Saturday, October 21, 2017

உமா - சிறுகதை


உமா 

தாம்பரம் தாண்டி குரோம்பேட்டை நெருங்கிக்கொண்டிருந்தது 21G, 
பிக்பாக்கெட்டுக்குக்கூட ஒருவன்  பாக்கெட்டில் கை நுழைக்க முடியாது,   நுழைத்தாலும் கை வெளியெடுக்க முடியாது காலை 
எட்டு  மணிக்கே அப்படியொரு நெரிகூட்டம் பேருந்தில், முன்னாலிருநத
பெண் சற்று எட்டி பின் வாசல்பக்கமிருந்த ஒரு பெண்ணை பார்த்து  "உமா எனக்கும் ஒண்ணு  சேத்து எடுத்துருடி ....", என்றாள்.
 "சரிடி ..." "ரெண்டு க்ரோம்பேட் குடுங்க.." 
உமா.... 
இந்தபெயர்என்னுள்பதிந்துசற்றேறக்குறைய 30 ஆண்டுகள் நெருங்கப்போகிறது, நன்றாக நினைவிருக்கிறது அந்த வருடம் 1988, வெற்றிகரமாக  ஐந்தாம் வகுப்பின் அட்மிசன் முடித்த கையோடு என்தந்தை வகுப்பாசிரியர்முத்துசாமிசாரிடம் டியூஷனுக்கு சொல்லி வைத்தார்.  ஒவ்வொரு   பாடத்திலும் 35 மார்க் எடுப்பதேசாதனையாக இருக்குமென்று என் பெற்றோர்முதலிரண்டுவகுப்புகளிலே  என்னை கணித்துவிட்டபடியால் 
 மூன்றாம் வகுப்பிலிருந்தே பள்ளி முடிந்தவுடன்  டியூஷனுக்கு  
துரத்திவிடப்பட்டேன்.  வகுப்பு தொடங்கியமூன்றாம் நாளே சைக்கிளில்
முன்னால் அமரவைத்து வகுப்பாசிரியர்  வீட்டுமுகவரியை கண்டுபிடித்து டியூஷன் சேர்த்துவிட்டுதிரும்பினார் என் அப்பா. ஆசிரியர் வீடும் எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருதான்.அந்த பள்ளியின் 5-C வகுப்பின் ஆசிரியரான முத்துச்சாமி சார் பற்றி ஒரு மனச்சித்திரம் 
கொள்வது இங்கு முக்கியம். குட்டையான உருவம் , நெற்றிமுழுவதும் விபூதி  பட்டை நடுவில் சிறிய குங்குமப்பொட்டு, சிறு கரைகூட காணாத         வெள்ளை வேட்டிசட்டை, ஓரிடத்தில் தங்காத விறுவிறுநடையென   இப்போதும்நினைவில் முழுமயாகவலம்வருவார்.  வலது கையில் 
ஆறாம் விரலாய் பிறஆசிரியர்களுக்கு சாக்பீஸ் இருந்தால்,  இவருக்கு 
பிரம்பு. கண்டிப்புக்கு ஒரு உருவம் இருந்தா அதுவே இவருக்கு முன்னால் கைகட்டி உட்கார்ந்திருக்கும்அத்துனை கண்டிப்பானவர்.

பள்ளி துவங்கிய முதல் 10 நாள் புது சீருடை , சத்துணவுக்கு பெயர்  கொடுப்பது , மயக்கும் வாசனையுடன் புது நோட்டு புத்தகம் , வருகை பதிவேட்டில் பெயர்சேர்க்கும் வேலை என கொஞ்சம் ஜாலியாக 
வகுப்பு போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் கவனித்தேன் சில 
பெற்றோர்கள்  தலைமை ஆசிரியர்அறைக்கு செல்வதும், பின் ஒருதுண்டு சீட்டுடன் வந்து  முத்துச்சாமி சாரிடம் அதனை அளித்த சிறிது வாதத்திற்குப்பின் தங்கள் பிள்ளைகளை  எங்கள்வகுப்பிலிருந்து
அழைத்துச்சென்று அருகிலிருக்கும் வேறொரு ஆசிரியரின் வகுப்பில் 
அமரவைப்பதுமாக சென்றுகொண்டிருந்தார்கள்,  ஆக எங்கள்வகுப்பில் 
மட்டும் உருப்படிகள் கொஞ்சம்கொஞ்சமாக  குறையத்தொடங்கியது.

வகுப்பில் இடவலமாக அமர்ந்திருந்த அருணும், ஸ்ரீனிவாசனும்             இரண்டாம்நாளே எனக்கு நண்பர்களாயினர். அருண்  உருவததில்  சற்று
குண்டானவன் ,மற்ற பயல்கள் அடிக்கடி  இவனை" குண்டா.... தடியா..... 
சொத்துக்கு ரெடியா...." என எப்போதும் கிண்டல் செய்துகொண்டிருப்பார்கள். ஸ்ரீனிவாசன் என்னைப்போல அப்பிராணி ஆனாலும் வினயம்பிடித்தவன், தினமும் பென்சில்  டப்பா  முழுவதும்   மிட்டாய்களை கொண்டுவந்தாலும் யாருக்கும் தராமல்  தானே  தின்றுவிடுபவன். அவன்விதவிதமான இனிப்பு வில்லைகளை   சப்பி சாப்பிடுவதை பார்க்கையில் எனக்கும் அருணுக்கும்   எச்சில் ஊறும் கேட்டாலும் தரமாட்டான்.

அன்று அப்படித்தான் ஒரு மாணவனை, அவன் அப்பாவந்து சிறிது நேரம் முத்துச்சாமி  சாரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துவிட்டு  அவனைஅடுத்த  வகுப்பறையில் அமரவைத்து கெத்தாக நடையைகட்டினார்.  அன்று முத்துச்சாமி சார்சற்று  கோபமாக கரும்பலகை வந்து வருகை  41- ஐ 40 ஆக்கிவிட்டு பின் கோபமாக தலைமை ஆசிரியர் அறை                சென்றுவிட்டார். அப்போதுதான்  குண்டன் அருண் சொன்னான், "ராமசாமி சார் ரெம்ப கோபமானவராம்  பிரம்ப எடுத்தா ஒடையுற   அளவுக்கு அடிப்பாராம், அதுனாலதான் நெறய பசங்களோட அப்பா வந்து அவுங்கள வேறவாத்தியார்ட்ட சேர்த்துவிடுறாங்க" , அவன்சொல்லும்போதே எனக்கு பயத்தில் ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வந்தது. அதுகேட்டு மிட்டாயை சப்பிக்கொண்டிருந்த  ஸ்ரீனிவாசன் வாய்  சில நொடிகள்அசைய மறந்தது, பின் கண்களில் பீதி தெறிக்க பின் அம்மிட்டாயினை மென்று விழுங்கினான். ஆண்டின் முதல் நாள் "வருகை =55" என்று ஆரம்பித்த கரும்பலகை குறிப்பு  முதல் பாடம் தொடங்கும் நாளில் வருகை = 43 என்றது.

எல்லா வகுப்பறையிலும் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் 
கொள்வது அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு வகுப்பசிரியரும் திண்டாடுவதுஎல்லாகாலத்திற்குமான பிரச்னைதான்.  முத்துச்சாமி சார்  வகுப்பில் இருக்கும்போது யாரும் பேசமாட்டார்கள் மீறினால்  நாங்கள் கேள்விப்பட்டது போலவேபிரம்பெடுத்து பின்புறம் இரண்டு கொடுப்பார்.        அதனால் அவர் சென்ற பிறகு நாங்கள் கொண்டாடி தீர்த்துவிடுவோம் , 
அக்கம்பக்கத்து  ஆசிரியர்கள் முத்துச்சாமி சார் வந்ததும் புகார் செய்து 
விடுவார்கள் அதற்கு முத்துச்சாமி  வாத்தியார் ஒரு தீர்வு கொண்டுவந்தார்.  ஒரு நாள் அனைவரையும் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்து  பதிவேட்டின் வரிசைப்படி அழைதது  ஒரு நிரல் பசங்களும் ஒரு நிரல்  பெண் பிள்ளைகளுமாக அமரவைத்தார். பொதுவாக பசங்களும் பெண்பிள்ளைகளும் பேசிக்கொள்ள  குற்றஉணர்வு கொள்வார்கள் என நம்பப்பட்ட  ஊர்ப்புற  பள்ளியின்  பண்பாட்டினடிப்படையில் இப்படிசெய்தால்வகுப்பறை  பேச்சுக்கள் குறையுமென்பது ஆசிரியர் கணக்கு.

எனக்கு இடதும் வலதுமாக இருந்த குண்டன் அருணும் , ஸ்ரீனிவாசனும் முதல் நிரலிலேயே எங்கோ இருபெண்களுக்கிடையில்அமர வைக்கப்பட்டர், இனிமேல் முன்போல் நாங்கள் பேசிக்கொள்ளமுடியாது என நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருந்தது. எனக்கு இடமாக வெங்கடேஸ்வரிஅமரவைக்கப்பட்டாள், அவளை 
குள்ளச்சி என்று பிற பிள்ளைகள் அழைத்ததற்கு நியாயமான குள்ள உருவம் , வலப்புறம் யார் அமர்வார்கள் எனபார்த்துக்கொண்டிருந்தேன் முத்துச்சாமி    சார், "உமா மகேஸ்வரி" என்றார், அவளை  அப்பொழுதுதான் முதல் முறையாக கவனித்தேன், இரட்டைசடை,நெற்றியில் சிறு பொட்டு, வடிவன முகவெட்டு. ஒருவித சோகத்துடன் பையை தூக்கிக்கொண்டு வந்தமர்ந்தாள். நான் வாத்தியார் என்னை பார்க்கிறாரா  என பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன் அவள் என்னை சட்டை செய்யவில்லை. வெங்கடேஸ்வரி திரும்பி உமாவைபார்த்து
"நல்ல வேலைடி பக்கத்துலதான்  இருக்க..." என்றாள், சிறிது நேரத்தில் சோகம் குறைந்து ஒருவித ஆறுதல் தெரிந்தது உமாவிடம். 
நானும் ,அருணும்,ஸ்ரீனியும் ஒருவரை ஒருவர் எட்டி எட்டி சோகமாக பார்த்துக்கொண்டாலும், இரண்டுபிள்ளைகளுக்கு நடுவில் அமர்ந்திருப்பது   ஏனோ எனக்கு கொஞ்சம்பிடித்திருந்தது, அதுவும் சாந்தசொரூபமான   உமாவை பார்ப்பது இன்னும் கூடுதலாக பிடித்திருந்தது.

அவர்களிருவரும் தோழிகளாக இருந்தது நல்லதுதான் இருவரும் திரும்பி பேசும்பொழுது  உமாவின்  கண்ணில் என்னுருவம் பதிய ஆரம்பித்தது. இது பெரியவிஷயம்தான் ஏனெனில் உமா எந்த ஒரு பையனிடமும் பேசுவது ...ஏன் பார்ப்பதுகூட கிடையாது, சிலசமயம் வெங்கடேஸ்வரிக்கும்  உமாவுக்கும் இடையில்நடக்கும் பென்சில்,ரப்பர், புத்தக பரிவரித்தனைக்கு பாலமாவேன், இருவரும் பேசும்போது சற்றே குனிந்து அமர்ந்து உதவுவதால் உமாவிற்கு என்மேல் சிறுகரிசனம் பிறந்திருந்தது, சில நாட்களில் அழிப்பான், பேனா என எதையாது உமா மறந்து வந்துவிட்டால்  வெங்கடேஸ்வரிக்கு பதில் என்னிடமே கேட்கதுவங்கினாள் , அவளுக்கு உதவிடுவதில் மட்டுமல்ல  எந்த பையனிடமும்  பேசாதவள் என்னிடம் பேசுகிறாலென்பதில் கூடுதல்  மகிழ்ச்சி.

ஒருநாள் முத்துச்சாமி சார் தமிழ் வகுப்பெடுக்க துவங்கும்போது "புஸ்தகத்துல எல்லோரும் 12ம் பக்கம் திறந்து வையுங்க.." என்றார் 
வகுப்பில் எல்லோரும் புத்தகத்தில் பக்கத்தை தேடிக்கொண்டிருக்க உமா 
புத்தகத்தை பையில்தேடிக்கொண்டிருந்தாள், புரிந்தது விட்டது  மறந்து  வந்துவிட்டாள், முத்துச்சாமி  சார் தண்டனை பட்டியலில் புத்தகமறதிக்கு   மூன்று   பிரம்படிகள் இதில் பால் பேதமில்லை, "யார் யாரெல்லாம் புஸ்தகத்தகொண்டுவரல எந்திரிங்க ....." சொல்லிக்கொண்டே சுவரோரம் சாய்த்திருங்க பிரம்பை எடுக்க திரும்பினார், உமா இன்று மாட்டிக்கொள்ளப்போகும்பயத்தில் எந்த நொடியும் அழ   தயாராக  இருந்தாள்,  யேசிக்கவே இல்லை சடாரென என் 
புத்தகத்தை அவள் மடியில் போட்டுவிட்டு நான் எழுந்துகொண்டேன், அப்பொழுது தான் கவனித்தேன் என்னை தவிர யாரும் எழவில்லை,               கும்பலாக அடிவாங்கினால்தானே தண்டனையின் தாக்கம் குறைவாக  இருக்கும்...அன்று என் துரதிர்ஷ்டம், குண்டி  பழுத்துவிட்டது வலி தாளாமல் அழுகை வந்தது , ஆனால்  உமாவின் முன் அழுதால் வெட்கமாகிவிடுமென்பதால் அடக்கிக்கொண்டேன்.

வகுப்புமுடிந்ததும் உமா மெதுவாக "ஏன்டா இப்படி செஞ்ச .."  என்றாள்,  நான் ஒன்றும் பேசவில்லை, அப்போது அவள் கண்கள் என் மீதான 
அன்பால்நிறைந்திருந்தது, பின் வெங்கடேஸ்வரியிடம்  " அடியே இவனையும்  நம்ம கூட்டுக்கு சேத்துக்குறுவோம்.."  எனறாள்,  
இடைவேளையில்  உமா பென்சில்டப்பாவிலிருந்து நறுக்கிய மாங்காய்  துண்டுகளை எடுத்து உப்பு தடவி எனக்கும் வெங்கடேஸ்வரிக்கும் கொடுத்தாள், சிரித்துக்கொண்டே மூவரும் அதனைசுவைத்தோம்முழுநாளும் அந்த மாம்பிஞ்சின்சுவை நாவில்இருந்தது. அன்று பிரம்படியில் அடியில் உண்மையில் பழுத்ததுஎங்கள் நட்புதான்.



சில நாட்களிலேயே வகுப்பில் ஒரு பிள்ளையை பையன் ஒருவன்   தொடையில் கிள்ளி  வைத்துவிட (சாத்தியமா அது நானில்லை) அது பிரச்னைஆகி பையன்களும் பிள்ளைகளும் பழையபடி பிரித்து அமர்த்தப்பட்டனர்.  எனக்கு அது ஒரு பெருந்துயர், அமர்விடம் மாறினாலும் பார்த்தவுடன் கிடைக்கும் அவளின் புன்னகை
ஆறுதலாயிருந்தது. இந்த சோகத்தை குண்டன் அருணனிடம் மட்டும்   ஏதோ  சொல்லத்தெரியாத  மொழியில் சொல்லுவேன், இடைவேளையின்போதுவாசலில் விற்கும் அவித்த கிழங்கையும்,  சீனி மிட்டாயும்  
வாங்கி என்னுடன் பகிரும் அருண் மட்டுமே அப்போதைக்கு எனக்கு   கொஞ்சம் ஆறுதல்.

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறாள் எனறு   உமாவின்  அப்பா அவளையும் ஒருநாள் முத்துசாமிசாரிடம் டியூஷன் சேர்த்துவிட்டார் . வகுப்பறையில் தவறவிட்ட எங்கள் அருகாமையை  டியூஷன் மீட்டுக்கொடுக்க கதைத்துக்கிடந்தோம் மகிழ்வாய் சிலகாலம். எங்களுக்குள் பென்சில் , அழிப்பான் , அடிக்கோல் , மாங்காய் துண்டு , 
தேன்மிட்டாய் , நிறைய புன்னகை ......என பரிவர்த்தனை அதிகரித்தது.

 பள்ளி சீருடை தவிர்த்து குட்டை பாவாடை சட்டை , கவுன் அணிந்து டியூஷன் வரும்போது உமா மிகவும் அழகாகி விடுவாள். எங்களுக்கு 
டியூஷன் எடுப்பதுமுத்துசாமிசாரின் இரண்டாவது மகளான மேல்நிலைபயிலும் காயத்திரிஅக்காதான், ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் பக்கத்துக்கு 
வீட்டுSolidarடிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க சென்றுவிட்டாள் எல்லோரையும் படிக்க சொல்லிவிட்டு,  பசங்க  அனைவரும் புத்தகத்தை மூடிவிட்டு கொட்டமடிக்க துவங்கினர் , நான் மெதுவாக உமாவின் அருகில் சென்று
 "இந்த கலர் டிரஸ்லநீ ரெம்ப அழகாருக்க.." 
"ம்ம் ....எங்க மாமா வாங்கி கொடுத்தது ...." 
சிரித்துக்கொண்டே செல்லும்போதுதான் கவனித்தேன் பல் வரிசையில் கிளிப் போன்றதொரு வஸ்துவை, 
"என்னப்பா அது..."
"அதுவா எம்பல்லு நீட்டாம வாய்க்கு வெளிய வருதுன்னு டாக்டர்ட போய் இந்த கிளிப் வாங்கி மாட்டிவிட்டாரு எங்கப்பா, இனிமே வாய்க்குள்ளயே வளருமாம்....." 
தானாக வளரும் பல்லை வாய்க்குள் வளைத்துவிடமுடியுமென்பது அன்று வியப்பாயிருந்தது. 
ஒருநாள் அவள் வீட்டில் கருப்பட்டி பணியாரம் செய்து டியூஷன் வரும்போது கொடுத்தனுப்பியிருந்தார்கள், அந்த        தூக்குவாளியை காயத்திரி அக்காவிடம் கொடுத்து " அம்மா  குடுத்து   விட்டாங்க எல்லோருக்கும்கொடுங்கக்கா ....." என்றாள். காயத்திரிஅக்கா அதனை திறப்பதற்குள் உள்அறையிலிருந்த 
பாய்ந்து வந்த முரளி (முத்துசாமி  சாரின் மூத்தமகன் +2 படிக்கும்         கிராதகன்) அப்படியே தூக்குவாளியைபறித்து வாசல் வழி ஓடிவிட்டான். 
காயத்திரிஅக்காள் விரட்டி சேன்று பின் வெறும்கையுடன் திரும்பினாள், ஆசைபணியாரத்தை பறிகொடுத்துவிட்டு சோகமானோம். ரோட்டில் சண்டைபோடுபவர்கள் ஏசும்  சில  கெட்டவார்த்தைகளால் மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டேன். உமாவும் நானும் வருத்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
டியூஷன் முடிந்துதெருவில் அனைவரும் மெதுவாக நடக்க துவங்கும்போது , உமா அருகில் வந்து
 "இப்போ என்கூட வீட்டுக்கு வரியா ? அம்மாச்சிட சொல்லி  உனக்குகொஞ்சம் பணியாரம் தர சொல்றேன்..." என்றாள். என் மகிழ்ச்சியைச் சொல்லவாவேண்டும். அது  பணியாரம் 
கிடைப்பதால் மட்டுமல்ல, அத்தனைபேரையும் கடந்து 
எனக்கு அவள் அளித்திட்ட  அந்த கரிசனத்தால். சரி என்றதும்  எங்கள் தெருவிலிருந்து ஆறு தெரு தள்ளியிருந்த  அவள் வீட்டிற்குஅழைத்துச்சென்றாள், குள்ளச்சியும் உடன்வந்தாள் வாசலில் தயங்கிநின்றிருந்த எங்களிருவரையும் கரம்பிடித்து உள்அழைத்து  தாழ்வாரத்தில் அமர்த்தி அவள் அம்மா எடுத்து  வர சில  பணியாரம்  உண்ணக்கொடுத்தாள், பின் என் தம்பிக்கும் தங்கைக்கும் தலா இரண்டிரண்டுபணியாரங்களை  வாங்கி ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிட்டாக பறந்து வீடு வந்து சேர்ந்தேன். பல  நாட்களுக்கு அந்த நினைவுகள் அந்த கருப்பட்டிபணியாரத்தை காட்டிலும் தித்திப்பாய் இருந்தது.



ஒருநாள்முத்துச்சாமி சார் "இந்த மாசம் டியூஷன்பீஸ் யார் இன்னும் கொடுக்கல ...." எனக்கேட்டுஅனைவரும் கொடுத்ததை உறுதிப்படுத்திவிட்டு 
"அடுத்தவாரம் முழுப்பரிட்சை ஆரம்பிக்குது, இந்த வாரத்தோட  
டியூஷன் கடைசி,அடுத்து  வீட்டுலயே படிச்சுககுங்க ....." என்றார்.
பரீட்சை நாளைத்தவிர பிறநாளில் உமாவை பார்க்க முடியவில்லை, 
பரிட்சையும்  முடிந்தது. பின் ரெண்டு மூன்று நாட்களுக்கொருமுறை
அவள் வீடிருக்கும் தெருவழி செல்வேன். கதவுதிறந்திருக்கும். ஆனால் அவள் கண்ணில் படவில்லை.உள்ளே சென்று  கேட்கவும்  பெரும் தயக்கம் பயம், அவுங்க அம்மா எதுக்குன்னா என்ன சொல்றது? பதிலேதும் தெரியவில்லை.


எனது அப்பா,நான் லீவ்ல சும்மாயிருக்கக்கூடாது, ஏதாவது கைத்தொழில் 
ஆர்வம்  வரவேணுமென ரேடியோ டிவி மெக்கானிக் கடையில் எடுபிடியாக சேர்த்துவிட்டார்.கிழே தவறி விழும் நட்டு,ஸ்குரூ தேடியெடுக்க, 
டெலிவரி டிவி, ரேடியோ துடைத்து வைக்க,வேளாவேளைக்கு டீ வாங்கிவர பயன்பட்டேன். எப்போதும் முத்துச்சாமி சார் வீட்டை கடந்துதான் எங்கள் வீடிருக்கும் தெருவிற்கு  போவேன். ஒருநாள் நான் வீட்டை கடக்கும்போதுவாசலில் நின்றிருந்தவர், 
"டேய் இங்கவாடா... பரீட்சை ரிசல்ட் நாளைக்கு காலைல ஸ்கூல்ல வாசல்ல ஒட்டிருவாங்க நம்ம வகுப்பு பசங்கள பாத்தா போய் பாக்க சொல்லு நான் HMரூம்ல லிஸ்ட் பாத்துட்டு வந்துட்டேன். நம்ம வகுப்புல எல்லோரும் பாஸ்..."
"சீனி, அருண், வெங்கடேஸ்வரி எல்லாம் பாஸயிட்டாங்களா சார் ...?,
" பாஸ்தாண்ட ....."
 " உமா ....."
"எல்லோருமே பாஸ் தாண்டா எருமை ....."
என் சந்தோசத்திற்கு அளவில்லை,ஆனால் குண்டன்அருண் என்னைவிட மக்கு எப்படி பாஸ்  ஆனான்? இப்போது அது முக்கியமில்லை.
உமா வீட்டிற்கு செல்லவும்அவளை பார்த்து பேசவும் நல்லதொரு
வாய்ப்பு.உமாவும்  பரிட்சையில் பாஸாயிட்டா என்ற அதிகாரபூர்வ   செய்தியுடன்  கை கால்கள்  பரபரக்க அவள்வீடு நோக்கி என் 
கற்பனை பைக் -ஐ கிளப்பிக்கொண்டு "டுர்ர்ர் .......டுர்ர்ர் ......."   மூச்சிறைக்க ஓடியஓட்டம் அவள் வீட்டு வாசலில்தான் நின்றது. கதவில்தொங்கும் 
பூட்டை பார்த்துக்கொண்டு நான் நிற்பதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு  
திண்ணை பாட்டி "யாருபா நீ ..."  என்றாள் 
"பாட்டி இங்க உமாவ பாக்கணும் ...நானும் உமா வகுப்புதான், நாங்க   எல்லோருமே  பாஸயிட்டோம்,  அதை சார் எல்லார்ட்டயும் சொல்ல சொன்னாரு ...."
"அவுங்க அப்பாவுக்கு வேற ஊர்ல வேல மாறிடுச்சாம் போன வாரமே 
வீட்ட காலி பண்ணிட்டு போய்ட்டாங்க ....இனி வர மாட்டாங்க " என்றாள். 
அதுவரையான உற்சாகம் மொத்தமும் வற்றிவிட்டது,அதன்பின் 
அவளை பார்க்க முடியாததை நினைத்து அதன்பின்  பல நாட்கள் 
கண்கலங்கியிருக்கிறேன்.

மேல்நிலை வகுப்பில் வந்து சேந்த" உமா"க்கள் 
கல்லூரியில் கண்ட "உமா"க்கள் 
வேலைதேடும் காலத்தில்  எதிர்பட்ட " உமா"க்கள் 
வேலையில் எதிரிலமர்ந்த "உமா"க்கள் 
தினசரிகளில், தொலைக்காட்சிகளில் பார்க்கும் 
போட்டிகளில் வென்ற..... 
போட்டித்தேர்வுகளில் வென்ற .....
சமையல் குறிப்பெழுதிய ....
கலெக்டர் ஆனா ....
விபத்தில் சிக்கிய .....
"உமா"க்கள் யாருமே அவளில்லைதான்
என்முதல் பிரியத்தை, நட்பை, அன்புணர்வின்  உற்றுக்கண்ணை  திறந்து கொடுத்தவளை முப்பது ஆண்டுகளில் வாழ்வின் வழியெங்கும் 
மீண்டும் சந்திக்கமுடியவில்லை.

"குரோம்பேட்ட வெளியவா …" வை தொடர்ந்து நடத்துனரின் விசில்  என் நினைவு கலைக்க, ஜன்னலில் வழி  இந்நிறுத்ததில் இறங்கிநடக்கும் உமாவைபார்த்தேன்,சாயல்  ஒன்றவில்லைதான், இனிமேலும் அடையாளம்காண முடியாததெனினும், உமா எனும் பெயர் கொண்ட பெண்கள் என்னைக்கடக்கும் போதெல்லாம்  ஒரு கணம் அவளை தேடித்தோற்பதுவழக்கமாகிவிட்டதெனக்கு.  

யா. பிலால் ராஜா 

Tuesday, September 26, 2017

Atif Aslam

Atif Aslam 


மூன்றாண்டுகளுக்கு முன்பு ஓர்நாள், ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு 
"மாப்ள உங்களுக்கு ரெண்டாவது பையன் பொறந்துருக்கான் , ஊருக்கு கெளம்பி வாங்க ...."
"வரும்போது என்ன பேருனு யோசிச்சுட்டு வாங்க...." 
யோசிக்காமல் சொன்னேன்
"யோசிச்சாச்சு மாமா ....Atif Aslam ...."  

சில ஆண்டுகளுக்கு முன் தேடித்தேடி சூபி, குவாலி இசை வகைகளை கேட்டு பித்தேறி போயிருந்தேன், ரஹ்மானின் சூபித்தனமான இசையை உள்வாங்கியிருந்ததால் வந்த தொடர்வினை. ஒரு போதை அடிமையைப்போல் ஓய்வான பின்னிரவுகளில் தியானிப்பது  இவ்வகை இசையோடுதான். எண்ணற்ற பாடல்களை கேட்டுக்கடக்கும்போது ஒரு நாள்ஒரு பாடல் என்னை நிறுத்தியது, பாடகரின் குரல் வளம், வீச்சு அபாரமாயிருந்தது மீண்டும் கேட்டேன், பின் மீண்டும் மீண்டும் கேட்டேன், அப்பாடலை நான் கடந்து வெளியேற மிக நீண்டநாளானது.  MTV - coke studio  Serias ன் "Mai Ni Main" என்ற பாடல்தானது, பாடியது Atif Aslam -என்றிருந்தது அந்த coke studio பாகிஸ்தான் verson, பாகிஸ்தான் கலைஞர்களில் நுஸ்ரத் பதே அலிகான், ராஹத் பதே அலிகான், அட்னான் சமி, ஆபிதா பர்வீன் இந்த நால்வர்தான் எனக்கு தெரிந்த உச்சபுகழ் கண்ட இசை ஆளுமைகள், (இவர்களை தவிர ஓட்டு மொத்த பாகிஸ்தானியர்களும்  துப்பாக்கியுடன் தெரியும் தீவிரவாதிகள் என்ற ஐயத்திலிருந்தேன் தொடந்து "தின *** " பத்திரிக்கை படிப்பதன் விளைவு ) Atif Aslam -ன்  மேலும் பல பாடல்களை இணையத்தில் தேடி கேட்டேன்  "Woh Lamhe" – Zeher உட்பட பல அபாரமான  இந்தி பாடல்களை ஹிட் செய்திருக்கிறது  இவர் குரல்.  Wazirabad- பாகிஸ்தானின் பிறந்த இவர் அட்னான் சமி (ஆயுத எழுத்து புகழ்) போல் வாராவாரம் இந்தியா வந்து படத்திற்க்கோ இசை நிகழ்ச்சிக்கோ பாடிவிட்டு செல்லும்மளவு இசை(புகழ்)  கொண்டவராயிருந்தார். இவர் குரலில் ஏதோ ஒரு அமானுஷ்யம் நிச்சயம் அமர்ந்திருக்கிறது. தொடந்து இந்தி பாடல் கேட்பவர்களுக்கு Atif Aslam  நன்கு தெரிந்திருக்கலாம்.
 
எல்லை தாண்டிய இந்த இசைபயங்கரவாதிக்கு Indo - pak பரப்பு முழுவதும் பெரும் ரசிகர் உண்டெனினும், இவரின் தற்போதைய  சோகம் என்ன தெரியுமா?    "பிற்போக்கு போலி தேசியவாதிகள் " பாகிஸ்தானிலிருந்து எந்த இசை கலைஞர்களும் இந்தியா வந்து பாடவோ நிகழ்ச்சியில் பங்கெடுக்கவோ  கூடாதென கோஷமிட்டதில் மீண்டும் பாக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

"Mai Ni Main" - கேட்பு முறை

Youtube link -  https://www.youtube.com/watch?v=XTybbAri_3g

அந்த பாடல் வடிவமைப்பில் வழக்கமான பல்லவியில் துவங்கி சரணத்தில் முடியவடையும் என எதிர்பார்க்க முடியாது, Atif Aslam- ன் அபாரமான "ஆலாப்" ராகமிடும் திறனில் நம்பிக்கைகொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.  கீழ் சொன்னபடிதான் கேட்கவேண்டுமென்பதில்லை, ஒருவேளை இந்த இசையின் மாயாக்கதவினை திறக்க இது உதவலாம். (தேவைப்படுபவர்கள் மட்டும்  Bacardi (Limon) ஒரு மடங்கு மூன்று மடங்கு தண்ணீருடன்  நான்கு சொட்டு எலுமிச்சை சாற்றினை விட்டெடுத்துக்கொண்டு)நிச்சயம் முழு அமைதி கொண்ட ஒரு ஓய்வின் இரவில், கேட்பு புலன் தவிர அனைத்தையும் ஓய்வு நிலையிலிட்டு
நல்லதொரு ஒலிக்கருவி கொண்டு ஒரு பாடலுக்குரிய வழக்கமான வடிவம் மறந்து, முன்று முறை தொடந்து கேட்டாலே போதும், உங்களுக்குள்  அந்த பாடல் ஓடி அடங்க நிச்சயம் சில காலம் பிடிக்கும்.

 யா. பிலால் ராஜா
 
 

Thursday, June 1, 2017

ஒற்றைமரம்

ஒற்றைமரம் 
(கொலுக்குமலைப்பயணம்)

நன்றி -  solvanam.com  (http://solvanam.com/?p=49311 )


போடி நாயக்கனூரில் வாழ்பவர்களுக்கு ஒரு பெரும் காட்சிக்கொடை எங்கிருந்து பார்த்தாலும் ஊரின் அநேக திசையினை சூழ்ந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைசிகரங்கள், இந்த மலைசூழ் நகரில் பிறந்த எனக்கு பள்ளி பருவம் முடியும்வரை மலையடிவாரபகுதிகள் சில மைல் தூரத்தில் சென்றடையக்கூடியதாய் இருப்பினும், நான் செல்ல வாய்ப்பு அமையவில்லை. கல்லூரி சமயத்தில்தான் சில நண்பர்கள் சகவாசத்தில் அதன் மலை அடிவார கிராமமான குரங்கணி வரை செல்லும் வாய்ப்பு கிட்டியது , அங்கிருந்து எத்திசை பார்ப்பினும் கண்களால் பருகி தீர்க்க முடியாத பிரமாண்டமாக உருவெடுத்திருக்கும் மலைக்குன்றுகள், ஊருக்குள் இருந்த நாள் வரையில் ஒவ்வொரு நாளும் அக்குன்றுகளை சலிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன், பிழைப்புக்கு ஊர் மாறினாலும் எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நண்பரகள் உடன்  குரங்கணி , கொட்டக்குடி மலை கிராம வழியாக சிறிதும் பெரிதுமான குன்றுகளுக்கு சென்று உலவுவதும் , அங்கிருக்கும் நீர்ச்சுனைகளில் குளிப்பதும் வழக்கமானது.

ஒருநாள் டாப் ஸ்டேஷன் (முணாறுக்கும் தமிழ்நாடு எல்லைப்பகுதிக்கும் இடைப்பகுதி) வரை செல்ல திட்டமிட்ட மலையேற்ற பயணத்தில் நண்பர் ஒருவரை பாம்பு தீண்டியதால் பாதி வழியில் திரும்பினோம். சிறு பாம்பு என்றதால் அவருக்கு ஆபத்தில்லை. அந்த பயணத்தில் என் கவனமெல்லாம் அம்மலைக்குன்றுக்கு நேரெதிரே ஒரு பிரமாண்ட வசீகர சரிவுகளும் , சோலை , புல்வெளிகளும் கொண்ட சிகரத்தின் மீதிருந்து,  அப்பொழுது மட்டுமல்ல பல நாட்கள் அதன் பிரமாண்டம் என் கண்களுக்குள் நிலை கொண்ட ஒன்று. அதன் சிகர உச்சி மட்டும் எப்போதும் காண முடியாதபடி மேகக்கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது,
 "அதுதான்டா  கொலுக்குமலை டீ எஸ்டேட் ஒருநாள் ஏறிடுவோம்" என்றான் நண்பன்.



கொலுக்குமலையின் ஏற்றுமதி தரம் வாய்ந்த தேயிலை தயாரிக்கப்படுவது பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன், உலகிலியேயே கடல் மட்டத்திலிருந்து 7000+ அடி உயரத்தில் தேயிலை விளைவிக்கப்படும் ஒரே மலைச்சிகரம் இதுதான்.சாகச விரும்பியான என்நண்பன்தலைமையில் ஏதாவது ஒரு விடுமுறை நாளை மையப்படுத்தி மலையேறிவிட அப்பொழுதே முடிவிடுத்தோம்,சில வாரங்களுக்கு முன் அப்படியொரு சந்தர்ப்பம் அமைய ஒரு குழுவாக தயாரானோம்.

வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை  செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும்
ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன்  கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும்  கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடந்தது. இது போன்ற மலைப்பயணத்தில்தான் நம் உடலின் உண்மையான வலுநிலை நமக்கு தெரியும்.




இந்த கட்டுரையின் தலைப்பான ஒற்றைமரம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும், கொழுக்குமலை வழித்தடத்தை மூன்று பிரிவாக பிரிக்கலாம் 1)அடிவார மலைக்குன்று , 2)புல்வெளிக்குன்று 3)சோலைக்காடு, கொலுக்கு மலை சிகரத்தை எவ்வளவு தூரத்திலிருந்து, எந்த கோணத்திலிருந்து  பார்த்தாலும்  இரண்டாம்  நிலையான புல்வெளி குன்றின் முகட்டில் தனித்த பெரிய ஒற்றை மரமொன்று தெரியும், எந்த மரமுமற்ற அக்குன்றில் அவ்வொற்றை மரம் மட்டும் வீம்பும் பிடிவாதமுமாக ஏன் உயிர் பிடித்திருக்கிறதென  தெரியவில்லை. பயணம் துவங்கியதிலிருந்து அம்மரத்தை சென்றடைய ஒரு உத்வேகம் இருந்துகொண்டிருந்தது, நண்பகலில் அவ்வொற்றை மரத்தை சென்றடைந்தது அதன் நிழலில் விழுந்தேன், அம்மரத்தினடியில் உணவுண்டு சிறிது உறங்கி எழுந்ததும், மனம் எடையற்று, எதுவுமற்றுமிருந்தது. பின் மீண்டும் நண்பர்களுடன் வழக்கம்போல் சிரிப்பும் பேச்சுமாக மூன்றாம் நிலையான சோலைக்காடு நோக்கி மலையேற்றம் தொடந்து, வழியில் கரங்கள் கொம்பு , கிளைகளை பற்றி மேலேறுவது போல் என் மனம் அந்த மரத்தை பற்றித்தான் அடுத்த நிலைக்கு மேலேறியது.
"கொஞ்சம் வேகமா ஏறுங்கப்பா ..." முன்னாள் சென்ற ஒரு  நண்பன்.
"நண்பா இந்த மலைப்பயணம் உடம்பால மட்டுமில்ல மனசாலயும் கடக்கணும் ..." இது நான் 
"சொன்னது இலவு இவன் காதுல விழுந்துருச்சா?" என நினைத்திருப்பான்  போல, அதன்பின் உச்சி சென்றடையும் வரை  அவன் பிறரிடம்  பேசியது என் காதில் விழாமல் பார்த்துக்கொண்டான்.
"கொழுக்குமலை எப்படி இந்த பேர் வந்துருக்கும்? ...."
"முந்தி குளிக்கட்டிமலைனு இருந்துச்சாம் அப்புறம் "குலுக்கட்டிமலை"யாகி  இப்போ "கொழுக்குமலை" னு மாறிடுச்சு..." என்றான் ஒரு பொதுஅறிவு.

சமதள பயணத்திற்கும் , மலைவழி பயணத்திற்கும் பெரும் வித்தியாசம் ஒவ்வொரு நிலை கடக்கும்போதும் அது சிறு தூரமெனினும் மலைநிலம்  நமக்களிக்கும் காட்சியின் அழகியல் தரிசனங்கள் மாறிக்கொண்டே இருக்கும், ஒருவேளை இதுதான் குறிச்சி நிலத்தின் மேல் எனக்கிருக்கும் மோகமோ?? இருக்கலாம். வழியில் ஒரு முள்ளம்பன்றியின் உதிர்ந்த உடல்முள் ஒன்றை கண்டெடுத்தேன் , அதுவரையில் அதன் முள்ளென்பது உறுதியான ரோமம் என நினைத்திருந்தேன், தவறு உறுதியான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட குத்தூசிபோல மிரட்டியது. நான் ஊன்றிநடக்கும் கழியில் குத்திச்சொருகி இந்த பயணத்தின் நினைவு பொருளாக வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணிக்கொண்டேன், சிறிது தூரத்திற்குள் அம்முள்ளை தவறவிட்டேன், வனத்தின் பொருள் வனமே மீட்டுக்கொண்டுவிட்டது. தூரமும் ஏற்றமும் எங்களின் சேமிப்பு குடிநீரை மொத்தமும் காலிசெய்தது , கடைசி இரண்டு மணிநேரம் எழத்தாழ நீரின்றி நடந்தோம், இறுதியாக இருந்த சில மிடறு நீரையும் எனக்கு கொடுத்தார்கள் நண்பர்கள். இதுபோன்ற மலையேற்றபயணத்தில் தன் சுமையை தானே தூக்க சோம்பலுறுபவர்களையும், நிழல் கண்ட இடத்திலெல்லாம் அமர்ந்து மதுஅருந்திவிட்டு பிளாஸ்டிக் குப்பைகளை வீசியெறிந்து வருபவர்களை தவிர்த்து விடுவது நலம்.


ஒருவழியாக 9 மணிநேர பயணத்திற்கு பின் கொழுக்குமலை உச்சி சென்றடைந்தோம், கடைசி திருப்பத்தில் நின்று திருப்பி, நடந்து கடந்துயர்ந்த பாதைதூரத்தை முழுமையாக பார்க்கும்போது எனக்கு உண்டானது  ஒரு ராஜபோதை. இதுபோல மலைப்பயணத்தின் போதை எனக்கு எதிலும் கிடைப்பதில்லை. இப்பொழுதுமட்டுமல்ல எந்த மலைப்பயணத்திலும் இறுதி நிலையில் ஒருமுறை கடந்து வந்த பாதையை பார்த்து எனக்குள் பதிந்து கொள்வேன், பின்னொருநாளில் முதுமைமுதிர்வில் ஒரு குவளை தண்ணீருக்கு கூட எழுந்த நடக்க முடியாத தருணங்களில் என் கால்கள் நடந்து கடந்த இந்த தொலைவு நினைவில் வந்து, இறுதியான ஒரு மகிழ்ந்த கண்ணீர்துளியை எனக்களிக்கலாம். கொலுக்குமலையில்  உணவுடன் ஒருநாள் தங்குவதற்கான ஏற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தேயிலை எஸ்டேட் நிர்வாகமே செய்து தருகிறது, , எங்களுக்கான ஏற்பாடுகளை நண்பன் முன்னரே பேசி ஏற்பாடு செய்து விட்டிருந்தான். அங்கிருந்த முழு நாளிள் அனுபவங்களை இங்கு சொல்லப்போவதில்லை, சொர்கத்தின் தெறித்து விழுந்த துண்டு நிலம் அது. சென்றுணரத்தான்வேண்டும்.


யா. பிலால் ராஜா 
(படங்கள் : பாலகிருஷ்ணா குமார், தேனி )

Monday, March 27, 2017

பாறைக்கறி


பாறைக்கறி

 
அசைவத்தில் எத்தனையோ வகை திண்டு தீத்துருக்கோம், நெறைய பேருக்கு தெரியாத வகையொன்னு இருந்துச்சு சில சனங்கள்ட்ட   அதுதா  பாறைக்கறி, வெக்காலி  அத என்னாண்டுஇங்க  பாத்துப்புடுவோம்....
 
சென்ற நூற்றாண்டுகளில் மதுரையை மையமாக கொண்ட நிலப்பகுதிகளில் களவுக்கு செல்வதை குலத்தொழிலாக கொண்டிருந்த ஒரு சமூகம் அடர்ந்த காட்டிற்குள் ஆங்காங்கே  சிறிதும் பெரிதுமான களவுக்குடி அமைத்து  வாழ்ந்தார்கள், அந்த பகுதிக்கு அருகேயுள்ள ஊர்களின் தனவந்தர்களின் வீடுகளை உளவு பார்த்து கன்னமிட்டு(வீட்டில் புகவேண்டிய பகுதியை முன்னரே வெளிசுவற்றில் அடையாளமிடடு ), சாதகமானதொரு நள்ளிரவில் ஊர்காவல் தாண்டி வீடுபுகுந்து கொள்ளையிட்டு திருப்புவார்கள். அப்படி வெற்றிகரமாக கொள்ளை இட்டு திரும்பும்போது வழியில்  ஏதேனும் வீட்டிற்கு வெளியிலோ,பட்டியிலோ இருக்கும் ஆடு ஒன்றிரெண்டை  தூக்கி விடுவார்கள். ஒருவேளை மையக்கொள்ளை தோல்வியில் முடிந்தாலும் வெறும் கையுடன் திரும்ப மனம் வராது ஆளுக்கு ஒரு ஆட்டை தூக்கிவிடுவார்கள்.  ஆடு சத்தமிடாமலிக்க அதன் கழுத்தை வளைத்து குரல்வளையை ஒதுக்கி தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஊரைவிட்டு வெளியேறுவார்கள். சிலசமயம் கொள்ளையிட்டு வெளியேற அதிகாலையாகிவிடும்  களவு குடிக்கு தூரம் அதிகமிருக்கும் பட்சத்தில் சென்று சேர நண்பகலாகிவிடும், ஒருவேளை ஊர் விழித்துக்கொண்டு இவர்களை துரத்தினாலும் அடர் வனத்தில் பதுங்கி மறு நாள்தான் வெளியேற வேண்டியிருக்கும் அதுபோன்ற சமயங்களில் காட்டு வழியில் நல்ல பெரும் கரும்பாறை கொண்ட பகுதியை கண்டதும், தூக்கி வந்த ஆட்டை கத்தியால்  அறுத்து, ரத்தம் குடித்து தொண்டை நனைத்து விட்டு பின் கறி கழித்தெடுத்து வெயிலில் கொதிப்பேறி தகிக்கும் பாறை மீது போட்டு விடுவார்கள், வனப்பகுதியில் உச்சி வெயிலில் பாறைகளின் வெம்மை எவ்வளவு கொடூரமாக தகிக்கும் என்பது அதுபோன்ற வனப்பகுதிக்கு சென்று வந்தால்தான் தெரியும். சில நிமிடங்களில் பாறையில் பரத்திவிட்ட கறியை சிறிது தள்ளி திருப்பி போட்டு எடுத்தால் நன்கு வெந்திருக்கும், வந்திருப்பவன் யாராவது மடியில் சிறிது உப்பு வைத்திருந்தால் பாறையில் வேகும்போது தடவி விடுவார்கள், பிறகென்ன உயிர்ப்பிடித்து ஓடிவந்தவர்களுக்கு தேவாமிர்தம் மாதிரி அந்த பாறைக்கறி, இதில் ஆட்டின் ஈரல் , இதயம் , விரைகள் பாறைமீது இட்டவுடன் விரைந்து வெந்துவிடும் அதெல்லாம் முன்பசிக்கு.
பாறைக்கறி இடுவது பற்றி வைரமுத்து "கருவாச்சி காவியத்தில்" கட்டையன் கதாபாத்திரம் ஓரிடத்தில் நிகழ்த்துவதாக சித்தரித்திருப்பார்.
கிடாரி படத்தில் மைய கதாபாத்திரங்களான சசியும், வேல. ராமமூர்த்தியும் வழக்கொன்றில் சிக்கி போலீஸிடம் அகப்படாமல் வனங்களில் சுற்றிக்கொண்டிருக்கும்பொழுது வரும் "வெட்டருவா வீச்சருவா ..." பாடலின் இடையில் ஆடு மேய்க்கும் கிழவனிடம் வழிப்பறி செய்த ஒரு ஆட்டை பாறைக்கறியிட்டு உண்பதாக காட்சியொன்று வரும்.
( https://www.youtube.com/watch?v=ZAtqngQh-SY )

யா. பிலால் ராஜா 

Wednesday, September 14, 2016

முதல் நாள் (சின்னஞ் சிறுகதை)

முதல் நாள்



 
முந்தய நாள் 
 
"அவனுக்கு நாளைக்குதான் ஸ்கூல் பஸ்ட் டே ,நெனப்பு இருக்குல? காலைல வேகமா வந்துருங்க எட்டர மணிக்கு ஸ்கூல்  ரிஸப்சன்ல இருக்கனுமாம் எந்த  section - னு   அங்க சொல்லுவாங்க" .
"ம்ம்... எழரைக்கே வந்துருவேன் குட்டையன ரெடி பண்ணி வை " (எங்கள் பரம்பரையில் எல்லோரும் குட்டைதான் இவன் மட்டும் எங்கிட்டு வளரப் போறான் என்ற முன் அனுமானம்தான்.) சொல்லி விட்டு இரவு பணிக்கு செல்ல தயாராக துவங்கினேன்.


முன்பொரு நாள் 
 
சென்ற மாதத்திலொருநாள்  பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் மகனுடன் விளையடிக் கொண்டிருந்தேன் , ஓடி ஆடி களைத்து அமர்கையில் நான் வானம் காட்டி
"அங்க பாத்தியா பெருசா வானத்துல ஒரு லைட்  அதுக்கு பேரு நிலா ......"
"இல்லப்பா அது பேரு மூன் ......." மழலை உச்சரிப்பிலும் தன் உறுதி (self confident) தூக்கலாக இருந்தது.
மனைவியை பார்த்தேன் பெருமிதமாக சிரித்துக்கொண்டே "பக்கத்துல கிரேஸ் மெட்ரிக்குலேஷன்ல  கேட்டுட்டு வந்துட்டேன் இன்னும் ஒருவாரத்துல அட்மிஷன் ஆரம்பிச்சுருமாம் அமௌண்ட் ரெடி பண்ணிக்குங்க... "
குறிப்பிட நாளில் அவளாகவே சென்று நன்கொடையிளிருந்து பள்ளிக்கட்டணம் வரை பேரம் பேசி LKG யில் ஒரு இடமும் பெற்று வந்துவிட்டாள்.

முதல் நாள்
 
இரவு பணி முடித்தது இன்று விரைந்து வீடு சேர்ந்தேன் குட்டையன் குளித்து முடித்து சுமாரான நிறம் கொண்டதொரு அப்பள்ளியின் சீருடை அணிந்து "அப்பா நான் ஸ்கூலுக்கு போகப்போறேன்........ஸ்கூலுக்கு போகப்போறேன்...." 31/2 வயதுக்கே உரிய பிள்ளை மொழியில் சொல்லிக்கொண்டிருந்தான். சில மாதங்களுக்கு முன்னெல்லாம் தெருவில் பள்ளி செல்லும் சிறுவர்களை காட்டி "நீயும் கொஞ்ச நாள்ல இப்படி ஸ்கூல் போகணும்"னு சொல்லும்போது நம்மை எங்கோ அனுப்பி போகிறார்கள் என பீதியடைந்து தெருவில் சீருடையுடன் பிள்ளைகள் போனாலே  " நான் ஸ்கூல் போமாட்டேன்.. போ ...."என பிதற்ற தொடங்கினான். என்னடா இது வம்பா போச்சு என்று,
 "ஸ்கூல் போனாதான் வெளையாட நெறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க, மிஸ் புது கேம் சொல்லித்தருவாங்க , ஊஞ்சல் சறுக்கு எலாம் இருக்கும்.." என சொல்லிச் சொல்லி வகுப்பறை என்ற குருஞ்சிறையை அடிக்கடி நாங்கள்  செல்லும் பூங்காவாக அவனுக்கு  நிழலாட வைத்தேன். "சாப்பிட பிரயாணி கூட தருவாங்க .....". என்றெலாம் சொன்னபின்தான் இன்று சிரித்துக்கொண்டே தயாராகி நிற்கிறான்.14 மாத குழந்தையிலேயே 1 கிண்ணத்து பிரியாணி தின்று செரித்தவன் என்பது உபரி தகவல் . எனக்கு தெரியும் உண்மையான சவால் நாளையிளிருந்துதான், பள்ளி செல்ல முரண்டு பிடிக்கப்போகும் அவனுக்கும் , தரதரவென இழுத்துச் செல்லப்போகும் எனக்கும்.

தயாராகி வாசலில் புது ஷூ அணியும்போதுதான் கவனித்தேன் சில நிமிடங்களுக்கு முன்வரையிலான உற்சாகமும் சிரிப்பும் வடிந்து நம்மை எங்கு விட்டு வர போகிறார்களோ என்ற  ஒரு பீதி கலந்த சோகம் அவன் முகத்தில் பரவியது. ஒவ்வொரு நாளும் பொழுதும் எங்களுடனே கழித்தவன் இன்று முதல் பல மணி நேரங்கள் எங்களின் பார்வையை விட்டு விலகி விடுவான், நினைக்கையில் இதுவரை இல்லாத அடர் பாரமொன்று என்  மனமேற துவங்கியது. இவன் பிறந்தத்திலிருந்து மகனென்ற பொது பாசம் கடந்து என் இன்னொரு பிரதியாக , ஆன்மாவின் மற்றோரு பிம்பமாக உணர்ந்திருந்தேன். என் மனம் அவனில் புகுந்து அவனின் ஒவ்வொரு அசைவின் வழி பசி, தாகம், வலி, சிரிப்பை உணரத்துவங்கியிருந்தது.

இதுவரை என்னை  சுற்றி சூழ் கொண்டிருந்த அவனுலகம் இன்றுமுதல் சூலுடைத்து வேறொரு திசையில் முதல் அடி வைக்கப்போகிறது. எனக்கும் அவனுக்குமான கூட்டுப்புழு தருணத்தை காலம் இனி மறுபடியும் அனுமதிக்காது என்று நினைக்கும்போது மனமெங்கும் எழுதிக்காட்ட முடியாதவொரு வலி பரவியது.  அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை நானும் என் மனைவியும் அழைத்துக்கொண்டு , ஒரு கனத்த மௌனம் நிழலாக பின்தொடர  பள்ளி சென்றடைந்தோம்   அவனுக்கான  வகுப்பின் முன் நின்றிருந்த ஒரு இளம் ஆசிரியையிடம் கைமாறினான். முன்னரே அவ்வகுப்பறையில் பல சிறார்கள்  சிரிப்பு, அழுகை, சோகம், மிரட்சி என ஆளுக்கொரு உணர்வுடன் அமர்ந்திருந்தனர்.  ஆசிரியை அவனை கைப்பற்றி ஒரு இருக்கை நோக்கி அழைத்து செல்கையில் அவன் திரும்பி என்னை பார்த்து 
" அப்பா நீயும் ........."
சொல்வது முழுமையாக என்னை வந்தடைவதற்குள் என் மனைவி என் கை பற்றி வேகமாக அவ்விடம் அகற்றி,
 "இனி நம்மள அங்க பாத்த உள்ள உட்கார மாட்டான் அழுது ஊர கூடிருவான் ..............." என்றாள்.
அவன் சொல்ல வந்தது என்னவாக இருக்கும் ? அவன் நிச்சயம் என்னையும் வகுப்பில் அவனுடன் அமரத்தான்  அழைத்திருப்பான். அவனுடனே சேர்ந்து வாழ்வை மீண்டும் வாழும் வரம் கிடைக்காத? கடவுளை நம்பாத எனக்கு யார் வரம் தரப்போகிறார்கள் ? கண்ணீர்த்திரையால் சாலை மங்கலாக தெரிந்தது, வீடு நோக்கி செல்லாமல் ஏதேதோ சாலைகளில் இலக்கில்லாமல் இருசக்கர வாகனம் செல்ல துவங்கியது பின்னாலிருந்த என் மனைவி அன்று மட்டும் எங்கு போகிறோம் என கேட்கவில்லை  .
 
 
யா. பிலால் ராஜா 











Tuesday, January 19, 2016

கைதட்டல்

   
முடிவு செய்திருப்பினும்  சற்று திகைப்பாய் இருந்தது
கைதட்டலை எப்படி கவிதையாய் எழுதுவதென்று....
கைதட்டலை பற்றி கவி எழுத குறைந்தபட்சம் 
ஒரேயொரு  கைதட்டலாவது என்னுடனிருக்கவேண்டும்
அதன் இருப்பிடம்  யாருக்குத்தெரியுமென்று தெரியவில்லை
இப்பெருநகரத்தில் அதன் முகவரி உங்களுக்குத் தெரியுமா?
கைதட்டல் கணங்களை எப்படி சேமிப்பது?
கைதட்டலை புரிந்துகொள்வது புதிராயிருந்தது
ஒருவேளை.....
நம்  கைகளில் மாயவிரலைப்போல முளைத்திருக்கலாம்
காணமுடியாத கைரேகைகளிலொன்றாக மாறியிருக்கலாம் 
வரவேற்ப்பறை சுவர்களில் சட்டமிட்டு மாட்டப்படிருக்கலாம் 
சபைகளில்  இருக்கையினடியிலும் ஒளிந்துகொண்டிருக்கலாம் 
மீள்நினைவுக்கு வராத ஒரு கனவாக கலைந்திருக்கலாம்
மேகம்போல் விண்ணில் எங்கோ சேகாரமாகிக்கொண்டிருக்கலாம்
 
எதிர்வரும்  விடுமுறை  நாள் ஒன்றில்
இந்த கவிதைக்கான கைதட்டலை
நகருக்குள் தேடிக்கண்டடைய திட்டமிட்டுக்கொண்டே
கண்ணயர்கையில்  
 
தட்..தட்...
தட்..தட்...
 
கதவு தட்டப்படும் ஓசை
திறந்து பார்த்தேன்
இருளைத்தவிர யாருமில்லை
 
தட்..தட்...
தட்..தட்... 
 
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை
மீண்டும் திறந்து பார்த்தேன்
மீண்டும் இருளைத்தவிர யாருமில்லை
 
ஒருவேளை
கதவைத்தட்டியது   இந்த கவிதைக்காக
நான்  தேடுமொரு கைதட்டலாக இருக்குமோ?


யா. பிலால் ராஜா