This Article published in "Uyirosai" e-magazine- 05-03-2012 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5346
பசி, காதல், காமம் போல இசையும் உணரத்தான்முடியும், ஒருவர் மற்றவர்க்கு உணர்த்த முடியாது என நினைகிறேன். ஆனால் அறிமுகம் செய்ய முடியும். நான் ரசித்த ஓர் வடஇந்திய இசை ஆளுமை பற்றிய அறிமுகம்தான் இந்த கட்டுரை.
பள்ளி வயதிலிருந்து சினிமாசார்ந்த ஒரு இசைதொகுப்பு வெளிவந்தால் அது A R ரஹ்மானின் இசை தொகுப்பு என்றால் உடனே எப்படியாவது வாங்கியோ, மியூசிக்கல்ஸ் வைத்திருப்பவர்களிடம் நட்புகொண்டோ கேட்டுவிடுவது வழக்கம், ஒவ்வொரு தொகுப்பிலும் புதிய பாடகர்கள், திறமையான இசைக்கலைஞர்கள், புதுமையான தாள/ ஒலிப்பதிவு அறிமுகம் நிச்சயம் இருக்கும். என் பள்ளிப்பருவத்திலிருந்து அவர் இசையின்மொழி எனக்கு பரிட்சயம் என்பதால் கடந்த 15 + ஆண்டுகளில் என் கொண்டாட்ட தருணங்களில் அவரின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு.
பெங்களூரில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் சில உடைகளை தவிர்த்து வறுமையும், வெறுமையும் எப்போதும் உடனிருந்தது, அப்போது ரஹ்மான் இசையில் லகான் பட இயக்குனர் அஷுடோஷ் கோவரிகர்-ன் இயக்கத்தில் swadesh என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆகிருந்தது, அப்போது நானிருந்த சுழலில் பாடல் கேட்ப்பதற்கோ, டிவி பார்ப்பதற்கோ வாய்ப்பில்லை, அதனால் ஒரு நல்ல தியேட்டரில் படம்/பாடல் பார்க்கலாமென்று பெங்களூர் PVR -இல் சென்று பார்தேன். அந்த சமயத்தில் டிக்கெட் விலையான 120 ரூபாய்க்கு என் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கியது ஒரு குட்டி சாகசக்கதைக்கு ஒப்பானது. எதிர்பார்ப்புடன் சென்ற
எனக்கு, படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் படக்கதையில் எந்த ஈர்ப்புமில்லை,
ஆனால் பாடல்கள் ரசிக்ககூடியதாக இருந்தது, படம் முடிந்த பின், இந்த இசைத்தொகுப்பில் சற்று புதுமையாக நான் உணர்ந்தது, படத்தில் முதல் பாடலில் (Yun Hi Chala Chala... ) ஷாருக் தன் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் ஒரு வழிப்போக்கனை தன் வாகனத்தில் அழைத்துச்செல்லுவார். அப்போது ஷாருக் உதித்நாராயண் குரலிலும், வழிபோக்கன் ஒரு வித்தியாசமான குரலிலும் பாடக்கேட்டேன்.
பொதுவாக நாம், இந்திய திரைப்பட இசைச்சுழலில் கேட்கும் குரல்கள் வழவழபாக, பிசிறற்ற,ரொமாண்டிக் குரலாகதான் இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மறையான இசை / குரல் சினிமாவில் கேட்பது மிக அரிது,அப்படிப்பட்ட ஆளுமைகள் இந்திய நாட்டுப்புற இசைவெளிகளில்
கணக்கற்று பரவியிருந்தாலும் வணிக திரைப்பட இசைக்களங்களில்
அவர்களை சிறப்பாகப்பயன்படுத்துவது மிகக்குறைவுதான். இந்த பாடலின் குரல் அப்படிப்பட்ட தனித்தன்மை கொண்ட குரலாக எனக்குப்பட்டது, சில மாதத்திற்குபின் நண்பர்களுடன் பெங்களூர்- இந்திரா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் அமீர்கானின் "Mangal pandey "(இசை : ரஹ்மான்)திரைப்படம் பார்க்கசென்றேன்.(இந்த காலகட்டத்தில் வாரத்தில் இரண்டு திரைப்படம் பார்க்குமளவிற்கு வசதி வந்துவிட்டிருந்தது.) படம் முடிந்து
வெளி வந்த பின்னும் "மங்கள.... மங்கள..." என்ற பாடல் மீண்டும் மீண்டும் எனக்குள் கேட்டு கொண்டே இருந்தது, காரணம் swadesh பாடலில் கேட்ட அதே வித்தியாசமான குரலின் ஈர்ப்பு. இந்த படத்தின் முன்று சுழலில் இப்பாடல் வருகிறது. மொழி எல்லைகளைக்கடந்து பாடல் கேட்கவும் பழகியிருந்ததால் பீகார், ஒரிசா, பெங்கால் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் வசித்த சமயங்களில் விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் அனைவரும் டோல் இசைத்துக்கொண்டு வட பிராந்திய நாட்டுப்புற பாடல்கள்பாடுவதை கேட்டு ரசித்திருக்கிறேன். என் அறையில் என்னுடன் தங்கியிருந்த மராத்தி ஒருவர் மராத்திய நாட்டு புறபாடல்களை பாடுவதில் ஆர்வம் உள்ளவர், அவரிடம் "மங்கள.... மங்கள..." பாடலின் பாடகரை பற்றி கேட்டபோது, அவர் பெயர் “கைலாஷ் க்ஹெர்” என்றும் வடஇந்திய நாட்டுப்புற, சுபி இசை பாடல்களை பாடுவதில் புகழ் பெற்றவரென்றும் எனக்கும் அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார். "வடஇந்திய நாட்டுப்புற இசைவடிவம்" என்று நாம் பொதுவாக சொல்லிவிட்டாலும், என் கேட்பனுபவதில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஒரிசா முக்கிய மாநிலங்களின் நிலவியல் அடிப்படையில் நாட்டுப்புறபாடல்களில் நிறைய வேறுபாடுண்டு கைலாஷ் க்ஹெர் -ன் குரல் இவை அனைத்திற்கும் பொருந்தக்கூடியாது
என நினைக்கிறேன். இந்தக்கட்டுரையை பகிரத்தூண்டிய மங்கள... மங்கள... பாடலை கீழ் கொடுத்துள்ள கண்ணோளியில் கேட்டுப்பாருங்கள்.
(http://www.youtube.com/watch?v=3-a_gabfEXA)
என்னை பொறுத்தவரை இந்தக்கட்டுரையில் நான் குறிப்பிடும் பாடல்களை கண்ணொளியில் காண்பதைக்காட்டிலும் அந்தந்த இசைத்தொகுப்பினை முழுவதும் பதிவிறக்கம் செய்து கேட்பது கைலாஷ் க்ஹெர்-ன் குரலாளுமையை முழுவதும் உள்வாங்க உதவலாம்.
பின்நாளில் இணையத்துடன் இணக்கமாக இருந்த காலங்களில் அவரால் பாடப்பட்ட பல பாடல்களை கேட்டேன். 1973 - ல் மீரட்டில் பிறந்த இவர் வியாபார தோல்வி கண்டபின் இசை ஆர்வமுள்ள நண்பர்களுடன் இசைத்துறைக்கு வந்தவர், 2002 ல் Andaaz என்ற படத்தில் முதல் பாடல் பாடினாலும், Waisa Bhi Hota Hai என்ற படத்தில் சூபி இசை சாயல் கொண்ட Allah ke Bande என்ற பாடல் மூலம்தான் இவர் குரல் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். (http://www.youtube.com/watch?v=9Ered22Xy4E&feature=related )
இக்கட்டுரையில் கொடுத்திருக்கும் பாடல்களை அலுவலக அவசரத்திலோ, மொழியை முதன்மைபடுத்தியோ, வழக்கமான டூயட் பாடல் அளவுகோலுடனோ ஒப்பிடாமல் கேட்டுபாருங்கள். இவரின் பாடல்களில் அடிப்படை சூபி இசை வடிவமே பெரும்பான்மையாக காணப்படுவதால், இந்தியாவின் முக்கிய சூபி இசை பாடகராக கைலாஷ் முன்னிலைப்படுத்தப்படுகிறார். திரைப்படங்களில்
பாடிக்கொண்டிருந்தாலும் தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து
இசைத்தொகுப்புகளை கொண்டுவருவதுதான் இவரது ஆர்வமாக இருக்கிறது.
2006 -ல் வெளிவந்த 'kailasa' என்ற தொகுப்பிலுள்ள
'Teri Deewani ' என்ற பாடல் எப்போதும் என் விருப்பத்திற்குரியது. கைலாஸ்-ன் பாடல்களில் குரல் மற்றும் மெட்டமைப்பிற்கு பின் முக்கிய இடம் பிடிப்பது நரம்பிசை கருவியான 'கிடார்' தான்.
(http://www.youtube.com/watch?v=B6CqANW49J0&feature=related)
'டெல்லி-6 ' படத்தில் 'Arziyan ' என்ற அதிஅற்புதமான சூபி இசைப்பாடலில் kailash kher குரலும் கலந்திருக்கும். தமிழில் G.V. பிரகாஷ் குமார் இசையில் 'வெயில்' படத்தில் 'வெயிலோடு விளையாடி......'-யதில் இவர் குரலும் ஒன்று. இவரின் இசைத்தொகுப்பின் பாடல்வரிகளை பெரும்பாலும் இவரே புனைகிறார். சென்ற மாதம்' Rangeela என்ற தனது புதிய இசைதொகுதியை வெளியிட்டிருக்கிறார். இந்தகட்டுரையின் நோக்கம் அடுத்து வரும் முற்றுப்புள்ளியுடன் நீங்கள்
படித்து முடித்து விடுவதல்ல, கைலாஷ் கஹெர்-ன் இசையை நீங்கள் இக்கட்டுரையின் கண்ணொளி தவிர்த்து மேலும் தேடிக்கேட்பதுதான்.
யா. பிலால் ராஜா