வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்த  எனக்கு, அவர் கொடுத்த முதல் வேலை வெற்றிலைத்தட்டில் ஒழுங்கற்று கிடந்த வெற்றிலைகளை சீராக
அடுக்குவதுதான். அடுக்கிமுடித்தபின், "இதுக்கு நீ அடுக்காமலேயே இருந்திருக்கலாம்" என்றார்.  பின்னாளில்தான்  வெற்றிலைவியாபாரிகள் கைகளில் கொத்தாக வெற்றிலையை எடுத்துக்கொண்டு வட்டத்தட்டுகளில்  சீரன வரிசையில் அடுக்கும் அழகியலை கவனித்தேன். எனக்கு அந்த வியாபாரிகளின் விரலின் கட்டளைக்கு அவ்விலைகள் கட்டுபடுகின்றன என்றே நம்பத்தோன்றியது.  கடையில் நின்றுகொண்டிருக்கும்போது எனது கையும் வாயும் சும்மா இருக்காது, அடுக்கிவைக்கப்பட்டுள்ள வெற்றிலையின் காம்பை ஒவ்வொன்றாகக்கிள்ளி மென்றுகொண்டிருப்பேன், "வெத்தல காம்புலதான் 2 நாளுக்கு அது வாடாம இருக்கவேண்டிய நீர்சத்து இருக்கும், அத ஒடிச்ச சாயங்காலத்துக்குள்ள வாடிரும்பா" என ஆரம்பித்து தாவரவியல் வகுப்பெடுக்கத்துவங்கிவிடுவார்  என்தந்தை. அப்பொழுதெல்லாம் ஐம்பது பைசாவிற்கு 5 வெற்றிலையும் 5 பாக்கும் தருவோம் ( தலா 25 பைசா வீதம்). இப்பொழுதெல்லாம் பொருட்களைக்காட்டிலும் பணத்தின் மதிப்பு வேகமாக  குறைந்துவருவதால்   எந்த சிறுகடையிலும் சென்று "அண்ணே ஒரு ரூபாய்க்கு .........."  என  ஆரம்பிக்கும்போதே  ஏளனமாக பார்க்கிறார் கடைக்காரர்.







முன்பெல்லாம் வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுள்ள வயதாளிகள்   ஊர்ப்புறம்,  மற்றும் கிராமபுறங்களில் அதிகம் இருந்தார்கள். வெற்றிலை  வாடையும், அதனை இடிக்கும் கைஉரல் ஒலியும் வயதானவர்கள் வாழும் அடையாளமாக கிராமப்புற வீடுகளில் அப்பியிருக்கும். இப்பொழுதெல்லாம்  எழுபதுகளைக்கடந்த   வயதாளிகள்  அருகிவிட்டனர். அவர்களின்  அடையாளமான  வெற்றிலை வாசனையை காலம் தன் கைகளால் கரைக்கத்தொடங்கிவிட்டது. கல்யாணவீடு, கூட்டவிருந்துகளில் வெற்றிலை, பாக்கு  பழக்கமுள்ளவர்களுக்கு விருந்தென்பது உணவுண்டபின் வாழை இலையை மூடுவதுடன் முடிந்துவிடாது,  வெளிப்புறத்தில்  நரைகூடியவர்களேல்லாம்  நிழல்தேடி வட்டமாக அமர்ந்து வெற்றிலை மெல்லுவதில்தான் முடியும். அதுபோன்ற சமயங்களில் நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்து அந்த தாம்பூலம் தயாராவதை ரசிப்பேன்.

இருவிரலால் வெற்றிலையை எடுத்து
வெள்ளைவேட்டி மடியில் முன்பின் துடைத்து
நுனிக்காம்பு நுனிஇலை கிள்ளி
நடுவிரல் சுண்ணாம்பு அடியிலை தடவி 
பாக்கிட்டு மடித்து 
வாயிலிட்டு குதப்பி 
உமிழும்போது உற்றேடுக்கிறது  
விருந்தின் சுவை.

வேறொன்றுமில்லை, தேர்ந்தவர்களால் செய்யப்படும் தாம்பூலம் ஒரு
கவிதைக்கு ஒப்பானது என சொல்ல முயற்சித்தேன்.

சித்த, நாட்டுப்புற வைத்தியங்களில்  சிறப்பான  இடம் கொண்ட  வெற்றிலை, நம்சமூகத்தில் பாக்கு, புகையிலை போன்ற போதை/தீமை பயக்கும் பொருளுடன் சேர்த்துதான் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. (வெற்றிலை ஒரு சிறந்த  விஷ முறிவு,  ஜீரண/ இரைப்பை  சிக்கலுக்கு மருந்து  என்பது எல்லோருக்கும் தெரியும்). அதிலும் வழிபாட்டு/சம்பிரதாய/
ஜாதக/ஜோதிட தளங்களில் வெற்றிலை தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. எங்கள் கடைக்கு அருகில் ஒரு ஜோதிடர் ஒருவர் குடில் அமைத்திருப்பார். அங்கு ஜோதிடம் பார்க்க வருபர்களை முதலில் தட்சணையாக எங்கள் கடையில்தான்  வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி வாங்கிவரச்சொல்லுவார்,  மாலையில் அவரிடம் குவிந்துவிடும் வெற்றிலைகளை எங்களிடமே கொடுத்துவிட்டு பதிலாக வாரப்பத்திரிகை ஏதாவது வாங்கிக்கொள்வார். சில வருடங்களுக்கு முன்  எனது திருமண  அழைப்பிதழ்  கொடுக்க என் நெருங்கிய உறவினர் ஒருவரை தேடிச்சென்றேன், அழைப்பிதழை எடுத்து அவரிடம் கொடுக்கும்போது, "என்னயா மாப்பிள, தட்டுல வெத்தல பாக்கோட வச்சு அழைச்சாதானய்யா 
 மரியாத" என்றார் சிரித்துக்கொண்டே.  எனக்கும், என் அழைபிதழுக்குமான
அங்கீகாரம் அந்த கணம் சில வெற்றிலையிடம்தான் இருந்தது.



இந்த வெற்றிலை இனத்தின் விளைமூலம் மலேசிய என்று படித்திருக்கிறேன். தமிழகத்தில் கரூர், கும்பகோணம் பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படும்  இவை ஒரு  கொடியிலை தாவரம். தென்பகுதியில் சோழவந்தான், வடுகபட்டி, ஜெயமங்களம், போடி - மீனாட்சிபுரம் பகுதியில்  அதிகம் பயிரிடபடுகிறது. எங்கள் பகுதியான தேனி மாவட்டத்தைப்பொறுத்த  வரையில் பிள்ளைமார் சமூகத்தின்  ஒரு பிரிவினரான  'கொடிகால்'  பிள்ளைமார்கள்தான் வெற்றிலை விவசாயத்திலும், வியாபாரத்திலும்
 ஈடுபட்டு வருகின்றனர். வெற்றிலை இனத்தில் பலவகை இருந்தாலும்
கருப்பு வெற்றிலை,வெள்ளை வெற்றிலை அல்லது கற்பூர வெற்றிலை
இனம்தான் முக்கியநுகர்பொருள்.

வெற்றிலை வகைகளைக்காட்டிலும் அதனை வாங்க வரும் மனிதர்களின் வகைகள்தான் நினைவுகளில் திட்டுத்திட்டாய் சுவற்றின் மீதான வெற்றிலைக்கரைபோல   ஒட்டியிருகிறது.  அதிலும் வெற்றிலை
வாங்குபவர்களின் முகங்களை காட்டிலும் சிலரின் கைகள்தான் இன்னும்
நினைவிலிருக்கிறது. வழக்கமாக வெற்றிலை வாங்கும் ஒரு கிழவியின்
கையிலுள்ள நரம்புகள் வெற்றிலையின் மீதுள்ள நரம்புகளைக்காட்டிலும்
அடர்த்தியானதாகத்தோன்றும். பேருந்து நிலையத்தின் அருகிலிருப்பதால்
இரவிலும் எங்கள் கடை திறந்திருக்கும். அந்த நாட்களில் இரவில் பாலியல்
தொழிலாளிகள் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். வியாபாரம் செய்த
வகையில் சிலரிடம் அறிமுகமும் எனக்கிருந்தது (சத்தியமாக பேச்சளவில்  மட்டும்தான்).அவர்களில் ஒருத்திக்குமட்டும் ஒரு பழக்கமிருந்தது, அவளை அழைத்து செல்பவர்கள் பணத்துடன் வெற்றிலையும்,  பான்பராக்கும்  கட்டாயம்  கொடுக்கவேண்டும். சில சமயம் அவள் இந்த வெற்றிலைக்காக சிலரிடம் சண்டையிடுவாள். அந்த பெண் ஏன் வெற்றிலை மெல்லும் பழக்கத்தில் இவ்வளவு ஆர்வமாக இருந்தாள் என்று தெரியவில்லை.  சில கிராமத்துப்பெண்கள் வாயும் பற்களும் நிரந்தரமாக வெற்றிலைக்கறை
கண்டிருக்கும். பெண்களுக்கும் வெற்றிலைக்குமான தொடர்பை
யோசிக்கும்பொழுது, வெற்றிலைக்கு ஏன் 'அந்த' வாடை வந்தது என்று சொல்லப்படும் நாட்டுபுற வாய்மொழி கதை ஒன்று நினைவுக்குவருகிறது,
(திரு. கி. ரா. அவர்களின் "மறைவாய்ச்சொன்ன கதைகள்" தொகுப்பிலும் இக்கதை இருக்கிறது)  இக்கதையின்படி வெற்றிலை இந்திரலோகத்தில் மட்டும் கிடைக்கும் வஸ்து.  ஒருமுறை இந்திரனின் அழைப்பை ஏற்று அர்ஜுனன் தேவலோகம் செல்கிறான், அங்கு அவனைக்கண்ட ஊர்வசி அவனை அடைய துரத்துகிறாள். ஆனால் அர்ஜுனன் அவளை நிராகரித்துவிட்டு பூலோகம் திரும்புகிறான். அவனை எப்படியாவது அடைந்துவிடவேண்டுமென்ற எண்ணத்தில் அங்கிருந்து பூலோகம் வருகிறாள், வரும்போது அவள் பிரியமுடன் உண்ணும் வெற்றிலையை உடன்
எடுத்துவர எண்ணுகிறாள், ஆனால்  தேவலோக  பொருட்கள்  பூமிக்கு எடுத்துச்செல்ல அனுமதியில்லை என்பதால் சில வெற்றிலைகளை
தன் அந்தரங்க மறைவிடத்தில்(அடிமடியில்) ஒளித்து வைத்துகொண்டு Security Checking, Gatepass அனைத்தையும் கடந்து பூமி வருகிறாள், ஆனால் இங்கும் அவள் எண்ணம் ஈடேர ததால்  கோபத்துடன்  மீதி  வெற்றிலைகளை உருவியெடுத்து பூமியில் எறிந்துவிட்டு தேவலோகம் சென்றுவிடுகிறாள்,
பின் பூமியில் தளிர் விட்ட வெற்றிலையில் 'அந்த' வாடை இன்றுவரை மாறவில்லை என்பதுதான் அந்தக்கதை.

நான் பதின்வயதில் இருந்த சமயத்தில் அறுபதை கடந்த பலரை எனக்கு நட்பாக்கி வைத்திருந்தது வெற்றிலை. சில்லறை வியாபாரிக்கும்   வாங்குபவருக்கும் வெற்றிலை ஒரு  தனிப்பொருள் இல்லை, பாக்கும், புகையிலையும் உடன் சேர்ந்தது. பான்பராக் படையெடுக்காத 80'களின் இறுதி, 90'களின் தொடக்கத்தில்  கொட்டை பாக்கு, சுருள் பாக்கு(கொட்டை பாக்கின் உடைபட்ட வடிவம்),   தூளாக்கப்பட்டு இனிப்பு,சாயம் சேர்க்கப்பட்ட  ரோஜா/நிஜாம்/கிரேன் பாக்கு,
இவைகளை தவிர புகையிலை வகைகளும் சேர்க்கப்பட்டு உண்ணப்பட்டது.
ஆனால் பின்பு   பான்பராக , கணேஷ் / ஹான்ஸ் போன்ற
போதைக்கான வேதி கலந்தவைகளைக் கொண்டு வெற்றிலை பழக்கத்தை
குறைந்த செலவில் அல்கஹாளுக்கு இணையான் பழக்கமாக
மாற்றிக்கொண்டனர். இந்த தலைமுறையில் வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்படுத்துவது மிக அரிது. உணவுப்பொருள்  தவிர்த்து இதுபோன்ற பழக்கத்தை கடந்த இருபது ஆண்டுகளாக சிகரெட், மது , பான்பராக், பான்பீட  போன்றவை இடம்பெயர்த்துக்கொண்டிருக்கின்றன.


யா. பிலால் ராஜா  






Monday, December 26, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 2)

This Article published in e-magazine "Uyirosai"(uyirmmai publications)26-12-2011 issue
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5126

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்
  இந்த வாரம் ஹிந்தி திரைபடங்களில் மட்டுமல்லாது, தமிழ் மொழியின் வழியான சூஃபிஇசையின் வடிவங்களையும் அதன் மூலங்களையும்
 சற்று  பார்க்கலாம்.


 2009 -ல் ராகேஷ்  ஓம்பிரகாஷ் மெஹ்ரா வின் டெல்லி-6 படத்தின்"அர்ஸியான்"
என்ற பாடலை கைலஷ்கர் , ஜாவித் அலி, குரலுடன் தபலா வும் ஹார்மோனியமும்
கூ ட்டணியிட்டு சூஃபி பாடல் கேட்பை கொண்டாட்டமாக மாற்றினர். ( பாடகர் கைலஷ்கரின் ஆளுமை பற்றி  என் வலைபக்கத்தில்  சிறு பதிவிட்டிருக்கிறேன். http://bhilalraja.blogspot.com/2010/11/kailash-kher.html  )
ரஹ்மான் இசையமைத்த மிக நீண்ட பாடல்களில் இதுவும் ஒன்று (8 .50 நிமிடங்கள்).



ARZIYAN - http://www.youtube.com/watch?v=McYnZj-EvL4
          சில மசூதி மற்றும் தர்காகளில் தொழுகை முன்னறிவிப்பிற்கு  முன் பெரிய முரசு கொண்டு ஒலி எழுப்பக்கேட்டிருக்கிறேன்.  அத்தகைய முரசொலியின்  தாள பின்னணியில்  Bose: The Forgotten Hero (2005)  படத்தில்  ரஹ்மான் தன் குரல் மற்றும் தாளம் கொண்டு உருவாகிய "ZIKAR " என்ற பாடல் மிக அபூர்வமானது.


  
ZIKAR -  http://www.youtube.com/watch?v=XQtE6JQGjlI&feature=related
"மங்கள் பாண்டே" படத்தின் இசை தொகுப்பில் உள்ள பிரபலம் அடையாத  "Al Maddath Maula "  என்ற பாடலும் இறைநேசர்களின் அடக்கஸ்தலம்  என்றழைக்கப்படக்கூடிய தர்காக்களின் பின்னணியில் அமைந்தது.

Al Maddath Maula  -http://www.youtube.com/watch?v=QkK84M6lg5E


      இந்திய இசையின் நவீனத்திற்கும்,தொழில்நுட்பத்திற்கும்அடையாளமான 
ரஹ்மான், தான் இசையமைத்த நேரடியான சூஃபி பாடல்களுக்கு எளிமையாக   சூஃபி பாரம்பரிய இசைக்கேயுரிய தபலா, நரம்பிசை மற்றும்  ஹர்மோனியதிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்காரணம், அவர் சூஃபி இசை மரபை சரியாக  உள்வாங்கி/உணர்ந்திருப்பதால்தான்.
சினகிதனே...(அலைபாயுதே), என்னுயிரே., (உயிரே), therbina ...(குரு)  இவைகளின் மூலமும் சுபி இசைதான், ஆனால் இந்திய சினிமா சம்பவங்களுக்கு பொருந்தும்படி உரு(இசை) மாற்றம் செய்திருப்பார்.

ரஹ்மானிடம் தற்போது  சராசரி சினிமா பாடலுக்கான  புனைவுப்புதுமை குறைந்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த ROCKSTAR படத்தின்  "குன் பாய குன்", பாடல்  ஜாவேத்  அலி,    மொஹித் சாஹன், ரஹ்மான் குரலில் சூஃபி இசை வரிசையில்  தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது .
இந்த பாடலை டெல்லியில் ஒருநேரடி மேடை நிகழ்சியில் ரஹ்மான் குழுவினரோடு பாடும் கண்ணொளி கீழ் காணும் சுட்டியில் ரசிக்கலாம்.





இக்கட்டுரையில் இதுவரையிலான களமும்,சூஃபி பாடல்களும்  வடஇந்தியா  மற்றும் இந்துஸ்தானி இசையின் கலாச்சாரத்தில் நிலைகொண்டவை,
தென்பகுதியிலும், தமிழகத்திலும் சூஃபிதுவம் பரவியபோது, அதனுடன் இசையும் வளந்தது குறிப்பாக தமிழகத்தில் நாகூர், மதுரை பகுதியில் சூஃபி த்துவங்களையும், சூஃபி  கலைஞர்களின் வாழ்வை இசை வடிவில் பாடி யாசிக்கும் பஃக்கீர் என்ற பிரிவினர் வசிக்கின்றனர். சூஃபி கலைஞர்களின்
நினைவிடங்கலான தர்காக்கள்தான் இவர்களின் இசை மற்றும்  வாழ்வியல்  மையங்கள்.(சுஃபி பாதைகளை குறிக்கும்  "தரிக்கா" என்ற சொல்லிலிருந்து
 உருவானது தர்கா என்ற சொல்).  இவர்கள் பெரும்பாலும் பச்சை நிற தலைப்பாகையுடன்(உருமாகட்டு) கையில் தாயிரா என்ற தோல் இசை கருவிகொண்டுபாடியபடி  தெருக்களில் யாசிப்பதுதான் இவர்கள் தொழில். சமுகத்தில் பெரும்பான்மை /வைதிக இஸ்லாம் சார்பாளர்கள் சூஃபியிசத்தை
பின்பற்றுபவர்களை  ஒருவித எதிர்ப்புணர்வுடன் அணுக காரணம், இவர்கள் இஸ்லாத்தின்  முக்கிய கடமைகளில் ஒன்றான தொழுகையை காட்டிலும்,
ஜியாரத், திஃக்ர்  போன்ற ஆழ்நிலை தியான வழிபாட்டில் ஆர்வம்கொண்டவர்கலாக
இருப்பதுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை பஃக்கீர்களின் பாடல்களில் முக்கிய பாடுபொருள் சூஃபியிசதின் முனோடியாக கருதப்படும் அப்துல் காதர் ஜிலானி, மற்றும் நாகூர் சாகுல் ஹமிது இவர்களின் வாழ்வும், அற்புதநிகழ்வுகளும்தான்.  தமிழ்நாட்டில் முக்கிய ஆன்மிக தளமான நாகூர் தர்காவில் அடங்கியுள்ள சாகுல் ஹமீது முகம்மது நபியின் 23 -ம் பரம்பரரையை  சேர்ந்தவர்,  உ.பி.யில் மாணிகபுரில்  புலம்பய்ர்ந்து  வாழ்ந்த பெற்றோருக்கு மகனாக  பிறந்து கிழக்காசிய நாடுகளில் நீண்ட பயணம் செய்தபின் சவுதியிலிருந்து  கேரளா வழியாக தமிழகத்தின் கடற்கரை நகரான நாகூர் வந்து சேர்ந்தார்.  பல அற்புதங்களை நிகழ்த்தியவரென்று  சொல்லப்பட்டாலும்  தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரை கடும் பிணியிலிருந்து காப்பாற்றியதால் இப்போதுள்ள தர்காவும் அதன் பகுதிகளும் இந்த சூஃபி ஞானிக்கு தஞ்சை அரச வம்சத்தல் எற்படுதிக்கொடுக்கப்பட்டது. இந்தகைய நாகூரின் பின்னணியில் சமீபத்தில் இணையத்தில்கேட்க நேர்ந்த அப்துல் கனி,அஜாஹ் மைதீன்,  சபுர்மைதீன் பாபா சபீர்
என்ற மூவரின் குரலில் இந்த எளிய   மற்றும்  அற்புதமான பாடல்களை கேளுங்கள், தமிழகத்தில் பஃக்கீர்களால் பாடப்படும் பாடல்கள் எந்த சம்பிரதாய அல்லது மரபியல் இசை வடிவிற்கும் கட்டுப்படாத எளிய நாட்டுப்புற இசையை போன்றது.
(இதுவரை இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட மற்ற பாடல்களை
கேட்காவிட்டாலும், கீழ் குறிப்பிடும் பாடல்கள் தவறவிடவேண்டாம்)



http://www.youtube.com/watch?v=wXfPFxfy7ZM&feature=related


http://www.youtube.com/watch?v=VJH8rYn-ERY&feature=related

இவ்வகை பஃக்கீர்களின் இசை பாடலை இணையத்தில்மட்டுமல்லாது நேரடியாகவும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களின் வாழ்வு
வறுமையில் நிலைகொண்டிருந்தாலும்,  இசைக்கத்துவங்கியதும்,  அவர்கள்   கண்களின்  வழி நம்பிக்கை மட்டுமே  இசையையும்  மீறி வழிகிறது. 

இக்கலைஞர்களின்    அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய பிராத்தனையிசையில்   சரணடையும்  நோக்குதான்,  எந்தவித சிறப்பு இசை பயிற்சியும், குரல் வளமும் இல்லையென்றாலும் நம்மை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது.

யா. பிலால் ராஜா.

Monday, December 19, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 1)

This Article published in literary e-magazine "Uyirosai"(uyirmmai publications)19-12-2011 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5107

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்

   
தமிழகத்தில் சினிமா பாடல்கள் தவிர்த்த பிரபலமான  மாற்று இசை  என்று தேடினால் பக்தி பாடல்களை மட்டும்தான் பட்டியலிட முடியும் . அதிலும் கடந்த 30 வருடங்களில் T .M.S , மற்றும்  நாகூர் E .M . ஹனீபா இந்த இருவரின் பாடல்கள் இந்து, இஸ்லாமிய விழாக்களில் தவிர்க்க முடியாத  ஒலி நாடாக்களாக  இருக்கும். மத நம்பிக்கை கடந்து மட்டுமல்ல, மத நம்பிக்கையை துறந்தவர்கள் கூட இன்றுவரை ரசிக்கும் பாடல்கள் இவர்களுடையது. இந்த கட்டுரை எனக்கு கட்டயமானதற்கு காரணம், ஊரில் சிறுவயதில்  விழாக்களில் கேட்கத்துவங்கிய தமிழ்  இஸ்லாமிய பக்தி பாடல்கள் பின்பு இசையமைப்பாளர் ரஹ்மானின் சூஃபி இசை  பாடல்களின் செவிவழிப்பின்தொடரலாக என்னை ஒரு அபாரமான சுஃபி இசை வடிவத்தின் ரசிகனாக்கி இருக்கிறது. புத்தத்தில் ஜென் தத்துவங்களைபோல, போல இஸ்லாத்தில் சூஃபித்துவமும்  சுதந்திரமானது, இறைநிலை உணர்வுக்கு எந்த சம்பிரதாயங்களையும் கட்டாயப்படுதுவதிலை,  இயற்கை மீதான பார்வைக்கும், சுய சிந்தனைக்கும் ,
சம்பிரதாயங்களை கடந்தமனிதநேயத்திற்கும் முழு சுதந்திரம் கொடுப்பதுடன்,
இயற்கையையும், அன்பையும் இறை-வழியாக கொள்ளபடுவதால் அதில் வெளிப்படும் கலையும் அன்பும், பணிவுமாக மத வேறுபாடின்றி  அனைவரையும் ஆட்கொள்கிறது, மதிய கிழக்கு  ஆசிய நாடுகளை  பிறப்பிடமாக கொண்ட சூஃபி  இசைக்கான சிறிய  அறிமுகமாக இந்த கட்டுரையில்  ரஹ்மானின்  சில பாடல்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன். முன்னதாக சூஃபியிசம் பற்றி ஒரு சிறிய அறிமுகம், ஏழத்தாழ 10 -ம்  நுற்றாண்டில் வைத்திக இஸ்லாத்தின் சம்பிரதாய சடங்குகளை தவிர்த்து மெய்ஞான  தேடலாக  உருவானவர்கள்  சூஃபிகள்.  பொதுவாக இஸ்லாம் துறவு பற்றி போதிப்பதில்லை, ஆனால் அதிகப்படியான இறைக்காதலால்
துறவு நிலையில் வாழ்ந்த சூஃபி   மெய்ஞானிகளும் உண்டு.  அதேபோல்  இசை/ நடனம்/கவி புனைவை அடிப்படை இஸ்லாம் ஆதரிப்பதில்லை, இதற்கு காரணம் என்ன என்று சிலரிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் இது போன்ற கலைகள்/படைப்புகள் உண்மை  மற்றும்  வரலாற்றை அதிகப்படியான கற்பனைகள் கலந்து அதன் நோக்கை  திசைமாற்றி  விடுமென்பதால்  இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தில் இவைகளுக்கு  ஊக்கமளிப்பதில்லை என்றார்.  ஆனால் சூஃபியிசத்தில் கலைகளின் வாயிலாக இறைவன்/இயற்கையிடம் சரணடைதல் முக்கிய நிகழ்வாகிவிடுகிறது.  இன்னும் சொல்லபோனால் இது ஒரு வகை கூட்டு
வழிபாடு  போன்றது.  ( உண்மையில் சூஃபி , க்ஃவ்வாலி இசை பற்றி விரிவாக சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் இந்த கட்டுரை தொடரின் வடிவம் போதாது என்பதால், சிறிய அளவில், என்னால் ஆனவரை முயற்சிக்கிறேன்.)

பள்ளி செல்லும் வயதில், சில காலம் என் தந்தைக்கு உதவியாக அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து தினசரி பத்திரிக்கை விற்பனை தொடங்கும்போது, எதிர்புறம் திருமணமண்டப வாசலில் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் ரிலிருந்து TMS ன் பக்திபாடல்கள் ஒலிக்கும். விடிந்து கொண்டிருக்கும் அதிகாலை, கடைகளில்  வாசல்  தெளிப்பதால்  கிளம்பும்  மண்வாசனை, பால் வண்டிகாரர்களின் மணி சத்தம்( பாக்கெட் பால் கலாசாரம் பரவாத 90 ' களின் மத்தி), தினசரி நாளிதழ் கட்டை பிரிப்பதால் கிளம்பும் பேப்பர் வாசனை, ஒன்றிரண்டாக கூடும் ஆள் நடமாட்டம், வசந்த பவனில் வாங்கிய காபி வாசனை, இவைகளுடன் TMS ன் குரலும் சேரும்போது  கிடைக்கும்  புத்துணர்வு உழைப்பின் களைப்பை மறக்க செய்யும்.
இதே அலைவரிசைக்கு  என் மனதை  ஈர்ப்பது  எங்கள் பகுதியில் இஸ்லாமிய  விழாக்களில்  ஒளிபரப்பாகும்  நாகூர்  E M .  ஹனிபாவின்  பாடல்கள். எல்ல கலை படைப்புகளும்  கலைஞர்களும் கண்ணுக்குத்தெரியாத கால வட்டத்திற்கு உட்பட்டவைதான், சில மட்டும்தான் காலம் கடக்கும் கால்கள் கொண்டிருக்கும், தமிழ் பக்திபாடல் இசை சுழலில் T M S., மற்றும் நாகூர்  E . M . ஹனிபாவின் குரலுக்கு அத்தகைய கால்கள்
உள்ளதாக கருதலாம். தமிழகத்தில் இன்று வரை இஸ்லாமிய  விழாக்களில் ஹனிபாவின் பாடல்கள் தவிர்கமுடியாதது, காரணம் இவருக்கு பின் அந்த இடத்திற்கான தனித்துவ குரல்கொண்ட பாடகர்களும் பாடல்களும் கிடைக்கவில்லை.  இவர்களின் குரல் வள ஆளுமைதான் அபரமும் தனித்தன்மையும் கொண்டிருந்ததே தவிர பெரும்பாலான பாடல்களின்
மெட்டமைப்பும், இசையும், ஒலிபதிவு தரமும்   ஆர்கெஸ்ட்ரா  குழுக்களின் தரத்தில்தான் இருந்தன, இந்திய அளவில் சென்றிருக்க வேண்டிய இவர்களின்  குரல் ஆளுமை  தமிழகத்தின் 234 தொகுதிகளை
தாண்டவில்லை, அதுமட்டுமல்ல  நாகூர்  E .M   ஹனிபாவின் பாடல்கள் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமா பாடல் மெட்டுக்களின்இனத்தில் எளிதில்  சேர்வதுதானே தவிர முழுமையான  சூஃபி / க்ஃவ்வாலி  இசை வகையல்ல. (ஹனிபாவின் குரல் சினிமாவில் இளையராஜாவால் செம்பருத்தி , ராமன்அப்துல்லா ஆகிய இரு  படங்களில் பயன்படுத்தப்பட்டது.) இவைகளுக்கு பின் இஸ்லாமிய பக்தி பாடல்களின் வேறெந்த புது வடிவத்தையும், வகையினையும் கேட்காத நாட்கள் சென்றுகொண்டிருந்தன, சிறு வயதில்   படித்தலின் வாயிலாக சூஃபி, சூஃபிஇசை, போன்ற   வார்த்தைகளை பத்திரிகைகளில்  படித்திருக்கிறேன் ஆனால் அவைகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமோ , வாய்போ இல்லை. அதுவரை பாடல்களை  "கேட்டு " மட்டுமே பழகியிருந்த எனக்கு    ரஹ்மானின் இசை வருகைகு பின்  பாடல்களையும் இசையையும் கவனித்து
உள்வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. அப்போது ஒரு வார இதழில் "FIZA " என்ற இந்தி படத்தில் ஒரேஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் இசை என்றும், மற்ற பாடல்கள் அனுமாலிக் இசை என்றும் படித்ததும் ஆச்சர்யமாக இருந்தது காரணம்,  இந்திய சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளர் இசைத்த படத்தில் மற்றொருவர் இணைவது அபூர்வம்
அதிலும் அனுமாலிக், ரஹ்மானின் இசையை காப்பியடித்து தன பெயரை
போடுக்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அவர் மீது வழக்கு போடுவீர்களா?  என மீடியாக்கள் மைக்கை முன் நீட்டியபோது புன்னகையை மட்டும் பதிவு செய்தவர், இந்த படத்திற்கு  இசைய காரணம், அது ஒரு சுஃபி இசை வடிவத்திற்கான களம் என்பதாலும் ரஹ்மான்            அந்த இசை வடிவத்தில் ஆர்வம் கொண்டவரென்பதாலும் அப்பட இயக்குனரின் வேண்டுதலால் ஒப்புக்கொண்டதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். (ரஹ்மானின் இத்தகைய பெருந்தன்மையும், குணமும்தான் உலகின்
அனைத்து இசைவகைகளையும் உள்வாங்கவும் , அதிலிருந்து  புது பரிணாமத்துடன்
 தனக்கான நவீன இசையை உருவாக்கவும் காரணமாய் அமைகிறது.)
"FIZA " பாடல் கேட்க ஆர்வம் பற்றிக்கொண்டது, இப்போது இருப்பது போல் அந்த சமயத்தில் எங்கள பகுதில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், டவுன்லோட் சமாச்சாரங்கள் பரவவில்லை.  என் நண்பர் ஒருவரின்  மியூசிக்கல்ஸ்-ல் சொல்லி  வைத்து  ஒரு  காசெட்டில்  பதிந்து வாங்கினேன்   அதுவும் ஹிந்தி பாடல் என்றால் வெளிவந்து ஒருமாதம் கழித்துதான் கிடைக்கும், பின் என் நண்பன் ஒருவனின் வீட்டில் சோனி பிளேயர்ல் காசெட்-ஐ  ஒலிக்க விட்டேன்,  நேரமும்,  ஒலி நாடவும்  நகர,நகர  அதுவரை  இஸ்லாமிய பக்தி பாடல் என்றால்  வழக்கமாக  எதிர்பார்த்து  வைத்திருந்த    இசை பிம்பம் காற்றில் கரைந்து, புதுமையான தாளமும், குரலும் இசை கோர்ப்பும் ஒரு புது கேட்பனுபவத்தை தந்தது.
படத்தின் சூழல் ஜெயாபச்சன் தொலைந்து போன தன் மகன் ஹ்ரித்திக் ரோஷன்-ய் தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற ஹாஜி அலி தர்காவிற்கு வரும்போது இந்த பாடல் தொடங்கும்.  இந்த பாடல்  காதர் குலாம் முஸ்தபா , முர்த்சா குலாம் முஸ்தபா , ஸ்ரீநிவாஸ் மற்றும்   ரஹ்மானால் பாடப்பட்டது. இந்த  பாடலுக்கான சூழல் வழக்கமான இந்திய சினிமாவில்  சோகமான பாடல்
 களம் ஆனால் இந்த பாடல்  எந்த துயரத்தையும்  மாற்றக்கூடிய நம்பிக்கைகளை இசைக்கிறது. 15 ம் நுற்றாண்டில் வாழ்ந்த  "சய்யத் பீர் ஹாஜி அலி ஷாஹ் புக்ஹாரி"  சூபியால்(பெரும் வணிகராக வாழ்ந்தவர்)   மும்பையில்   உருவாக்கப்பட்ட  இந்த  வணக்கஸ்தலம்  கடற்கரையிலிருந்து  பல மீட்டர் தூரம் தனித்து கடலில் அமைந்திருக்கும்,  இவ்விடத்தை சென்றடைய சிறு நடைபாதை ஒன்று  மட்டும் உள்ளது. கீழ் காணும் கண்ணோளியில்/ இணைப்பில் இந்த பாடலை கேளுங்கள். (இந்த கட்டுரையில்  குறிப்பிடப்படும்  பாடல்களையும் நிச்சயம் ஓய்வான இரவு தனிமையில், ஹெட் போன் அல்லது மியூசிக்சிஸ்டம்  கொண்டு  மொழி,  மதம்  மீதான  நம் முன்முடிவுகளை  சற்று மறந்துவிட்டு  கேட்டுப்பாருங்கள்).



 பொதுவாக  சூபி வகை பாடல்களில் தபலா, ஹார்மோனியம், தாயிரா, டோல் போன்ற வாத்தியங்கள் தான் அதிகமாக பயன்படும், இந்த பாடலிலும் அவைகள் தான் ஆனால் அவைகளின் நுண்ணிய இசை கோர்வையும்,  புதுமையான மெட்டும்  பாடகரின் குரலும் சூபி  இசையின் நவீனத்துவ தலைமுறையை துவக்கிவைகிறது. இந்திய இசையில் தபலாவின் இசை முக்கியமானது, எண்ணற்ற இந்திய சினிமா பாடல்களில் தபலா  தாளங்களை கேடிருந்தாலும்   இந்த கட்டுரை தொடரில் குறிபிடப்படும்
ரஹ்மானின் 4 சூபி வகை பாடல்களின் தபலாவின் தாளங்களை  கவனித்து பாருங்கள், மிக நேர்த்தியாக, ஒவ்வொருஒலியும்
நுட்பப்புதுமையில் கட்டமைக்கப்பட்டிருகும். அடுத்து வரும் 4 ரஹ்மானின் சூஃபி இசை பாடல் வரிகளின்  ரசனையான தமிழ் மொழி பெயர்ப்பை ராஜேஷ் என்பவரின் http://www.karundhel.com/2011/10/blog-post_10.html  தளத்தில் படிக்கலாம்)

  இதுபோன்ற சூஃபித்துவ பாடலுக்கான சூழல் இந்திய சினிமாவில் அமைவது அபூர்வம், அதிலும்  அபாரமானது ரஹ்மான் தனக்கு கிடைத்த இது போன்ற சில வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதுதான்.  அதன் பின் ஆசிய முழுதும் பெரும் செல்வாக்கு பெற்றிருத்த நஸ்ரத் பதே அலிகான் , ஆபிதா பர்வின், கைலாஷ் கெர், JUNOON Band (இந்த  குழுவின்  சூஃபி  பாடல்கள்  ராக்  இசை வடிவில் இருக்கும்)  பாடல்களை அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன். 2008 ல் வெளிவந்த "ஜோதா அக்பர்" திரைப்படத்தின் பாடல்களை கேட்டபோது மீண்டும் ஒரு அற்புதம் "கரீப்நவாஸ்"  பாடல்.  இதற்கு  பின்  இன்னும்  இரண்டு சூஃபி இசை  பாடல்கள் ரஹ்மானால்  உருவாகப்பட்டாலும் இது தான் அவரின் படைப்பாற்றலின் உச்சம்.  எனக்கு கற்பிதம்  செய்யப்படும்  கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லைஎன்றாலும், என்னில்   எப்பொழுதெல்லாம்  துன்பமும், வெறுமையும், செருக்கும் , குரோதமும்,    வெறுப்பும் உணருகின்ரேனோ, இந்த பாடலை அந்த இரவில் கேட்டல் அனைத்தும்
 வடிந்து விட உணர்ந்திருகின்றேன். பாடல் பார்க்கும்முன் அதன் சூழலை பார்த்துவிடலாம்.  இந்தியாவின்  முக்கிய முஹலாய மன்னரான  அக்பர், சுபிதுவத்தின் மீது பற்றுகொண்டவர், தனது திருமணத்திற்கு முன் ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற  அஜ்மீர்  "ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி"  தர்காவிற்கு செல்கிறார், அங்கு ஓய்வான இரவு அமர்வில் இப்பாடல் பாடப்படுகிறது. ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி  என்ற சூபிஞானி   11-ம் நுற்றாண்டில் ஈரானில் பிறந்தவர் இஸ்லாத்தின் முக்கிய  மெய்ஞானியாக  கருதப்பட்ட இவர்தான்  இந்தியாவில் சூஃபியிசம்  உருவாக  காரணமானவராக அறியப்படுகிறார்.  சுபியிசதில்  முக்கிய  உட்பிரிவுகள்  தரிக்கா என்றலைக்கப்படுகிறது (தரிக்கா என்றால் "பாதை" என
பொருள்படுகிறது ) இவர் பிரபலபடுத்திய காதரிதாரிகா சுபியிசத்தில்
 இசையும் ஒரு வரைமுறைக்குட்பட்ட நடனமும் கூட்டு  வழிபாட்டின்  முக்கிய நிகழ்வு, இதற்கு  ஸாம என்ற பெயருமுண்டு,   வலது  கை  மேல்புறம்  நோக்கியும்,  இடது கை பூமி நோக்கியும் வைத்துகொண்டு, இடது  பாதத்தை  நிலத்தில்  பதித்து,   வலது   பாதத்தால்  கடிகாரஎதிர் சுற்றில்   சுழன்று ஆடும் இந்த நடனம் உடலையும் மனதையும்
ஒரு வித மோன நிலைக்கு அட்படுத்தக்கூடியது. புகழ்பெற்ற பெர்சிய சூஃபி கவிஞர் ஜலாலுதீன் ரூமி (1207 - 1273 ) இத்தகைய நடன நிலையில்
இறையுணர்வுக்கு ஆட்படுவதில் விருப்பம் கொண்டவராயிருந்தார். கீழ் காணும் "கரீப் நவாஸ்" பாடலின் இறுதியில் அந்த நடனத்தை பார்க்கலாம்.



கரீப் நவாஸ் - http://www.youtube.com/watch?v=nt93yH689Dg

தமிழகத்தில் இதன் வகை சேர்ந்த இசை கலாச்சரம் பற்றியும் இன்னும் சில பாடல்கள் பற்றியும் அடுத்த வாரம் பார்(கேட்)க்கலாம்.


.