Wednesday, November 17, 2021

பாட்டுக்குறிப்புகள் 

மேகமும் பாதமும் (குறிப்பு - 1)

மேல்நிலைப்பள்ளி இறுதியாண்டில்தான் அந்த தெருவுக்குள் ஒரு மாடிவீட்டில் குடிபோனோம், ஒரு மாட்டுவண்டி மட்டும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் உருண்டோடக்கூடிய அகலம் கொண்ட அந்தக்காலத்து அக்ரஹாரா வடிவிலான வீடுகள் நிறைந்த தெருவது. நான் குடியிருந்த வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் சிறுதிண்ணையுடன் கட்டப்பட்ட எதிர் ஓட்டுவீட்டில் கதவினை ஒட்டிய ஒரு தாழ்நிலை ஜன்னல் தெரியும். அந்த வீட்டிலிருப்பவர்கள் அந்த ஜன்னல்அண்டை வந்தால் முகம் தெரியாது தாழ்வாரம் மறைத்துக்கொள்ளும், நிற்பவரின்/கடப்பவரின் கால்கள் மட்டுமே பெரும்பாலும் தெரியும். பள்ளி, டியூசன், விளையாட்டு, விடுமுறை நாளில் எங்கள் தோட்டத்தில் அப்பாவுடன் விவசாய உதவி வேலை என என்பொழுது கழிந்துவிடும். எப்போதாவது பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். முன்சொன்ன எதிர்வீடு ஒரு கூட்டுக்குடும்பமாதலால் வகைவகையான கால்கள் அந்த ஜன்னலில் நின்று/கடந்து கொண்டிருக்கும். தெருவில் நடந்து கடக்கும் முகங்களை காட்டிலும் இந்த எதிர்வீட்டு ஜன்னலில் தெரியும் கால்கள் இன்னும் சுவராஸ்யமாக இருக்கும். நடுத்தரவயது கருத்த, உழைக்கும் கணுக்கால்கள், மெட்டியும் மருதாணியும் பூசிய பல பெண்களின் கால்கள், சுருக்கமும் நரம்பும் போர்த்தப்பட்ட முதிய கால்கள், குழந்தைகளின் நடைபழகும் கால்கள்... .. ஒரு விடுமுறை நாள் பால்கனியில் நின்றிருந்தேன் அதிகாலை சூரியஒளி எதிர்வீட்டு ஜன்னலில் வழி தரையில் படிந்திருந்தது, அக்காலையில் எந்த கால்களும் கடக்காத ஜன்னலை புதிதாக ஒருஜோடி கால்கள் கடந்தது, உறைந்து விட்டேன், அதுநாள் வரை எவ்வளவோ கால்கள் என் கண்களை கடந்தது போயிருக்கிறது, அதுவும் இப்படியொரு இளம்பெண்ணின் சிவந்த அழகியகால்களை வாழ்வில் பார்த்ததில்லை. மெதுவாக நடந்து ஜன்னலருகில் வந்தது அந்த ஓவியத்தில் கூட கொண்டுவர முடியாத சிவப்பழகு கால்கள். அவள் கால்கள் தரையில் பதிந்ததும், தரைதொட்ட பாதம் மட்டும் ரத்தசிகப்பு நிறமாகியது, தரை பிரிந்ததும் இயல்நிறத்திற்கு திருப்பும் பாதங்கள் மீண்டும் தரைதொட மீண்டும் ரோஜா பூவை போல் சிவந்துவிடும் அவ்வளவு சிவந்த மென்மையான பாதங்கள்அவை. அந்த அதிகாலை சூரிய ஒளியில் இந்த காட்சி அத்துணை படிக சுத்தமாக தெரிந்தது. அதுவரை காடுகரை, வயல்வெளிகளில் அலைந்து உழைத்து கருத்த, வேம்பின் முற்றிய கிளைகளையொத்த கால்களை மட்டும் பார்த்த என்னை, இந்த காலைக்காட்சி கால்களில் ஆணியடித்து அந்த கணத்தில் நிறுத்திவிட்டது. பல நாட்கள் அக்கால்களின் தரிசனத்திற்க்க்காக என் ஒற்றை காலில் பால்கனி தவமிருந்திருக்கின்றேன். அபூர்வமாக என்றாவது ஒருநாள் வரம் கிடைக்கும். என் தந்தைக்கு ஒரு பழக்கமிருந்தது முகச்சவரம் செய்யும்போது மட்டும் ரேடியோவை அருகில் வைத்து பாட்டு கேட்பார், அப்படியொருநாள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு பாடலில்....
"வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
.செவ்வானம் போல் ஆச்சு..."
அசந்துவிட்டேன், கவிஞர்கள் எத்தனையோ காதல்/பெண் வர்ணனை/அழகியல் பாடல்களை எழுதியிருக்கிறார்கள் ஆனால் இப்படியோர் காட்சி எனக்குகிட்டியதைப்போல் இன்னொருவர் ரசித்துணர்த்து ஒரு பாடலில் நான்கு குறுவரிகளில் எழுதியிருக்கிறார், நினைக்கையில் பரவசமாயிருந்தது. அதன் பின் வீடு மட்டுமல்ல வாழ்க்கையே மாறிவிட்டது, எத்தனை பத்தாண்டுகளாயினும் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த ரோஜாசிவப்பு பூம்பிஞ்சு பாதங்கள் என்முன் ஒருமுறை நடந்துபோகும். பாலு மகேந்திரா - இளையராஜாவின் "நீங்கள் கேட்டவை" படத்தில் இந்த ரசனையை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.
(பொறுப்பு துறப்பு:- இது என் நண்பரின் அனுபவம், சொல்லக் கேட்டு "மானே தேனே" போட்டு வரி வடிவப்படுத்தியது மட்டுமே நான்)

Song:-
https://www.youtube.com/watch?v=5SnY3H-0VlQ

- பிலால் ராஜா 

=========================================================================

உசிலம்பட்டி சீனிசேவும் ஓவியாவும்  
(குறிப்பு - 2)



சின்னவயசுல உசிலம்பட்டில சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போகும்போதோ, மதுரைக்கு அவ்வழியா பஸ்ஸில் கடக்கும்போதோ,உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட்க்கு எதிரில் கம்மாக்கரை கடைகளை விரும்பி வேடிக்கை பார்ப்பேன், வரிசையா பெரிய பெரிய சட்டிகளில் சீனிச்சேவு, காராச்சேவு, மிக்சர் என வண்ணமயமாக குவித்து வைத்திருப்பார்கள். என் உயரத்திற்கு குட்டிமலையாட்டம் எல்லாப் பக்கமும் கூர்முனைகண்ணில்உறுத்த குவித்துவைத்திருக்கும் சீனிச்சேவ பாக்குறப்பவே... உடம்பெல்லாம் வாயாக்கிகிட்டு அப்படியே ஓடிப்போய் உள்ளே குதித்துவிடத்தோன்றும். சிலகாலத்திற்கு பின் கம்மாக்கரை ஆக்கிரமிப்பு அகற்றலில் அனைத்து கடைகளும் காலிசெய்யப்பட்டன. 18 பட்டிக்கும் ஒருகாலத்துல தீனிக்கிடங்காக இருந்த அந்த கடைகள் எதுவும் இப்போது இல்லை. அப்புறம் வயசும் வருசமும் போகப்போக அந்தக்காட்சியெல்லாம் மறந்துபோயிற்று, பேருக்கு ஒன்றிரண்டு கடைமட்டும் பஸ்ஸ்டாண்டில் இன்றும் இருக்கிறது.
சமீபத்துல மதயானை கூட்டம் படம் பார்த்தபோது படத்தோட சீரியஸ்ல பாட்டை சரியாக கவனிக்கவில்லை. கொஞ்சநாள் கழிச்சு "கோணக் கொண்டக்காரி" பாடலை ஆறஅமர பார்க்கும்போது தான் உணர முடிந்தது, நான் ஒருபுறம் சேவுக்கடைகளை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த பாட்டை எழுதிய கவிஞர் ஏகாதசி ரோட்டுக்கு இன்னொருபக்கம் நின்று பாத்துக்கிருந்துருப்பாப்டி போலருக்கு. கண்ணில் உறுத்தும் ஓவியாவின் அழகை, காதுக்கு உறுத்தாமல் பாட்டுல எழுதியிருக்காரு கவிஞர் ஏகாதசி.... சீனிச்சேவை கொறித்தபடி.
" சோளதட்ட தான் சுமைய தாங்குமா
ஆள சாய்க்குதே அல்லிப்பூ ரெண்டுதான்
போரால சாவில்ல மாராலதான் சாவு
கூரால தாக்குதே உசிலம்பட்டி சேவு.."

Song:-
https://www.youtube.com/watch?v=ovYSmZj85Es&list=RDovYSmZj85Es&start_radio=1

Bhilal raja

Thursday, September 24, 2020

பிறன்மனை விழைந்தோன்


 (ராவணன் திரைப்பாடல்வழி ரகசியகாதலின் ரசனைக்குறிப்புகள்)


மனிதஇனம் காடோடித்தனமான மந்தை வாழ்வை விட்டு குடும்ப/குல  வாழ்க்கைக்கு நிலைக்கும்போது தனியுடைமையின் அடிப்படை அலகுகளில் ஒன்றான ஒருஆணுக்கு ஒரு பெண் என்ற குடும்ப அமைப்பு உருவாகிறது,  அந்த இணைஒப்பந்தத்திற்கு பிறழ்ந்த ஆணுக்கோ  பெண்ணுக்கோ பிறத்தியாரோடு உண்டாகும் காதல்- காமம் சார்ந்த உறவென்பது குற்றவுணர்வும் துரோகப்பண்பும் கொண்டதாகிவிடுகிறது. மனிதஇனத்தில் இதற்கென நடந்த பலிகள், போர்கள், குழுச்சண்டைகளால் நிலஎல்லைகளும்,  உலகவரைபடமும்கூட பலமுறைமாறியிருக்கிறது.

"பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே" 

 பாம்பா? வாழ்வை பற்றியேறக்கிடைத்த விழுதா? என பாகுபாடுதெரியாபிறன்மனை விழைதலைப்பற்றி எழுதுவதென்பது கத்தியினை கொண்டு எழுதுவது போல, எழுதும்போதே ஏட்டை கிழித்துவிடுமளவுக்கு அபாயமுள்ளது. ஒழுக்கம்/கற்பு/ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துவாதத்தின் எதிர்பண்பான  கூடாக்காதல்கள் எந்த கோட்பாட்டையும்தாண்டி, பெருந்தேக்குவனத்தையும் பொசுக்கி தீர்க்கும் தீக்குச்சி . படமெடுத்தாடும் நாகத்தை முத்தமிடுவதற்கு ஒப்பென உணர்த்தப்படும் இக்காதலின் வகையினை காவியத்தன்மையுடனும் உண்மையுணர்வுடனும் அணுகப்பட்ட படைப்பு தமிழ் சினிமாதிரையில்  கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை. ஆனால் இப்பேராண்மைக்கு எதிர்பண்பாக உடலையும் மனதையும் எதிரெதிரே நிறுத்திவைக்கும் கூடாக்காதலைபற்றி தமிழ்சினிமாவில் எழுதப்பட்ட அனைத்து படைப்புகளையும் துலாபாரத்தின் இடதில வைத்தால் வலம் இழுத்திறக்கும் கனம்கொண்டது "ராவணன்" படத்திற்க்காக எழுதப்பட்ட  4 தாள்களில் அடங்கிவிடும் காட்டுச்சிறுக்கி , உசுரோபோகுதே பாடல்கள்.

"ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி"

அக்கினி பழமென்று தெரிந்தும் சுவைக்க துணிவிக்கும் தூண்டல் எது? இருள்பாதையின் முடிவை அடையப்போவதில்லை எனத்தெரிந்தும் இருவரையும் கள்ளமாக கைகோர்த்து இறங்கிநடக்கத் துரத்தும் கெட்டவிதி அதுவா?  ஆதம்-ஏவா சுவைத்தெறிந்த கனியின் மிச்சத்தை பெரும்பசியின்பால்தின்ற மூன்றாவது ஒருவன் வழிவந்த அதிரகசிய காதல்பசியா? வெடித்துளையற்ற எரிமலையை மனதில் சுமந்திருக்கும் ஒருவன் காலம் துளைத்த ஊற்றுக்கண் வழி நிகழ்த்தும் பேரன்பின் வெடிப்பு அது. மன இருட்குகையிலிருந்து மாறன் எய்தும் அவ்விஷஅன்(ம்)புக்கு காலமே முறிமருந்து  

"தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு! "

"ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு "

மன பாசாங்கை கழற்றியெறிந்து பார்த்தால் யாரோ ஒருவளின் ஏர் கிழிச்ச தடத்துவழி நீர்கிழிச்சு போவது போல் நம்மனமும் போயிருக்கும். பாறாங்கல்லை சுமந்து வழிமறந்து ஒரு நத்தைக்குட்டியாக நகர்ந்திருக்கும். எங்கோ ஓரிடத்திலாவது வண்டு தொடாமுகம் ஒன்றை கண்டு ஒரு வானதாரத்தின் பெருமூச்சை நாம் வாங்கியிருப்போம் இல்லையா?அவளை முன்னிறுத்தி நம்மை பின்நடத்தும் கெட்டவிதிஅது, உயிர் நட்பிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத உறவிது. 

"ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல"

சாராயம் செய்யும் நேர்த்தியுடன் மனஇடுக்கின் ரகசியக்கசிவுகளை வடித்தெடுத்து உணர்வெழுத்தாக  சில பல்லவி சரணங்களில் வார்க்கப்பட்டிருக்கிறது இப்போதைக்காதல். பிறன்மனை விழைதலென்ற  விஷபோதையை வார்த்தை சிக்கன வடிவில் எழுதித்தாண்டுவதென்பது இனிவரும் கவிஞர்களுக்கு பெரும் சவால். இனி எழுதப்படப்போகும் மறையுணர்வு பாடல்களுக்கான "உறை" பொருள். ஆதியிலிருந்து மனித இனத்தை பீடித்த பெரும்போதை  கடவுள்  நம்பிக்கையெனில் சந்தேகமேயில்லாமல் அதனை இடதுகாலால் இடறித்தள்ளி முன்னகர்ந்து வரும் மூத்த அதிபெரும்போதை "பிறன்மனை காதல்".  கவனம் (கள்ள)காதலர்களே இந்த பிறழ்வகை காதலிலிருந்துகூட மீண்டுவிடலாம் ஆனால் இவ்விரு இசைபுதைகுழிக்கு காதுகளை சிக்கக்கொடுத்து வெளிவருதல் சுலபமல்ல. ஈக்கிமின்னலடிக்க, ஈரக்குலைதுடிக்க,இடிஇறக்கி, மழைகொடுத்து  பின்மாயமாகிவிடும்  இசைவனத்திற்கு வழிகாட்டி இழுத்துவந்த ரஹ்மான்-மணிரத்னத்திற்கு நன்றிக்கும் மேலான வார்த்தையொன்றை வைரமுத்துதான் கண்டறிந்து தரமுடியும். .ஒளி விழும் காதலின் எத்தனையோ அடுக்குகளை அரைநூற்றாண்டாக கொண்டாடிவிட்டு, இருளார்ந்த காதலையும்  சொற்களில்  வேல்செய்து வேட்டையாடித்தீர்த்த  "பிறமனைகாதல் கள்ளர்" கவிப்பேரரசு வைரமுத்து

துணைக்குறிப்பு:-
செவிவழி மனசுக்குள் "காட்டுச்சிறுக்கி"யை அழைத்துவந்த சங்கர்மகாதேவன் -அனுராதா ஸ்ரீராமுக்கு என் காதுகேட்கும் கடைசி நாள்வரை நன்றிகள்.

காட்டுச்சிறுக்கி  ( ஒப்பாரி வடிவம் )

பிலால் ராஜா 

Sunday, August 23, 2020

"கழுதைப்பாதை" - நூல் அறிமுகம்




80களின் கடைசி, எங்கள் குடும்பம் புதுவீடுகட்டி போடிநாயக்கனூர் நந்தவனம் தெருவில் குடியேறும்போது பார்த்திருக்கிறேன், "தனம்" தியேட்டரை ஒட்டி, மாதத்தில் பெரும்பாலான நாட்கள் காலியான ஒரு மைதானம் சிலநாட்கள் மட்டும் கழுதைமந்தையாக நிறைந்திருக்கும். பள்ளி முடிந்துவரும்போது அங்கிருக்கும் சிறுவர்களோடு நானும் அந்த கழுதை கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். பெரிய வட்டகைகளில் கரைத்து வைத்த எதையோ குடித்துவிட்டு, எங்கும் ஓடிவிடாமல் கயிறு கட்டிவிடப்பட்ட கால்களில் அங்குமிங்கும் நொடியபடி உலவிக்கொண்டிருக்கும், அடையாளமாக காது அறுக்கப்பட்டும், சூட்டுக்கோல் இழுவைகளால் ரணபுண்ணாகிப்போன நீர் வடியும் உடம்புடனும், ஐந்தாவது கால் முளைத்து விட்டதா? என ஐயம் கொள்ளுமளவுக்கு விரைத்து நீளும் ஆண்குறியும் தினசரி வேடிக்கை காட்சிகள் எங்களுக்கு. பொறுமையா? சோம்பலா? மனிதன் அறிந்துகொள்ள முடியாத பேரமைதி கொண்டவை கழுதைகள். அவைகளை பார்க்கப்பார்க்க, எங்கே அந்த நிறைந்தசோம்பல் என்னையும் பீடித்துக்கொள்ளுமே? என்று சற்று பயந்திருக்கிறேன். பின்னாளில் அவைகள் மேற்குத்தொடர்ச்சி மலை தோட்டங்களில் விளையும் காபி, ஏலம், மிளகு போன்ற மலை விளைபொருட்களை எந்த வாகனபாதையும் உருவாகாத இடத்திலிருந்து ஊருக்குள் இறக்குவதற்கு வைத்திருந்திருக்கிறார்கள் என தெரிந்துகொண்டேன், 90' களின் துவக்கத்தில் அந்த கழுத்தைமந்தைகளும் காணாமல் போனது. 

 தற்போதைய போடிநாயக்கனூர் சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் "போடிபட்டி" யாக இருந்தபோது இதுபோல் கழுதைமந்தைகளை உருவாக்கி பராமரித்து மலைக்காட்டிற்கும் தரைக்காட்டிற்குமிடையே (போடி -குரங்கணி -போடிமெட்டு- டாப் ஸ்டேஷன்(மூணாறு)) அலைந்து வாழ்ந்த குடும்பங்கள்,கூலிகள், முதலாளிகள், இவர்களுக்கிடையே வணிகவாடையற்று காட்டையே கடவுளாகவும் வாழ்வாகவும் கொண்டுவாழ்ந்த முதுவா பழங்குடிகளின் சடங்குகள், குலதெய்வதொல்கதைகளைத்தான் எஸ். செந்தில்குமாரின் தன் "கழுதைப்பாதை" படைப்பின்வழி தரையிறக்கியிருக்கிறார். ஆதியில் உருவான தலைச்சுமைகூலிகளின் ஒராள்(ஒற்றையடி) மலைப்பாதையையும், வாழ்வாதாரத்தையும் தூர்த்து உருவானவை கழுதைப்பதைகள், இதற்க்கென உருவான பலசமுக குடியேற்றங்கள் அதன் பின்னணியிலான வன்மங்கள், தூரோகங்கள் என மொத்தத்தில் அந்த மேற்குத்தொடர்ச்சிமலை வழியே மனிதன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு கதையுண்டு என்பதை மூவண்ணா,சுப்பண்ணா , ராக்கப்பன், கங்கம்மா, முத்துச்சாமி நாயக்கர், நாகவள்ளி, வெள்ளையம்மா, செளடையன்/ராசப்பன் /ராமசாமி செட்டியார் பாத்திரங்கள் வழி தனித்த எழுத்து நடையுடன் இந்நாவலில் பதிந்திருக்கிறார். இக்கதைக்காக நிறைய விவசாய/ சுமை கூலிகள், மலைவாழ் பழங்குடிகளுடன் பலகாலம் சுற்றியலைந்து கதைகளை சேகரித்து சுமந்துவந்திருக்கும் செந்தில் குமாரின் களப்பணி அபாரமானது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் ராஜ்முகமது ராவுத்தர் 100 மாடுகளில் உப்பு வணிகத்தை தமிழ்நாட்டிலிருந்து சாகச வணிகப்பயணமாக இம்மலைவழியாக கேரளாவிற்கு நிகழ்த்தி காட்டிய அத்தியாயங்களை படிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் குரங்கணியிலிருந்து இக்கதைக்களத்தின் பாதையையொட்டி ட்ரெக்கிங் சென்றபோது மலைவனத்தில் பார்த்த நூற்றாண்டை தொடும் வயதில் இஸ்லாமிய அடையாளங்களுடன் பாழடைந்த 10 பேர் அமரக்கூடிய கட்டடம் ஒன்றை பார்த்தது நினைவுக்கு வந்தது. நாவலின் துவக்க அத்தியாயங்கள் கதை நிலவியலையும் காலத்தையும் வாசகருக்கு கடத்த சற்று தாமதித்தாலும் அதன்பின் அக்குறை அகன்று கதை குதிரைப்பாய்ச்சலாக படிப்பவர்களை மலையேற்றிவிடும். இந்த நிலவியலை நேரடியாக அறியாத நகர்ப்புற வாசகர்களும் "மேற்குத்தொடர்ச்சி மலை" "பிதாமகன்" மலைக்காட்டு காட்சிகள் நினைவிருப்பின் இக்"கழுதைப்பாதை"யில் இணைவது எளிது.

 கடந்த அரை நூற்றாண்டுகளில் வாகனமும் மலையின் சாலைகளும் கழுதை/குதிரை/மாடு போன்ற ஜீவாதிகளின் சுமைதூக்கும் வாழ்வை முடிவுக்கு கொண்டுவந்து விட்டது, இருப்பினும் அது ஒரு மனிதனோடு பேசாத ஆனால் ஒன்றையொன்று சார்ந்த இரு இனங்களுக்குக்கிடையேயான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எந்திரங்களோடு பணிபுரிந்து எந்திரமாகவே வாழத்துவங்கிவிட்ட நமக்கு இதுபோல இன்னும் நிறைய "கழுதைப்பாதை" பயணங்களை திரும்பி பார்க்க தேவை இருக்கிறது.

 -பிலால் ராஜா

Saturday, June 20, 2020

AGAM (Rock Band)


AGAM (Rock Band)

 

( நன்றி - திரைக்களம் )
 
முன்னொருமுறை  VTV - "ஆரோமலே" பாடலின் Cover version-ஐ இணையத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன், மூலப்பாடலை எட்டிப்பிடிக்கும்தரமுடைய  மறுஆக்கபாடல்கள் (Remake/Cover) வெகுசிலவைகள்தான். அந்த காணொளியில் நான்கேட்ட "அரோமலே" அப்படியான ஒன்று, அதில்தான்  "AGAM" Rock Band குழுவும் அதன் பிரதான பாடகர் ஹரீஷ் சிவராம கிருஷ்ணனும் அறிமுகமானார்கள்.

2010-க்கு பின் கேரளா பின்னணியில்  கோவிந்வசந்தாவின் (96 புகழ்) "Thaikkudam Bridge"  Rock Band இசைக்குழு புறப்பட்டு இசையோடு  சுற்றிவந்தபோது அவர்களுக்கு இணையாக  பெங்களூரிலிருந்து "AGAM " Rock Band குழுவும் தென்னிந்தியா பெருநகர  மேடைநிகழ்ச்சிகளின்  பாட்டு பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தனர்.
ஒற்றைத்தந்தி கட்டப்பட்ட அபூர்வ கிட்டாரைப்போல்,  "அகம்" குழுவின் அற்புதமும் பெரும்பலமும் அதன் பிரதானபாடகர் ஹரீஷ்தான். 
கர்னாடக  இசையின் பின்புலத்தில் பிரபலமான திரைப்பாடல்களையும், சுயஉருவாக்க பாடல்களையும் அதன் மூலஅளவீட்டிலிருந்து சந்தங்கள் மீறி விடாதபடி அற்புதமாக படும்முறை ஹரீஷ்னுடையது. ஒவ்வொரு பாடலின் முன்னும், இடையிலும் ஹரீஷ் எடுத்துவரும் ஆலாபனைகள் ஆற்றுநீரோட்டத்தில் எழும் அலைகளைப்போல அழகானவை  ஒருபோதும்  கரைமீறி கேட்ப்பு எல்லைக்கு வெளிச்செல்லாதவை. அதேபோல்  பெரும்பாலான பாடல்கள்  மூலத்திலிருந்து மெட்டவிழ்ப்பு (unplugged singing)  முறையில் பாடப்படுபவை எனினும் அந்த பாடலின் உணர்வை பலபடி மேலெடுத்து சென்றுவிடுவதே ஹாரிஸ் பாடும்முறையின் பலம்.  "Kappa TV" யின் இசைநிகழ்ச்சி மற்றும் youtube வழி அதிகம் கேட்கப்பட்ட/கேட்கப்படும் இசைகாணொளி அகம் குழுவினருடையது. இந்த பத்தியை படித்தவுடன் கேட்டேஆகவேண்டிய அக(ம்)த்தின் அழகு இந்த "மலர்களே..." பாடல்.
 
மேலும் சில ....
பச்சைமாமலை 

பிலால் ராஜா







Saturday, April 11, 2020

Perfume - Movie View

Perfume (The Story of a Murderer)
 
நன்றி வாசகசாலை இணையஇதழ் (7th April 2020)


ஹோமோசேபியன்ஸ்க்கும்  பரிணாம வளர்ச்சியடைந்த இன்றைய நவீனமனிதனுக்கும் இடைப்பட்ட  ஆதிகுகைமனிதனுக்கு   ஐம்பொறிகளின் ஒன்றான மூக்கின்வழி மோப்பசக்திதான் முக்கிய உணர்வுஉறுப்பாக இருந்தது. குகை/ மரம்/ வனப்புதர்களை அண்டி வாழ்ந்துவந்த மனிதக்கூட்டம் விலங்கு /தீ / பிறமனித கூடங்களின் அருகாமையை மோப்பத்தால் உணர்ந்து எச்சரிக்கை கொண்டது. பின் உணர்வுறுப்புகளின் தலையாயதும் உயிரியல் ஆச்சரியங்கள் ஒன்றான கண்ணின் காட்சியுணர்வு மேம்பட,  அதிசிறந்த மோப்பத்திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து  இன்று நாம் வாழும் அறையின் நறுமண/நாற்ற/சமையல் மணம் அறிவதைதவிர வேறெதற்கும் நீட்சியுறாத ஒன்றாக  ஒரு அறையளவுக்கு சுருங்கிவிட்டது மனித மோப்பத்திறன்.

Perfume (The Story of a Murderer) திரைப்படத்தின் நாயகன் ஜீன்-பாப்டிஸ்ட் (Ben Whishaw) அப்படியொரு அதிவிசேஷ மோப்ப உணர்வு கொண்ட சிசுவாக 18ம் நூற்றாண்டின் பிரான்ஸ்ன் சேரி ஒன்றின் மீன்/மாமிச சந்தையில் கொடூர நாற்றங்கொண்ட கழிவுகளுக்கிடையில் பிறக்கிறான், பிறந்த சிசுவை மீன் கழிவுகளுக்கிடையில் தள்ளி கொல்ல முயன்றதாக தாய் தூக்கிலிடப்பட, ஜீன் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்து பின் தோல் பதனிடும் ஒரு இடத்தில் கொத்தடிமையாக்கப்படுகிறான், பிறந்தது முதல் பதின்பருவம் வரை அவன் உணர்ந்தது எல்லாமே மோசமான கொடூரமான நாற்றங்கள்தான், ஆனால் அவனுக்கிருக்கும் அதிநுட்ப வாசனை உணர்வினால் அவற்றை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் திறன் நாளுக்குநாள் அதிகரிக்கிறது, சிலகாலம் கழித்து அவன் எஜமானனால்  பாரிஸுக்கு வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறான், அந்நகரத்தில் நல்ல பல வாசனைகளை உணர அவன் மோப்பஉணர்வு உக்கிரம் கொள்கிறது. அங்கு ஒரு வாசனை திரவிய (perfume) கடையினை வழியாக நறுமணங்களின் மீது மனிதருக்கிருக்கும் காதலை உணர்கிறான். அக்கடையின்  ஒவ்வொரு சீசாவிலிருக்கும வாசனை மூலங்களை  தூரத்திலிருந்தே   பிரித்துணரமுடிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவனை ஒரு அற்புத வாசனை கடக்கிறது, மோப்பஉணர்வால் அதனை துரத்தி செல்ல  அது ஒரு பெண் உடலின் வாடையென அறிகிறான், ஒரு இருள்போல அவளை அணுகி அவ்வாடையை கிரகிக்கும்போது அவள் திடுக்கிட்டு அலறஅவளை அமைதியாகும் போராட்டத்தில் உயிரிழக்கிறாள், ஆனால் அந்த அசம்பாவிதம் அவனை பாதிக்கவில்லை அவள் ஆடைகளைந்து அவ்வுடல் வாசனையை முழுவதும் துய்க்கிறான். பெண்ணுடல் நறுமணம் அவனை உன்மத்தம் கொள்ளச்செய்கிறது.ஆனால் அவ்வாடையை எப்படி கைகொள்வது தெரியால் அங்கிருந்து செல்கிறான்.
 

பின் அந்நகரின் மிகச்சிறந்த இத்தாலிய வாசனை திரவிய  வல்லுனரும்  வியாபாரியுமான கியூசெப் பால்டினியை தனது நறுமண உருவாக்க திறமையால் கவர்ந்து மலர்களிடமிருந்து நறுமணத்தை பிரித்தெடுக்கும் நுட்பம் கற்கிறான். அத்துடன் கியூசெப் இதுவரை மனிதன் கண்டுபிடித்த 12 வகையான வாசனைகளின் அடிப்படையில்தான் அனைத்து நறுமணங்களையும் உருவாக்கினான் எனவும் பிரபஞ்சத்தின் எல்லா பூதங்களுக்கும் (Element ) கண்ணுக்கு புலப்படாத ஓர் பரிமாணம் (Dimention ) இருப்பதுபோல் வாசனைகளுக்கும் மனிதன் கண்டுபிடிக்காத ஒன்று இருக்கலாம் எனவும் இருந்தால் அதுவே 13வது வாசனையாக இருக்கவேண்டுமெனவும் சொல்கிறார். ஏற்கனவே வழக்கமான கியூசெப் கற்றுத்தந்த முறையில் அனைத்து பொருளிலிருந்து வாசனையை  பிரித்தெடுக்க முடியாமல் தோற்று விரக்தியிலிருக்கு ஜீன், நுகரும்போதே அதிஉன்மத்த சொர்க்க இருப்பை உணர்த்தும்  அந்த 13வது  வாசனையை  உருவாகும் முடிவுடன் அந்நகரிலிருந்து கிளம்புகிறான்.சில காலம் காட்டில் வாழ்ந்துவிட்டு ஓர் நகரைஅடைகிறான், அந்நகரின் பெரும் செல்வந்தர் அன்டோயின் ரிச்சிஸின் (ஆலன் ரிக்மேன்) மகள் லாராவின் உடல்வாசனைதான் தான் உருவாக்கப்போகும் 13வது நறுமணத்தின் மூலமென நுகர்ந்துணர்கிறான். ஆனால் முன்னதாக 12 நறுமண மூலங்களை தயாரிக்கும் முயற்சியில் 12 பெண்களை கொலை செய்து பிரத்தேகமான முறையில் அவர்களின் உடல் மனத்தை தைலமாக்கி சேமிக்கிறான்,  பின் கடும் காவலையும் மீறி லாராவை கொன்று 13வது நறுமணத்தை உருவாக்கி முடிக்க, பாரிஸ் போலீசால் கைது செய்து மரணதண்டனையளிக்கபடுகிறான். தண்டனைநாளன்று  ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நகரின் மத்தியில் அந்த 13வது நறுமணத்தை பரப்ப,  கூடியிருப்போரும், நீதி மற்றும் காவல் கனவான்களும் சுயஉணர்விழந்து பித்தேறி நிலைக்கு மாறி அவனை தேவதூதுவனென புகழ்ந்து  குற்றமற்றவன் என்றுரைத்து பின் நிகழ்த்தும் காட்சி இதுவரை உலகின் எந்த ஓர் திரைப்படத்திலும் இடம்பெறாதது. இறுதிக்காட்சியில் பாரீஸ்ஸில் தான்பிறந்த மீன்சந்தைக்கு சென்று குப்பியில் மீதமுள்ள அந்த 13வது நறுமணத்தை தன்மீது  முழுவதும் ஊற்றிக்கொள்ள அங்கிருக்கும் சிறு கும்பல் அவ்வாடையில் ஈர்க்கப்பட்ட அவன்மீது மொய்க்கிறது, சிறிது நேரத்தில் அக்கூட்டம் அகல அங்கு ஜீன்-பாப்டிஸ்ட் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை அந்த வாசனை குப்பியை தவிர, அதிலுள்ள கடைசி துளியும் மண்ணில் விழ திரை இருள்கிறது.
 
ஏற்கனவே "Run Lola Run" மூலம் உலக சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான  ஜெர்மனிய இயக்குனர் Tom Tykwer -ன் Perfume என்கிற நாவலை  தழுவிய படைப்பான இப்படத்தின் இயக்கமும், ஒளிப்பதிவும்இசையும், நடிப்பும் சினிமா ரசிகர்கள் பார்த்தே ஆகவேண்டிய படங்களின் பட்டியலில் ஒன்றாக இடம்பிடிக்கிறது செய்கிறது "Perfume" 
 
யா. பிலால் ராஜா 

Tuesday, September 10, 2019

சாபம்



சாபம் (சிறுகதை )

நன்றி குங்குமம் வார இதழ் (13/09/2019 )


சில வருடங்களுக்குமுன் ஒரு தனியார் வங்கியின் கடனட்டை விற்க்கும் பணிப்பிரிவில் ஊதியஉயர்வுடன் கூடிய  பணிமாறுதல் பெற்று எங்களூரிலிருந்து அம்மாநகருக்கு வந்து சேர்ந்தேன். 
"தம்பி பேச்சுலர் தான?..." 
" சுவத்துல ஆணிஅடிக்க கூடாது"
"5 ந் தேதி வாடக கேக்காம கொடுத்துறணும் …"
"விருந்தாளிக வந்தா 2 நாளைக்கு மேல தங்கக்கூடாது …"
" அதெல்லாம் எந்த பிரச்சையும் இருக்காது சார் ….."

வாடகை வீட்டிற்க்கே உரிய உலகப்பொது விதிமுறையுடன், கட்டுபடியாகும் வாடகைக்கு ஒரு முதல்தளவீட்டையும் தேடி விரைவில் குடியேறினேன். அவ்வீட்டில் என் படுக்கையறையின்  மேற்க்கே ஜன்னலை ஒட்டினாற்போல் நானிருக்கும்  முதல்தளஉயரத்திற்கு கிளைபரப்பி ஒரு வேப்பமரம் நின்றிருந்தது, பக்கத்துக்கு வீட்டின் காலி நிலத்தில் வேர்விட்டு கிளைபரப்பி கம்பிரமாக வளர்ந்திருந்தது,  வேப்பமரத்தின் பசுமையும் குளுமையும் முதல் நாளிலிருந்தே எனக்கு பிடித்துப்போனது, உச்சிவெயிலுக்குபின்னான பொழுதுகளில் என் அறையின் சுவற்றிலும், ஜன்னலிலும் படியவிருந்த சூரியனின் உக்கிரத்தை தடுக்கத்தோதுவாய்  தன் கிளைகளை  பரவவிட்டிருந்தது.

குடிவந்த சிலமாதங்களில் அந்த ஆண்டுக்குரிய கோடை துவங்கியது, நகரின் தலைக்கு மேல் சூரியனை கட்டி தொங்கவிட்டது போல கோடையின் துவக்கத்திலிருந்தே வெந்தும் தணியாத தணலாக கொதிப்பேறிப்போயிருந்தது நகரம். ஒவ்வொரு கோடையிலும் துளி மழைக்கு கூட வாய்ப்பற்று, நரகத்தின் நெருப்பு நிலச்சாயல் படிந்துவிடும்போல  இந்நகருக்கு. விற்பனை பிரதிநிதியான நானும், கண்டு, கேட்டு, உண்டு, நுகர்ந்து, தொட்டறியும் ஐம்புலனும் வெக்கை தேக்கி மாலை வீடு சேருவேன். குளித்து என்னை புதுப்பிக்க நினைத்து குழாயை திறந்தால் நெருப்பே நீர்வடிவில் கொட்டிக்கொண்டிருக்கும்

அந்த கோடைதான் அவ்வேம்பின் பேரருமையை எனக்கு சொன்னது,  மாலையில் அக்கம்பக்கத்து குடியிருப்புவாசிகளெல்லாம் வீடுகளில் புழுக்கம் தாளாது மொட்டைமாடிக்கும், தெருமுனை பூங்காவிற்கும் இடம்பெயர்வார்கள், பகலில் உள்வாங்கிய சூரியசூட்டை மாலையில் வீடுகளின் சுவர்கள் வெக்கையாக வெளித்தள்ளும், உட்கொண்ட வெப்பத்தை நீண்ட பொழுது தேக்கி வைத்திருப்பதில் உருளைக்கிழங்கை போலத்தான் கான்கிரீட் கட்டிடங்களும்.   ஆனால் என் படுக்கையறையில் மட்டும் வெக்கையை உணரமுடியாது, காரணம் அந்த அறையின் வெளிச்சுவர் முழுவதும் வெயில் மறைத்து கிளைபரப்பி ஒவ்வொரு பகலிலும் சூரியனோடு சமர் புரியும் வேம்பு. அந்த நகரிலேயே வெக்கை போர்த்தாமல், புழுக்கம் படராதது, வேம்பின் கிளைகளுக்கிடையில் உறங்குவது நானாகத்தானிருக்கும். அதன் சிறுகிளைகளும் இலைகளும்  ஒன்றிரண்டு என் ஜன்னலை உரசியபடியிருக்கும், காற்றின் சிறு சலனத்திற்கு வேம்பின் கிளையெல்லாம் அசைந்து ஜன்னலின் வழி எப்படியும் வந்தடைந்துவிடும் ஒவ்வொருநாளும்  என்னை உறங்கவைக்கும் சிறுகுளிர் காற்று.  

ஓய்வு நேரங்களில்  ஜன்னலின் வழி அப்பெரும்மரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன், ஓர் நாள் ஜன்னலுக்கு நேரெதிரான கிளையில் காகம் ஒன்று வந்தமர்ந்து  சிறிது நேரம் கழிய சில அடிதூரம் மாறி மாறி அமர்ந்ததே தவிர அவ்விடம் அகலவில்லை, அதுவரை கைக்கிண்ணத்தில் உண்டுகொண்டிருந்த வேர்க்கடலை கொஞ்சம் எடுத்தது ஜன்னல் வெளிவிளிம்பில் வைத்து நான் சற்று நகர பாதுகாப்பு தூரம் கணக்கிட்டு ஜன்னல் அமர்ந்து கடலைகளை தின்று தீர்த்து பறந்தது  அடுத்ததடுத்து சில நாட்களிலும் தொடர்ந்தது கடலைக்கு பதில் மிச்சர், பொரி, சோறு என மாறியது, ஆச்சர்யாமாக இருக்கும் எங்கிருந்து வருகிறது என தெரியாது அனால் ஒவ்வொரு காலையும் ஜன்னலருகில் அமர்ந்து நான் உணவுண்ணும் நேரம் சரியாக வந்து இரையெடுத்து பின் மறைந்துவிடும், சில தினங்களில் உடன் ஒரு காகமும் வந்தமர்ந்து அம்மரக்கிளையில் பார்த்தவுடன் ஒரு தடுமாற்றம் எது நம்மவன் ?
பார்த்தவுடன் காகங்களுக்கு வேறுபாடு கண்டுணர முடியாதுதானே ?
ஊருக்குள் சுற்றும் காகங்கள் ஏன் எல்லாம் ஓன்றுபோலிருக்கிறது?
உருவ பருமன் வித்தியாசத்தை வைத்து சில கனத்தில் நம்மவனை கண்டுகொண்டேன் , புதிய காகத்தை காட்டிலும் சற்று பருமனாக. புது துணை பிடித்திருக்கிறது. அதன் பின் இருக்ககத்திற்கும் தலா ஒவ்வொரு கை சோறிட துவங்கினேன் 
சில சமயம் கைகளில் இரையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியே நீட்டுவேன் வளர்ப்பு கிளிகளை போல் வந்தது கொத்தி தின்னுமென்ற கற்பனையில் காக்கைகள் மனிதனை ஒருபோதும் நம்புவதில்லை போலும் ஒருமுறை கூட நெருங்கியதில்லை
உண்டபின் அந்த மரத்தின் மற்ற கிளைகளிலும் சற்று நீண்டநேரம் பறந்தமர துவங்கின ஒரு நீண்ட விடுமுறைக்கு பின் திரும்பி வந்து ஜன்னல் திறந்து நோட்டமிட்டேன் காகங்களை காணவில்லை நீண்டநாள் பூட்டிக்கிடந்ததால் தூசு படிந்த வீட்டை ஓரளவு சுத்தம் செய்து அந்த வார விகடனுடன் ஜன்னலருகே ஓய்ந்து அமர்ந்தபோதுதான் கவனித்தேன், வாயில் சிறு சுள்ளியை கவ்வியபடி அம்மரத்தில் ஒரு மூன்று கிளைபிரிவின் மையத்தில் ஏற்கனவே கட்டுமானத்திலிருந்த ஒரு கூட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தது. என்னை சட்டை செய்யவில்லை  கொண்டுவந்த சுள்ளியை வாகாக கூட்டில் சொருகிவிட்டு பறந்தது, சிறிது நேரத்தில் இரண்டாவதும் பறந்து வந்து ஒரு வைக்கோலை கூட்டில் கிடத்தைப்போனது, சில தினங்களிலியேயே இரண்டும் கூடி ஒரு நேர்த்தியான கூட்டை விரைந்து கட்டின. தினமும் நான் வைக்கும் இரையையும் நீரையும் எடுத்துக்கொண்டாலும் நீண்ட நேரம் ஓய்ந்து கிளைகளில் அமர்வதில்லை  அவ்வளவு துரித வேலைக்கு கரணம் சில நாட்களில் தெரிந்து விட்டது, பெண்காகம் முட்டையிட்டு அடைகாத்து கூட்டிலேயே அமர்ந்து கொண்டது, பூனைகளைப்போல் காக்கைகளின் கூடல் நிமித்தங்களும் ரகசியமானவை, காக்கைகளின் புணர்தல் நிமித்தங்கள் யாரும் அறிந்துவிடமுடியாதவை. ஆண்காகம் இணைதேடிக்கூடி துணை முட்டையிடும் பருவம் நெருங்குவதை உணர்ந்து ஒரு கூட்டை கட்டியமர்த்திக்  கொண்டது. இந்த பெருநகரத்தில் என் கண்ணப்பார்வைக்கிணையான தூரத்தில் ஒரு புள்ளினம் குடும்பமாவது கண்டு மனம் மகிழ்ந்தது 

அந்த பருவமும் ஒரு கடும்கோடைதான், இந்த அக்னிக்கு ஊர் பக்கம் ஓரெட்டு போய்வரலாமென அன்றைய பகலில் தயாராகிக்கொண்டிருந்தேன், ஜன்னலருகே டப்... டப்... மரக்கிளைகள் வெட்டப்படும் ஓசை கேட்டது , எப்போதும் மழைக்காலங்களில்தான் அந்நிலத்தின் உரிமையாளர் அம்மரத்தின் மிதம்மிஞ்சிய கிளைகளை வெட்டி ஒழுங்கு படுத்தி வைத்திருப்பார், ஆனால் இந்த கடும்கோடையில் இதன்ன சத்தம் ? ஜன்னல் திறந்து பார்த்தேன் மூர்க்கமாக ஒருவன் மரத்தின் பிற கிளைகளை மையக்கிளைகளின் அடிவரை வெட்டி மண்ணில் வீழ்த்திக்கொண்டிருந்தான் அதிர்ச்சியாக இருந்தது இது வழக்கமான கிளை ஒழுங்குக்கான வெட்டாக தெரியவில்லை பார்த்துக்கொண்டியூர்க்கும்போதே மரத்தின் அனைத்து கிளைகளையும் கொப்பு களையும் ஒன்றுவிடாமல் மண்ணில் சரித்திருந்தான்  இறுதியாக காகத்தின் கூடிருக்கும் கொப்பின் மீதேறி கிளையை வெட்டத்துவங்கியவன் காக்கை கூட்டை கண்டவனாக கீழே நின்றிருந்த உரிமையாளரிடம் 
" சார் காக்க கூடு ஒன்னிருக்கு... "
"தள்ளிவிடுயா.." 
"இல்லசார்... அதுல ஒரு புதுசா பொரிஞ்ச குஞ்சு ஒன்னிருக்கு …"
சரி அந்த நுனிக்கொப்ப விட்டுட்டு மிச்சத்த வெட்டி வேலைய வெரசா முடி…"
கேட்டவுடன் வெறும் கூட்டை விட்டுவிட்டு மீதிருக்கும் கிளைகளை வெட்டத்துவங்கினான் 
கூட்டிலிருங்கும் காக்கைக்குஞ்சு வாயை மேலநோக்கி திறந்து கத்திக்கொண்டிருந்தது இன்னும் முழுவதும் வளராத இறகுகொண்ட அதன் உடல் அந்த சிறுகூட்டுக்குள் நடுங்கிதுடித்துக்கொண்டிருந்தது, இரு பெரும் காகங்களும் தீவிரமாக கரைந்துகொண்டு அந்த கிளைமேல் மரவெட்டியின் தலைக்குமேல் இறக்கையால் தாக்குவதுபோல் தாழப்பறந்து கொண்டேயிருந்தது, மரவெட்டியின் உதவியாளன் ஒரு கிளை கொண்டு அதனை விரட்ட,  இரு காகமும் அருகேயுள்ள வீடுகளின் மீதும் மின்கம்பிகள் மீதும் பதற்றத்துடன் மாறி  மாறி  அமர்ந்துகொண்டிருந்தது 

எனக்கு எனன செய்வதென்று தெரியவில்லை, உடனே மொட்டை மாடி வழியாக சென்று மேலிருந்த்து பார்த்தேன், அதற்குள் மரவெட்டி அம்மரத்தின் மூன்று பெருங்கிளைகள் தவிர்த்து ஒரு இலை கூட விட்டு வைக்காமல் பிற கிளைகளை மண்னில் வீழ்த்தி அவனும் கீழிறங்கியிருந்தான் கடும் வெயிலில் ஒற்றை கிளை மறைவு கூடஅற்று கிளையில் அபாயகர விளிம்பில் அந்த குஞ்சு கதறிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும் கேட்டது. மொட்டை மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த என்னையும் அந்த இரு காகங்களுக்கு தலையை கொத்திவிடுவதுபோல் உரசி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது  ரயில் நிலையத்தில் காத்திருந்த நண்பன் போன் செய்து
 " இன்னும் ஒருமணி நேரத்தில் ட்ரெயின் கிளம்பப்போகுது இன்னும் வீடு விடலயா …".
அவைகளுக்கு எப்படி உதவுது என தெரியவில்லை  வேறு வழியின்றி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு கிளம்பினேன். ஒருவாரம் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தாலும் மனமெல்லாம் காக்கை கூட்டின்மீதும் அதன் குடும்பத்தின் மீதிருந்து ஒரு வாரத்திற்கு பின் திரும்ப வந்ததும் முதலில் ஓடிச்சென்று ஜன்னல் திறந்து கூடிருந்த கிளையை பார்த்தேன். கூடு சிதைந்து கிளையில் ஒருபுறம் சரிந்தவாறு தொங்கிக்கொண்டிருந்தது.  எங்கு போனது அந்த காக்கைகள் , குஞ்சு அதற்குள் பறக்க பழகி தப்பிருக்குமா?  வேறு பறவைகள் வேட்டையாடியிருக்குமா? இந்த கடும்கோடை தாளாது கருகிமண்டிருக்குமா?  சில நாட்களில் தொங்கிக்கொண்டிருந்த கூடும் அடித்த ஒரு காற்றில் கீழேவிழுந்த்து சிதறிப்போனது 

பின் பருவமழைக்காலம் துவங்கியது அதன் பின்புதான் கவனித்தேன் அந்த மரத்திலிருந்து எந்தவொரு கிளையும் இலையும் துளிர்க்கவில்லை  சில பல நாட்களில் வீட்டுக்காரரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து வருத்தத்துடன் பார்த்து விட்டு "நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம்தான, எப்ப வெட்டிவிட்டாலும் துளுத்துருமே இந்தவட்டம் என்னாச்சு…….." என புலம்பிக்கொண்டிருந்தார்  அந்த வேம்பு தழைக்காததால் அவ்விடத்தை சுற்றிய பகுதிகளில் வெக்கை பெருகத்  துவங்கியது. அவிவிடத்தின் உரிமையாளர் அடுத்து ஒரு மூன்று மாதம் பொறுத்து பார்த்தார் பின்னொருநாள் பலத்த மரம் வெட்டும் ஓசை கேட்டது ஜன்னல் திறந்து பார்த்தேன், அன்றொருநாள் கிளைவெட்டிய மரவெட்டிகள் இருவர் இன்று மொத்த மரத்தையும் துண்டு துண்டாக அடிவரை வெட்டி கட்டைகளாக மண்ணில் சரித்துக்கொண்டிருந்தார்கள் 
"நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம் எப்படி மொட்டையாச்சு முத்து…?" 
நாடு மரத்தின் உச்சியில் மேல்நோக்கியபடியிருந்த ஒரு சுமாரான ஆனால் ஆழமான துளையொன்றை காட்டி "மழைத்தண்ணி மேலருந்து போயிருக்குள அதுதான் ஏதோ சீக்கடுச்சுருச்சு…." என்று கதை அளந்துகொண்டிருந்தான் மரவெட்டி மரத்தை முழுவதும் கட்டையாகி சாலையோரத்தில் அடுக்கிவைத்து ட்ராக்ட்டர் எடுத்து வருவதாக சென்றுவிட்டான்.வீட்டின் உரிமையாளர் ஒருமுறை மரக்கட்டைகளை ஆழ்ந்த இழப்பின் பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தார்  அப்போது இரு காக்கைகள் எங்கிருந்தோ பறந்து வந்து, வீழ்ந்து கிடந்த மரத்தின் மீதமர்ந்தன எனக்கு நன்குதெரியும் அவை இம்மரத்தில் கூடுகட்டி வாசித்த என் சிநேக காகங்கள்தான். ஆனால் அவைகளுடன் மூன்றாவதான அந்த குஞ்சுக்காகம் இல்லை. அம்மரக்கட்டைகள் மீது இங்குமங்கும் தாவியமர்ந்து மீண்டும் பறக்கத்துவங்கின. அன்றிலிருந்து அக்காக்கைகளின் சாபமே ஒரு அரூபநிழலாய் மரமற்ற அவ்வெளியில்  படரத்தொடங்கியது.

யா. பிலால் ராஜா

Saturday, June 29, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும்



அத்தியாயங்களின் துவக்கத்தில்  மார்க்சின் புகழ் பெற்ற "மதம் ஒரு அபின் " சொற்றொடர் உள்ளடங்கிய ஓர் பக்கம்  இருக்கிறது, மறுபக்கம்  அம்பேத்கரின் மார்க்ஸ் சொன்னதற்கு முற்றிலும் எதிர் "பதங்களை" கொண்ட இன்னொரு பக்கம் இருக்கிறது, இந்த இருஅடுத்தடுத்த பக்கங்களுக்கிடையேயான கருத்தியல் தூரம்தான் தொடந்துவரும் 900+ பக்கங்கள்

முதலில் பாராட்டியாகவேண்டியது இந்நூலுக்கு பின்னாலுள்ள அபாரஉழைப்பை, வசுமித்ரவின்  20 ஆண்டுகால வாசிப்பை, கருத்தியல் கற்றலை இவ்வளவு கூர்மையாக இந்நூலுக்கு அடிப்படையாக வைத்திருப்பதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பொதுவாக அரசியல் / கருத்தியல் சார்ந்த ஆய்வு நூலை வாசிப்பது பெரும் அலுப்பூட்டக்கூடியது, இவ்வகை எழுத்துக்கள் என்னளவில் இருவகை. ஒன்று வாசிப்பவரை உள்ளிழுக்கமால் தனித்து நிற்ப்பது ஒருவகை எனக்கொண்டால்,  வாசிப்பின் வழி நூலாசிரியர் வாசகனுடன் உரையாடுவது இரண்டாம் வகை, இந்நூல் நிச்சயம் இரண்டாம் வகை.

மார்க்சியம் / கம்யூனிசம் கற்றுக்கொள்ள, முழுப்பரிமாணத்தை புரிந்து கொள்ள நிச்சயம் வாழ்நாளில் ஒரு பகுதியை முற்றாக செலவழிக்க வேண்டும், அதைபோல் பௌத்த தத்துவங்களையும் அம்பேத்கரது படைப்புகளையும் குறைந்தபட்சம் வாசித்துஉணர காலத்தை மட்டுமல்ல மனதையும் அதன் பாதையில் எடுத்துசென்று அமர்த்த வேண்டும். வாசிப்பு ஒரு தவமாகமாறினாலொழிய இது வாய்ப்பில்லை, வசுவின் தவத்திற்கு வாய்த்திருக்கும் வரங்களில் ஒன்று இந்நூலெனக்கொள்வேன். இதனை மேற்சொன்ன தத்துவங்களைப்பற்றி  நுனிப்புல்மேய்ப்பாக வாசித்தறியமுயன்ற  ஒரு சராசரி வாசிப்பாளனாக அதனை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

அம்பேத்கர் என்ற பெயரை கேட்டவுடன் இன்று மேடைகளில்/ youtube பேச்சாளர்களின் தலித்அடையாள அரசியல் மற்றும் அது சார்ந்த  விவாதங்கள்தான் நம்முன் விரியும். பலகாலமாக பொதுசமூகத்திற்கு (பள்ளிவயதிலிருந்தே) அம்பேத்கர் இந்திய அரசியல் சட்ட மாமேதை எனவும் தாழ்த்தப்பட்ட சமூக விடுதலைக்கு அதை நோக்கிய போராட்டத்திற்கு இந்தியா முழுமைக்கு பெரும் புரட்சியை முன்னெடுத்தவர் எனதெரியும். சந்தேகமேயில்லாமல் இன்று அது பெரும்வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது, இதற்காக அவரின் பிம்பத்தை வைத்து அடையாள அரசியல் செய்வது கூட ஓரளவு தப்பில்லை என தோன்றுகிறது. காரணம் அச்சமூகம் காலங்காலமாக தன்னில் வாங்கியிருக்கும் வலிஅப்படி, அந்தந்த இடத்தில் வாழ்ந்ததால்தான் அதற்குரிய வலி புரியும். அடக்குமுறைக்கு உட்படும் எந்த சமூகமும் சரியோ தவறோ எவ்வழியிலாவது வெகுண்டெழுந்து கொண்டுதானிருக்கும்  இது ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அனைத்து சமூகத்திற்கும் பொது ....    சரி... அதெல்லாம் தனிப்பெரும் விவாததளம் இங்கு அது பற்றியல்ல.  இந்த தற்கால அரசியலை இந்நூல் பேசவில்லை ஆனால் வசுமித்ர நம்மை அழைத்து செல்வது அம்பேதகர் நேரடியாக சமூகத்திற்கு முன்வைத்த கொள்கைகளை/தத்துவங்களை பற்றிய விவாதத்திற்கு அதிலும் குறிப்பாக பௌத்தம் குறித்து.

நானுணர்ந்த நூலின் கருப்பொருளை பற்றிய பொதுசுருக்கம் இதுவே ..….

சாக்கியகுல இளவரசர் சித்தார்த்தன் தன்னை சுற்றி நடக்கும் மனித துயரங்களை துக்கங்களை கண்டு, இவை ஏன் மனிதமனதை பெரும் துக்கத்திற்கு ஆட்படுத்துகிறது என்ற கேள்விக்கு விடைதேடி ஒரு சிந்தனைப்பாதையை தேர்ந்தெடுக்கிறார். அந்த காலகட்டம் ஆரிய -பார்ப்பனர்களின் வர்ணக்கோட்பாடு சமூகத்திற்குள்ளும், அரச-அதிகார மட்டத்திற்குள்ளும் பல கதைகளைக்கொண்ட கடவுள்வழிபாடு / யாகசடங்குகளுடனும் தன் பலத்தை பெருக்கிக்கொண்டிருந்தது. ஆனால்  புத்தரின் தத்துவஅடிப்படையே பகுத்தறிவின்பாற்பட்ட  கடவுள்/சடங்கு மறுப்புதான். ஆகா வர்ணவேறுபாட்டிலிருந்து வெளியேற அக்காலத்திலேயே சங்கம் ஒரு வழியாக இருந்திருக்கிறது. ஆனாலும் உலகில் எந்த அமைப்பும், மதமும் கொள்கை/ தத்துவ விடையளித்தலில் 100% முழுமையடையாததுதானே. அதற்கு பௌத்தமும் விதிவிலக்கல்ல, பல சமரசங்கள் செய்யவேண்டியிருந்திருக்கும். அவருக்குபின் சங்கத்தில் சமரசம், மற்றும் கருத்துபுரிதலின் அடிப்படையில் பல பிரிவில் தோன்றின (ஹீனயானம், மகாயானம் & etc …) அதன்பின் ஆரிய-பார்ப்பன-இந்து மதம் இந்தியாவின் சிறு குறு தெய்வ வழிபாட்டு இனக்குழுக்களை தனது பெரு தெய்வவழிபாட்டுக்குள் உள்ளிழுத்து தத்துவதளத்திலும் பெருவிரிவடைகிறது. அத்தகைய பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய நிலப்பரப்பில் பௌத்தம் ஒடுங்குகிறது.  

இப்போது 19ம் நூற்றாண்டிற்கு வருவோம்  சாதி வர்ண பேதம் இந்தியாவெங்கும் காற்றைப்போல நீக்கமற நிறைந்த காலகட்டம்  ஒருபுறம் பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது, இன்னொருபுறம் அம்பேதகர் போன்ற தலைவர்களால் சாதிய கொடுமைக்கு எதிரான சமூக விடுதலை போராட்டமும் சேர்த்து முன்னெடுக்கப்படுகிறது, அந்நியரை வெளியேற்றினாலும் சாதி கட்டமைப்பை  உடைக்க முடியவில்லை என மனம் வெறுத்து " இந்துவாக பிறந்த நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்" என்கிறார். (இதே கருத்தின் அடித்தளத்தில்தான் பெரியார் மக்களுக்கு சமூக விடுதலை அளிக்காமல் அரசியல் விடுதையால் எந்த பலனுமில்லை என்று ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு தினம் என்கிறார்) 
அப்போது அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு மார்க்கம் தேந்தெடுக்க தேவை வருகிறது. அவருக்கு முன்னாலிருப்பது இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம். இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை இஸ்லாம்/ கிறித்தவதிற்கு மதம் மாற்றுவதென்பது கலாச்சார பண்பாட்டில் அவர்களை அந்நியப்படுத்தி விடும் சீக்கியமும் பௌத்தமும் மட்டுமே இம்மண்ணின் கலாச்சார பின்புல மதமெனக்கொண்டு  பௌத்தத்தை தேர்வு செய்கிறார்.  அப்போது ஒரேதளத்தில் பயணித்தவரான பெரியார் அவரை சந்தித்து உங்கள் பௌத்ததேர்வு தவறானது சாதி இழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வாக இருக்குமென பகிரங்க அறிவுறுத்தலை முன்வைக்கிறார். காரணம் பௌத்தம் கடந்த 2000 ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டதையும் இனி வரும் காலத்திலும் பார்ப்பனிய வர்ணாசிர தருமம் அதனை எளிதில் உட்செரித்து முன்னகர்ந்துவிடுமென தீர்க்க தரிசனமுறைக்கிறார். அதனை  அம்பேத்கர் நிராகரிக்கிறார். இந்நூலின் கருப்பொருளை ஒட்டி இது ஒரு முக்கியமான விவாத பொருள் ஆனால் இந்நூலில் வசுமித்ர இத்தளத்தை பெரிதாக விவாதிக்கவில்லை.

ஆக இந்திய தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைத்ததும் புத்தரை புனிதப்படுத்தி தொழுஉருவாக மாற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்ட அம்பேத்கர் " புத்தமும் அவரது தம்மமும்" நூலை எழுதுகிறார். கடவுள்மறுத்தது பகுத்தறிவு பாதைக்காக தோன்றிய பௌத்தம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிற்சேர்க்கையாக பல கதைகள்/விளக்கங்கள் புகுத்தப்பட்டு இறுதியில் மீண்டும் ஒரு சராசரி தொழுஉரு  கடவுள்வழிபாடாக மாறி நிற்கிறது, ஏன் புத்தரின் மறுஜென்ம வினாவுக்கான "கர்மா - வினை" பதிலே பகுத்தறிவு விவாதத்தில் காலூன்றி நிற்க முடியாததுதானே?
அதனை அம்பேத்கரது  " புத்தமும் அவரது தம்மமும்" நவயானபௌத்தமாக வழிமொழிகிறதென்பதே வசுமித்ராவின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" நூலின் விவாதப்பொருள். புத்தமடைவதற்கான 32 அங்கலட்சணங்களை கொண்டவர் சித்தர்தனென பௌத்த வழித்தோன்றல்கள்சொல்வதை எந்த தர்க்கவிவாதமின்றி அம்பேதகர் ஏற்று புகழ்வது இந்நூலின் முக்கிய விவாதப்பகுதி. பல மார்க்சிய எழுத்தாளர்களின் பௌத்த/அம்பேத்கரிய மேற்கோள்களை எடுத்தாண்டிருப்பினும் எனக்கு அதிகப்படியான பக்கங்களும் கருத்தியல் அடர்த்தியும் சில இடங்களில் சோர்வு தந்தது, பக்கங்களை இன்னும் குறைத்திருக்கலாம், இது எனது பார்வை மட்டுமே, ஒருவேளை இந்த அரிதான விவாதத்திற்கு இந்த அளவு நியாயமாக இருக்கலாம்.  

அம்பேதகர் இன்று இருந்தால் நிச்சயம் இதனை ஒரு ஆரோக்கிய விவாதமாக எடுத்துக்கொள்வார், காரணம் நான் கேள்விப்பட்ட வரையில் இந்தியாவில் தனிநபர் நூலகமாக 64000 புத்தகங்ளுக்கும் மேல் சேகரித்து படித்தவர் அம்பேத்கர், சமூக/அரசியல் பற்றி 7000 பக்கங்களுக்கு மேல் எழுதியவர் நிச்சயம்  இத்தகைய கருத்தியல் விவாதத்தை ஆதரிப்பார். 

நூலை முழுவதும் முடித்தபின் எனக்குள் எழுந்த கேள்விகள் ….
இன்று அனைத்து தலித்திய அம்பேத்கரிய கட்சிகளும் இயக்கங்களும் சட்டப்புத்தகம் தாங்கிய நீல கோட் அணிந்த அம்பேத்கார்
உருவஅடையாளங்களை மட்டும் காட்சிப்படுத்துகின்றன, சாதி விடுதலையை முன்னிறுத்தி "துவராடை" அணிந்த பௌத்தஅம்பேத்கர் எங்கே?
அவர் வழிகாட்டி சென்றபடி இந்திய தலித்தியசமூகம் பௌத்ததை ஏன் பற்றி தொடரவில்லை?

எல்லாவற்றையும் விட இங்கு பௌத்தம் எங்கே ??

யா. பிலால் ராஜா